By 30 October 2019 0 Comments

பெண்கள் கண்டிப்பாக இருப்பதில்லை..!! (மகளிர் பக்கம்)

ஆசைப்பட்ட ஒன்று நிறைவேறாமல் அது மற்றவர்களுக்குக் கிடைக்கும் போது, கிடைத்தவர்கள் மீது பொறாமைக் கொண்டு குரூரமாக மாறுகின்றனர் சிலர். சிலரோ அந்த ஆசையைத் தன்னை சார்ந்தவர்கள் மூலம் நிறைவேற்றி மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால், அப்படி அந்த ஆசையை நிறைவேற்றும் முன் அவர்களுக்கும் அதன் மீது ஆசை இருக்கிறதா என்பதைப் புரிந்து செயலாற்றுபவர்கள் குறைவே. அந்த சொற்பமானவர்களில், தன் ஆசையைத் தனது மகள் மூலம் நிறைவேற்றிஇருக்கிறார் நடிகை, பரதநாட்டிய கலைஞர், வழக்கறிஞர் எனப் பன்முகத் தன்மை கொண்ட வர்ஷினியின் தாயார்.

யார் இந்த வர்ஷினி? சன் டி.வியில் ஒளிபரப்பான ‘சுமங்கலி’ தொடரில் நித்யா என்ற கதாபாத்திரம் மூலம் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்து தற்போது, ‘அக்னிநட்சத்திரம்’ மீராவாக குடிபெயர்ந்திருக்கிறார். “எனது பூர்வீகம் ஹைதராபாத். அப்பா கட்டட கட்டுமானத் துறையில் அப்போது மும்பையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு மூணு வயசு இருக்கும் போது அம்மா என்னை பரதநாட்டிய பயிற்சியில் சேர்த்துவிட்டார்.

ஆனால், என்னைப் பார்த்த டீச்சர், ‘இவ்வளவு சின்ன வயசில் எண்ட்ரி பண்ண முடியாது’ன்னு சொல்லிட்டாங்க. அம்மாக்கு நான் எப்படியும் நடனம் கத்துக்கணும்னு ஆசை இருந்தது. பயிற்சிதான் எடுக்க முடியாது. ஆனால் நடனமாடுபவர்களை பார்த்தால் அதன் மேல் எனக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்படும்னு அம்மா நினைச்சாங்க. அதனால, அம்மா, தினமும் என்னை அங்கு கூட்டிட்டு போய் பார்க்க வைப்பாங்க. அம்மாவுக்கு நடனம் கத்துக்கணும்ன்னு ஆர்வம் அதிகம் இருந்தது. ஆனால் அவங்கள அந்த வயசில் ஊக்குவித்து வழி நடத்த ஆள் இல்லை. இதனால் என்னை எப்படியாவது இதில் சேர்த்து விட வேண்டுமென்று விடாமல் தொடர்ந்த முயற்சிக்குப் பலன் கிடைத்தது.

முறையாக பரதம் கற்றுக் கொண்டு, ஃபர்ஸ்ட் ஸ்கெயில் மாவட்ட அளவில் நடந்த போட்டியில் முதல் இடம் பிடித்தேன். அப்போது எனக்கு ஐந்தரை வயது. அப்பாவின் வேலைக் காரணமாக நாங்க சொந்த ஊருக்கே குடிபெயர்ந்தோம். இங்கு ‘ராம நாடக நிக்கேத்தன்’ பரதநாட்டிய பள்ளியில், வி.எஸ்.ராமமூர்த்தி, மஞ்சுளா ராமசாமி ஆகியோரிடம் பரதம் கற்றுக் கொண்டேன். இங்கு தான் என் வாழ்வின் திருப்புமுனை அமைந்ததுன்னு சொல்லலாம். இன்று வரை இவர்கள் தான் என் குருக்கள்” என்று கூறும் வர்ஷினி, 2006 ஆம் ஆண்டு பரதநாட்டியத்திற்காக தேசிய விருதினை டாக்டர். ஏ.பி.ஜே.

