By 20 October 2019 0 Comments

சமூக ஆரோக்கியத்துக்கு வித்திடும் யோகா!! (கட்டுரை)

உலகம் முழுதும் யோகாவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் இது சற்று மாறுபடுகிறது. நாம் சந்திக்கும், பார்க்கும் ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு பிரச்சினையின் மையத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முகத்தில் இருக்கத்தையே காண நேர்கிறது. இதற்கு முன் பிரச்சினைகள் இல்லையா என்ற கேள்வி எழலாம். இருந்தது இன்று போல் அல்லாமல். இப்படி இருக்கும் சூழலில் யோகாவின் தேவை அவர்களுக்கு உறுதுணையாகிறது. இதனால் எப்படி கல்வி வியாபாரமாக்கப்பட்டதோ, அதே போல் யோகா கலையும் மாறியிருப்பது அவலமான ஒன்று.

வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கும் யோகா கலையினை எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி இலவசமாகப் பலரது மத்தியிலும் கொண்டு சேர்க்கும் வேலையைச் செய்து வருகிறார், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடசோலை கிராமத்தைச் சேர்ந்த சுமதி. முறையாக யோகா பயின்று பட்டயப் படிப்பை முடித்திருக்கும் இவர், 2007ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார்.

இதற்கு முன் மாநில அளவில் ஐந்து தங்கமும், நேஷனல் லெவலில் இரண்டு தங்கமும் பெற்றுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகப் பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதோடு, நீலகிரி மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார், படுகா இனத்தைச் சேர்ந்தவரான சுமதி.

“பக்கத்து வீட்டிலிருக்கும் ஒரு அக்கா மூலமாக யோகா கிளாஸ் பற்றித் தெரிந்து கொண்டேன். அன்று எனக்கு இருந்த மனச்சோர்வின் காரணமாக இதில் சேர்ந்து கற்றுக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே இருந்தது. படிக்கப் படிக்க என்னை அறியாமலேயே தீவிரமானேன். யோகாவை டிப்ளமோ, இளங்கலை-முதுகலை கல்வியாக படித்து முடித்த பின், வீட்டுப் பக்கத்திலிருக்கும் பள்ளியில், குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க அனுமதி கேட்டபோது உதாசீனப்படுத்தினர்.

தொடர்ந்து மூன்று மாதம் அவர்களை பின் தொடர்ந்த பின், ‘உங்களுக்காகத் தனியா நேரம் ஒதுக்க முடியாது, காலை 8.30 மணிக்கு மாணவர்கள் வந்தால் சொல்லிக் கொடுங்க’ன்னு சொன்னாங்க. பள்ளி நேரம் 9.30 மணி என்பதால், அதற்கு முன் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இலவசமாகச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன்.

கொஞ்ச நாள் போன பின் எனது வேலையும், மாணவர்களின் ஈடுபாட்டையும் பார்த்த பள்ளி நிர்வாகிகள், ‘இனி நீங்கள் இலவசமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டாம். ஒவ்வொருவரிடமிருந்து மாதம் ரூ.200 பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றனர். இது அரசுப் பள்ளி. இங்கு வரும் மாணவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது நான் நன்கு அறிவேன்.

அதனால் எனக்கு ரூ.5 போதும், அதும் நீங்கள் இவ்வளவு தூரம் சொல்வதால் என்றேன். மாதம் மாதம் மாணவர்களிடமிருந்து ரூ.500 முதல் ரூ.600 வரை பள்ளி நிர்வாகம் பெற்றுக் கொடுத்தனர். அதிலும் சிலரால் இதுவும் கொடுக்க முடியாத சூழல்’’ என்றவர் குடும்ப சூழல் காரணமாக வேறு வேலைகளையும் செய்து வந்துள்ளார்.

‘‘என் கணவரின் வருமானத்தை கொண்டு மட்டுமே என்னால் குடும்பம் நடத்த முடியவில்லை. அதனால் டெய்லரிங் கற்றேன். பிளவுஸ் தைத்து அதன் மூலம் வரும் வருமானம் கொஞ்சம் உதவியது. இந்த சூழலில் கேந்திரிய வித்யாலய பள்ளியில் யோகா டீச்சர் வேலை இருப்பதாக அறிவிப்பு வந்தது. ஆனால் ஆங்கிலம், இந்தி சரளமாகத் தெரிந்திருக்க வேண்டும். நானோ பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் படித்தவள்.

