தேசம் முழுவதும் பரவவேண்டிய அச்சம் !! (கட்டுரை)

Read Time:24 Minute, 36 Second

தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளுக்கு ஒருபோதும் பஞ்சமிருப்பதில்லை. அநேகமாக எல்லா வேட்பாளர்களும் வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டேயிருக்கின்றனர். அவற்றில் நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றவையும் உள்ளன. ஆனாலும், அவை குறித்து வாக்குறுதிகளை வழங்குவோர் அலட்டிக் கொள்வதில்லை. மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதுதான் அவர்களின் உடனடித் தேவையாகும்.

வாக்குறுதி என்பது, ஒரு வகையான கடனாகும். வாக்குறுதியை வழங்கி விட்டால், நிறைவேற்றியே ஆக வேண்டும். ‘கடன் அன்பை முறிப்பது போல்’, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத போது, பகைமை ஏற்படுகிறது.

‘வாக்குறுதியைப் பொறுத்தமட்டில் எல்லோரும் கோடீஸ்வரர்கள்தான்’ என்கிறார் ஓர் அறிஞர். விரும்பிய மட்டும், அதனை அள்ளியள்ளி வழங்கலாம். ஆனால், அவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியாதபோது, மற்றவர்கள் முன்பாக ஒரு பிச்சைக்காரனைப்போல், வாக்குறுதியளித்தவர் தலைகுனிந்து நிற்க நேரிடுகிறது.

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் ஆபத்தானவை; கொடுத்தவரின் கால்களை, எதிர்பாராத நேரமொன்றில் அவை, கொடிய விசப் பாம்புபோல் இறுக்கிச் சுற்றிக் கொள்ளும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைப் பிரகடனத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை, நம்மில் எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கின்றோம். ‘மைத்திரி ஆட்சி; நிலையான நாடு’ எனும் தலைப்பில் அமைந்த அந்தக் கொள்கைப் பிரகடனத்தில் வழங்கப்பட்ட முதல் வாக்குறுதி, ‘ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் அரசமைப்புத் திருத்தம்’ என்பதாகும். அதற்குள் குறிப்பிடப்பட்டிருந்த முதலாவது விடயம், ‘நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்றியமைத்தல்’ என்று இருந்தது.

ஆனால், மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலத்தில், நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வதற்குரிய நேர்மையான முயற்சிகள் எவையும் நடக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

ரணில் கொடுத்த வாக்குறுதி

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஒன்பதாம் திகதியன்று கல்முனை, சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “சாய்ந்தமருதுக்கு பிரதேச சபையொன்றைப் பெற்றுத்தருவேன்” என்கிற வாக்குறுதியொன்றை வழங்கியிருந்தார். அந்தப் பிரசாரக் கூட்டத்தை, முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது.

சாய்ந்தமருது மக்கள், மிக நெடுங்காலமாகத் தமக்கு உள்ளூராட்சி சபையொன்று வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து, ஜனநாயக வழியிலான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

“இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக யார் கூறுகின்றார்களோ, அவர்களுக்கே தேர்தலில் எமது பிரதேசம் வாக்களிக்கும்” என்று, சாய்ந்தமருது மக்களைத் தலைமை தாங்கி வழி நடத்தும், பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதனால்தான், சாய்ந்தமருது மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, ரணில் விக்கிரமசிங்க அந்த வாக்குறுதியை வழங்கினார். பிரதமரின் வாக்குறுதியின் பின்னணியில், முஸ்லிம் காங்கிரஸ் இருந்தது. அதனை அந்தக் கட்சியின் தலைவரே பின்னாளில் ஏற்றுக் கொண்டிருந்தார்.
மு.கா தலைவரின் ஒப்புதல்

2018ஆம் ஆண்டு, ஓட்டமாவடியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், “சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை வழங்குவோம் என்று, நாங்கள் எழுதிக் கொடுத்ததைத்தான் பிரதமர் வாசித்தார்” என்று, பகிரங்கமாக ஒப்புக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை வழங்கப்படவில்லை. அதனால், அந்த ஊர் மக்கள் ஏமாற்றமும் விசனமும் அடைந்தனர். இதையடுத்து, 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில், தமது ஊர் சார்பாகச் சுயேட்சைக்குழு ஒன்றை, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் களமிறக்கியது.

