By 10 October 2019 0 Comments

குளிர்கால கொண்டாட்டம்!! (மகளிர் பக்கம்)

விஞ்ஞானம் எவ்வளவுதான் முன்னேறிவிட்டாலும், நம் பழைய நடைமுறைகள் இன்றும் மாறாமல் அனைத்து இடங்களிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அவை நடக்கும் விதம் மாறுபடலாம். ஏன் கட்டட தோற்ற அமைப்பு முதல் மற்றும் சில புதிய மாறுதல்கள் ஏற்படலாம். ஆனால் நோக்கம் ஒன்றுதான். இதுதான் உலக நாடுகள் அனைத்திலும் புதிய வடிவங்களில், அற்புதமான கற்பனைத்திறனைக் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. நம்நாட்டில் ‘சந்தை’ என்பது இன்னமும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. காய்கறிச் சந்தையில் ஆரம்பித்து பலவித பிராணிகள் கூட சந்தையில் விற்கப்படுகின்றன.

அதுபோல் குளிர்காலத்திலும் பிரபல விற்பனைக் கூடங்கள் இங்குள்ளன. விவசாயிகள் தங்கள் தோட்டங்களில், இயற்கை முறையில் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துவார்கள். சரியான நேரத்தில் அறுவடை செய்து குளிர்காலத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்து ‘திருவிழா’ கோலம் நடத்துவர். நம் பொங்கல் அறுவடை எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ, அத்தகைய சிறப்பாக அமைகிறது மினியாபோலிசின் ‘காய்கறி’ மற்றும் ‘பழச்சந்தை.’ குளிர்காலத்தில் அங்கங்கே ‘வின்டர் மார்க்கெட்’ என்ற பெயரில் பெரிய பெரிய விளம்பரங்களைப் பார்க்கலாம். நம்நாட்டில் ஆடித் தள்ளுபடி, பொங்கல் சிறப்புத் தள்ளுபடி, விழாக்கால சலுகை என்றெல்லாம் கேள்விப்பட்டு, விளம்பரங்களைப் பார்த்து நமக்கேற்ற, பிடித்த கடைகளுக்குச் செல்வதுண்டு.

நம்நாட்டில் ஒருசில ‘மால்’ என்று சொல்லும் பெரிய ‘ஷாப்பிங்’ இடங்களுக்குச் செல்வது நமக்குப் பிடித்த பொழுதுபோக்கு. இங்கு பெரும்பாலும் விதவிதமான ‘மால்’ (Mall)கள் ஏராளம். குளிர்காலங்களில் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு, மாற்று வழிதான் இங்குள்ள ‘மால்கள்.’குளிர்காலம் இங்கு நவம்பர் மாதத்தில் தொடங்கிவிடும். அப்பொழுதே ‘தாங்க்ஸ் கிவிங்’ என்ற பெயரில் நன்றி செலுத்தும் விதமாக வியாபாரம் ‘களை’ கட்டுகிறது. வீட்டு உபயோகப்பொருட்களில் ஆரம்பித்து அனைத்து விதமான பொருட்களும் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

உதாரணமாக, ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினால், நாமேதான் காரில் வைத்து எடுத்து வந்து அமைத்துக்கொள்ள வேண்டும். அல்லது ‘புக்’ செய்தால் வீட்டு வாசலுக்கு வந்துவிடும். அவ்வளவுதான், பிரித்து எடுத்து ‘செட்’ செய்துகொள்வது நம் வேலை. இங்கு ஆட்கள் வைத்து செய்வது மிக அதிகப்படியான செலவாகும் என்பதால் அவர்களே அவர்களுக்கான வேலையை செய்ய பழகிக்கொண்டனர். நவம்பரில் ஆரம்பிக்கும் கொண்டாட்டம், பனிமழை ஓயும் வரை அங்கங்கே நடக்கும்.

‘குளிர்காலச் சந்தை’ என்றதும் ஏதோ, காய்கறிகள், பழங்கள்தான் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். அந்த சந்தையில் நம்மை வரவேற்றது அழகிய ‘மலர்க் கண்காட்சி.’ இவை ஊட்டி, கொடைக்கானல் மலர்க்கண்காட்சிகளை நம் நினைவுக்குக் கொண்டு வந்தன. அதிலும் சில வகைகள் நம்மை ஆச்சரியத்தில் அசத்தின. காரணம் செடிகளின் இலைகளைவிட ஒவ்வொன்றிலும் பூக்கள் அதிகமாகக் காணப்பட்டன. ஒரே தொட்டியில் நான்கைந்து விதமான பூக்களும் காணப்பட்டன. தொட்டியில் பல செடிகளை ஒன்றாகப் பயிரிட்டு அதன் அழகை மேலும் பிரதிபலிக்கச் செய்கிறார்கள் இங்குள்ள விவசாயிகள்.

