By 8 November 2019 0 Comments

உடல் கடிகாரத்தைக் குழப்பும் பருவ மாற்றம்!! (மருத்துவம்)

வானிலை மாற்றம் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. இந்த பருவகால மாற்றங்களுக்கேற்ப நம் உடல் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் திறனைப் பெற்றிருக்கிறது. இருந்தாலும் கூட கோடை, குளிர்காலம் அல்லது பருவமழை ஆகியவற்றின் அதிதீவிரம், நம் உடலையும் ஆரோக்கியத்தையும் குழப்பமடையச் செய்கிறது.அதிலும் இந்தியாவில் தற்போது ​​அதிக வெப்பம், அதிக மழை என்பது முந்தைய ரெக்கார்டுகளையெல்லாம் முறியடிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்த தட்பவெப்ப நிலையின் ஒழுங்கற்ற தன்மை, உடலில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி நிச்சயம் நமது ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

ஒழுங்கற்ற பருவநிலைசெப்டம்பர், அக்டோபர் மாதங்களிலும் கோடை காலம் போன்று வெயில் அடிக்கிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. மழை கொஞ்சம் பெய்தாலே சாலை எங்கும் குளம், குட்டைகளாகிவிடும். இதில் பருவமழைக்காலம் என்றால் சாக்கடைகள், வடிகால் குழாய்கள் அடைத்துக் கொண்டு, அதிலிருந்து வெளியேறி சாலைகளில் தங்கும் மாசடைந்த நீரினால் தைராய்டு, மலேரியா, டெங்கு, பூஞ்சை போன்ற தொற்று நோய்களோடு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காலரா, வாந்தி போன்ற வயிறு சம்பந்தப்பட்ட தொற்று நோய்களும் வந்துவிடும்.

இப்படி கடும் வெப்பத்திலிருந்து பருவமழைக்கு திடீரென்று மாறும் காலக்கட்டத்தில்தான் பெரும்பான்மையான மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி முடங்கி நோய்வாய்ப்படக்கூடிய வாய்ப்பு அதிகமாகிறது. பருவநிலையின் வேகமான மாற்றங்கள் நம் உடலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் நோய் எதிர்ப்பு சக்தியில் முதலீடு செய்து, ஒரு வலுவான பாதுகாப்பைப் பெறுவதற்கு முக்கியம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மழை மற்றும் பனிக்காலங்களில் குறைவான சூரிய ஒளி வெளிப்படும். இது பல்வேறு வழிகளில் நம் உடலை பாதிக்கும். அதாவது குறைந்த சூரிய ஒளி நமது உடலின் சர்க்காடியன் தாளத்தை (Circadian rhythm) சமநிலையிலிருந்து வெளியேற்றுகிறது. சர்க்காடியன் கடிகாரத்தின சமநிலையற்ற தன்மை, சோம்பல், தூக்க நேரத்தில் மாறுபாடு, எப்பொழுதும் உடல் அசதி, அதிகப்படியான உணவு எடுத்துக் கொள்ளுதல் மற்றும் மனச்சோர்வு போன்றவைகளாக வெளிப்படுகிறது.

அதுமட்டுமல்ல… குறைவான சூரிய ஒளி, நம் மனநிலையை சுறுசுறுப்பாக்கக்கூடிய செரட்டோனின் உற்பத்தியையும் குறைத்துவிடும். செரட்டோனின் உற்பத்தி குறைந்தால் மன அழுத்தத்திற்கு வழி வகுக்கும். பருவநிலையின் இயற்கையான மாற்றம் போன்றே ஏ.சி யின் மூலம் கிடைக்கும் செயற்கையான குளிரும் நம் உடலைத் தாக்குகிறது. வெளியில் வெயில் அடித்துக் கொண்டிருக்கும்போது அதிலிருந்து தப்பிக்க ஏசி கார், ஏசி ரூம் என ஒளிந்து கொள்கிறோம். வெளியில் வெப்பம், உள்ளே குளிர் அறையிலிருந்து மீண்டும் வெளியே வெயில் என அடிக்கடி மாறும் வெப்பநிலையால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைகிறது. இதனால்தான் சிலருக்கு வெயில் காலத்திலும் கூட, சளி, இருமல், காய்ச்சல் வருகிறது.

உணர்ச்சித் தாக்குதல்வெப்பமும், குளிரும் எப்படி உடலைத் தாக்குகிறதோ? அதே போலத்தான் கடும் வெப்பமும், கடுங்குளிரும் மன
ஆரோக்கியத்திலும், நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வெயில் காலத்தில் சிலர் முகத்தை கடுகடுவென்று வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். வெயில், மக்களின் ஆக்ரோஷத்தை அதிகரிக்கச் செய்கிறது; தூக்க முறைகளைத் தொந்தரவு செய்கிறது மற்றும் உற்பத்தித்திறன் மற்றும் அறிவாற்றலைக் குறைக்கிறது. அதேபோல் கடுமையான குளிரும், சிலரை மனச்சோர்வடையச் செய்யலாம்.

இது உடல்ரீதியாகவும் உணர்ச்சிரீதியாகவும் நம்மை பாதிக்கிறது. வறட்சிமிகுந்த குளிர் காற்று, மூக்கு மற்றும் மேல் சுவாசப் பாதைகளை வறண்டுபோகச் செய்வதால் வைரஸ், பாக்டீரியா நோய்களை ஏற்படுத்தும். சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மற்றும் மூட்டுவலி உள்ளவர்களுக்கு குளிர்காலம் மிகவும் கடுமையான காலமாக இருக்கிறது.மாறும் பருவநிலையை எப்படி எதிர்கொள்வது?

கூடியவரை கோடைக்காலத்தில் செயற்கையான ஏ.சி காற்றைத் தவிர்த்து இயற்கையான காற்றை சுவாசிக்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில், குளிர்சாதனங்கள் உங்கள் உடலுக்கு, வெளியில் உள்ள தட்பவெப்ப நிலையைப்பற்றிய தவறான தகவல்களைத்தந்து குழப்பிவிடும் வேலையைச் செய்கின்றன.

அடுத்து, ஒவ்வொரு நாளும் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்தும் அந்தந்த சீசனில் கிடைக்கும் காய், கனிகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மனச்சோர்வு மற்றும் பதற்றத்தை தவிர்க்க, தியானம் போன்ற மன அழுத்த மேலாண்மை நுட்பங்களை பின்பற்றலாம். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்திக் கொள்வது மட்டுமே நல்ல தீர்வாக இருக்க முடியும்.Post a Comment

Protected by WP Anti Spam