அப்துல்கலாமிடமிருந்து பெற்றிருக்கிறார். பரதநாட்டியத்தில் பல மேடைகளில் தனி முத்திரை பதித்துக் கொண்டிருந்த வர்ஷினி குழந்தை நட்சத்திரமாக சினிமாத் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். ‘‘என்னுடைய பரத நிகழ்ச்சியை பார்த்த திரைப்பட இயக்குனர், அவரின் படத்தில் என்னை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார். பரதம் மட்டும் இல்லாமல் நடிப்பும் எனக்கு வரும்ன்னு அப்போது தான் தெரிந்தது. நான் நடிச்ச படங்களுக்காக ஆந்திர அரசின் உயரிய விருதான ‘நந்தி’ விருதினை இரண்டு முறை சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காகப் பெற்று இருக்கேன்’’ என்று சொல்லும் வர்ஷினி நடிப்பு, நடனம் மட்டும் இல்லாமல் படிப்பில் படு கெட்டிக்காரராம்.

“வகுப்பில் எப்போதும் முதல் இடம் தான். பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது ‘பாகுபலி’ திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தெலுங்கில் ஒரு தொடர் ஆரம்பிச்சாங்க. அதில் முதன்மை கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்தாங்க. அந்த நேரம் படிப்பில் மட்டும் தீவிரமாக இருந்ததால் எனக்கு அப்போது சீரியலில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படல. ஆனாலும் அவங்க என்னை விடல. தொடர்ந்து என்னை அணுகினாங்க. மேலும் பெரிய தயாரிப்பு நிறுவனம். எனக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்னு தோணுச்சு. ஒரு வழியா சரின்னு ஒத்துக்கிட்டேன்.

‘ஷிக்ரம்’ என்ற அந்த தொடரில் சிரஞ்சீவி சார் சகோதரர் நாக்பாபு சாரின் மனைவியாக நடித்தேன். இந்த சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஓராண்டில் அடுத்து ‘அன்னப்பூர்ணா’ என்ற திரைப்பட நிறுவனம் தயாரித்த சீரியலில் கமிட் ஆனேன். இப்படி தெலுங்கில் ஏழு சீரியல் கதாநாயகியாக நடித்திருக்கிறேன்” என்று கூறும் வர்ஷினி தமிழில் அறிமுகமானது பற்றி கூறினார். “சன் குழுமத்தின், ஜெமினி டி.வியில் ஒரு சீரியல் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, அதன் கிரியேட்டிவ் ஹெட் ‘சுமங்கலி’ என்ற தமிழ் சீரியலுக்காக பரிந்துரை செய்தார். நான்கு ஆண்டுகளுக்கு மேல் சன் குடும்பத்தில் ஓர் உறுப்பினராக இருக்கிறேன்.

பொதுவாக சீரியல் நடிகர், நடிகைகளுக்கு ஒரு ப்ராஜெக்ட் முடிந்தால் அடுத்து, எந்த சேனல் போகலாம், யார் எப்போது கூப்பிடுவாங்கன்னு காத்திருக்கணும். ஆனால், சன் டிவியில் அப்படியில்லை. ஒன்று முடிந்தால், அதே மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ அடுத்தடுத்த சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்புகளை அவர்களே உருவாக்கிக் கொடுப்பார்கள். காரணம் சன் குழுமத்திற்கென்றே ஒரு ஆடியன்ஸ் இருக்காங்க” என்றவர் சட்டம் படித்துள்ளார். “டாக்டர் படிக்க வேண்டுமென்பதுதான் ஆசை. மெடிக்கல் எண்ட்ரன்ஸ் எக்ஸாம்ல நல்ல மார்க் எடுத்தேன்.