அது மட்டும் இல்லை… அந்த செடியினை எப்படி வளர்க்கலாம் என்பதற்கான ‘மாடல்களும்’, வளர்ப்பதற்கேற்ற பொருட்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன. ‘கலை’ என்பது ஒவ்வொரு சிறிய வேலைகளில் கூட உண்டு என்பதற்கு இதுவே ஒரு சான்று. நாம் சாதாரணமாக நினைக்கும் ‘காக்டஸ்’, அதாவது ‘சப்பாத்திக்கள்ளிச்செடி’. அதைக்கூட எவ்வளவு அழகாக வடிவமைத்திருந்தார்கள் தெரியுமா? மிகச்சிறிய கோப்பைகளில் ஆயிரக்கணக்கான ‘கள்ளிச்செடிகள்’ காணப்பட்டன. பலவிதமான பூக்கள், வண்ண வண்ண நிறங்கள் என மனதை மயக்கின.

செடி வளர்ப்புப்பற்றி தெரியாதவர்கள்கூட இவற்றைப் பார்த்தால், செடி வளர்க்க ஆசைப்படுவார்கள். அதற்கான அழகழகான தொட்டிகளும் கிடைக்கிறது. இங்குள்ளவர்கள் வீட்டிற்குள் நிறைய செடிகளை வளர்க்க விரும்புகிறார்கள். எனவே, அதற்கேற்ற வகையில் தொட்டிகள் கூட வடிவமைக்கப்படுகின்றன. செடி மட்டும் இல்லாமல் அதற்கான தொட்டி, மண், உரம் எல்லாமே பாக்கெட்டில் கிடைக்கிறது. பெரிய பெரிய தொட்டிகளை பகுதிகளாகப் பிரித்து வெவ்வேறு செடிகள் வைத்து அலங்கரிப்பது பார்க்கவே அற்புதமாகக் காட்சி அளித்தது. பல செடி, கொடிகள் சாதாரண நிலையிலிருந்து மாறுபட்டு, வித்தியாசமாகத் தென்பட்டன. மரம் போன்ற அழகான அமைப்பில், ஒவ்வொரு கிளையிலும் விதவிதமான தொட்டிகளில் வண்ணமயமான பூக்கள் பூத்துக் குலுங்கின.

பூச்செடிகளை இப்படியெல்லாம்கூட வளர்க்கலாம் என்பதை இவர்களைப் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லை மிகச்சிறிய வேப்பம்பூக்கள் போன்றவற்றைக்கொண்டு அழகழகான ஓவியங்கள் செய்து பார்வைக்கு வைக்கப்பட்டன. அழகான சூரியகாந்தி பூவின் நடுப்பாகத்தில், கடிகாரம் ஓடியது வியப்பில் ஆழ்த்தியது. இயற்கையா, செயற்கையா என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொரு செடிகளும் கண்ணைக் கவர்ந்தது. இதுபோன்ற இயற்கையை ரசித்துக்கொண்டு அடுத்த பிரிவுக்குள் சென்ற போது அது நம்முடைய மனதை மயக்கும் அளவிற்கு இருந்தது.

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் மணக்க மணக்க வரவேற்றன. அனைத்துவிதமான பூக்களிலிருந்தும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உடற்பூச்சுகள், வாசனை நிறைந்த குளிக்கும் சோப்புகள் எண்ணற்ற வடிவங்களில் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. திருமணங்களில் முதலில் பன்னீர் தெளித்து வரவேற்பதுபோல், வாசனைத் திரவியங்கள் நம்மை வரவேற்றன. திருமண மண்டபத்தில் சுவையான விருந்து நமக்குக் காத்திருப்பதுபோல, ருசியான உணவுகள் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு நமக்காகக் காத்திருந்தன. தரமான ‘காபி’ கொட்டையை அரைத்து நம் எதிரில் மணக்க மணக்க காபியினை பரிமாறினார்கள்.

‘ஏலக்காய்’ முதல் ‘தனியா’ வரை அனைத்து வகையிலான மசாலாப் பொடிகள், தக்காளி சாஸ், சோயா சாஸ் வகையான வீட்டுத் தயாரிப்பு உணவுப் பொருட்கள் முக்கியமாக இடம் பெற்றிருந்தன. ஒரு வேறுபாடு என்னவென்றால், எவற்றை எவற்றுடன் கலந்து சாப்பிடலாம் என்பதுகூட அழகாக குறிப்பிட்டிருந்தனர். உதாரணமாக ‘ஜாம்’ விற்பனை செய்யுமிடத்தில், ஜாமுடன் ரொட்டித் துண்டுகளை வெட்டி வைத்திருந்தனர். எந்த ஜாமினை ருசிக்க விரும்புகிறோமோ அதை ரொட்டித்துண்டுகளுடன் தடவி தருகிறார்கள். அனைத்து வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட பலவகையான பழங்களிலிருந்து சுத்தமாக தயாரிக்கப்பட்ட ஜாம்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

