உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தேர்தல்!! (கட்டுரை)

Read Time:23 Minute, 25 Second

எழுந்தமானமாக ஓரிடத்தில் கூடிநின்ற சிலரிடம், “விருப்பு வாக்குகளை, எவ்வாறு வழங்குவது” எனக் கேட்டபோது, அவர்களில் கணிசமானோர் கூறிய பதில்கள் தவறாக இருந்தன.

இத்தனை கட்சிகள் களத்தில் நிற்கின்ற போதிலும், வாக்களிப்பு முறை பற்றி மக்கள் அறிவூட்டப்படவில்லை. ‘எங்கள் சின்னத்துக்குப் புள்ளடியிட்டால் போதும்’ என்கிற வரையில்தான் வாக்காளர்களை அனைத்துக் கட்சிகளும் பழக்கி வைத்திருக்கின்றன.

ஒரு தேர்தலில், சாதாரண வாக்காளர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய விடயங்கள் பல உள்ளன. ஆனால், அவை குறித்து அறிந்து கொள்வதற்குப் பெரும்பாலான மக்கள் முயற்சிப்பதில்லை; அரசியல் கட்சிகளும் மக்களை அறிவூட்ட விரும்புவதில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

உணர்வுபூர்வ அரசியல்

அரசியலை உணர்வுபூர்வமாக அணுகுவதற்கே, அநேகமானோர் பழகியிருக்கின்றனர்; பழக்கப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். மக்கள் அப்படியிருப்பதுதான் தமக்கு நல்லது என்று, பெரும்பாலான அரசியல்வாதிகளும் எண்ணுகின்றனர். அரசியலை, அறிவு ரீதியாக மக்கள் அணுக முற்பட்டால், பல அரசியல்வாதிகள் தமது ‘கடைகளை’ இழுத்து, மூட வேண்டியேற்படும்.
ஒரு மேடையை அமைப்பது, அதில் கட்சிப் பாடல்களை ஒலிக்க விடுவது, உள்ளூர் பேச்சாளர்கள் சிலரைக் கொண்டு வந்து, எதிர்க்கட்சிக்காரர்களைத் திட்டுவது, பின்னர் கனவிலும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்குவது, அத்துடன் கூட்டத்தை நிறைவுசெய்வது. இப்படித்தான் இருக்கின்றன, அநேகமான தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்.

இன்னொருபுறம், தேர்தல் காலங்களில் பிரதான அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. சில இடங்களில், கேள்விகள் கேட்போர் தாக்கப்படுகின்றனர்; தங்களை அசௌகரியப்படுத்தும் கேள்விகளை எதிர்கொள்வதற்கு, அரசியல்வாதிகள் அநேகமாக விரும்புவதில்லை.

அறிவு ரீதியான அரசியல்

அறிவு ரீதியாக அணுகுதல் என்பதை, முதலில் விளங்கிக் கொள்ளுதல் அவசியமாகும். உண்மையைத் தேடுவதே, அறிவுரீதியான அணுகுதலின் அடிப்படையாகும். நமக்குப் பிடித்த அரசியல்வாதியொருவர் கூறுகின்றார் என்பதற்காக, அவர் சொல்லும் விடயங்களைக் கண்களை மூடிக்கொண்டு நம்பாமல், அந்த விடயம் உண்மையானதா என்று ஆராய முற்படுவதே அறிவுரீதியான அணுகுமுறையாகும்.

மறுபுறம், நமக்குப் பிடிக்காத அரசியல்வாதிகள் குறித்து வரும் மோசமான செய்திகளை, உடனடியாக நம்பி விடாமல், அதிலும் உண்மையைத் தேடுவதற்கு முற்படுதல் வேண்டும்.

ஆனால், நமக்குப் பிடித்த வேட்பாளர்களின் பொய்யான நல்ல செய்திகளையும் நமக்குப் பிடிக்காத வேட்பாளர்கள் குறித்து வெளிவரும் உண்மையற்ற மோசமான செய்திகளையும் நம்மில் அதிகமானோர் உடனடியாகவே நம்பிவிடுகிறோம். மட்டுமன்றி, அவற்றைப் பகிர்வதற்கும் ஆரம்பித்து விடுகின்றோம். அரசியலை, உணர்வுபூர்வமாக அணுகுவதிலுள்ள பெரும் ஆபத்து இதுதான்.

