By 16 December 2019 0 Comments

“நோ பிரா டே” !! (மகளிர் பக்கம்)

அக்டோபர் 13ல் வரும் ‘நோ பிரா டே’ பெண்கள் பிரா அணிய எதிர்ப்பல்ல. பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நாள்.

உலக அளவில் பெண்களுக்கு வருகின்ற புற்றுநோய்களில் ‘மார்பகப் புற்றுநோய்’ முதலிடத்தில் உள்ளது. பிற நாட்டுடன் ஒப்பிடுகையில், இந்தியப்பெண்கள் அதிகளவில் இந்நோயில் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் உள்ள பெண்கள் அதிகமாக இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு 10 நிமிடத்தில் இரண்டு இந்தியப் பெண்களுக்கு மார்பகப்புற்று இருப்பதும், இருவரில் ஒருவருக்கு முற்றிய நிலையிலும் கண்டறியப்படுவதால் இறப்பைத் தவிர்க்க முடிவதில்லை.

எதிர்வரும் காலங்களில் மார்பகப் புற்று நோயால் இறப்புவிகிதம் அதிகமாக வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம்(WHO) கவலை தெரிவித்து இருக்கிறது என்கிறார் இங்கிலாந்தில் உள்ள ஹல் பல்கலைக் கழகத்தின் முதுமுனை வேதியியல் ஆராய்ச்சியாளர் முனைவர் செ.அன்புச்செல்வன். பெண்கள் தங்களது மார்பகப் புற்றுநோய் குறித்த புரிதலோடு அதனை வெல்ல வேண்டும் என்கிறார் இவர்.

மார்பகப் புற்றுநோய் என்றால் என்ன?

மார்பகம் கொழுப்புத் திசுக்கள் (adipose tissue 70%), பால் சுரப்பிகள் (glandular tissue 30%), பால் குழாய்கள்(Milk Ducts) நிணநீர் குழாய்கள்(lymph node) என்ற நான்கு உள்தொகுதிகளால் உருவானது. இந்நோய் மார்பகத்தின் மிகச்சிறிய உள்ளுறுப்பில் ஒன்றான பால் குழாய்களுக்குள் உருவாவதால்தான் பெரும்பாலும் இந்நேய் முற்றிய நிலையில் தெரிய வருகிறது.

மார்பகப்புற்று நோய் வருவதற்கான காரணிகள்?

தாய்ப்பால் வெளியேறும் பால் குழாய்களின் உள்புறச் சுவற்றில், ‘எபிதீலியல்’ என்றொருவகைச் செல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின்போதும் நடக்கும் ஹார்மோன்களின் சுரப்பு விகிதத்திற்கேற்ப எபிதீலியல் செல்லடுக்குகள் தோன்றி மறைவதால் தோராயமாக 12 வயதில் பூப்பெய்தி 42 வயதில் மாதவிடாய் நிற்கும்வரை ஒவ்வொரு பெண்ணுக்கும் சுமார் 400 சுழற்சி முறைகளில் எபிதீலியல் செல்கள் தோன்றி மறைகின்றன.

மார்பகத்தில் நிகழும் இந்த வெகுவேகச் செல் சுழற்சியின்போது, ‘பிறழ்வுகள்’ (Mutations) நடக்க வாய்ப்புகள் அதிகம். அதாவது, எபிதீலியல் செல்லடுக்குகள் முறையாகப் பல்கிப்பெருக, ஒவ்வொரு முறையும் 20 முதல் 25 நாள்கள் தேவைப்படுகின்றன. ஆனால், முறையான செல்பிரிதலில் பிறழ்வு நிகழும்போது, ஒரு சில நாள்களிலேயே பால்குழாயின் உள்பகுதி முழுவதும் எபிதீலியல் செல்லடுக்குகளால் நிரம்பிவிடுகிறது. தாய்ப்பால் போகமுடியாத அளவுக்கு எபிதீலியல் செல்லடுக்குகள் வளர்ந்து விடுகின்றன. தொடர்ந்து நடக்கும் இந்த அதிவேக செல் வளர்ச்சியைத்தான் மார்பகப்புற்று என்கிறோம்.