இந்நாட்டிற்கேற்ற விதவிதமான தின்பண்டங்கள் என அத்தனையும் குளிர்காலச் சந்தையில் அடக்கம். வாங்க வருவார்களோ, இல்லையோ, பார்ப்பதற்குக் கூட்டம் வந்து கொண்டேதான் இருக்கிறது. எண்பது வயதானவர்கள்கூட, ஒவ்வொரு விதமான கண்காட்சியையும் கண்டுகளிக்க வருகிறார்கள். அதிலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் வந்தால் போதும், எவ்வளவு பனிமழை பெய்தாலும், என்னதான் குளிர்காற்று வீசினாலும், வெளியே செல்வது மட்டும் தடைபடாது. பனிக்கட்டிகளில் நடப்பதற்காக பயன்படுத்தப்படும் கனமான ‘பூட்ஸ்’, இரண்டு மூன்று துணிகளுக்கு மேல் ‘ஜாக்கெட்’, கையுறைகள், தலைக்கு தொப்பி என அனைத்தும் அணியும் போது நம் உடல் அளவே பெரிதாகத் தெரியும்.

ஆனால் அங்கு வயதானவர்கள் கூட இதை எல்லாம் சாதாரணமாக மாட்டிக்கொண்டு, தினமும் தங்களின் வேலைகளைக் கவனிக்கிறார்கள். மழைக்குக் குடையை எடுத்துச்சென்றாலே நம்மில் பலர் எங்காவது மறந்து விட்டுவிடுவர். கோடையிலிருந்து தப்பிக்க குளிர்பிரதேசத்தை நாடிச் செல்கிறோம். ஆனால் பிரதேசம் குளிரும் பனியாகவும் இருந்தால், வாழ்ந்துதான் ஆகவேண்டும்? எத்தனை நாட்களுக்குச்சென்று வேறு இடங்களுக்குச் செல்ல முடியும்? அப்படியே சென்றாலும் இங்கு ‘மார்ச்’ மாதத்தில்கூட எந்நேரமும் பனிமழை பெய்யலாம். அத்தகைய பனிமழையைக்கூட நம்மால் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள முடியுமென்றால், வாழ்க்கை நமக்கு சாதாரணமாகி விடும்.

எதையும் ரசித்துப்பார்க்கும் தன்மை. குறிப்பாக இயற்கைக்கு இவர்கள் தரும் முக்கியத்துவம் கண்கூடாக காணமுடிகிறது. சுமார் நான்கு மாதங்களுக்கு ஊரே வெள்ளை வெளேரென, பனித்துளிகள் ‘ஐஸ்’ கட்டிகளாக, அங்கங்கே ஆள் உயரத்திற்கு காணப்படுகிறது. உண்மையான தரைமட்டத்தைப் பார்க்கவே சில மாதங்கள் ஆகலாம். நடைபாதை, வண்டிகள் போகுமிடம் அவ்வப்பொழுது பனிக்கட்டிகளை அகற்றிக்கொண்டேயிருப்பதால், அங்கு மட்டும் தரை தெரியும். முழு பனிக்கட்டிகள் சுற்றிலும் குவிந்திருப்பதால் இரவு ஜன்னல்கள் வழியே வெள்ளை வெளிச்சம் அறைகளுள் ஊடுருவிச் செல்லும்.

சிறிது சிறிதாக வெயில் வர ஆரம்பிக்கவும், வீட்டு மேல்பாகம், நிலைப்படிகள் இவற்றிலிருந்து ‘ஐஸ்’ கட்டிகள் உடைந்துவிழும். வீட்டுச் சொந்தக்காரர்களே அவற்றைத் தட்டி கீழே தள்ளுவர். இவற்றிலிருந்து மீண்டு, பழைய நிலைக்கு வரும்பொழுது, அவர்களின் ‘கோடை உல்லாசம்’ ஆரம்பமாகும். பள்ளிக்குப் போகும் குழந்தைகள் நம் நாடுபோல பின்னால் ஒரு பை, முன்னால் சாப்பாட்டுக் கூடை என்று போக முடியாது. மூன்றாவதாக, உடல் முழுவதும் பளுவான ஆடைகளை சுமந்துகொண்டு, காலில் அவர்கள் எடையைவிட அதிகமான எடை கொண்ட ‘பூட்ஸ்’ கால்களுடன் செல்வதை பார்க்கலாம். அவர்களை முழு பனி உடைகளுடன் பார்ப்பதும் அழகுதான்.Post a Comment

Protected by WP Anti Spam