எனக்கு கிடைத்த உணவு தேவதைகள்!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 52 Second

சாப்பாடு என்பது ஒரு உணர்வு. நாம் சாப்பிடத்தான் பிறந்தே இருக்கோம். என்னதான் எல்லாருக்கும் ஒரு விருப்பம் இருந்தாலும், அடிப்படையில் நாம்
எல்லாரும் நாடிச் செல்வதின் ஒரே நோக்கம் சாப்பாடுதான்.

அதுதான் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் தேவையானது. நம் அனைவரின் முதல் குறிக்கோள் சாப்பாடுதான். ‘‘என்னுடைய சொந்த ஊர் மதுரை பக்கத்தில் இருக்கும் பறவை. எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்தில் இருந்து எங்க வீட்டில் தினமும் சாப்பாடு திருவிழா மாதிரிதான் இருக்கும். அந்தளவுக்கு வீட்டில் சாப்பாட்டுக்கு ரொம்ப முக்கியத்துவம் தருவாங்க. இப்ப எனக்கு 32 வயசாகுது. இன்று வரைக்கும் என் அம்மாவின் சமையலில் உப்பு இல்லை உரைப்பு இல்லைன்னு சொல்ல முடிமுடியாது. அப்படி பார்த்து பார்த்து சமைப்பாங்க.

அம்மாவை தாண்டி அவங்க சமையலின் ரசிகன் நான். அவங்க வித்தியாசமா ஏதும் செய்ய மாட்டாங்க. பாரம்பரிய சாப்பாடுதான் செய்வாங்க. அதையுமே இந்த குழம்புக்கு இது தான் சைட்டிஷ்ன்னு செய்வாங்க. சைவம், அசைவம் இரண்டுலேயுமே அவங்க கில்லி. அவங்க சமைக்கும் போது வரும் வாசனையே நம்மள அப்படியே இழுக்கும். அவங்க சமைப்பதில் எனக்கு பிடிச்சது குடல் குழம்பு, நெய்சாதம், மட்டன் வெள்ள குருமா. சைவத்தில் கோதுமை தோசையும் அதுக்கு காரமான தக்காளி சட்னியும்.

கோதுமை தோசை மேல லேசா மழைச் சாரல் போல வெங்காயத்தை தூவி தருவாங்க. தோசையை வாயில் போடும் போது, வெங்காயம் கடிபடும். அவ்வளவு சுவையா இருக்கும். இனிப்புல குலோப்ஜாமூன், ரவா லட்டு அப்புறம் வாழைப்பழ போண்டா. குலாப்ஜாமூனுக்கு இருக்கும் சர்க்கரை பாகு ரொம்ப
தண்ணியா இருக்கும். அதில் குலாப்ஜாமூனை நல்லா மிக்ஸ் செய்து சாப்பிடணும்ன்னு சொல்லியே தருவாங்க. வாழைப்பழ போண்டாவுக்கு கடலைபருப்பு சட்னி அரைப்பாங்க. இனிப்பு போண்டாவை காரமான சட்னி சேர்த்து சாப்பிடும் போது அவ்வளவு நல்லா இருக்கும்.

ரவா லட்டு, ஒரு கடி கடிச்சா அப்படியே வாயில் கரைந்து போகும். தீபாவளி அன்னிக்கு காலை ஏழு மணிக்கு எல்லாம் சுடச்சுட இட்லி கறிக்குழம்பு செய்வாங்க. அந்த குழம்பு கொஞ்சம் தண்ணியா தான் இருக்கும். எனக்கு இட்லியே பிடிக்காது. ஆனால் அன்னிக்கு மட்டும் எவ்வளவு உள்ளே போகுதுன்னே தெரியாது. அம்மாவைப் போல் என் பெரியம்மாவும் நல்லா சமைப்பாங்க. எனக்கு சின்ன வயசில் நண்டு பார்த்தா கொஞ்சம் பயம். அது கால் எல்லாம் இருக்கும்… அதனாலேயே நான் சாப்பிட மாட்டேன். ஒரு முறை என் பெரியம்மா செய்து கொடுத்தாங்க. அன்று முதல் நான் நண்டு வெறியனாயிட்டேன்.

