ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரின் மரணம்: பெயர்கள் வேறு கதை ஒன்று!! (கட்டுரை)

Read Time:15 Minute, 44 Second

சில மரணங்கள் கொண்டாடப்படும்; சில மரணங்கள் உலகையே உலுக்கும்; இன்னும் சில அதிர்ச்சிக்குள்ளாக்கும்; சில நிம்மதியைத் தரும்; சில கேள்விகளால் தொக்கி நிற்கும். எது, எப்படி இருப்பினும், மரணங்கள் கொண்டாட்டத்துக்கு உரியனவல்ல.

வாழ்க்கையைக் கொண்டாட முடியாதவர்களே மரணங்களைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், மரணத்துக்கு அரசியல் பெறுமதி உண்டு. அது கொலையாயினும், இயற்கை மரணமாயினும், அகால மரணமாயினும் அரசியலாக்கம் பெற்றுவிடும்.

ஞாயிற்றுக்கிழமை (27) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கச் சிறப்புப் படைகளின் தாக்குதலில், ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டதாக அறிவித்தார்.

இது, உலகளாவிய ரீதியில் முக்கிய பேசுபொருளாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகத் தமது செயல்களால், மத்திய கிழக்கையும் உலகத்தையும் அதிர வைத்த ‘இஸ்லாமிய அரசு’ (ஐ.எஸ்) எனப்பட்ட அமைப்பின் தலைவர் என்ற வகையிலும், குறிப்பாக அமெரிக்காவால் தேடப்படும் மிக முக்கியமான நபர் என்பதன் அடிப்படையிலுமே, இவரது மரணம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டதை, எவ்வாறு ஒபாமா அறிவித்தாரோ, அதைப்போலவே அல் பக்தாதியின் மரணத்தையும் ட்ரம்ப் அறிவித்தார். இரண்டுக்கும் இடையில் நிறைய ஒற்றுமை உண்டு.

பின்லாடன், பக்தாதி இருவரும் அமெரிக்காவால் பாராட்டிச் சீராட்டி வளக்கப்பட்டவர்கள்; இருவரும் அவரவர் அமைப்புகள் தேய்ந்து, கவனங்குறைந்து போன நிலையில் கொல்லப்பட்டவர்கள். இருவரது கொலைகளும், அமெரிக்காவின் உள்ளூர் அரசியல் நிலைவரங்களோடு தொடர்புபட்டவை ஆகும்.

ஐ.எஸ் உருவாக்கமும் அமெரிக்க ஆதரவும்

எவ்வாறு ஒசாமா பின்லாடன், அமெரிக்காவின் தேவைகளுக்காக ஆப்கானில், ரஷ்யாவுடன் போரிடுவதற்கு உருவாக்கப்பட்டாரோ, அதேபோலவே பின்னாளில் ‘இஸ்லாமிய அரசு’ (ஐ.எஸ்) என அறியப்பட்ட அமைப்பும், அதன் தலைவரான அபூபக்கர் அல் பக்தாதியும் உருவாக்கப்பட்டது.
2003ஆம் ஆண்டு, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஈராக்கை ஆக்கிரமித்தன. அக்காலப்பகுதியில், மத்திய கிழக்கில் அல்கைடாவோ அல்லது வேறெந்த ஜிகாதிய இயக்கங்களோ காலூன்றி இருக்கவில்லை. ஈராக் மீதான முற்றுகையின் போது, அமெரிக்கக் கூட்டுப் படைகள் எதிர்பாராத விதமாக, எதிர்ப்பை எதிர்நோக்கின.

இவ்வெதிர்ப்பு அங்கிருந்த இளைஞர்களிடமிருந்து வந்தது. அது, வீரியம் மிக்கதாயும் ஆக்கிரமிப்பாளர்களை விரட்டுவதை நோக்காகவும் கொண்டிருந்தது. ஆனால், அது பாரியளவில் ஒழுங்குசெய்யப்பட்டதாக இருக்கவில்லை. இந்நிலையில், இதை ஒடுக்குவதற்காகக் ‘கூலிப்படைகளை’ அமெரிக்கா பயன்படுத்தியது.