முடிவு, அந்தத் தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள அனைத்து வட்டாரங்களையும் ஊர் சார்பாகக் களமிறக்கப்பட்ட சுயேட்சைக் குழுவே கைப்பற்றிக் கொண்டது.

தமது பிரதேசத்துக்குத் தனியான உள்ளூராட்சி சபையைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி வழங்கி விட்டு, பின்னர் தம்மை ஏமாற்றிய அரசியல் கட்சிகளையும் அரசியல் பிரமுகர்களையும் சாய்ந்தமருது மக்கள் புறக்கணிக்கத் தொடங்கினர். அந்த நிலைவரம், இப்போது ஜனாதிபதித் தேர்தலிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

சாய்ந்தமருதுக்குத் தனியான உள்ளூராட்சி சபை வழங்குவதாக வாக்குறுதியளித்த ரணில் விக்கிரமசிங்கவின் கட்சி சார்ந்த வேட்பாளரை, அல்லது, தமக்கு உள்ளூராட்சி சபையைப் பெற்றுத் தருவதாக, ரணில் விக்கிரமசிங்க ஊடாக வாக்குறுதி வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கும் வேட்பாளரை, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிப்பதில்லை எனக்கிற முடிவுக்கு, சாய்ந்தமருது பிரதேச மக்களை வழி நடத்தும் பள்ளிவாசல் நிர்வாகம் வந்துள்ளது.

கோட்டாவை ஆதரிக்கும் முடிவு

இதையடுத்து, பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவைச் சந்தித்த சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம், தமது பிரதேசத்துக்கான தனியான உள்ளூராட்சி சபை எனும் கோரிக்கையை முன்வைத்துப் பேசியது. அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக மஹிந்தவும் வாக்குறுதி வழங்கியுள்ளார். இதையடுத்து, இம்முறை ஜனாதிபதி தேர்தலில், பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை ஆதரிப்பதென, சாய்ந்தமருது பிரதேசம் சார்பாக, அந்த ஊர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் முடிவெடுத்து, அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, சாய்ந்தமருதில் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தாங்கள் வெற்றி பெற்றால், சாய்ந்தமருதுக்குத் தனியான உள்ளூராட்சி சபை வழங்கப்படும் என்கிற வாக்குறுதியைப் பகிரங்கமாகவே மக்களுக்கு வழங்கி இருக்கின்றார்.

சாய்ந்தமருதில் சுமார் 19 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அந்த வகையில், ஊரே கூடி, கோட்டாவுக்கு வாக்களிப்பதென முடிவு செய்திருப்பது சாதாரணமான விடயமில்லை.
அதுவும், சிறுபான்மையினரின் வாக்குகள், பெருமளவில் கோட்டாவுக்கு கிடைக்க மாட்டாது என்று, சஜித் பிரேமதாஸ தரப்பினர் நம்பிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கும் நிலையில், நூறு சதவீதம் முஸ்லிம்கள் வாழும் சாய்ந்தமருது பிரதேசம், தமது ஆதரவு கோட்டாவுக்கே என அறிவித்திருப்பது மிக முக்கியமானதொரு விடயமாகும்.

விமர்சனங்கள்

மறுபுறமாக, சாய்ந்தமருதின் இந்த நிலைப்பாடு குறித்து விமர்சனங்களும் இல்லாமலில்லை. ஜனாதிபதித் தேர்தலொன்றில் இவ்வாறான முடிவொன்றைச் சாய்ந்தமருது பகிரங்கமாக எடுத்திருக்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.

