புற்றுநோய்… வாழ்க்கையை வாழ கற்றுத் தந்தது!! (மகளிர் பக்கம்)

Read Time:17 Minute, 5 Second

உலகில் மிகவும் கொடிய நோய் என்றால் அது புற்றுநோய்தான். முன்பெல்லாம் 100ல் ஒருத்தருக்கு இருந்த நோய் இப்போது பத்தில் ஒருவருக்கு என மிகவும் வேகமாக பரவி வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என அனைவரையும் பாதிக்கிறது. அப்படிப்பட்ட இந்த கொடிய நோயின் பிடியில் இருந்து மீண்டு வந்துள்ளார் வழக்கறிஞரான 27 வயதே நிரம்பியுள்ள தீபிகா வெங்கட்ராமன்.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சட்டப் பட்டப்படிப்பை முடித்தவர். திருமணமாகி ஆம்ஸ்டர்டாமில் செட்டிலானார். அன்பான கணவர், மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை என மிகவும் சந்தோஷமாக தன் வாழ்க்கையை கணவருடன் ரசித்து வாழ்ந்து கொண்டு இருந்தார். ஆனால் அவரின் அழகான குருவிக்கூட்டு வாழ்க்கையை கலைக்கவே வயிற்று வலி உருவில் அந்த அரக்கன் வந்தான். அந்த அரக்கனிடம் அவர் போராடி தனக்கான வாழ்க்கையை மீட்டுள்ளார். “வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டு இருந்தது. அப்போது ஒரு நாள் தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டது. வயிற்று வலி தானே சாதாரணமானதாக தான் இருக்கும்னு முதலில் நினைச்சேன். அம்மாவும் இதுக்கான வீட்டு வைத்தியம் எல்லாம் சொன்னார்.

ஆனால் வலி குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் போனது. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத வலி ஏற்பட்டது. உடனே என் கணவர் என்னை, மருத்துவரிடம் அழைத்து சென்றார். அவர்கள் அல்சராக இருக்கலாம் என்றனர். அதற்கான மருந்துகளை எழுதிக் கொடுத்தார் டாக்டர். சில நாட்கள் அவர்கள் சொன்ன மருந்துகளை சாப்பிட்டேன். அப்படியும் வலி நிற்கவில்லை. மீண்டும் டாக்டரிடம் ஓடினேன். ஆனால் அப்போதும் அவர் அல்சர் என்றால் வயிறு முழுக்க புண்ணாகத் தான் இருக்கும். அது குணமாக கொஞ்சம் நாளாகும். அதுவரை வலியை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கன்னு சொன்னார்’’ என்றவர் வெளிநாடுகளில் நாம் நினைக்கும் நேரத்தில் டாக்டர்களை அவ்வளவு எளிதாக சந்திக்க முடியாதாம்.

‘‘ஆம்ஸ்டர்டாமில் மட்டுமில்லை, பல வெளிநாடுகளிலும், நினைத்த நேரத்தில் மருத்துவரை சந்தித்துவிட முடியாது. முதலில் நம் பிரச்சனையை விளக்கி அவர்களிடம் அப்பாய்ன்மென்ட் வாங்கணும். அடுத்து அவர்கள் சொல்லும் நாளில்தான் அவர்களை சென்று சந்திக்க முடியும். அதேபோல, ஸ்கேன் செய்வதுக்கும் சில நாட்கள் ஆகும். மருத்துவர்கள் யாருக்கு உதவி உடனே தேவை என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை தருவார்கள். அதன்படிதான் அப்பாய்ன்மென்டும் கிடைக்கும். இப்படி எனக்கு என்ன நோய் என்று தெரியாமலே பல நாட்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டது. வயிற்று வலியுடன் வேறு சில பிரச்சனைகளும் வர, இனிமேல் நாட்களை கடத்த வேண்டாம்னு இந்தியாவிற்கு பறந்து வந்துட்டோம்.