வாக்குறுதிகள்

கடந்த ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியவற்றின்போது, தற்போதைய ஆட்சியாளர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் கணிசமானவை இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், அதே வாக்குறுதிகளைத் தற்போதைய ஆளுந்தரப்பு ஜனாதிபதி வேட்பாளரும், மக்கள் மத்தியில் வழங்கி விட்டுச் செல்கின்றார்.

உதாரணமாக, ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து தருவதாகவும், அதனைச் சுற்றிக் கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குவேன் என்றும், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், கல்முனையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதியளித்திருந்தார்.

ஆனால், இந்த நாலரை வருடங்களில் ஒலுவில் துறைமுகத்தில் எந்தவோர் அபிவிருத்தியும் நடக்கவில்லை. அங்குள்ள மீன்பிடித் துறைமுகம் மணலால் மூடப்பட்டு விட்டது. அது குறித்து, எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. தங்கள் படகுகளைத் தரித்து வைக்கத் துறைமுகமின்றி, அங்குள்ள மீனவர்கள் அவதியுறுகின்றனர். இந்த நிலையில்தான், ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வேன் என்று, ஆளுந்தரப்பு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வாக்குறுதியளித்துள்ளார்.

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து தருவதாக, ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதியை மக்களில் அநேகமானோர் மறந்து விட்டனர். அதுபற்றிக் கேள்வி கேட்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. தங்கள் கட்சித்தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்ற, ஜனாதிபதி வேட்பாளருக்கு, வாக்களிப்பதையே மக்களில் கணிசமானோர் கடமையாக நினைக்கின்றனர். அறிவுரீதியாக அரசியலை அணுகுவோர், அவ்வளவு எளிதில் ஏமாற மாட்டார்கள். எது சரி, எது தவறு என்பதை, அவர்கள் இலகுவில் கண்டறிந்து கொள்ள முடியும்.

கேள்வி

தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் விளம்பரங்களுக்காக, வேட்பாளர்கள் செலவிடும் நிதி குறித்து, அண்மையில் தகவலொன்று வெளியிடப்பட்டது. தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம், இதனை வெளியிட்டிருந்தது. ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை, பிரதான வேட்பாளர்களில் ஒருவரான கோட்டாபய ராஜபக்‌ஷ 574 மில்லியன் ரூபாயைத் தனது விளம்பரங்களுக்காகச் செலவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, 372 மில்லியன் ரூபாயைத் தனது விளம்பரங்களுக்காகச் செலவிட்டுள்ளதாகவும் அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இவ்வளவு பெரிய நிதி, இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது என்கிற கேள்வியையும் மேற்படி தேர்தல் வன்முறையைக் கண்காணிக்கும் நிலையம் எழுப்பியுள்ளது.

ஆனால், மக்கள் இது குறித்துக் கேள்வியெழுப்புவதில்லை. தமக்குப் பிடித்தமான வேட்பாளர்களின் எளிமையான செயற்பாடுகள் என்று கூறி, அவற்றைச் சிலாகித்து, சமூக வலைத்தளங்களில் எழுதுகின்றவர்கள், தமது விருப்புக்குரிய வேட்பாளர்கள், இவ்வாறு கோடிக்கணக்கில் விளம்பரங்களுக்காகச் செலவிடுகின்றமை குறித்தும் பிரசாரங்களுக்காக ஹெலிக்கொப்டர்களில் பறப்பதற்கான செலவுகள் குறித்தும் பேசுவதில்லை.

மக்களின் வகிபாகம்

மோசமான அரசியல்வாதிகள் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கு மக்கள்தான் காரணமாக இருக்கின்றனர். உணர்ச்சி அரசியலில் மூழ்கிக் கிடப்பவர்கள், தாம் விரும்புகின்ற வேட்பாளர்களின் தவறுகள், குறைகள் குறித்து ஆராய முற்படுவதில்லை. தமது விருப்புக்குரிய வேட்பாளரின் தவறுகளை மற்றவர்கள் சுட்டிக்காட்டுவதையும் கணிசமானோரால் ஜீரணிக்க முடிவதில்லை.