அம்மா, பெரியம்மாவை அடுத்து என் அக்கா. அவங்களுக்கு அப்படியே என் அம்மாவின் கைப்பக்குவம். இப்ப என் மனைவி. நான் காதலிக்கும் போது, அவங்களுக்கு சமைக்க தெரியுமான்னு கூட எனக்கு தெரியாது. அவங்க வைக்குற மட்டன் குழம்பு, மீன் குழம்பு வேற லெவல்ல இருக்கும். வஞ்சரம் மீனை தேங்காய் எண்ணையில்தான் பொரிப்பாங்க. அது ரொம்ப சுவையா இருக்கும். எங்க வீட்டில் பூரிக்கு எப்போதுமே மட்டன் குழம்பு தான். இது சாதாரணமா வைப்பதை விட கொஞ்சம் திக்கா இருக்கும். கருப்பட்டி பணியார குலோப்ஜாமூன்னு செய்வாங்க.

பணியாரத்தை கருப்பட்டி பாகில் போட்டு ஊறவச்சு தருவாங்க. என் வாழ்க்கையின் உணவு தேவதைகள்னா இவங்க நாலு பேர் தான்’’ என்றவர் ஓட்டலில் சாப்பிட பழகிய தருணங்களை பகிர்ந்துகொண்டார். ‘‘வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு பழகிய நான் முதன் முதலில் ஓட்டலில் நண்பர்களுடன் சாப்பிட்டது ஆரப்பாளயத்தில் இருக்கும் ஆத்தா கடையில் தான். வீட்டுல கொடுக்கும் பாக்கெட் மணியை ஒரு வாரம் சேர்த்து வச்சு நண்பர்களுடன் போய் இங்க சாப்பிடுவோம். என்னை ஓட்டல் உணவுக்கு அடிமையாக்கியது ஆத்தா கடை தான்.

சின்ன கடை மூணு பெஞ்ச் தான் இருக்கும். ஆனால் சாப்பாடு அப்படி இருக்கும். அங்க பரோட்டா ரொம்ப ஃபேமஸ். முதல்ல இரண்டு பரோட்டா சாப்பிடுவோம். அப்புறம் பிச்சு போட்ட பரோட்டான்னு சொன்னா, அந்த அண்ணனே. ஒரு கிண்ணத்தில் பரோட்டாவை பிய்ச்சு போட்டு அதில் குழம்ப நிறைய ஊத்தி ஊறவச்சிடுவார். அதை அப்படியே சாப்பிடும் போது அல்வா போல வழுக்கிட்டு போகும். அதன் பிறகு வீட்டு தோசை, நல்லெண்ணையில் சுட்டு தருவாங்க. அதுக்கு சாம்பார், மல்லி சட்னி தருவாங்க. நெஞ்சு ஃபிரை ஃபேமஸ். மிளகு போட்டு வறுத்து தருவாங்க.

ஒரு செட்டுன்னு சொன்னா முட்டை கொத்து பரோட்டா போடுவாங்க. அதுல பரோட்டா இருக்கிறதே தெரியாது. அவ்வளவு சன்னமா நொறுக்கி இருப்பாங்க. கடைசியா டிங்டாங்க. கலக்கி மாதிரி இருக்கும். இதில் சால்னாவை ஊற்றி பந்து போல எடுத்து தருவாங்க. குழம்போட சேர்த்து சாப்பிடும் போது… இப்ப சொல்லும்போதே எனக்கு ஊருக்கு போகணும்ன்னு போல இருக்கு’’ன்னு சொன்னவர் சாப்பாட்டுக்காக ஒரு வாட்ஸ்சப் குருப்பே இயக்கிஉள்ளார். ‘‘நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து ஆரம்பிச்சது தான் ‘ஊரு தேடி சோறு திண்போம்’ன்ற வாட்ஸ்சப் குரூப்.

அதுல யார் எங்க போய் நல்ல சாப்பாடு சாப்பிட்டாலும் உடனே அதில் போடுவாங்க. அதைப் பார்த்து நாங்க போவோம். அப்படி போனதுல ரொம்ப முக்கியமானது குற்றாலத்தில் இருக்கும் கூரை கடை. சாதாரண தென்ன ஓலையில் நெய்யப்பட்டு இருக்கும். அங்க தொக்கு வகையே 30 இருக்கும். இறால், மட்டன் நல்லி, மீன், கருவாடு, சிக்கன், மட்டன், குடல்னு… ஒரு பெரிய லிஸ்டே இருக்கும். சென்னையில் எனக்கு ரொம்ப பிடிச்சது. ராயர் மெஸ். அங்க மீன் ரொம்ப நல்லா இருக்கும். நான் அங்க போனா ஐந்து வகை மீன் சாப்பிடாம வரமாட்டேன். மீன் மட்டும் இல்லை ஆம்லெட் கூட அங்க தேங்காய் எண்ணையில் தான் பொரிச்சு தருவாங்க. சினிமா துறையில் என்னைப்போல மயில்சாமி மாமாவும் பல இடங்கள் தேடிப் போய் சாப்பிடுவார்.