இங்கு முதலில் என்னை பரிசோதித்த டாக்டர் எனக்கு அல்சர் இல்லை என்பதை உறுதி செய்தார். வயிற்று வலி தொடர்ந்து இருந்ததால், அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள சி.டி.ஸ்கேன், பெட் ஸ்கேன் எல்லாம் எடுக்க சொன்னார். அல்சர்தான் இல்லையே, வேறு என்ன பெரிய பிரச்னையாக இருக்காது. மாற்று மருந்து சாப்பிட்டால் சரியாகிவிடும்னு சந்தோஷமாகத்தான் என் அழகான முடியினை கோதியபடி டாக்டரை பார்க்க சென்றேன். டாக்டர் அன்று முதல் என் சிரிப்புக்கு பெரிய பூட்டு போடுவார் என்று நான் நினைக்கவில்லை. காரணம், அவர் என்னுடைய வயிற்று வலிக்கான பிரச்னை சாதாரண அல்சரோ அல்லது வேறு ஏதோ பிரச்னை இல்லை என்றும் அது புற்றுநோயின் பாதிப்பு என்றார். அதோட நில்லாமல் உடனடியாக சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும்.

சிகிச்சையின் போது முடி கொட்டும். பிறகு வளர்ந்திடும்னு மிகவும் சர்வசாதாரணமாக கூறினார். நான் மொத்தமாக நொடிந்து போனேன். அடங்க முடியாத வேதனையும், கோபமும்தான் வந்தது. எனக்கு நான் என்ன தவறு செய்தேன் என்ற எண்ணம்தான் மேலோங்கியது, வாழ்க்கை கேள்விக்குறியானது’’ என்றவர் தளர்ந்து விடாமல் இருக்க அவரின் கணவர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்தான் துணையாக நின்றுள்ளனர். ‘‘எனக்கு வந்திருப்பது ஒரு அரிய வகையான ரத்தப் புற்றுநோய். Non Hodgkin’s Lymphoma எனப்படும் இந்தப் புற்றுநோய் ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களில் (WBC) வருவது. நம் ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள்தான் நோயை எதிர்த்து போராடி, நோய் பரவாமல் தடுக்கும்.

அதிலேயே புற்றுநோய் தாக்கியதால், அது வேகமாக பரவி வருவதாக டாக்டர் தெரிவித்தார். முதலில் கீமோதெரபி சிகிச்சையை ஆரம்பிச்சாங்க. அதனால் நான் அதிக அளவு மனஉளைச்சல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு ஆளானேன். சில சமயம் கோவம் வரும். பல நாட்கள் அழுது இருக்கேன். கீமோதெரபி விஷம் போலத்தான். கேன்சர் அணுக்களை தாக்கும்போது, நம் உடலில் உள்ள ஆரோக்கியமானஅணுக்களும் அழிந்துபோகும். ஆனால் மீண்டும் இறந்து போன நல்ல அணுக்கள் உற்பத்தியாகும். இந்த சமயம் கிருமிகள் தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்பு இருப்பதால், எங்கும் வெளியில் செல்ல முடியாது. வீட்டிலேயேதான் இருக்கணும். டி.வி பார்க்கவும் முடியாது, புத்தகமும் படிக்க தோணாது. எவ்ளவு நேரம்தான் சும்மா இருக்கிறது.

அதனால் எனக்கு பிடித்த ஓவியக் கலையை கையில் எடுத்தேன். என் கணவர் எனக்காக வாங்கிக் கொடுத்த ஐ பேட்டில் வரைந்து அதிலேயே சேமித்து வைத்தேன். அதில் என் புற்றுநோய்க்கு பிறகான வாழ்க்கையை ஆவணம் செய்ய துவங்கினேன். நான் கீமோதெரபி எடுக்கும்போது, என் முடியை வெட்டும்போது… என என்னை மிகவும் பாதித்த நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் பொறுமையாக வரைந்தேன்’’ என்றவருக்கு ஓவியங்கள் பொழுது போக்காகவும், மன உளைச்சலைப் போக்கும் மருந்தாகவும் இருந்தது. ‘‘சிகிச்சை ஆரம்பிச்சதும் எனக்கு டாக்டர் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. என்னுடைய முடி எல்லாம் உதிர்ந்திடும் என்பது. தலைமுடி மட்டும் இல்லை, புருவத்திலும், இமைகளில் இருக்கும் முடியும் சேர்த்து விழுந்தது.