சிலவேளை, கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றிபெறவில்லை என்றால், அரசியல் ரீதியாகச் சாய்ந்தமருது பழி தீர்க்கப்படலாம் என்கிற பேச்சும் உள்ளது.

சாய்ந்தமருதுக்கு வாக்குறுதி வழங்கி விட்டு, ஏமாற்றியவர்களை ஜனநாயக ரீதியாகத் தண்டிப்பதற்குப் பொருத்தமான காலம் பொதுத் தேர்தல்தான் என்கின்றனர் வேறு சிலர்.

இதேவேளை, சாய்ந்தமருது பள்ளிவாசல் எடுத்துள்ள இந்த முடிவானது, ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் பாதிப்பதாக அமைந்து விடும் என்று, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். சாய்ந்தமருதில் தமது கட்சி முக்கியஸ்தர்களை, சனிக்கிழமை (26) சந்தித்துப் பேசிய போது, அவர் இதைக் கூறியுள்ளார்.

(மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், இது தொடர்பில் தெரிவித்த கருத்துகளை, இந்தப் பத்தியின் பெட்டிப் பகுதியில் வாசகர்கள் விரிவாகக் காணலாம்)

எது எவ்வாறாயினும், தேர்தல் காலத்தில் தமக்கு வழங்கிய வாக்குறுதியை மீறிய, நிறைவேற்றாதவர்களை ஜனநாயக வழியில் தண்டிப்பதற்கு, சாய்ந்தமருது மக்கள் எடுத்த தீர்மானம் துணிச்சலானதாகும். வாக்குறுதிகளை வழங்கி விட்டு, மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு, சாய்ந்தமருது மக்கள் எடுத்துள்ள தீர்மானம் நல்லதொரு பாடமாக அமைந்துள்ளதாகப் பலரும் கூறுகின்றனர்.

வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, அதனை நிறைவேற்றாமல் விடுகின்ற அரசியல்வாதிகளை, எவ்வாறு தண்டிக்கலாம் என்பதற்கான முன்னுதாரணத்தையும் ஏனைய பிரதேசத்தவர்களுக்கு, சாய்ந்தமருது மக்கள் காட்டியுள்ளனர்.

வாக்குறுதியின் பெறுமானம்

தாங்கள் வழங்கும் வாக்குறுதிகளை, மக்கள் மறந்து விடுவார்கள் என்று அரசியல்வாதிகள் நினைக்கின்றனர். தமது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விட்டாலும், மக்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் சில அரசியல்வாதிகள் நம்புகின்றனர். வாக்குறுதி என்பது, சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாக வென்றெடுப்பதற்கான வெற்று வார்த்தைகள்தான் என, அநேகமான அரசியல்வாதிகள் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், வாக்குறுதியைப் பேணுவதென்பது, நபிமார்களின் பண்பு என்று கூறுகிறது இஸ்லாம். ‘நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான்; வாக்களித்தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்’ என்று, முஹம்மது நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

வாக்குறுதியை நிறைவேற்றாதவர்களுக்குச் சமூகத்தில் மதிப்பு இருப்பதில்லை; வாக்குறுதியை நிறைவேற்றாதவர்களும் மோசடிக்காரர்களும் வெவ்வேறானவர்கள் இல்லை.“சாய்ந்தமருது மக்களுக்குத் தனியான உள்ளூராட்சி சபையைப் பெற்றுத் தருவோம்” என்கிற வாக்குறுதியை வழங்கி விட்டு, அதனை நிறைவேற்றாதவர்கள் அனைவரும், அந்த மக்களுக்குத் துரோகமிழைத்துள்ளனர். தமக்குத் துரோகமிழைத்தவர்களை ஜனநாயக வழியில் எப்படித் தண்டிப்பது என்கிற தீர்மானத்தை எடுக்கும் உரிமை, சாய்ந்தமருது மக்களுக்கு உள்ளது என்பதை, மறுக்க முடியாது.

