By 4 December 2019 0 Comments

ஐ.தே.க தலை தூக்குமா? (கட்டுரை)

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள், வெகுவாக மனமுடைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.

ஐ.தே.கவின் சார்பில், புதிய ஜனநாயக முன்னணியின் ‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிட்ட அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தேர்தல் முடிவடைந்ததன் பின்னர், சில நாள்களாக எவரையும் சந்திக்காமல் இருந்ததாகச் சில தகவல்கள் கூறுகின்றன.

நாட்டில் பல பகுதிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த மாதம் வரை, நாட்டை ஆட்சி செய்த ​ஐ.தே.க தலைவர்கள், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கச் சென்றதாகத் தகவல்கள் இல்லை. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டில் இருக்கிறாரா, இல்லையா என்று கூடத் தெரியாத அளவுக்கு, அவர் மௌனமாக இருக்கிறார்.

சில தலைவர்கள், விரக்தியின் விளிம்பில் இருந்து கொண்டு, தாம் அரசியலில் இருந்து விலகலாமா என்று யோசித்து வருவதாகக் கூறுகின்றனர். கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்படாவிட்டால், தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சரும் படித்தவருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருக்கிறார். வேறு ஒரு சிலரும், இது போன்ற கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.

இது போன்ற கருத்துகள், சாதாரண கட்சித் தொண்டர்களின் மன உறுதியை, மேலும் வெகுவாகப் பாதிக்கும் என்பதை, அவர்கள் உணரவில்லைப் போலும்.

இன்று, இவர்கள் எதைத் தான் கூறினாலும், எதிர்வரும் பெப்ரவரி இறுதியில், மார்ச் ஆரம்பத்தில் பொதுத் தேர்தலுக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது, அவர்கள் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு, தேர்தலில் போட்டியிடப் புறப்படுவார்கள். குறைந்த பட்சம், எதிர்க்கட்சியிலாவது இருப்பதன் பயன்களை, அவர்கள் நன்கறிவார்கள்.

​ஐ.தே.கவோ, நாட்டின் மற்றொரு பிரதான கட்சியோ, தோல்வியடைந்த முதலாவது முறை இதுவல்ல. 1956ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், ​நாடாளுமன்றத்தின் 95 ஆசனங்களில், ஐ.தே.க எட்டு ஆசனங்களை மட்டுமே பெற்றது.

அதுவரை, ஆளும் கட்சியாக இருந்த ஐ.தே.க, நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, 51 ஆசனங்களைப் பெற்றதோடு, இன்று காணாமற்போயிருக்கும் சமசமாஜக் கட்சி 14 ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி 10 ஆசனங்களையும் பெற்றன. ஆனால், 1960ஆம் ஆண்டு, அடுத்த தேர்தல் நடைபெற்ற போது, ​ஐ.தே.க மீண்டும் குறுகிய காலத்துக்கேனும் ஆட்சிக்கு வந்தது.

இதேபோல், 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் 168 ஆசனங்களில், எட்டு ஆசனங்களை மட்டுமே பெற்றது. அது, நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில், ஒரு கட்சி அடைந்த மிகவும் மோசமான தோல்வியாகும். ஆனால், 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

அதற்கு முன்னர், 1983ஆம் ஆண்டு, முறைப்படி தேர்தல் நடைபெற்றிருந்தால், சிலவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அவ்வாண்டே மீண்டும் பதவிக்கு வந்திருக்கலாம். ஆனால், அவ்வாறு இடம்பெறலாம் என்று அஞ்சிய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, 1982ஆம் ஆண்டு, சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம், தேர்தலை 1988ஆம் ஆண்டு வரை ஒத்திவைத்தார்.

ஸ்ரீ ல.சு.க வெற்றி பெற்ற 1994 ஆம் ஆண்டுத் தேர்தலில், தொகுதி வாரியாகப் பார்த்தால், ​நாட்டிலுள்ள 160 தொகுதிகளில், மஹியங்கனைத் தொகுதியில் மட்டுமே ஐ.தே.க வெற்றி பெற்றிருந்தது. ஆனால், அப்போது விகிதாசாரத் தேர்தல் முறை அமுலில் இருந்தமையால், அக்கட்சி 94 ஆசனங்களைப் பெற்றது.

ஆனால், ஐ.தே.க 2001ஆம் ஆண்டு மீண்டும் பதவிக்கு வந்தது. மீண்டும், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த ​ஐ.தே.க, 2015ஆம் ஆண்டு, மற்றொரு முறை பதவிக்கு வந்தது.