தமது விருப்புக்குரிய வேட்பாளர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்றவர்களை, எதிர்க்கட்சிக்காரராகவே அதிகமானோர் பார்க்கின்றனர். தமது வேட்பாளரை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் மீது கூட, ‘கூலிக்கு மாரடிப்பவர்கள்’ எனும் முத்திரையை, மக்களில் கணிசமானோர் குத்தி விடுகின்றனர்.

தாம் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு உரம் இலவசமாக வழங்கப்படும் என்று கோட்டாபய ராஜபக்‌ஷவும் மாதவிடாய் காலத்துக்குரிய நாப்கின்கள் இலவசமாக வழங்கப்படும் என்று சஜித் பிரேமதாஸவும் வாக்குறுதியளித்து இருக்கின்றனர்.

ஆனால், இவற்றுக்கான நிதிகளை எங்கிருந்து, எவ்வகையில் பெறலாம் என அவர்கள் இருவரும் கூறவில்லை. பெரும் கடனில் மூழ்கித் தவிக்கும் நமது நாட்டால், இவ்வாறான இலவசங்களை வழங்குவதென்பது மிகக் கடினமான காரியமாகும் என்று, பொருளியலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றார்கள். ஆனால், எவ்வித அச்சங்களுமின்றி, இவ்வாறான வாக்குறுதிகளை வேட்பாளர்கள் வழங்குகின்றனர்; கேள்விகளின்றி மக்களும் அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

என்ன தெரியும் நமக்கு?

அரசியலில் இனரீதியாகவும் கட்சி ரீதியாகவும் மக்கள் உணர்ச்சி ஊட்டப்பட்டுள்ளார்கள். இந்தத் தேர்தலில் ‘இன்னார்’ வென்றால் ‘இந்த’ இனத்தவரின் கைகள் ஓங்கிவிடும். ஆகவே, ‘நாம் சொல்லுகின்ற வேட்பாளருக்கு வாக்களியுங்கள்’ என்று, இன்னோர் இனத்தவர்களிடம் அவர்கள் மத்தியிலுள்ள அரசியல்வாதிகள் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இது எத்துணை பெரிய மோசமான, முட்டாள்தனமான பிரசாரம் என்பதை, மக்கள் புரிந்து கொள்ளும் போது, இவ்வாறான அரசியல்வாதிகள் மக்களாலேயே விரட்டியடிக்கப்படுவார்கள்.

இந்தத் தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், அவர்களின் பெயர்கள் என்ன, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னங்கள் என்ன என்பது பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆகக்குறைந்தது, பிரதான வேட்பாளர்களின் கொள்கை விளக்கப் பிரகடனங்களை, நம்மில் எத்தனை பேர் படித்திருக்கின்றோம்?

அறிவு ரீதியாக அரசியலை அணுகுவோர் மட்டுமே, இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். தங்கள் கட்சித் தலைவர்கள் காட்டுகின்ற வேட்பாளருக்கு வாக்களிக்கக் காத்திருப்போருக்கு, ‘கொள்கை விளக்கம்’ பற்றிய கவலைகள் இருக்காது.

வன்முறை

இன்னொருபுறம், ஜனநாயகத்தின் உச்சமான தேர்தலொன்றை எதிர்கொண்டுள்ள நிலையில், இதுவரையில் 3,500க்கும் மேற்பட்ட தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் வன்முறைச் சம்பவங்களும் அடங்கும்.

எந்த வேட்பாளரை ஆதரிப்பதென்று முடிவெடுக்கும் உரிமை, ஒவ்வொரு வாக்காளருக்கும் உள்ளது. அந்த உரிமையைக் கேள்வி கேட்பதற்கும், இல்லாமல் செய்வதற்குமான அதிகாரம் எவருக்கும் கிடையாது. ஆனால், சில பிரசார மேடைகள் மீது, மாற்றுக் கட்சிக்காரர்கள் தாக்குதல் நடத்துகின்றமையைக் காணக் கூடியதாக உள்ளது.

