கல்முனை தமிழ்ப் பிரிவு: துருப்புச் சீட்டா? (கட்டுரை)

Read Time:23 Minute, 59 Second

வடக்குக் கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும், ஒற்றுமையாக ஓரணியில் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்வது என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சி சஜித்தை ஏகமானதாக ஆதரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியதை அடுத்து, தமிழர்களின் வாக்கு யாருக்கு என்ற கருத்துகள், வௌிவரத் தொடங்கியிருக்கின்றன. அப்படியானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை விரைவில் அறிவிக்கும் என்று நம்புவோம்.

13 அம்சக் கோரிக்கையை நிறைவேற்றுவது பற்றிய எதிர்பார்ப்புடன், ஜனாதிபதித் தேர்தல் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்த, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு, கோரிக்கைகள் நிறைவேறவில்லை. அதனால், விஞ்ஞாபனங்களில் உள்ளவற்றில், சாதக பாதகங்களைப் பார்த்துத்தான், இந்த முடிவைத் தமிழரசுக்கட்சி எடுத்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளில், டெலோ தனது முடிவைத் புதன்கிழமை (06) எடுக்கவிருக்கிறது. புளொட் அமைப்பும், தமிழரசுக்கட்சியின் முடிவுக்கு இசைந்தே தீரும். அப்படியானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவும் சஜித்தை ஆதரிப்பதுவே.

கல்முனைத் தமிழ்ப் பிரிவு பிரதேச செயலக விவகாரம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய முடிச்சொன்றைப் போட்டிருக்கிறது. அது பற்றியதாகவே இந்தக் கட்டுரை அமையவிருக்கிறது.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், கல்முனைத் தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் என்பது, சூடு பிடித்த விவகாரமாகவும் 30 வருடங்களைத் தாண்டியும் நிறைவுறாததும் இன்னமும் முடித்து வைக்கப்படாததுமான விவகாரமாக உள்ளது.

இதிலுள்ள கேள்வி, ஏற்கெனவே பல ஜனாதிபதிகளின் ஆட்சியில் இருந்தபோதும் பல அரசாங்கங்கள் நிர்வாகத்தை நடத்தியபோதும் கல்முனைத் தமிழ்ப் பிரிவு பிரதேச செயலக விவகாரத்தை ஒரு பொருட்டாகக் கண்டு கொள்ளவே இல்லை.

கல்முனைத் தமிழ்ப் பிரதேச செயலகம் தொடர்பில், முஸ்லிம் அரசியல் தலைவர்களது நடவடிக்கைகள், தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் சதி நடவடிக்கை போலவே புலப்படுவது மட்டுமல்ல, இன முரண்பாட்டைத் தோற்றுவித்து, அதன் மூலம் அப்பாவி முஸ்லிம் மக்களின், அரசியல் ஆதரவைப் பெறமுயற்சிக்கும் ஒரு தந்திரோபாயத் திட்டம் என்று கூடச் சந்தேகங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

அரசியல் வளர்க்க வேண்டும் என்று நினைத்து, இனங்களுக்கிடையில் பகையுணர்வை ஏற்படுத்தும் அறிக்கைகளை விடுவதையோ, பேசுவதையோ தவிர்த்துத் தாங்கள் சார்ந்த மக்களுக்கு வேண்டிய நல்ல சேவைகளைச் செய்வது சாலச்சிறந்தது.

கல்முனைத் தமிழ் உப பிரதேச செயலகமானது, கல்முனைத் தமிழ் பிரதேச செயலகமாக தரம் உயர்வதால், இனமுரண்பாடுகள் ஏன் வரவேண்டும் என்பதை, தமிழ் – முஸ்லிம் இனமுரண்பாடு ஏற்பட்டுவிடும் என அறிக்கை விடுபவர்கள் தெளிவாகத் திறந்த மனத்துடன் தெரியப்படுத்தல் வேண்டும் என்ற கோசங்கள் எழுந்திருந்தன.

தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும், இன்று நிம்மதியாகச் சந்தோஷமாக, சகோதரத்து வத்துடன் கிழக்கில் வாழ்கின்றனர். அவர்களுக்கு இடையில், எந்தவிதமான விரிசல்களும் இல்லை. திறந்த மனதுடன்தான் வாழ்கின்றனர்.

இந்நிலையில், கல்முனையைப் பிரித்தால், முரண்பாடு வலுக்கும் என எச்சரிக்கும் அரசியல்வாதிகள், யாரை எச்சரிக்கின்றார்கள்? ஏன், எதற்காக எச்சரிக்கை விடுகிறார்கள் என்ற நிலைப்பாட்டை, அவர்கள் சரியாகத் தெளிவுபடுத்தவேயில்லை.

உண்மையில், தமிழர்கள் எதிர்பார்க்கும் நியாயமான கோரிக்கையாக, ஏற்கெனவே உப தமிழ்ப் பிரதேச செயலகமாக, நீண்ட காலமாகத் தனித்தியங்கும் கல்முனைத் தமிழ் உபபிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தி, அதனூடாக அரசசேவையை விரிவுபடுத்தி, மக்கள் துரிதமான சேவையைப் பெறவேண்டுமென்ற நல்ல நோக்கத்துக்காகவே தனித்தமிழ் பிரதேச செயலகம் என்ற நிர்வாகக் கட்டமைப்பை தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், தங்கள் அரசியல் இருப்பைத் தக்கவைக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்துக்காக மட்டுமே, ஒருசில முஸ்லிம் அரசியல்வாதிகள், இத்திட்டத்தை எதிர்ப்பது போன்று, ஒரு நடவடிக்கையை ஏற்படுத்தி, அதனூடாக, அவர்கள் சார்ந்த மக்களிடம் செல்வாக்கைப் பெறமுயற்சிக்கின்றனர். எனவே, தயவுசெய்து, தமிழ் – முஸ்லிம் மக்களைப்பிரிக்கும் சதியில், அரசியல்வாதிகள் ஈடுபடுவதை எந்தச் சமூகமும், இனிமேல் ஏற்றுக்கொள்ளாது. அதே போன்று, எந்தச் சதியிலும் இரு இனமக்களும் சிக்கமாட்டார்கள் என்பதையும், தெளிவாகப் புரிந்து கொண்டால் மிக நன்று என்பதுதான், தமிழர்களின் ஜதார்த்தம்.

அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் அரசியல் கட்சிகள், கரையோர மாவட்டம் கோரியிருந்தனர். எந்தத் தமிழ்க் கட்சியோ, தமிழ் மக்களோ இதுவிடயமாக எதுவித எதிர்க்கருத்துகளையும் வெளியிட்டிருக்கவில்லை. அதேபோன்று, மட்டக்களப்பு மத்தி என்று தனிமுஸ்லிம் பாடசாலைகளை மய்யப்படுத்தி, அமையப்பெற்றுள்ள மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம், இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் என்று, எந்தத் தமிழ் அரசியல்வாதிகளோ அமைப்புகளோ எதிர்க் கருத்துகளைக் கூறித் தடுக்க நினைக்கவில்லை.

இவ்வாறிருக்க, ஏன் தமிழ்ப் பிரதேச செயலகம் ஒன்று உருவாகுவதைத் தடைசெய்ய எத்தனிக்கின்றார்கள் என்பதுதான், தமிழ் மக்கள் கேட்கும் கேள்விகளில் ஒன்று.

இன விரோத கருத்துகளைக்கூறும் அரசியல் தலைவர்களே! தயவு செய்து, தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, மக்களுக்கு நல்லவை நடக்கத் தங்களின் ஆதரவை வழங்குங்கள். அதுதான் நல்ல அரசியல்வாதிகளின் பண்பாடாகும்.

கடந்த மார்ச் மாதத்தில், மிகவும் அல்லோல கல்லோலமான வகையில், உண்ணாவிரதமும் சத்தியாக்கிரகமும் நடத்தப்பட்டு, மூன்று மாத கால அவகாசம் என்ற அடிப்படையில், அவை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன.

