‘தீர்ப்பு மாதமாக’ மாறிய நவம்பர் மாதம்!! (கட்டுரை)

Read Time:14 Minute, 12 Second

இந்தியாவின் உச்சநீதிமன்றத்துக்கு, மிக முக்கியமான வழக்குகளின் மீது, தீர்ப்பு வழங்கும் ‘தீர்ப்பு மாதமாக’, இந்த நவம்பர் மாதம் அமைந்து விட்டது. அதிலும் குறிப்பாக, நவம்பர் 17ஆம் திகதியன்று ஓய்வு பெறும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அதிரடித் தீர்ப்புகளை மட்டுமின்றி, நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் படியான, ஒரு ஜனநாயகக் குடியரசுக்குத் தேவையான தீர்ப்புகளை வழங்கி, இந்திய வரலாற்றில் மிக முக்கியமானதோர் இடத்தைப் பிடித்திருக்கிறார்.

ஒவ்வொரு தலைமை நீதிபதியும் ஏதாவது ஒரு வகையில், வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை, அனைத்து மக்கள் மனதிலும் நிற்கும் தீர்ப்புகளை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் குறிப்பாக, இந்திய அரசியல் சட்டத்தின் நோக்கங்களைச் செயற்படுத்துவதில், மிக முக்கிய பங்காற்றும் தீர்ப்புகளை வாசித்திருக்கிறார்கள். அந்தவகையில், 70 ஆண்டு கால அயோத்தி வழக்கில், உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்கான வழியைக் காட்டியிருக்கிறார், ரஞ்சன் கோகாய்.

அயோத்தி தீர்ப்பு:

ஐந்து பேர் கொண்ட, அரசியல் சாசன அமர்வு வழங்கிய அந்தத் தீர்ப்பு, இந்தியாவில், இந்து-முஸ்லிம் மக்களிடையே, இனம்புரியாத வகையில் நெருடலாக இருந்து கொண்டிருந்த ஒரு பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கிறது.

உச்சநீதிமன்றமே தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருப்பது போல், ‘1,500 சதுர கஜம்’ உள்ள பகுதிதான், இத்தனை வருடங்களாக, இரு மதங்களுக்கு இடையே, அமைதியின்மையை ஏற்படுத்தி வந்தது. அந்த அமர்வில், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நீதிபதியொருவர் இடம்பெற்றிருந்தாலும், இந்துக்களின் நம்பிக்கை என்ற அயோத்தி விவகாரத்தில், ஒருமனதாகத் தீர்ப்பளித்தது மேலும் சிறப்பானது.

ஜனநாயக நாடான இந்தியாவில்தான், நீதித்துறை ஒரு மிகப் பெரிய பிரச்சினையை, இலாவகமாகத் தீர்த்து வைக்க முடியும் என்பதற்கு, எடுத்துக்காட்டாக ‘அயோத்தித் தீர்ப்பு’ அமைந்திருக்கிறது. அதைத்தான், “எங்கள் ஜனநாயகத்துக்கு, இந்த வலிமை இருக்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தி தீர்ப்பு வெளிவந்தவுடன், பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

“அயோத்தியில்தான் இராமர் பிறந்தார் என்பது, இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்ட, மதச்சார்பற்ற நாட்டில், மசூதியை இடித்த முறை தவறு; சகிப்புத்தன்மை, ஒற்றுமையுடன் வாழ்வதுதான், இந்த நாடும், மக்களும் மதச்சார்பற்ற தன்மைக்கு அடையாளமாக விளங்குவதை உறுதிப்படுத்துகிறது. ஒரு மதத்தின் நம்பிக்கைக்கும், இன்னொரு மதத்தின் நம்பிக்கைக்கும் இடையில், எந்த வேறுபாட்டையும் அரசியல் சட்டம் ஏற்படுத்தவில்லை. அனைத்து மதத்தினரின் நம்பிக்கை, பிரார்த்தனை எல்லாம் சமமானதே” என்று, அரிய கருத்துகளை, நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறது.