இலத்தீன் அமெரிக்காவில், 1970, 80களில் ‘கொன்ரா’ என அறியப்பட்டவர்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டார்களோ (‘சல்வடோர் தெரிவு’ என அழைக்கப்படுகிறது. ஏனெனில், இதன் உதவியுடனேயே, எல்-சல்வடோரில் மக்கள் எதிர்ப்புக் கட்டுப்படுத்தப்பட்டது) அதேபோலவே, ஈராக்கிலும் நடந்தது.

ஈராக்கில் இருந்த சுன்னி முஸ்லிம்களும் ஷியா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் மோதும் நிலை உருவானது. பிரித்தாளும் தந்திரம் இங்கும் பயன்படுத்தப்பட்டது. இக்காலப்பகுதியிலேயே அல்கைடா, ஈராக்கில் ‘ஈராக்கிய இஸ்லாமிய அரசு’ என்ற பெயரில் கால்பதிக்கத் தொடங்கியது.

2011ஆம் ஆண்டு உருவான அரபு வசந்தத்தை வாய்ப்பாக்கி, லிபியாவின் மீது நடந்த அமெரிக்க முற்றுகையின் போது, அப்துல் ஹக்கீம் பெல்ஹாஜ் என்ற முன்னாள் லிபிய அல்கைடா தலைவரின் வழிகாட்டலில், நூற்றுக்கணக்கான போராளிகள் லிபிய இஸ்லாமியப் போராட்டக்குழு என்ற பெயரில் நேட்டோ படைகளுடன் இணைந்து, முஹம்மர் கடாபியைப் பதவியிலிருந்து அகற்றப் போரிட்டன.

அதைத்தொடர்ந்து, சிரியாவில் ஆட்சிமாற்றத்துக்கான முயற்சியை அமெரிக்கா தொடங்கியபோது, அந்தக் கைங்கரியத்துக்கும் பெல்ஹாஜ் தனது போராளிகளை அனுப்பிவைத்தார். அவர்களுக்கு முழுமையான இராணுவ உதவியும் லிபியாவில் இருந்து சிரியாவுக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கான உதவிகளையும் இப்போராளிகளுக்கு அமெரிக்கா, பிரித்தானிய இராணுவத்தினர் உதவினர்.

2012ஆம் ஆண்டு, சிரியப் போராளிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, வடக்கு ஜோர்டானில் அமெரிக்கா, துருக்கி, ஜோர்டான் ஆகியன இணைந்து பயிற்சி முகாமொன்றை உருவாக்கின. இதில் பிரித்தானிய, பிரெஞ்சு இராணுவப் பயிற்சியாளர்களும் சிரியப் போராளிகளுக்குப் பயிற்சி அளித்தனர். இதில் பயிற்சி பெற்றவர்கள் பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்தனர்.

அல்கைடா அமைப்பில் இருந்த பல சிரியர்கள், சிரியாவின் ஆட்சிமாற்றத்துக்கான முயற்சிகள் தொடங்கியவுடன் சிரியாவுக்கு மீண்டனர். அவர்கள் தங்களை, அல்-நுஸ்ரா முன்னணி என்று பெயரிட்டு ஒருங்கிணைத்து, அமெரிக்காவின் ஆசியுடன் இணையத் தொடங்கின.

ஈராக், லிபியா போல் சிரியா அமெரிக்காவுக்கு இலகுவாக இருக்கவில்லை. சிரியாவில் உள்நாட்டுப்போர், எதிர்பாராத திசை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பல குழுக்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அவை ஒன்றுடன் ஒன்று உடன்படவில்லை. இதனால் அமெரிக்கா எதிர்பார்த்த பலனை அடைய முடியவில்லை. இது அமெரிக்க இராணுவ மற்றும் புலனாய்வு பிரிவுகளுக்குப் பலத்த தலையிடியாக இருந்தது. இந்நிலையிலேயே, அல்-பக்தாதி சிரியாவுக்குள் கொண்டு வரப்பட்டார்.