ஒரு பிரதேசத்தில் பெரும்பான்மையானோரின் விருப்புக்கு மாறாக, வேறொரு வேட்பாளரை ஆதரிக்கும் வாக்காளர்கள் தாக்கப்படுகின்றார்கள். இது கண்டிக்கத்தக்கது.

தாம் ஆதரிக்கும் வேட்பாளரை ஆதரிக்காதவர்களை, அரசியல் கட்சித் தலைவர்களே தேர்தல் மேடைகளில் திட்டித் தீர்ப்பதோடு, அவ்வாறான மாற்று விருப்புடைய வாக்காளர்களைச் சமூகத் துரோகிகளாகப் பிரகடனமும் செய்கின்றனர். அநேமான தருணங்களில், அரசியல் தலைவர்களே தமது ஆதரவாளர்களை வன்முறைக்குத் தூண்டி விடுகின்றாற்போல் பேசுகின்றார்கள். நாட்டின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற கேள்விக்கான விடையை, ஒவ்வொரு வாக்காளனும் அறிவுபூர்வமாக அடைந்து கொள்ள வேண்டும்.

இதேவேளை, இந்தத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்கிற பிரசாரங்களும் சில இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்தலைப் புறக்கணிப்பவர்களிலும் பல இரகத்தினர் உள்ளனர்.

ஜனநாயக முறைமையில் நம்பிக்கையற்றவர்கள் தேர்தலைப் புறக்கணித்திருப்பதைக் கண்டுள்ளோம். தாம் வாக்களிப்பதற்குப் பொருத்தமான வேட்பாளர்கள் எவரும் இல்லை என்று எண்ணுகின்றவர்களும் தேர்தலைப் புறக்கணித்திருப்பதுண்டு.

ஆனால், தாம் விரும்புகின்ற வேட்பாளர் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூறி, சிலர் பிரசாரம் செய்து வருவதாக, சில அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

எது எவ்வாறாயினும் தேர்தலைப் புறக்கணிப்பதை விடவும், தேர்தலில் வாக்களிப்பதே நல்லதாக அமையும்.

வேட்பாளர்கள் பட்டியலில் தான் எதிர்பார்க்கும் நல்லவர்கள் எவரும் இல்லை என்று ஒருவர் நினைத்துக் கொண்டு, வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிப்பதை விடவும், இருக்கும் வேட்பாளர்களில் மிக மோசமானவர் வெற்றிபெறுவதைத் தடுப்பதற்கேனும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொருவரும் வாக்களித்தே ஆக வேண்டும்.

தேர்தல் பற்றி தெரிந்து கொள்வோம்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் குறித்தும், தேர்தல்களின் போது பின்பற்றப்படும் முக்கிய நடைமுறைகள் தொடர்பிலும், நாம் ஒவ்வொருவரும் தெரிந்திருந்தல் அவசியமாகும்.

அந்தவகையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் பற்றிய சில தகவல்களை வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.

ஜனாதிபதித் தேர்தல் பற்றிய அறிவிப்பு, 18 செப்டெம்பர் 2019ஆம் திகதி விடுக்கப்பட்டது.
கட்டுப்பணம் கையேற்கும் காலப்பகுதி, 19 செப்டெம்பர் தொடக்கம் ஒக்டோபர் 06ஆம் திகதி நண்பகல் 12.00 வரையாகும்.

வேட்புமனுக்கள் ஒக்டோபர் 07ஆம் திகதி, நண்பகல் 12.00 மணிவரை கையேற்கப்பட்டன.
மொத்தமாக 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.

ஆயினும் 35 பேர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களில் 18 பேர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள்; 15 பேர் சுயேட்சை வேட்பாளர்கள்; இரண்டு பேர் ஏனைய அரசியல் கட்சிகள் சார்பான வேட்பாளர்களாவர்.

அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சார்பில் போட்டியிடுவோர், 50 ஆயிரம் ரூபாய் கட்டுப்பணம் செலுத்த வேண்டும். ஏனைய கட்சிகள், சுயேட்சையாகப் போட்டியிடுவோர் 75 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.