இப்போது, அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்படும். அதேபோல், “அயோத்தி நகரில், முக்கியமான பகுதியிலோ, மத்திய அரசு கையகப்படுத்தியிருக்கும் அயோத்தியில் உள்ள 67 ஏக்கரிலோ, இஸ்லாமிய மக்களுக்கு, ஐந்து ஏக்கர் நிலம் மசூதி கட்டுவதற்குக் கொடுக்க வேண்டும்” என்று, தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்.

ஏற்கெனவே, அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய இடத்தை, இந்துக்கள் முஸ்லிம்கள் ஆகியோரின், கூட்டுச் சொத்து போல் பாவித்து, மூவருக்கும் தலா ஒரு பங்கு பிரித்துக் கொடுத்தது. அதை, இப்போது உச்சநீதிமன்றம் மாற்றியமைத்து, அந்தச் சர்ச்சைக்குரிய இடம், இந்துக்களுடையது என்று, உறுதியாகி விட்டது. ஆகவே, இஸ்லாமியர்களுக்குத் தனி இடம்; ஆனால், அதே அயோத்தி நகருக்குள்ளேயே என்று தீர்ப்பளித்துள்ளது.

இது, இரு மதங்களும் அமைதியாகத் தங்கள் இறை வணக்கத்தைச் செலுத்துவதற்கு, ஏதுவாக இருக்கும் என்பதுதான், உச்சநீதிமன்றத்தின் ஒற்றை நோக்கம். ஆகவே, இரு முக்கிய மதங்களுக்கு இடையில் இருந்த, ‘தீராத தலைவலி’ அயோத்தித் தீர்ப்பால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சி செலுத்தும் பா.ஜ.கவிடமிருந்த, தேர்தல் பிரசார வியூகம் இன்னொன்று, அக்கட்சியின் கையை விட்டுப் போயிருக்கிறது.

தகவல் உரிமைச் சட்டத்தில் தலைமை நீதிபதி தீர்ப்பு:

தன்னைத் தானே, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்து, வெளிப்படைத்தன்மைக்கு இலக்கணமாக விளங்கக் கூடிய தீர்ப்பை, ரஞ்சன் கோகாய் வழங்கியிருக்கிறார்.

2005இல் வெளிவந்த, தகவல் உரிமை பெறும் சட்டம், இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும், தகவலைப் பெறும் உரிமையைச் சில நிபந்தனைகளுடன் மக்களுக்கு வழங்கியது. அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன என்பதை, ஒளிவு மறைவின்றித் தெரிந்து கொள்ளும் உன்னத நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகக் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம், இந்தியாவில் இருந்த, அலுவலக இரகசிய சட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

தகவல் உரிமை பெறும் சட்டத்துக்குள், தலைமை நீதிபதி வருவாரா, மாட்டாரா? என்ற கேள்வி, டெல்லி உச்சநீதிமன்றத்தில் எழுப்பப்பட்டு, உச்சநீதிமன்றம் தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் வரும் போது, தலைமை நீதிபதியும் வருவார் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை உறுதி செய்திருக்கிறார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய். இதன் மூலம், தலைமை நீதிபதியாக இருப்பவருக்கே, இரகசியமாகச் செயற்படும் உரிமை கிடையாது என்பது, நீதித்துறை வரலாற்றில் சரித்திரம்.

“தகவலை மறைத்து, நீதித்துறையின் சுதந்திரத்தை நிலைநாட்ட முடியாது; நீதித்துறைக்குச் சுதந்திரம் இருப்பதால், அந்தச் சுதந்திரம் வெளிப்படைத்தன்மையாகவும் திறந்த புத்தகமாகவும் இருக்க வேண்டும். நீதித்துறை சுதந்திரமும் பொறுப்புணர்வும் ஒன்றோடு இன்னொன்று கைகோர்த்துப் பயணிக்க வேண்டும்” என்ற தீர்ப்பின் வரிகள், இந்தியாவின் நீதித்துறை எந்த அளவுக்கு வெளிப்படையாகச் செயற்பட வேண்டும் என்று நினைக்கிறது என்பது புலனாகிறது. குறிப்பாக, நாட்டின் மிக உயரிய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, எந்த அளவுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறார் என்பதை, இந்தத் தீர்ப்பின் மூலம் ரஞ்சன் கோகாய் நிலைநாட்டியிருக்கிறார்.