அப்படி அவருடன் போனது தான் கோவையில் இருக்கும் யு.பி.எம். உணவகம். ஆறடிக்கு வாழை இலைப் போட்டு அதில் மட்டன், பிரியாணி, சிக்கன்னு இலை முழுக்க அடுக்கிடுவாங்க. சாப்பிட்டு முடிச்சதும், ஒரு ஸ்கூப் குல்கந்து, அதில் கெட்டித் தயிர் சேர்த்து தருவாங்க. அவ்வளவு நல்லா இருக்கும். எனக்கு தமிழ்நாட்டுலேயே ஆல்டைம் ஃபேவரேட்ன்னு சொன்னா மதுரை சந்திரன் மெஸ் தான். அங்க எல்லா சாப்பாடும் நல்லா இருக்கும். குறிப்பா மட்டன் பிரியாணி, நெஞ்சு குழம்பு, மெஜுரா சிக்கன், சாதம், மட்டன் சுக்கா அல்டிமேட்ன்னு சொல்லலாம்.

திண்டுக்கல், வேணு பிரியாணியில், மட்டன் பிரியாணியும் நாட்டுக்கோழியை எண்ணையில் பொரிச்சதும் ரொம்ப நல்லா இருக்கும். மதுரையில் சார்லஸ் பரோட்டா கடைன்னு இருக்கு. இரண்டு பரோட்டாவுக்கு ஏழு வகை குழம்பு தருவாங்க. மன்னார்குடியில் ஒரு வடை கடை இருக்கு. அங்க இருக்கிற உளுந்த வடை போல நான் வேற எங்கும் சாப்பிட்டதில்லை. அந்த வடை சாப்பிட்டு காபி குடிச்சா… தேவாமிருதம் தான்’’ என்றவர் வெளி மாநிலம் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு உணவையும் விட்டு வைத்ததில்லையாம்.

‘‘நான் பல ஊர்களுக்கு சென்று இருக்கேன். எந்த ஊராக இருக்கட்டும் நம்ம ஊர் சாப்பாட்டுக்கு ஈடு இணை இல்லை. கேரளாவுல, பொரிச்ச கோழி ரொம்ப பிடிக்கும். பஞ்சாப்ன்னா லசி தான். இதை குழம்பில் போட்ட சிக்கனுடன் சாப்பிடணும். மும்பைன்னா தெருக்களில் இருக்கும் சாட் உணவுகள். கொல்கத்தாவில் ஒரு சின்ன கடை. அதில் மூணே சாப்பாடுதான் இருக்கும். சப்பாத்தி, தால் அப்புறம் அவிச்ச முட்டை. ரூ.30 கட்டினா போதும், எவ்வளவு வேண்டுமோ சாப்பிடலாம். அதே போல திருப்பதி செல்லும் வழியில் சின்ன சாலையோர கடை. அங்க இட்லி, தோசை சுட்டுக் கொண்டே இருப்பாங்க.

அதற்கு காம்பினேஷன் கடலைபருப்பு சட்னி. சட்னி அவ்வளவு காரமா இருக்கும். அதை ஈடுகட்ட எதிரே இருக்கும் கடையில் தேங்காய் போளி சாப்பிடுவேன்.
வெளிநாடுன்னு சொன்னா மலேசியாவில் ரொட்டி, சார்டின், மீகோரின். ஜப்பான் டேக்கியோன்னா ஸ்ரீகிருஷ்ணா சைவ உணவு, பஃபே டைப் உணவகம். அங்கதான் சைவத்தில் கூட இவ்வளவு வெரைட்டி இருக்கிறது தெரிந்தது.

துபாய் போன போது, அங்கு குட்டி ஆட்டின் தொடைக்கறியுடன் குபூஸ் சேர்த்து சாப்பிடணும். வெளிநாட்டு உணவில் என்னை பிரமிக்க வச்சது இது தான். இப்ப என்னோட அடுத்த வென்சர், நெல்லையில் இருக்கும் வைர மாளிகை. அங்க பொரிச்ச நாட்டுக் கோழி ஃபேமஸ். அந்த பொரிச்ச கோழியை சாப்பிட கண்டிப்பா போவேன். என்னைப் பொறுத்தவரை நல்லா சம்பாதிக்கணும், நல்லா சாப்பிடறது மட்டும் இல்லாமல் மத்தவங்களையும் சாப்பிட வைக்கணும்’’ என்றார் நடிகர் பால சரவணன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் டிசைனர் இல்லை…!! (மகளிர் பக்கம்)
Next post மசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை !! (கட்டுரை)