இந்நோய் உருவாவதற்கான புறக்காரணிகள்?

வாழ்க்கை முறையில் மாற்றம், உணவுமுறை மாற்றங்கள், எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் உள்ளிட்ட அயனிக் கதிர்வீச்சுகளுக்கு தொடர்ச்சியாய் உள்ளாகுதல். அளவுக்கு அதிகமான ஸ்டீராய்டு மருந்து பயன்படுத்துதல். தீயில் வாட்டிய அசைவத் துரித உணவுகள். தொடர்ச்சியாய் ஒரே எண்ணெயில் பொரிக்கப்படும் தின்பண்டங்கள்.

பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகள் படிந்த காய்கறிகள், பழங்களை வாங்கி அப்படியே உண்ணுதல். இவை மெதுவாய் வளரும் செல்லடுக்குகளை விரைவாய் வளர வைத்து புற்று நோயாக மாற்றுகிறது. இது பால்குழாயினை உடைத்து வெளியேறும்போது மற்ற உறுப்புகளுக்கும் பரவும் நிலையினை அடைகிறது.

எல்லாப் பெண்களுக்கும் மார்பகப்புற்று நோய் வருமா?

மார்பகப் புற்று நோய்க்கும், மாதவிடாய்க்கும் நிறையத்தொடர்புகள் உள்ளதால் அனைத்துப் பெண்களுக்கும் வருவதற்கான வாய்ப்புகள் நூறு சதவிகிதம் இருக்கிறது. பெண்ணின் சினைப்பைகளில் (Ovaries) உருவாகும் சினைமுட்டைகள், பெலோப்பியன் குழாய்கள் வழியாக கருப்பைக்குள் வரும்போது, ஈஸ்டிரோஜென் (Estrogen), ப்ரோஜிஸ்ட்டிரோன் (Progesterone) உள்ளிட்ட ஹார்மோன்களும் உடன்வருகின்றன.

அதாவது, ஒரு பெண்ணுக்கு 28 நாள்கள் மாதவிடாய் சுழற்சி இருப்பதாகக்கொண்டால், மாதவிடாய் சுழற்சியில் உதிரப்போக்கு முடிந்த முதல் மூன்று அல்லது நான்கு நாள்கள் கழித்து, 25-27 நாள்கள்வரை மேற்சொன்ன ஹார்மோன்களின் அளவு அதிகரித்து பின்னர் படிப்படியாக சுரப்பு குறைகிறது. இவ்வாறு உதிரத்தில் ஹார்மோன்களின் அளவு உயர்ந்து மீண்டும் குறையும்போது, பெண்ணின் உள்ளுறுப்புகளில் குறிப்பாக மார்பகப் பால்குழாய்களில் மாற்றங்கள் நிகழ்கின்றன.

மார்பகப் புற்று நோயினை வருமுன் தடுக்க இயலுமா?

மாதவிடாய் சுழற்சி அனைத்துப் பெண்களுக்கும் இருப்பதால் இந்நோய் வராமல் தடுக்க முடியாது என்பதே கசப்பான உண்மை. எனவே உதிரப்போக்கு நின்ற நாளில் இருந்து பத்து நாள்களுக்குள் வீட்டிலே சுய பரிசோதனைகளை மாதம் ஒரு முறை மேற்கொண்டால், மார்பகத்தில் தோன்றும் அசாதாரண அறிகுறிகளைக் கொண்டு தொடக்கத்திலே கண்டறிந்து வெல்ல வாய்ப்புகள் உண்டு. நோய் வருவதற்கான புறக்காரணிகள் குறித்த விழிப்புணர்வோடு செயல்பட்டால் ஓரளவு தற்காத்துக் கொள்ளலாம்.Post a Comment

Protected by WP Anti Spam