உடலளவில் முன்னேற்றம் இருந்தாலும், கண்ணாடி முன் நிற்கும்போது, நாம் ஆரோக்கியமாக இல்லை, அழகாக இல்லை போன்ற எண்ணங்கள் வரும். வீட்டுக்கு யாராவது வந்தாலும், உடனே என்னுடைய ரூமுக்குள் சென்று அடைந்து கொள்வேன். முடியில்லாமல் வெளியே செல்லவோ, மற்றவர்களை பார்க்கவோ தயக்கமாக இருந்தது. என் மனநிலையை புரிந்து கொண்டு என் கணவர் தினமும் என்னிடம் ‘நீ ரொம்ப க்யூட்டா இருக்க தெரியுமா’ன்னு சொல்ல ஆரம்பித்தார்.
‘‘நீ அழகா இருக்க, குணமாகிட்டு வர, சீக்கிரம் சரியாயிடும்” என்று என் குடும்பத்தினரும் தொடர்ந்து சப்போர்ட் செய்தனர். அது என்னுடைய கவலையை கொஞ்சம் கொஞ்சமாக போக்கியது. அப்படித்தான் பிரபல ஆடை வடிவமைப்பாளர் கீதிக்கா கண்ணுமல்லியுடன் ஒரு போட்டோ ஷூட் ஏற்பாடானது.

எனக்கு அழகான ஆடைகள் அணிவித்து, சந்தோஷமாக சிரிக்க சொல்லி புகைப்படங்கள் எடுத்துக் காட்டினார். எனது புகைப்படம், சமூக வலைத்தளத்தில் வெளியானதும் பலரும் எனக்கு நம்பிக்கை வார்த்தைகள் கூறி பாராட்டினர். அது மேலும் என் மீது எனக்கு நம்பிக்கை கொடுத்தது. எனக்கே என்னைப் பிடிக்க ஆரம்பித்தது இதற்கிடையில், அனைத்து வலியையும் தாண்டி என் கீமோதெரபியும் முடிந்தது. ஆனால் அந்த சந்தோஷமும் நீடிக்கவில்லை. மருத்துவர்கள் முதலில் தெரிந்த முன்னேற்றம் இப்போது இல்லை, உங்களுக்கு இந்த சிகிச்சை பலனளிக்கவில்லை. நீங்கள் Bone Marrow மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றனர். அதை கேட்டதும் பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும்.

குணமாக வாய்ப்பு இருக்கிறதே என்று சம்மதித்தேன். அந்த சிகிச்சை எனக்கு இன்னொரு பிறவி எடுத்தது போல் இருந்தது. என்னுடைய நல்ல அணுக்களை சேகரித்து, பின் உடலில் இருக்கும் மொத்த அணுக்களையும் அழித்து, புதிதாக நல்ல அணுக்களை செலுத்துவார்கள். இந்த சிகிச்சையின் போது நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க யாரையும் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். தனியாக நான் அந்த சிகிச்சையை மேற்கொண்டதை இன்று நினைக்கும் போது கூட ஒரு கெட்ட கனவு போல் இருக்கிறது. சிகிச்சையின் போது கவனமா இருக்கணும். ஆனால் சிகிச்சைக்கு பிறகு நூறு நாட்கள் தான் ரொம்பவே முக்கியமானது, கடினமானதும் கூட. ஒரு குழந்தை பிறந்ததும் என்ன செய்வோமோ அதெல்லாம் செய்யவேண்டும்.