ஆனால், இட ஒதுக்கீடு காரணத்தால் அது நிறைவேறாமல் போனது. 7,000 ரேங்க் எடுத்த எனக்கு சீட் இல்லை, ஆனால் 14,000 ரேங்க் எடுத்த என் தோழிக்கு சீட் கிடைச்சு இப்ப அரசு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். வீட்டில், எவ்வளவு பணம் செலவானாலும் கொடுத்து சீட் வாங்கித் தர தயாராக இருந்தாங்க. அதற்கு படிக்காம பணம் கட்டி டிகிரி வாங்கிட்டு போய்டலாமே என்று இந்த சிஸ்டம் மேல் கோவம் வந்தது. இதற்காகவே சட்டம் படித்து ஏதாவது செய்ய வேண்டுமென்று கவனம் செலுத்தி, BBA LLB கடந்த ஆண்டு நிறைவு செய்தேன்” என்றார்.

“நான் சின்னத்திரையில் கால் வைத்த நாள் முதல் இன்று வரை என் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் நண்பர்கள் எல்லாரும் எனக்கு ரொம்பவே சப்போர்ட்டா இருக்காங்க. ஹைதராபாத்தில் ஷூட்டிங் இருந்தா, அம்மா வீட்டில் சமைச்சு சாப்பாட்டினை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே கொண்டு வந்திடுவாங்க. வேலையில் பிரஷர் இருந்தா அம்மாகிட்ட தான் ஷேர் பண்ணுவேன். திருமணத்திற்கு பிறகு எப்படின்னு தெரியல. ஷேரிங் ரொம்ப முக்கியமானது. சமூகத்தில் நடிகைகள் மீது ஒரு தவறான பிம்பமும், அவர்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும் கூறுகின்றனர். இது ஒவ்வொருவரைப் பொறுத்தது. நீங்க நைஸ் என்றால் எதிரிலிருப்பவரும் நைஸ்.

நீங்கள் வாய்ப்புக் கொடுக்கும் போது அதை பயன்படுத்தத்தான் பார்ப்பாங்க. இது இங்க இல்ல, சாஃப்ட்வேர், டாக்டர்… என எல்லாத் துறையிலும் இருக்கு. ஆனால், மற்ற துறைகளில் வேலை செய்யும் நபரோடு பெற்றோரோ, பாதுகாவலரோ அவர்கள் பணி இடத்தில் அனுமதியில்லை. ஆனால் இங்கு அனுமதிக்கிறார்கள். அவர்களை விட வேறு என்ன பாதுகாப்பு நமக்கு தேவை. இன்று விருப்பம் இல்லாத வேலைகளைத்தான் பலர் செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு சிலருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை என்றால் கடைசி வாய்ப்பாக நடிப்புத் துறையை தேர்வு செய்கின்றனர். இங்கு வந்தும் சிலர் கஷ்டப்படுகின்றனர்.

பொழுது போக்கிற்காகவும், நடிக்க வாய்ப்பு எப்படியும் வாங்கிவிடலாம் என்பவர்களால் உண்மையாக உழைத்துக் கொண்டிருப்பவர்கள் பாதிக்கப்
படுகிறார்கள். எல்லாக் காலகட்டங்களிலும் பெண் பாதுகாப்பிற்கான சட்டங்கள் வலுவாக இருக்கின்றன. ஏதேதோ கூகுளில் தேடும் நாம், அதைத் தேடுவதில் சோம்பேறித் தனம் படுகிறோம். அதே வேளையில் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களில் ஆண்கள் மீது மட்டும் தவறு இருக்காது, இவர்கள் மீதும் சில நேரங்களில் தவறு இருக்கத்தான் செய்கிறது. ஆரம்பத்திலேயே கண்டிப்பா பெண்கள் இருப்பதில்லை. உன்னுடைய வேல்யூ தெரிந்து கொள். முதலிலேயே உன் குரலை உயர்த்து” என்று கூறும் வர்ஷினிக்கு வரும் காலத்தில் நடனப் பள்ளி, தயாரிப்பு நிறுவனம் நிர்வகிக்க வேண்டும் என்பது ஆசையாம். வாழ்த்துகள்…Post a Comment

Protected by WP Anti Spam