நம்பித் தொலைத்தல்

“குறைந்தளவு வாக்குறுதிகளைக் கொடுத்தவனுக்கே வாக்குப் போடுங்கள்; அப்போதுதான் குறைந்தளவு ஏமாறுவீர்கள்” என்றார் அமெரிக்க அறிஞர் ஒருவர். ‘நிறைவேற்றாத வாக்குறுதியை விடவும் வாக்குறுதியற்ற அன்பளிப்பு மேலானதாகும்’ என்கிறது ​இன்னொரு பழமொழி.

தேர்தல் காலத்தில் வழங்கப்படும் வாக்குறுதிகள் குறித்து, மக்களும் கவனமாக இருக்க வேண்டும். வேட்பாளர் ஒருவர் வாக்குறுதியை வழங்கும் போது, அதை எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்பது குறித்து, மக்களும் யோசிக்க வேண்டும்; குறித்த வேட்பாளரிடம் அதுபற்றிக் கேட்க வேண்டும். உதாரணமாக, தான் ஆட்சிக்கு வந்தால், அரச ஊழியர்களின் சம்பளத்தை, ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் உயர்த்துவேன் என்று, வேட்பாளர் ஒருவர் வாக்குறுதி வழங்குவாராயின், அதை எப்படி நிறைவேற்றுவீர்கள் என்று மக்களும் மக்களுக்கான ஊடகங்களும் வாக்குறுதி வழங்கியவரிடம் கேட்க வேண்டும்.

தமக்குக் கிளுகிளுப் பூட்டுகின்ற, தம்மைச் சந்தோசப்படுத்துகின்ற வாக்குறுதிகள் தேர்தல் மேடைகளில் வழங்கப்படும் போது, கரகோசம் செய்வதும் சந்தோசங்களை வெளிப்படுத்துவதும் மட்டும் புத்திசாலி வாக்காளர்களின் பண்பாக இருக்க முடியாது.

வாக்குறுதிகள் வழங்கப்படும் போது, அவற்றை வழங்குகின்றவர்களிடம் கேள்விகள் கேட்க வேண்டும். அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதிலுள்ள சாத்தியங்கள் குறித்து, வாக்காளர்கள் ஆராய வேண்டும்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணும் பொருட்டு, புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்கப் போவதாக, ஆட்சியிலுள்ளோர் சிறுபான்மை மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்ததை, அத்தனை இலகுவில் மறந்து விட முடியாது. ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை.

இந்த நாட்டுக்குப் புதிய அரசமைப்பு ஒன்று தேவையில்லை என, பௌத்த பீடாதிபதிகள் அறிவித்தமையை அடுத்து, புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டு விட்டன.

ஆனால், இது குறித்து இந்த ஆட்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

எவ்வாறாயினும், வாக்குறுதிகளை வழங்கி விட்டு, அவற்றை நிறைவேற்றாத அரசியல்வாதிகள், ஜனநாயக ரீதியாகத் தண்டிக்கப்படுவார்கள் என்கிற அச்சத்தை, சாய்ந்தமருது ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அச்சம், தேசம் முழுவதும் பரவ வேண்டும்; அது மக்களுக்கு நல்லதாகும்.

‘சாய்ந்தமருதின் தீர்மானம் முழு முஸ்லிம்களையும் பாதிக்கும்’ – ஹக்கீம்

“நகர சபை விடயத்துக்காக, சாய்ந்தமருது பள்ளிவாசல், மொட்டு அணிக்கு ஆதரவளிப்பது, நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கும் செயலாகும். முழுச் சமூகத்தையும் பாதிக்கும், அரசியல் தீர்மானங்களுக்கு சாய்ந்தமருது மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்” என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபைக்கும், கட்சி முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு சனிக்கிழமை (26) நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு கூறிள்ளார்.