அதாவது குழந்தை பிறந்ததும் போடக்கூடிய அனைத்து தடுப்பூசிகளும் எனக்கு போடப்பட்டன. காரம், எண்ணெய் இல்லாமல், குறைந்த அளவு உப்பு மட்டும் உள்ள உணவைத்தான் சாப்பிடணும். இப்போது அந்த நூறு நாட்களை கடந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறேன். என் உடல் நிலையில் ஏற்படும் முன்னேற்றங்களை பொறுத்து அடுத்து வரும் சிகிச்சைகள் அமையும்’’ என்றவர் பெண்களுக்கு ஆரோக்கியம் குறித்து ஆலோசனை வழங்கினார்.
‘‘நான் பெண்களுக்குச் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றுதான். உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். பல பெண்கள் குடும்பத்தாரின் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் தருமளவு தங்கள் ஆரோக்கியத்திற்கு தருவதில்லை.

வலியை பொறுத்துக் கொண்டு சமையல் செய்து வைப்பார்கள். ஓய்வேயில்லாமல் தொடர்ந்து வேலை செய்வார்கள். அதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சிகிச்சை தள்ளிப் போகிறது. எளிய சிகிச்சை மூலம் குணமாகும் வியாதிகள் கூட, பெரிதாகின்றன. அடுத்ததாக முக்கியமான விஷயம். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், ஆறுதல் சொல்லி தைரியம் கொடுக்க முடிந்தால் மட்டும் அவர்களை அணுகுங்கள், இல்லையெனில் அவர்களிடம் பேசாமல் இருப்பதே சிறந்தது. ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக பலரும், இதற்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் கதைகள் அல்லது சிகிச்சையால் ஏற்படும் பக்கவிளைவுகள் எனப்பேசி, ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்தை இம்சை செய்வார்கள்.

புற்றுநோயில் பலவகை உண்டு, பல சிகிச்சை முறைகளும் உண்டு. ஒருவரின் வயது, அவர்களுக்கு இருக்கும் எதிர்ப்புச்சக்தி, புற்றுநோயின் தாக்கம், புற்றுநோய் அமைந்திருக்கும் இடம் என எல்லாமே அவரின் சிகிச்சை முறையினை முடிவு செய்யும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்கூட, வேறொரு புற்றுநோயாளியின் சிகிச்சை முறையை புரிந்து கொள்ளமுடியாது. அதனால் தேவையில்லாமல் மற்றவர்களை கட்டாயப்படுத்தி காயப்படுத்த வேண்டாம். கண்டிப்பாக அனைவரும் மருத்துவ காப்பீடு செய்து கொள்வது அவசியம். கேன்சர் போன்ற நோய்களின் சிகிச்சைகளுக்கு அதிகம் செலவாகும். காப்பீடு இருக்கும்போது, உங்களுக்கு பல சிகிச்சை முறைகள் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கும்” என்கிறார்.

தீபிகா தன் சிகிச்சை முறையை பற்றி விவரிக்கும் போது ஒரு முறை கூட கண் கலங்கவோ, வருத்தப்பட்டு குரல் உடையவோ இல்லை. மிகவும் அமைதியாக தைரியமாக அவர் சந்தித்த போராட்டங்களை விவரித்தார். இப்போது அவர் தன் ஆசைகள் எதையுமே தள்ளிப் போடுவது இல்லையாம். சுற்றுலா செல்ல வேண்டும் என்று தோன்றும் போது உடனே குடும்பத்துடன் டூர் செல்கிறார். குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிடுகிறார். அவர்கள் பேசும்போது அனைத்து வேலையையும் விட்டு, பக்கத்தில் உட்கார்ந்து கவனிக்கிறார். இப்படி எதையும் தள்ளிப் போடாமல், சின்னச்சின்ன விஷயங்களுக்கு முக்கியத்துவம் தந்து, ‘லிவ்திமொமன்ட்’ என்ற பாலிஸியுடன் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்ந்து வரும் தீபிகா, விரைவில் குணமடைய வாழ்த்துவோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அல்-காய்தா வெடிகுண்டு நிபுணரை சொல்லி அடித்த அமெரிக்க உளவு விமானம்!! (வீடியோ)
Next post தினமும் என்னை கவனி!! (மருத்துவம்)