ஆங்கிலமே சரியாக பேச தெரியாது இதில் ஹிந்தி எப்படின்னு நான் அதற்கு விண்ணப்பிக்கவில்லை. ஒரு வாரம் கழித்து மீண்டும் அறிவிப்பு வந்தது. அந்த நேரம் எனக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர் என்னை விண்ணப்பிக்க சொன்னார். முதலில் நான் தயங்கினேன். அவர் தான் விண்ணப்பித்து
பார் அதன் பிறகு கிடைக்கலைன்னா பார்க்கலாம்னு எனக்கு தைரியம் கொடுத்தார்.

திறமை இருக்கு, நாம் ஏன் நம்மை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று நேர்காணலுக்கு சென்றேன். யோகாசனங்கள் செய்து காண்பித்து எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் விளக்கினேன். தேர்வானேன். அப்போது புரிந்தது நாம் யோகாவை கற்றுத்தர போகிறோம், மொழியை அல்லன்னு.
இங்கு இரண்டு ஆண்டுகள் கற்றுக் கொடுத்தேன். இதனைத் தொடர்ந்து ராணுவ பள்ளியில் நான்கு ஆண்டுகள் கற்றுக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது” என்று கூறும் சுமதி நீலகிரியில் உள்ள பள்ளிகளுக்கு யோகா கற்றுக் கொடுத்த முதல் ஆசிரியர் என்ற
பெருமையும் பெற்றுள்ளார்.

முதியோர்களையும், குழந்தைகளையும் பார்த்துக் கொள்வதில் அலாதி ஆனந்தம் கொண்டவர் சுமதி.“என் அண்ணா வீடு கோவையில் இருக்கிறது. அங்கு அடிக்கடி வந்து போகும் போது, அக்குபங்சர் மருத்துவம் தெரிந்த நண்பர் ஒருவர் அறிமுகமானார். அவர் மூலமாக அக்குபங்சர் கற்றுக் கொண்டேன். இதனோடு இயற்கை வைத்தியம், பாத அழுத்த சிகிச்சை முறைகளிலும் முதுகலை பட்டங்கள் பெற்றுள்ளேன்.

ஒரு கட்டத்தில் பள்ளிகளில் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதை நிறுத்தி, பழங்குடி மக்களுக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். பள்ளிகளுக்கு சொல்லிக் கொடுக்க பலர் இருக்கின்றனர். ஆனால், இவர்களுக்கு இலவசமாகச் சொல்லிக் கொடுக்க யார் இருக்கிறார்கள் என்ற கேள்வி என்னுள் எழுந்தது.

நீலகிரியின் அழகு அங்குள்ள பழங்குடி மக்கள். அவர்களில் பலர் இன்று அந்த அடையாளத்தை இழந்து வருகின்றனர். இயற்கையோடு இயைந்து, பல வேலைகள் செய்து வரும் அவர்களுக்கு எதற்கு யோகா என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். அவர்களது வாழ்க்கை முறையையும் நமது சுயநலத்திற்காக மாற்றியுள்ளோம். பலர் காட்டைவிட்டு வெளியே வந்துள்ளனர். அங்குள்ள செடி கொடிகளை உண்ணுவதில்லை. நம்மைப்
போலவே உணவை எடுத்துக் கொள்கிறார்கள்.

படுகர், தோடர், கோத்தர், குறும்பர், இருளர் இன ஆதிவாசி கள் வசிக்கும், குஞ்சப்பணை, தாந்தநாடு, ஆனைக்கட்டி, கொல்லி மலை, ஊட்டி, முத்தநாடு, மந்து உட்பட கிராமங்களுக்குச் சென்று, யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, பயிற்சியும் அளித்து வருகிறேன். என் நலம் விரும்பிகள் பலர், ‘நீ ஏன் தனியா யோகா, அக்குபங்சர் சென்டர் வைக்கக் கூடாது’ன்னு ஆலோசனை சொல்கிறார்கள்.

அதற்கும் வழி பிறக்கும். அவர்கள் இடம் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். அங்கு வருபவர்கள் பஸ்ஸில், காரில், பணமுள்ளவர்கள் என என்னை யாரும் தேடி வராமல், யாரால் வர முடியாதோ அவர்களை தேடி நான் போக வேண்டும்” என்றார் சுமதி.Post a Comment

Protected by WP Anti Spam