மரைக்காயர் சபை உறுப்பினர்களை ஒன்றுகூட்டி, தீர்மானம் மேற்கொள்ளாமல், பள்ளிவாசல் செயலாளர் அறிவித்த இந்தத் தீர்மானமானது, பள்ளிவாசலின் ஒட்டுமொத்தத் தீர்மானமாக அமையாது என்பதைக் கலந்துரையாடலில் ஈடுபட்ட மரைக்காயர் சபை உறுப்பினர்கள் இதன்போது அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மேலும் கூறுகையில்,
“சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், சுயேட்சையாகத் தனித்துப் போட்டியிட்டது. அதற்கு மக்கள் வழங்கிய ஜனநாயக ஆணையை, நாங்கள் மதிக்கின்றோம். அதன்மூலம், கல்முனையில் ஏற்பட்ட சரிவைக் கட்சி தாங்கிக்கொள்ளும். ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷவை சாய்ந்தமருதுக்குக் கூட்டிவந்து, விரோத சக்திகளுக்குத் துணைபோனமை, நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் சமூகத்தையும் பாதிக்கும் செயலாகும். அதை ஒருபோதும் அங்கிகரிக்க முடியாது.சாய்ந்தமருது நகர சபை குறித்து, ஒவ்வோர் அரசியல்வாதியிடமும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அதற்கு, அவர்கள் தருவதாக வாக்குறுதி அளித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடு, மாற்றப்பட வேண்டும். மாற்றுச் சக்திகள் தலையீட்டின் மூலம், இந்தப் பிரச்சினையை இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்க முடியாது. நகர சபை விடயத்தில், முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வழங்கிய வாக்குறுதி, ஒருநாளும் பெறுமதி அற்றுப்போக முடியாது.

சாய்ந்தமருதில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒன்பது உறுப்பினர்களையும் நாங்கள் புறந்தள்ள முடியாது. நாங்கள், பிரிந்துகொண்டு தீர்வுகளை நோக்கி, வெவ்வேறு திசைகளில் பயணிக்க முடியாது. முதற்கட்டமாக, நாங்கள் ஒற்றுமைப்பட்டு அதிகாரங்களை எங்களுக்குள் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் எங்களுக்கிடையிலான அதிகார ரீதியிலான சமன்பாட்டைச் சரிசெய்துகொள்ள முடியும். பேச்சுவார்த்தையின் அடிப்படையில் எங்களுக்குள் பேசித் தீர்க்கவேண்டிய பிரச்சினைகளுக்காக, முழு சமூகத்தையும் பாதிக்கும் வகையில், அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வது எங்களைப் பெரும் ஆபத்துக்குள் தள்ளிவிடும். அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து, நாங்கள் சிந்திக்க வேண்டும். இந்த விடயத்தில், நாங்கள் தூரநோக்குச் சிந்தனையுடன் செயற்படுவதே ஆரோக்கியமான விடயமாகும்” என்றார்.

பள்ளிவாசல் தரப்பின் விளக்கம்

எவ்வாறாயினும் மரைக்காயர் சபையைக் கூட்டித் தீர்மானம் மேற்கொள்ளாமல், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவளிப்பதென, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தீர்மானம் எடுத்துள்ளதாகக் கூறப்படும் குற்றசாட்டை, சாய்ந்தமருது பள்ளிவாசல் தரப்பு மறுக்கிறது. முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவான சிலர், இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், பள்ளிவாசலின் நிர்வாகக் கூட்டங்களுக்குத் தொடர்ச்சியாக வருகை தராத சில மரைக்காயர்களும் இவ்வாறான குற்றச்சாட்டைக் கூறிவருவதாகவும் பள்ளிவாசல் தரப்புத் தெரிவிக்கின்றது.

மேலும், பள்ளிவாசலின் நிர்வாகத்திலுள்ள மிகப் பெரும்பான்மையினர், மக்களின் அபிப்பிராயங்களுக்கு செவிமடுத்த நிலையில், மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் பள்ளிவாசல் தரப்பினர் கூறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post oogle Mapல் தற்செயலாக பதிவாகிய 10 மர்மங்கள்!! (வீடியோ)
Next post ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…!! (அவ்வப்போது கிளாமர்)