2018ஆம் ஆண்டு, வாக்காளர் இடாப்பின் படி, பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 159,92,096 ஆகும்.

வாக்கெடுப்பு நிலையங்களின் எண்ணிக்கை – 12,845

ஒரு வாக்களிப்பு நிலையத்தின் சராசரி வாக்காளர் எண்ணிக்கை – 1,245

வாக்களிப்பு நிலையத்தில் ஏற்கப்படும் ஆளடையாள அட்டைகள்

தேசிய அடையாள அட்டை

செல்லுபடியான கடவுச் சீட்டு

செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம்

ஓய்வூதியர் அடையாள அட்டை

முதியோர் அடையாள அட்டை

ஆட்பதிவு திணைக்களத்தால் வழங்கப்படுகின்ற மதகுருமார் அடையாள அட்டை.

தேர்தல் ஆணைக்குழுவால் விநியோகிக்கப்படும் அடையாள அட்டை.

(காலவதியான கடவுச் சீட்டு, அடையாள அட்டைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது)
மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்களிக்கும் வசதிகள்

2011ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டத்துக்கு அமைய, வாக்கை அடையாளமிட முடியாத நிலையில் உள்ள ஒருவருக்குத் தமது வாக்கை அளிப்பதற்காக, இன்னொருவரை அழைத்துச் செல்ல முடியும்.

அத்தகைய ஒருவரை, அழைத்துச் செல்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அங்கிகரிக்கப்பட்ட வைத்தியர் ஒருவரினதும், வாக்காளர் வதிவைக் கொண்டுள்ள பிரிவின் கிராம அலுவலரினதும் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட வேண்டிய அவசியமாகும். ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் மூன்றாம் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள படிவத்தை, அழைத்துச் செல்பவரோடு வாக்களிப்பு நிலையத்துக்கு எடுத்துச் சென்று, தலைமை தாங்கும் அலுவலரிடம் கையளிக்க வேண்டும்.

இலங்கையிலுள்ள தேர்தல் மாவட்டங்கள் – 22 ஆகும்

வாக்களிப்பு நேரம் நீடிப்பு

வாக்களிப்பு நேரம் காலை 7.00 தொடக்கம் மாலை 4.00 வரையிலேயே கடந்த காலங்களில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆயினும், இம்முறை 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதாலும் வாக்குச் சீட்டின் நீளம் 26 அங்குலம் நீளமாக இருப்பதாலும் வாக்களிப்பு நேரத்தை பிற்பகல 5.00 மணி வரை நீடித்துள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

புதிய வகை வாக்குச் சீட்டுப் பெட்டி

இலங்கையில் முதன் முதலாக ‘காட்போட்’ இனால் ஆன வாக்குச் சீட்டுப் பெட்டிகள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அறிமுகமாகின்றன.

இம்முறை வாக்குச் சீட்டின் நீளம் அதிகமாக உள்ளதால், அதிகமான வாக்குச் சீட்டுப் பெட்டிகள் தேவைப்படும் என்பதால், அவற்றைக் கொள்வனவு செய்வதற்கான செலவும் அதிகரிக்கும். எனவேதான், குறைந்த விலையில் ‘காட்போட்’ பெட்டிகள் இம்முறை கொள்வனவு செய்யப்பட்டு அறிமுகப்படுத்த ப்படவுள்ளன.

கடந்த காலங்களில் மரப்பலகையால் செய்யப்பட்ட வாக்குச் சீட்டுப் பெட்டிகள் பயன்பாட்டில் இருந்தன. அந்தப் பெட்டி ஒன்றுக்கான செலவு 8,500 ரூபாய் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார். ஆனால், புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள காட்போட் பெட்டி ஒன்றின் விலை 1500 ரூபாய் என்றும் அவர் கூறியிருந்தார்.

உலகில் பல நாடுகளில் ‘காட்போட்’ வாக்குச் சீட்டுப் பெட்டிகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோகத்திற்கு எதிரி முதுகுவலி! (அவ்வப்போது கிளாமர்)
Next post இதுவரை ATM அறை பற்றி சொல்லப்படாத ரகசியங்கள்!! (வீடியோ)