By 15 October 2019 0 Comments

குர்திஷுக்கு எதிரான துருக்கியின் போர்!! (கட்டுரை)

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் கடந்த மாதம் 24ஆம் திகதியன்று துருக்கிய ஜனாதிபதி றிசெப் தயீப் எர்டோவான் சர்ச்சைக்குரிய உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். அதன்படி, மேலும் இரண்டு மில்லியன் சிரிய அகதிகளை மீளக்குடியமர்த்துவதற்காக சிரியாவின் வடக்கில் பாதுகாப்பு வலயமொன்றை உருவாக்க அவர் அவ்வுரையில் முன்மொழிந்தார். மனிதாபிமான நோக்கங்கள் இருந்தபோதிலும், இது ஒரு சுயாதீனமான ஜனநாயகக் கூட்டத்தின் குர்திஷ் கனவை அழிப்பதற்கான 11ஆவது முயற்சி என்பதே இங்கு அடிப்படையில் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

சிரிய ஜனநாயகப் படைகளுடன் இஸ்லாமிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மக்கள் பாதுகாப்பு படைகள் சிரியாவின் வடக்கு மாகாணமான ரோஜாவாவின் குர்திஷ் இராணுவம் என சர்வதேச அரசுகளால் மற்றும் அம்மாகாண மக்களால் அறியப்பட்ட போதிலும், துருக்கியை பொறுத்தவரை அவை பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுதக் குழுக்கள், உண்மையில், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் விரிவாக்கமாகக் கருதப்படும். குர்திஷ் மக்களுக்காக இவ்வமைப்பு தொடர்ச்சியாகவே துருக்கிய பாதுகாப்புப் படையினருடன் ஆயுத மோதல்களில் ஈடுபட்டிருந்தது.

கடந்தாண்டில் துருக்கிய இராணுவம் வடக்கு சிரியாவில் மக்கள் பாதுகாப்புப் படை இலக்குகளுக்கு எதிராக இராணுவ தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. அது தொடர்பில் ஐக்கிய அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தன. இதேபோல், இவ்வாண்டின் ஆரம்பப் பகுதியில் ஆஃப்ரின் நகரத்துக்குள் உள்நுழைவதற்கு தாம் தயாராகி வருவதாக துருக்கி சமிக்ஞை செய்தபோது, ரஷ்யா துருக்கியின் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ஆஃப்ரின் நகருக்கு விரைந்திருந்தமையும், பின்னர் துருக்கிய இராணுவம் சிரியாவின் கொபனி நகருக்குள் அத்துமீறி நுழைந்து இருந்தபோதிலும் ஐக்கிய அமெரிக்க மற்றும் ரஷ்யாவின் எதிர்ப்பின் அடிப்படையில் குறுகிய காலத்துக்குப் பின் பின்வாங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐக்கிய அமெரிக்க படைகளை அப்பகுதியிலிருந்து பின்வாங்குவதாக அறிவித்த சில நாட்களிலேயே குர்திஷ் இன அமைப்புக்கு எதிராக துருக்கி இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளல் சர்வதேச அரசியலில் மாறுபட்ட அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் குறித்த இம்மாறுதலான செயற்பாடானது சில சர்வதேச அரசியல் பின்புலன்களில் வைத்து பார்க்கப்படலாம்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் குழு தோற்கடிக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின்னர், ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் மீள்வளர்ச்சியை தவிர்க்கும் காரணமாக, ஈராக்கில் உள்ள குர்திஷ் பிராந்தியத்தின் தலைநகரான எர்பிலில் இருந்து மத்திய தரைக்கடல் கடல் வரை ஒரு பாதுகாப்பு வலயத்தை உருவாக்கப்போவதாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்திருந்தது. குறித்த விடயம் தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா தலைமையில் 30,000 இராணுவத்தினர் குறித்த எல்லைகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் எனவும், இக்கருமத்தில் சிரியாவை சேர்ந்த குர்திஷ் போராளிகளும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நடவடிக்கையானது சிரியாவில் உள்ள குர்திஷ் ஆதிக்க சக்திகளுக்கு ஐக்கிய அமெரிக்கா ஆதரவு வழங்குவதாகவே கருதப்பட வேண்டும் என துருக்கி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. துருக்கி இதுபற்றி வெளியிட்ட கருத்தில் சிரியாவின் போராளிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் குர்திஷ் போராளிகளே ஆவார்கள் எனவும், குறித்த ஐக்கிய அமெரிக்காவின் போக்கானது துருக்கியின் உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிராக உள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் குழுக்களை வலுப்படுத்தும் எனவும் கருத்து வெளியிட்டிருந்தது.

