By 18 November 2019 0 Comments

மீண்டும் விவாகரத்து செய்யலாமா?! (மகளிர் பக்கம்)

அன்புத்தோழி, எனது திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை குறித்த, ‘முன்கதை’ சுருக்கம் எதையும் நான் சொல்லப் போவதில்லை. நேராகவே எனது பிரச்சினைக்கு வந்துவிடுகிறேன். பெற்றோர் விருப்பப்படி என் திருமணம் நடந்தது. கணவர் அழகானவர். மத்திய அரசு பணி என்பதால் கை நிறைய சம்பளம். எனக்கு எப்போதும் எதிர்பார்ப்புகள் இருந்ததில்லை. ஆனாலும் வழக்கமாக ஒரு பெண் எதிர்பார்ப்பதற்கு மேலான வாழ்க்கையே எனக்கு அமைந்தது. அதனால் மிகவும் மகிழ்ச்சியாகவே புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தேன். ஆனால் அத்தனை எதிர்பார்ப்புகளும் முதலிரவில் நொறுங்கி போனது.

படித்தவள் என்பதால் செக்ஸ் குறித்து அறிந்து வைத்திருந்தேன். அதனால் என் முதல் செக்ஸ் குறித்து எனக்கு எதிர்பார்ப்புகள் இருந்தன. ஏமாற்றம் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் முதல்நாள் தானே, பின்னர் சரியாகிவிடும் என்று என்னை சமாதானம் செய்து கொண்டேன். ஆனால் ஏமாற்றம் தொடர்கதையாக இருந்தது. உச்சம் என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன், அவர் அறிந்ததை செய்து முடித்துவிட்டு உறங்கி விடுவார். எனக்கு தொடங்குவதற்கு முன்பு அவர் முடித்து விடுவதால் என் இரவுகள் முடியாமலே விடிந்தன.

இப்படித்தான் ஒவ்வொரு நாளும் அனலில் இட்ட புழுவாய் துடிக்க வேண்டும் என்பது எனது விதியாக இருந்தது. ஆனால் அதில் அதிசயத்திலும் அதிசயமாக எனக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. குழந்தையை நினைத்து கவலையை மறந்து வாழ்க்கையை ஓட்டலாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் என்னால் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. அவர் அதை புரிந்துகொள்ள தயாராகவும் இல்லை. கேட்டால் கேலியாகப் பேசுவார். ’எதற்கு இப்படி அலைகிறாய்’ என்ற ரேஞ்சில்தான் அவரது குத்தல் பேச்சுகள் இருக்கும். வீட்டுக்கு தெரிந்தால் அசிங்கம் என்று நான் பொறுத்துக் கொண்டேன்.

ஆனால் உணர்ச்சிகளைதான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனக்கு குழந்தை பிறந்தது போல் இன்னொரு அதிசயமும் அப்போது நடந்தது. அது அவருக்கு அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை கேள்விப்பட்டேன். அதன்பிறகு ஏன் அவருடன் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. உடனே சென்று என் அம்மாவிடம் தகவல்களை சொன்னேன். அவர் என் அப்பாவிடம் பேசினார். பெண் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், புரிந்து கொள்ளும் உயர்ந்த மனிதர் எனது தந்தை. ‘பெண் பிள்ளைகள் யாரையும் அண்டி வாழக்கூடாது.

அதனால் நன்றாக படிக்க வேண்டும், கட்டாயம் வேலைக்கு போக வேண்டும்’ என்பதை என்னிடம் மட்டுமல்ல, எல்லா பெண் குழந்தைகளிடமும் வலியுறுத்துவார். அதனால் என் வேலை சுலபமானது. அப்பா என்னை அழைத்துப் பேசி விவாகரத்துக்கு ஏற்பாடு செய்தார். அதற்கு அப்பா போட்ட ஒரே
கட்டுப்பாடு, ‘இன்னொரு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்’ என்பதுதான். நானும் மகிழ்ச்சியுடன் தலை அசைத்தேன். என் கணவரும் விட்டால் போதும் என்று ஓடி விட்டார். அதனால் எளிதில் விவாகரத்து கிடைத்தது.