ரபேல் தீர்ப்பு

இந்தியப் பாதுகாப்புக்கு, ரபேல் போர் விமானங்கள் பிரான்ஸிலிருந்து வாங்கும் கொள்முதல் ஒப்பந்தத்தில், ஊழல் என்ற குற்றச்சாட்டை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்ற வழக்கை, முன்பே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அடுத்து, பிரபல ஆங்கில ‘ஹிந்து’ பத்திரிக்கையில் வெளிவந்த அந்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில், மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனுவும் இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 107 பக்கத் தீர்ப்பில், 16 பக்கத்தை இரு நீதிபதிகளும் 96 பக்கத்தை இன்னொரு நீதிபதியும் எழுதியிருந்தாலும், மூவரும் ஒருமனதாக, “ரபேல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முகாந்திரம் இல்லை” என்று தீர்ப்பளித்துள்ளார்கள்.

இந்தத் தீர்ப்பில், “பாதுகாப்புத்துறைக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்த விவகாரத்தில், சுற்றி வளைத்து விசாரித்துக் கொண்டிருக்க முடியாது; நீதிமன்றம் முன்பு உள்ள ஆதாரங்களின் அடிப்படையில், இதில் எப்.ஐ.ஆர் போடுவதற்கு உத்தரவிட முகாந்திரம் இல்லை; ரபேல் போர்விமானங்கள் வாங்கும் விலை வித்தியாசத்தைப் பொறுத்தமட்டில், ஒரெஞ் பழத்தையும் அப்பிள் பழத்தையும் ஒன்றாக ஒப்பிட முடியாது; ஒப்பந்தம் தொடர்பான கோப்பில், ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துகளைத் தெரிவித்திருப்பார்கள்.

ஏனென்றால், விவாதங்களும் வெவ்வேறு கருத்துகளும் ஒரு முடிவு எடுக்கும் தொடர் நடவடிக்கையில், மிக முக்கியமானவை. இறுதியில், முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தவர் எடுக்கும் முடிவுதான் இறுதியானது; கோப்பில் தெரிவித்த வெவ்வேறு கருத்துகளை ஒப்புக் கொண்ட பிறகுதான், ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றால், ஒரு முடிவு எடுக்கும் தொடர் நடவடிக்கையில், ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொள்ளும் முறையையே தோற்கடித்து விடும்” என்று, அரசு ஒப்பந்தங்களில், குறிப்பாகப் போர் விமானங்கள் வாங்கும் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களில், கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளுக்கு முன்னுதாரணமாக, இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.

இந்த மூன்று முக்கிய தீர்ப்புகள் தவிர, சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று அளித்துள்ள தீர்ப்பின் மீதான ‘மறுசீராய்வு மனுவை’த் தற்போது, ஏழு பேர் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், ஏற்கெனவே, பெண்களுக்கு அங்கு செல்ல அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தடை செய்யவில்லை. ஆகவே, ஏழு நீதிபதி கொண்ட தீர்ப்புக்காகப் பெண்கள் காத்திருக்க வேண்டுமா? சபரி மலைக்குப் போகலாமா என்பதை மத்திய அரசாங்கமும் கேரள மாநில அரசாங்கமும் முடிவு செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றன.

இந்திய உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்புகள் அனைத்தும், ஜனநாயகம் தழைக்கக் கிடைத்த தீர்ப்புகள் ஆகும். நாட்டில் அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்துடன், தங்களது மதநம்பிக்கைகளுடன் வாழ்வதற்குக் கொடுக்கப்பட்ட தீர்ப்புகள் ஆகும். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு, மதம், இனம், நீதித்துறை சுதந்திரம் என்று அனைத்தையும் தாண்டி அளிக்கப்பட்டுள்ள முத்தான தீர்ப்புகள் இவையாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன இறுக்கம் குறைக்கும் கலை!! (அவ்வப்போது கிளாமர்)
Next post மீண்டும் விவாகரத்து செய்யலாமா?! (மகளிர் பக்கம்)