கடந்த நான்கு வருடங்களையும் தாண்டி நடைபெற்றுவரும் நல்லாட்சி அரசாங்கத்தில், கல்முனைத் தமிழ்ப் பிரிவு, தனியாக அமைத்துத் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக விழுந்திருந்தது.

இந்நிலையில்தான், புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறுகிறது. கடந்த காலங்களில், பதவியிலிருந்த எந்த ஒரு ஜனாதிபதியும் முடித்து வைக்காத தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்துக்கான கோரிக்கையை, கடந்த ஆட்சி நடத்தித்தரவில்லை என்பது, மிகக் கடுமையான கோபமாகவே கொள்ளப்படுகிறது.

இந்தநிலையில், எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரும் கல்முனைத் தமிழ்ப் பிரிவுக்கு ஆதரவாகத் தங்களது கருத்துகளை வெளியிடாத நிலையில், கல்முனை வாழ் தமிழ் மக்கள், பொதுஜன பெரமுனவுக்குத் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பெரும்பான்மைக் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள், தமிழ் மக்களுக்கு ஆதரவான முடிவுகளை வழங்குவார்களாக இருந்தால், சிங்களப் பெரும்பான்மை மக்களின் வாக்குகள் குறைவடைய கூடும் என்ற அச்சம், மிகப் பலமாக இருக்கிற நிலையில், வேண்டுமென்றே இந்தக் கல்முனைத் தமிழ்ப் பிரிவு என்ற விடயத்தை எல்லோரும் ஏன் தூக்கிப் பிடிக்கின்றார்கள் என்ற கேள்வியும் இதில் இருக்கிறது.

இந்தநிலையில், ‘யானை இல்லையானால் பூனை’ என்கிற வகையில், தொடர்ந்து வந்த செயற்பாடுகள், தமிழ் மக்களைக் கட்டிப்போட்டன.

கடந்த ஐந்து வருட நல்லாட்சியில் நடைபெறாததற்காக, கடந்த மூன்று தடவைகளுக்கும் மேலாக நிராகரிக்கப்பட்டு வந்த மஹிந்த தரப்பான பொதுஜன பெரமுனவை, தமிழர்களாகிய நாம் ஆதரிப்பதா என்ற கேள்வி பலமாக இருந்தாலும், கல்முனை மக்கள் இப்படி முடிவெடுப்பதா என்ற வகையில், விமர்சனங்களும் வந்த வண்ணமிருக்கின்றன.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம், 1989இல் சுற்றுலா உதவி அரசாங்க அதிபர் பிரிவாக இயங்கி 1993ஆம் ஆண்டு முதல் இற்றை வரை, உப பிரதேச செயலகமாக இயங்குகிறது.

காணி, நிதிவளம் அற்றதாக இயங்கும் இப் பிரதேச செயலகத்துக்குக் கணக்காளர் நியமிப்பது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியளிப்பாக இருந்த போதிலும் இன்றுவரையிலும் நடைபெறவில்லை.

‘சாண் ஏற முழம் சறுக்கும்’ தமிழர் அரசியலில், கோரிக்கைகள் வலுப்பெற்ற வேளைகளில், நாட்டில் ஏற்பட்ட ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட குழப்பகரமான பல சம்பவங்களால் நல்லாட்சியில் நிறைவேறவில்லை.

ஏ‌ற்கெனவே, 1993இல், அமைச்சரவை ஒப்புதல் கிடைத்து, அவ்வேளையில் நாட்டில் ஏனைய பகுதிகளில் உப பிரதேச செயலகங்கள், பிரதேச செயலகங்களாகத் தரம் உயர்த்தப்பட்டன.

அதற்குப் பின்னர், பல பிரதேச செயலகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டும் இருக்கின்றன. இவ்வாறான நிலையில், இந்தப் பிரதேச செயலகமே, இப்போது கல்முனை மக்களின் ஒரே விடாப்பிடி; அதுபோல, அம்பாறை மாவட்டத்தில் மாத்திரமல்ல, கிழக்கிலும் முஸ்லிம்களின் அரசியல் பலம் காரணமாக, நிகழ்கின்ற அடக்கு முறையான பல்வேறு செயற்பாடுகள் குறித்து, பல்வேறு விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஏற்கெனவே, அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்ட கல்முனைத் தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாகமாக மாற்றுவதற்கு மீண்டும் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தாலும், இன்னமும் அது முழுமைபெறவில்லை.

அதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமற்றது; அது ஆதரவு தெரிவிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் பலம் எதுவும் இல்லாதது என்ற வாதம் ஒன்று, இவ்வேளையின் எழுகிறது.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை (திகாமடுல்ல தேர்தல் மாவட்டம்) மாவட்டத்தில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 2018 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படி, நான்கு தேர்தல் தொகுதிகளிலுமாக 05 இலட்சத்து 03 ஆயிரத்து 790 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்கமைய, அம்பாறைத் தேர்தல் தொகுதியில், 01 இலட்சத்து 74 ஆயிரத்து 421 வாக்காளர்களும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 88 ஆயிரத்து 217 வாக்காளர்களும் கல்முனைத் தேர்தல் தொகுதியில் 76 ஆயிரத்து 283 வாக்காளர்களும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 01 இலட்சத்து 64 ஆயிரத்து 869 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இவற்றில் அண்ணளவாக 85ஆயிரம் தமிழ் வாக்குகள் இந்த வாக்குகளில் மூன்றில் ஒருபகுதி, பொது ஜன பெரமுனவுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதனை வைத்துக் கொண்டு, எது நடக்கலாம் என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ளவதுடன், இந்தப் பொது ஜன பெரமுனவுக்கான கல்முனைத் தமிழ் மக்களின் ஆதரவு தொடர்பில், வேறு ஒன்றையும் கூறிக் கொள்ள முடியாது.

அதேவேளையில், ஏனைய முஸ்லிம் தலைவர்களை விடவும், முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களும் பொதுஜன பெரமுனவுடன் தான் இருக்கிறார்கள். இதுவுமோர் ஆபத்தானதே.

எந்தப்பக்கம் இருந்தாலும், ஆபத்து நமக்கே என்ற நிலை இருக்கையில், எடுத்த எடுப்பிலேயே கடந்த கால அரசாங்கத்தைத் தூக்கியெறிவதும், அவர்களுக்கெதிராகப் போர்க் கொடி தூக்குவதும் எதிர்த்தரப்புக்கு ஆதரவு வழங்குவதும் எவ்வாறு துருப்புச் சீட்டாக இருக்கப் போகிறது என்பது முடிவைக்காணாததே.

ஒரு நீண்ட கால தமிழ்த் தேசியவாதி, தமிழரசுக் கட்சியின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலம் மிக்க தூண் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட சிலர் இவ்வாறானதொரு முடிவை எடுத்திருப்பது, தமிழர்களின் உரிமைப் போராட்டத்தையும் இனப்பிரச்சினையையும் விலை கொடுப்புகளையும் விளைவுகளையும் அறியாதது போன்றே இருக்கிறது என்ற வகையில், இப்போது எழும் கவலைகள் கலந்த விமர்சனங்கள், ஜனாதிபதித் தேர்தல் முடிவின் பின்னரே பதிலை வழங்கும். அவ்வேளையில், துருப்புச் சீட்டுக்கு என்ன நடக்குமோ பொறுத்திருப்போம்.

கூட்டமைப்பின் தலைமை மாற்றப்பட வேண்டும்: தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்க ஒரேவழி….

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும். கூட்டமைப்பின் தலைவராக வருகின்றவர் துடிப்பானவர்களாக இருக்க வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் சனிக்கிழமை (02) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவரது கருத்தில்,

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில், சிறுபான்மை மக்கள் மற்றும் இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களிலும் நூற்றுக்கு 70 சதவீதமானவர்கள் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக உள்ளது; மற்றும், சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் முகமாக, சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக வருவதற்கு நாங்கள் எங்களுடைய ஆதரவைத் தெரிவிப்பதற்கு முடிவெடுத்துள்ளோம்.

சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராக ஆதரிக்கத் தீர்மானம் எடுத்ததற்கான நோக்கம், எதிர்க்கட்சித் தலைவர்கள் மதவாதம், இனவாதம் ஆயுத கலாசாரம் என்பனவற்றை உருவாக்கினார்கள். அது மட்டுமல்லாது ஆயுத கலாசாரத்துடன் இருப்பவர்களையும் சேர்த்து, இன்று ஜனாதிபதித் தேர்தலுக்கு வந்திருக்கிறார்கள். ஆகையால், நாங்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால், எங்களுடைய தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்க வேண்டும் என்பதாகும். அதேபோல, முஸ்லிம் சகோதர்களுக்கும் சஜித் பிரேமதாஸவின் ஆட்சியிலேயே விமோசனம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஆகவே, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிடம் நாங்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால், தமிழ் மக்களுக்கு வடக்கு, கிழக்கு இணைப்பை வலியுறுத்துவதோடு, அதேவேளையில், தமிழ் மக்களுடைய அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வையும் முழுமையாக எதிர்பார்க்கின்றோம்.

சிறுபான்மை மக்களுடைய உரிமைகளை, அமைச்சர் சஜித் பிரேமதாஸ பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான், இந்தத் தேர்தலில் அவரை ஆதரிப்பதாக முடிவு செய்திருக்கிறோம்.

கடந்த பொதுத் தேர்தலில், இந்த நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டுவருவதற்கு, ரணில் விக்கிரமசிங்க, மாதுழுவே தேரர் தலைமையில் 109 தலைவர்கள், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டோம். அதில், எங்களது அமைப்பும் ஒன்று வியாழக்கிழமை (31) இந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட சிறிகோத்தவில் இருந்து ஓர் அழைப்பு வந்தது. ஆனால், அங்கு செல்ல முடியவில்லை. வௌ்ளிக்கிழமை (08) அம்பாறையில் வைத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில கையொப்பமிட உள்ளோம்.

நல்லாட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுத்தும், ரணில் எந்த விதமான உதவிகளையும் சிறுபான்மை மக்களுக்குச் செய்யவில்லை; வடக்கு, கிழக்கு மக்களின் அபிலாசைகளையும் இவர் ஏற்கவில்லை.

ஏனென்று சொன்னால், வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்; அவர்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கடந்த 20 வருடங்களாக ஆதரித்தோம்.

எங்களது தொழிற்சங்கம் மற்றும் எங்களது மற்ற அமைப்புக்கள் என்பன அரசியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முழுக்காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பே ஆகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பணிப்பின் படியேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தோம். அவர்களை மதித்தே அந்த ஆதரவைத் தெரிவித்தோம். இன்று நாங்கள் மக்களது பிரச்சினைகளையோ, குறைபாடுகளையோ சுட்டிக்காட்டிக் பேச முனையும் போது, அவர்கள் நேரமற்றவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் அதைப்பற்றிச் சிந்திப்பதில்லை. அவர்கள் வாக்குகளைப் பெற்று, சுகபோக வாழ்க்கையைத்தான் வாழ்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன், மாவை போன்றவர்களால் எமது மக்களுக்கு விமோசனம் கிடைக்காது. அந்த வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும். கூட்டமைப்பில் தான் நாங்கள் பயணிப்போம்; திருகோணமலையில் சுமந்திரன், உரையாற்றும் போது, விமர்சிப்பவர்கள் தலைமைத்துவத்துக்கு வாருங்கள் என்றார். இன்று நான் கூறுகின்றேன். கூட்டமைப்பின் தலைமையை நான் பொறுப்பேற்கத் தயாராக உள்ளேன். இவர்களை விட, மக்களின் துன்பம், துயரம் என்பன எமக்கு நன்றாகத் தெரியும். அத்தோடு 40 வருட காலமாக, நாங்கள் அரச நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றோம். ஆகவே வடக்கு, கிழக்கு மக்கள் வேட்பாளரைத் தெரிவு செய்யும் போது சரியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பத்ய இன்பத்துக்கு தடையேதுமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
Next post இரவுக்கு ஆயிரம் கண்கள்!! (மகளிர் பக்கம்)