மேலும், இவ்விரிசலின் அடிப்படையிலேயே நேட்டோவில் அங்கத்துவம் வகிக்கும் துருக்கி, நேட்டோவின் பொதுவான எதிராளியான ரஷ்யாவிடம் இருந்து எஸ்- 400 எனப்படும் ஏவுகணை எதிர்ப்புக் கட்டமைப்பை கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. துருக்கி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, ரஷ்யாவின் எஸ் -400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை கொள்வனவு செய்வதாக அறிவித்திருந்தது. ஏனெனில், எஸ் 400க்கான ஐக்கிய அமெரிக்க மாற்றீட்டை விற்பனை செய்வதில் ஐக்கிய அமெரிக்கா தொடர்ச்சியாக பின்னிற்கின்றமையே ஆகும்.

இதை தவிரவும் துருக்கி, ஐக்கிய அமெரிக்க முறுகல்களுக்கு பிற காரணங்களும் இருந்திருந்தன. குறிப்பாக, 2016 ஆம் ஆண்டில் துருக்கிய அரசாங்கத்துக்கு எதிரான சதி முயற்சிக்கு அடிப்படையாய் இருந்ததாக துருக்கி கூறுகின்ற ஃபெத்துல்லா குலனை ஐக்கிய அமெரிக்கா தொடர்ச்சியாக பாதுகாக்கின்றமை, அதுவும் ஜனாதிபதி றிசெப் தயீப் எர்டோவான், “துருக்கிய ஆட்சிக் கவிழ்ப்புக்கான சதி முயற்சி மேற்கொண்டவர் உங்கள் நாட்டில் இருக்கிறார், நீங்கள் அவரை அங்கு வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் ” என வெளிப்படையாகக் கூறியும் ஐக்கிய அமெரிக்கா குறித்த நபரை துருக்கிக்கு நாடுகடத்த மறுத்திருந்தமை ஒரு முக்கியமான காரணமாக இருந்தது.

அடுத்து, துருக்கியில் அமெரிக்க குடியுரிமை உள்ளவரான போதகர் அன்ரூ பர்சோன் அவர்களுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை; நான்காவதாக, துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி துணைத்தூதரகத்தில் நடைபெற்றிருந்த பத்திரிகையாளர் ஜமால் கஷொக்ஜியின் கொலைக்கு சவுதியை ஆதரித்த அளவுக்கு துருக்கியின் இறைமையை ஐக்கிய அமெரிக்கா ஆதரிக்கவில்லை – குறிப்பாக, குறித்த கொலையை பொறுத்தவரை அமெரிக்கா தனது கண்களை இறுக்கமாக மூடியிருந்தது என துருக்கியின் அதிருப்தி;

ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை எதிர்கொள்வதில் துருக்கியில் ஒரு மாறுபட்ட அணுகுமுறை – குறிப்பாக சிரியாவில் இருந்து வந்த பெருமளவிலான இடம்பெயர்ந்தோரை பாதுகாக்கவும் கவனிக்கவும் போதுமானளவு உதவிகளை பிறநாடுகள் – குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா செய்யாமை ஒரு புறம், மறுபுறம், குறித்த இடம்பெயர்த்தோருடன் கலந்து வந்திருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் துருக்கியில் மேற்கொண்ட தாக்குதல்களை சமாளிக்க மேற்கத்தேய நாடுகள் போதுமானளவு உதவ முன்வராமை;

குறிப்பாக, 2015-16-இல் இன்கர்லிக்கிலுள்ள ஐக்கிய அமெரிக்க விமானநிலையத்தை மூடுவதாக துருக்கி மேற்கொண்ட அச்சுறுத்தல்கள் இரு நாடுகளுக்கும் இடையில் வேறுபாடுகளை கொண்டுவந்திருந்தன.

இந்நிலையில், குறித்த எஸ் – 400 கொள்வனவானது ஏற்கெனவே விரிசலாய் இருந்த ஐக்கிய அமெரிக்கா – துருக்கி உறவு நிலையை மேலதிகமாக முன்னெப்போதும் இல்லாத அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், அது ரஷ்யா தொடர்ச்சியாகவே துருக்கிக்கு நட்பு நாடாக வர அனுமதித்திருந்தமையை மாற்ற – ஒரு மூலோபாய நடவடிக்கை ஐக்கிய அமெரிக்காவுக்கு வேண்டியதாய் இருந்ததாகும்.

இவற்றின் அடிப்படையிலேயே குறித்த துருக்கியின் ஒருபக்க இராணுவ நடவடிக்கை பல எதிர்ப்புக்கள் மத்தியிலும் ஐக்கிய அமெரிக்காவால் சமிக்ஞை செய்யப்பட்டுள்ளமை பார்க்கப்பட வேண்டியது.Post a Comment

Protected by WP Anti Spam