மண்ணில் இருந்து மன அழுத்த தடுப்பூசி!! (மருத்துவம்)

Read Time:6 Minute, 47 Second

ஆராய்ச்சி

மண்ணுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு மிகவும் நெருக்கமானது. மண்ணிலிருந்து உருவான மனிதன் மீண்டும் மண்ணுக்கே செல்கிறான் என்ற ஆன்மிகப் பார்வையும், அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உண்டு என்கிற மருத்துவ பார்வையும் இதனையே நமக்கு உணர்த்துகின்றன. ஆனால், காலமாற்றம் காரணமாக நாகரிகம் என்ற பெயராலும், கிருமித்தொற்று என்ற பயம் காரணமாகவும் மண்ணை விட்டு வெகுதூரம் விலகிவிட்டோம். உண்மையில் மண்ணுக்குள் மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் பல அம்சங்கள் புதைந்திருக்கின்றன.

குறிப்பாக, மன அழுத்தத்தை நீக்கும் Hexadecenoic எனப்படும் கொழுப்பு அமிலம், உடலில் அழற்சியை ஏற்படுத்தக் கூடிய நோய்க்கிருமிகளை அழிப்பதோடு, நரம்பு மண்டலத்தில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் பாதைகளைத் தடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளது. இது நுண்ணுயிர் அடிப்படையிலான ‘மன அழுத்த தடுப்பூசி’-யை உருவாக்குவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்’ என்று குறிப்பிடுகிறார்கள் ஆய்வாளர்கள்.

கொலராடோ மற்றும் போல்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மண்ணில் வசிக்கும் பாக்டீரியத்தில் அழற்சி எதிர்ப்பு மற்றும் நல்ல கொழுப்பை அடையாளம் கண்டுள்ளனர். மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் அதிக வெளிப்பாடு மனிதனின் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும் என்றும் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வுக்குழுவின் தலைமை உறுப்பினரான லோரி, ‘மனிதர்கள் விவசாயம் மற்றும் பண்ணைகளிலிருந்து விலகி நகரங்களுக்குள் நகர்ந்துள்ளதால், நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் பொருத்தமற்ற அழற்சியை அடக்குவதற்கும் உதவிய உயிரினங்களுடனான தொடர்பை நாம் முற்றிலும் இழந்துவிட்டோம். இதன் விளைவால் இன்று நமக்கு அழற்சி நோய் மற்றும் மன அழுத்தம் தொடர்பான மனநலக் கோளாறுகளுக்கான அதிக ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்று குறிப்பிடுகிறார்.

மேலும், ‘கிராமப்புற சூழலில் வளர்க்கப்பட்ட குழந்தைகள், விலங்குகள் மற்றும் பாக்டீரியாக்கள் நிறைந்த தூசுகளால் சூழப்பட்டவர்கள், அதிக மன அழுத்தத்தைத் தடுக்கும் நோய் எதிர்ப்பு அமைப்புகளைக் கொண்டவர்களாக வளர்கிறார்கள். செல்லப்பிராணி இல்லாத நகரவாசிகளைக் காட்டிலும் மனநோய்க்கான ஆபத்து குறைவாக இருக்கலாம்’ என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதற்கு முந்தைய 2017-ம் ஆண்டில் தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகளில் வெளியிட்ட லோரி எழுதிய ஆய்வொன்றில், மன அழுத்தம் நிறைந்த நிகழ்வுக்கு முன்னர் M.Vaccae இன்ஜெக்‌ஷனை செலுத்தியபோது எலிகளிடத்தில், கணிசமான அளவில் PTSD சிண்ட்ரோம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளதைக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இந்த புதிய ஆய்விற்காக லோரி மற்றும் அவரது குழு மைக்கோபாக்டீரியம் தடுப்பூசியில் காணப்படும் 10 (Z) – ஹெக்ஸாடெசெனோயிக் அமிலம்(Hexadecenoic acid) எனப்படும் ஒரு புதிய லிப்பிட் அல்லது கொழுப்பு அமிலத்தை அடையாளம் கண்டு அவை எவ்வாறு மேக்ரோபேஜ்(Macrophages)களுடன் தொடர்பு கொள்கிறது என்பதையும் ஆய்வு செய்தனர். அப்போது உயிரணுக்களுக்குள், அந்த கொழுப்பு அமிலம் ஒரு பூட்டில் ஒரு சாவி போல செயல்படுவதையும், பெராக்ஸிசோம் புரோலிஃபரேட்டர்(Peroxisome proliferator(PPAR) என்னும் ஒரு குறிப்பிட்ட ரிசப்டார் ஆக்டிவேட் ஆகி, வீக்கத்தைத் தூண்டும் பல முக்கிய பாதைகளைத் தடுப்பதையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

செல்கள் மண்ணில் இருக்கும் கொழுப்பு அமிலம் மூலம் முன்கூட்டியே சிகிச்சையளிக்கப்படும்போது அவை தூண்டப்பட்டு, அழற்சியை எதிர்க்கின்றன என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர். மேலும் இதே M.Vaccae-னை பயன்படுத்தி மன அழுத்த ஊசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதை சேவைத் துறையில் நுகர்வோர்களுக்கு பதிலளிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள், போர் வீரர்கள் மற்றும் உயர் அழுத்த வேலைகளில் உள்ள மற்றவர்களுக்கும் செலுத்தி, அவர்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தத்தினால் உண்டாகும் உளவியல் சேதத்தை தடுக்க உதவுவதையும் கண்டறிந்தார்.

இது மண்ணில் காணப்படும் ஒரு வகை பாக்டீரியத்தின் ஒரு இனத்தின் ஒரு மாதிரி மட்டுமே, இதுபோல் நம் மன நலனை மேம்படுத்தும் மில்லியன் கணக்கான நுண்ணியிரிகள் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையும் இதனால் ஏற்பட்டுள்ளது. அதுகுறித்த ஆய்வுகளும் நடைபெற வேண்டும். நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் இந்த நுண்ணுயிரிகளை அடையாளம் காணக்கூடிய ஆரம்ப கட்ட நிலையில்தான் இருக்கிறோம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது’ எனவும் லோரி குறிப்பிடுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்கப்பூர் பாலிமர் நகைகள் இப்போது சென்னையில்…!! (மகளிர் பக்கம்)
Next post ஆஹா… ஆப்ரிகாட்! (மருத்துவம்)