விவாகரத்திற்கு பின்பு புதிதாக இன்னொரு வாழ்க்கை. அவரும் நல்லவர் தனியார் நிறுவனம் என்றாலும் அவரும் கை நிறைய சம்பாதிக்கிறார். அவர் அழகாக இருப்பார். என் எதிர்பார்ப்புகளை ஈடு செய்து , உற்சாகமாக தொடங்கியது வாழ்க்கை. ஆம். உற்சாகமாக தொடங்கிய வாழ்க்கையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சலனம். கடமைக்கு தாம்பத்யம் என்றாகிவிட்டது. ஏமாற்றம் தொடர்கதையாகி விட்டது. ஒவ்வொரு இரவும் விடியாத இரவுகளாகி விட்டன. ஒருநாளும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

இப்போது எனது எண்ணமெல்லாம் இவரையும் விவாகரத்து செய்து விடலாமா என்று நினைக்கிறது முதலில் எளிதில் விவாகரத்து கிடைத்து விட்டதால் இந்த எண்ணம் எனக்கு தோன்றவில்லை. பொறுத்துக் கொள்கிறேன் பேர்வழி என்று முறைதவறி செல்பவர்களை எனக்கு தெரியும். வீட்டுக்காரருக்கு தெரியாமல் இன்னொருவருடன் போய் தவறான உறவு கொள்வதைவிட, முறையாக விவாகரத்து பெற்று இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். எனது தரப்பில் நியாயம் இருப்பதாக நான் உணர்கிறேன். அதை மற்றவர்களும் உணர்வார்கள் என்று நினைக்கிறேன்.

அதனால் எனக்கு பெற்றோரின் ஆதரவு நிச்சயம் இருக்கும். இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன் இப்பொழுது எனக்கு இரண்டு குழந்தைகள். அன்பான அழகான பிள்ளைகள்.அந்த ‘பிள்ளைகளுக்காக இவரை நான் பொறுத்துக் கொள்ள வேண்டும். உணர்களை கட்டுப்படுத்த வேண்டும்’ என்று எனது தோழி ஒருவர் கூறுகிறார். ஆனால் எனக்கு உடன்பாடில்லை. முதல் கணவரை விட இரண்டாவது கணவர் நல்லவர். கடுமையான வார்த்தைகளை கூட பயன்படுத்தி பேசமாட்டார். அன்பாகவும் அரவணைப்புடன்தான் எப்போதும் இருப்பார்.

எனது 2 பிள்ளைகளிடமும் அளவற்ற அன்பு வைத்திருக்கிறார். எனது 2வது கணவருக்கு பிறந்த எனது 2வது பிள்ளையிடம் எந்த அளவுக்கு அன்பு செலுத்துகிறாரேஅதே அளவு தான் முதல் பிள்ளையிடமும் அன்பு காட்டுகிறார். நல்ல மனிதர் தான் ஆனால் அதற்காக எனது உணர்ச்சியை அடக்கிக் கொள்வது நியாயமாக எனக்கு தோன்றவில்லை. இவரை விவாகரத்து செய்துவிட்டு வேறு திருமணம் செய்து கொள்ளலாம் என்று யோசனை தான் என்னிடம் எப்போதுமே மோலோங்கி இருக்கிறது. லேசான தயக்கமும் இருக்கிறது. இனி என்ன செய்யலாம் என்று எனக்கு வழிகாட்டுங்கள் தோழி.

இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

நமது சமூகத்தில் இது போன்ற விஷயங்கள் விவாதிக்கப்படுவதில்லை. கண்ணுக்கு தெரியாத தடை இருக்கிறது. ஆம். பெரும்பான்மையான மக்கள் இன்னும் தங்கள் படுக்கையறை பிரச்னைகளை விவாதிக்க மறுக்கிறார்கள். ஆனால் நீங்கள் வெளிப்படையாக உங்கள் பிரச்னையை கேள்வியாக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டுகள்.நமது உணர்ச்சிகளும், ஆசைகளும் ஒன்றையொன்று பின்னிக் கொண்டு இருக்கின்றன. உங்கள் ஏமாற்றத்தை, விரக்தி மனநிலையை நான் புரிந்து கொள்கிறேன்.

தாம்பத்ய ஆசைகளும், விருப்பங்களும் பூர்த்தியடையாமல், திருப்தி கிடைக்காமல் திருமண வாழ்க்கையை தொடர்வது கடினம். அது நமது மனநிலையையும், எண்ணங்களையும் சீர்குலைத்துவிடும். நீங்கள் சொன்னதை வைத்து பார்க்கும் போது மனைவி என்பதை விட அம்மா என்ற பெரிய பொறுப்பில் நீங்கள் இருப்பதை உணர்கிறேன். அதுவும் அழகான, அன்பான, அதிலும் உங்கள் கணவரால் சமமாக நேசிக்கப்படும் 2 பிள்ளைகளுக்கு தாய் நீங்கள். அது எல்லோருக்கும் வாய்க்காத வரம். இப்போதைய கணவர் விவேகமானவர், கனிவானவர், அன்பானவர் என்பதை உங்கள் வார்த்தைகளில் இருந்து புரிந்து கொண்டேன்.

நீங்கள் அவருடன் பேச முயற்சிக்கலாம். உங்கள் தேவைகளை, பிரச்னைகளை அவருக்கு புரிய வைக்கலாம். அவர் புரிந்து கொள்வார் என்றே தோன்றுகிறது. புரிந்து கொள்ளும் வகையில் உங்களாலும் பேச முடியும். விவாகரத்துதான் தீர்வாக இருக்க முடியும் என்ற எண்ணம் உங்கள் மனதில் இருப்பதாக சொல்லியுள்ளீர்கள். விவாகரத்துக்கு பிறகு நீங்கள் திருமணம் செய்யும் 3வது கணவர் உங்களை எல்லா வகையிலும் திருப்திப்படுத்துவார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியடையாமல் ஏமாற்றம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்.

அதுமட்டுமல்ல அவர் உங்கள் 2 குழந்தைகளையும் நன்றாக பார்த்துக்கொள்வார் என்பதற்கும் உத்தரவாதம் உள்ளதா? எவ்வளவு நாட்கள் ஆனாலும் விவாகரத்து கிடைக்கலாம். ஆனால் உங்கள் 2 பிள்ளைகள் எப்படி பாதிக்கப்படுவார்கள், அவர்களுக்கு என்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதையும் நீங்கள் கட்டாயம் யோசிக்க வேண்டும். உங்கள் பிரச்னைகளால் பிள்ளைகள் பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். உங்கள் பெற்றோருக்கும் வயதாகி இருக்கும். உங்கள் செயல்கள் அவர்களையும் பாதிக்கலாம்.

எனவே எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பு உங்கள் குழந்தைகளை மனதில் வைத்து, யோசித்து முடிவு எடுங்கள். உங்கள் கணவரிடம் நேரடியாக பேசுவதின் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணுங்கள். தீர்வு இல்லாத பிரச்னை என்று உலகில் இல்லை. அதேபோல் மருத்துவ வசதிகளும் இப்போது வளர்ந்திருக்கின்றன. எனவே நீங்கள் இருவரும் சேர்ந்து பேசி தீர்வு காணுங்கள். முடிந்தால் ஒரு மனநல மருத்துவரையும் பாருங்கள் தீர்வு கட்டாயம் கிடைக்கும்.Post a Comment

Protected by WP Anti Spam