அல்-பக்தாதி, ஈராக் ஆக்கிரமிப்பின் போது, கைதுசெய்யப்பட்டு, ‘அபு கிராப்’ சிறையிலும் பின்னர் ‘புக்கா’ சிறையிலும் இருந்தார். இவருடன் ‘புக்கா’ சிறையில் இருந்தவர்களே, பின்னர் இவரின் ஐ.எஸ் கூட்டாளிகளாயினர். இவர் விடுதலையானதைத் தொடர்ந்து, சிறிய குழுவொன்றை உருவாக்கி, ஈராக்கின் முக்கியமான ஷியா தலைவர்களைக் கொலை செய்தார்.

இதன்மூலம், அமெரிக்கா விரும்பிய ஷியா-சுன்னி முரண்பாட்டுக்கு உதவினார். பின்னர், தனது குழுவை, ஈராக்கில் இருந்த அல்கைடாவின் குழுவுடன் (ஈராக்கிய இஸ்லாமிய அரசு) இணைத்து, அதில் தன்னை முன்னிலைப்படுத்தினார்.

சிரிய உள்நாட்டுப்போரில், அமெரிக்கா வேண்டிய முன்னேற்றம் கிடைக்காத நிலையில், சிரியாவுக்கு வந்த அல்-பக்தாதி அங்கிருந்த அல்கைடா போராளிகளான அல்-நுஸ்ரா முன்னணியினரைத் தன்னுடன் இணைத்து, தனது அமைப்பின் பெயரை ஐ.எஸ்.ஐ.எஸ் என அறிவித்தார். இதுமுதல் ஐ.எஸ்.ஐ.எஸ் தனியாகவும் அல்கைடா தனியாகவும் செயற்பட்டன.

இதன் பின்னால், சில உண்மைகள் மறைந்துள்ளன. அல்-பக்தாதி, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் சிறையில் இருந்தபோது, சரியாகக் கவனிக்கப்பட்டு இருக்கிறார். அதன் விளைவாலேயே அவர் விடுவிக்கப்பட்டவுடன், அமெரிக்கா விரும்பிய ஷியா-சுன்னி மோதலை ஈராக்கில் சாத்தியமாக்கி இருக்கிறார்.

அதேபோல, இவர் தொடக்க காலத்தில் அல்கைடா உறுப்பினர் அல்ல; ஆனால், அமெரிக்காவின் உதவியுடனேயே, இவர் ஈராக்கிய அல்கைடாவில் முக்கிய இடம் பெற்றார். மேலும், இவருக்கும் அல்-நுஸ்ரா அமைப்புக்கும் இடையிலான இணைப்பைச் சாத்தியமாக்கியதே அமெரிக்கப் புலனாய்வுத் துறையினரே. இதேபோலவே, தொடர்ச்சியாக ஐ.எஸ்.ஐ.எஸுக்கு அமெரிக்க உதவி கிடைத்து வந்துள்ளமையும் பல ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளன.

இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஒதுக்கப்பட்டு, வாலறுந்த காற்றாடி போல அந்தரித்து இருக்கும் போது, அதன் தலைவர் கொல்லப்பட்டுள்ளார். இப்போது, அவர் கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழாமல் இல்லை. அதேவேளை, அவரின் மரணத்தை, ‘பயங்கரவாதத்தின் மீது விழுந்த மிகப்பெரிய அடி’ என்றும் பலர் பேசி வருகிறார்கள்.

ஆனால், அல்-பக்தாதி இதற்கு முன்னரும் பலமுறை கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த ஐயம் மேலும் அதிகரிப்பதற்காக காரணம், “இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு, ரஷ்யா வழங்கிய ஒத்துழைப்புக்குப் பாராட்டைத் தெரிவிக்க விரும்புகிறேன்” என்று அவர் சொன்னார்.

ஆனால், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், “இது தொடர்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது. இவ்வாறு ஒரு நடவடிக்கை நடைபெறுவதற்கான வாய்ப்புக் குறைவு” என்று கருத்துரைத்துள்ளது.

ஏலவே சொன்னதுபோல, பின்லேடன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது பலர், “இது எத்தனையாவது தடவை” என்று கேள்வி எழுப்பினார்கள். ஏனெனில், 2001ஆம் ஆண்டு டிசெம்பர் மாதமளவிலேயே அவர் இறந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. அவருக்கிருந்த நுரையீரல் நோயின் விளைவால், அவர் இறந்துவிட்டதாக எல்லோரும் சொன்னார்கள். ஆனால், அவர் இறுதியில் அமெரிக்கச் சிறப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக ஓபாமாவால் அறிவிக்கப்பட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இன்று பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளார். அவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான முயற்சியை எதிர்க்கட்சி மேற்கொண்டுள்ளது. அதேவேளை, அவர் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். இந்நிலையிலேயே இச்செய்தி, அவரது மதிப்பை அமெரிக்காவுக்குள் உயர்த்தியுள்ளது.

சிரியாவில் இருந்து படைகளை மீளப்பெறுவதற்கு, சில காலத்துக்கு முன் அவர் எடுத்த முடிவு, பாரிய எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது. அதேவேளை, அவர் மீதான நாடாளுமன்ற நடவடிக்கைக்கான முயற்சிகளும் முனைப்புப் பெற்றுள்ளன.

சிரியா மீதான எண்ணெய்கான போர்

சிரியாவில் இருந்து படைகளை மீளப்பெறுவதாக ட்ரம்ப் அறிவித்ததோடு சேர்த்து, இன்னோர் அறிவித்தலையும் விடுத்திருந்தார். ஆனால், அவை திட்டமிட்டு ஊடகங்களால் மறைக்கப்பட்டன.

“நாங்கள் சிரியாவில் இருந்து வெளியேறினாலும் அங்குள்ள எண்ணெய் வளங்கள் தொடர்ந்தும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கும்” என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். எண்ணெய்காகவே இந்தப் போர் என்பதை, அவர் பொதுவெளியில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அல்-பக்தாதியின் மரணம் எதையும் மாற்றிவிடப் போவதில்லை. மத்திய கிழக்கு குருதிதோயும் பிணக்குவியலாய் காட்சியளிக்கிறது. அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா எனத் தொடர்ந்த ஆக்கிரமிப்புகள் பல்லாயிரக் கணக்கானோரின் வாழ்வைச் சிதைத்துள்ளன.

இன்று, மத்திய கிழக்கில் அமைதியின்மையை உறுதிசெய்வதையே அமெரிக்கா நோக்காகக் கொண்டுள்ளது. அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, தனது எண்ணெய் நலன்களுக்கு அமைதி நல்லதல்ல. இரண்டாவது, அமெரிக்காவால் கட்டுப்படுத்த இயலாத பகுதியை வேறு யாரும் கைப்பற்றாமல் பார்த்துக் கொள்ள அமைதியின்மையே ஒரே வழி என, அமெரிக்க நினைக்கிறது.

கதைகளைக் கேட்கவும் நம்பவும் மக்கள் தயாராக இருக்கிறார்கள். எனவே, கதைகளும் சொல்லப்படுவதற்குத் தயாராக இருக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் பிரபலமான மேஜிக் – உண்மை வெளிவந்தன!! (வீடியோ)
Next post எகிப்திய ராணிக்கு ஏலியன்களுடன் என்ன தொடர்பு..? (வீடியோ)