எனவே, அசாதாரண நிலைமைகள் உருவாகாதிருந்தால், தேர்தல்களில் ஆட்சிகள் மாறிக் கொண்டே போகும். எனவே, ​ஐ.தே.க தலைவர்களின் விரக்தி என்பது, அவர்களது பலவீனத்தையே குறிக்கிறது. அதேவேளை, தமக்கு வாக்களித்த மக்களை, நட்டாற்றில் விடுவதற்குச் சமமாகவே இத்தகைய செயற்பாடுகள் அமையும்.

எனினும், கடந்த வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களோடு, இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஒப்பிடும் போது, ​ஐ.தே.க முன்னோக்கியே நகர்ந்துள்ளது. அது வெற்றி பெறும் அளவில் இல்லை என்பது வேறு விடயம்.

இதை நாம், கடந்த இரண்டு வாரங்களிலும் கூறினோம். அதை மீண்டும், இந்த இடத்தில் நினைவூட்ட வேண்டியுள்ளது. அதாவது, கடந்த வருடத்தைப் பார்க்கிலும், பொதுஜன பெரமுன, ​ஐ.தே.க ஆகிய இரு கட்சிகளும், இம்முறை தேர்தலில் 20 இலட்சம் வரையில், வாக்குகளை அதிகரித்துக் கொண்டுள்ளன.

பொதுஜன பெரமுனவின் அதிகரித்த வாக்குகளுக்குள், கடந்த வருடம் ஸ்ரீ ல.சு.க பெற்ற 15 இலட்சம் வாக்குகளில் பெரும் பகுதியும் ​ஐ.தே.கவின் அதிகரித்த வாக்குகளுக்குள் சிறிதளவு ஸ்ரீ ல.சு.க வாக்குகளும் கடந்த வருடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பெற்ற மூன்றரை இலட்சம் வாக்குகளும் அடங்குகின்றன.

அந்தவகையில் பார்த்தால், கடந்த வருடத்தைப் பார்க்கிலும் இந்த வருடம், ​ஐ.தே.க சுமார் 12 இலட்சம் சிங்கள பௌத்த வாக்குகளை அதிகரித்துக் கொண்டுள்ளது என்றும் வாதிடலாம். பொதுஜன பெரமுன, சுமார் எட்டு இலட்சம் சிங்கள பௌத்த வாக்குகளை மட்டுமே, அதிகரித்துக் கொண்டுள்ளது.

எனவே, கடந்த வருடத் தேர்தலோடு ஒப்பிடும் போது, கோட்டாவை விட, சிங்கள பௌத்த வாக்குகளை, சஜித்தே பெற்றுள்ளார். அதாவது, கோட்டாவின் வெற்றியானது, சிங்கள பௌத்த அலையல்ல.

ஆனால், 2015ஆம் ஆண்டில் சுமார் 50 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ​ஐ.தே.க தலைமையிலான கூட்டணி, கடந்த வருடம் சுமார் 35 இலட்சம் வாக்குகளையே பெற்றது. பொதுஜன பெரமுன, கடந்த வருடம் 49 இலட்சம் வாக்குகளைப் பெற்றது. ​

ஐ.தே.கவின் இந்த வீழ்ச்சி, தென் பகுதிகளிலேயே இடம் பெற்றுள்ளது. அது ஏன் என்பதைத் தான், ​ஐ.தே.க தலைவர்கள் ஆராய வேண்டும்.

கடந்த வருடம், இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 14 இலட்சமாகும். இந்த வருடமும் இவ்விரு கட்சிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் 14 இலட்சமாகும்.

எனவே, ​ஐ.தே.க இம்முறை புதிதாக எந்தத் தோல்வியையும் அடையவில்லை. இது, 2015ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரையில் வீழ்ந்த வீழ்ச்சியே ஆகும். அந்த வீழ்ச்சி, தென் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. அதற்கான காரணத்தைத் தான், ​ஐ.தே.க கண்டறிய வேண்டும்.
2015ஆம் ஆண்டு, ​ஐ.தே.க 10 இலட்சம் தொழில் வழங்குவதாகவும் ‘வொக்ஸ்வாகன்’ கார் தொழிற்சாலை ஆரம்பிப்பதாகவும் டயர் தொழிற்சாலை ஆரம்பிப்பதாகவும் அதன் மூலம் தொழில் வழங்குவதாகவும் இலவச இணைய வசதிகளை வழங்குவதாகவும் மடிக் கணினிகளை வழங்குவதாகவும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

மேற்கூறிய அனைத்தும், இளைய தலைமுறையைப் பாதிக்கும் விடயங்களாகும். இளைய தலைமுறை, கட்சிகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டதல்ல; எனவே, அவர்கள் இலகுவாக, ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறலாம்.

2015ஆம் ஆண்டு, இந்த வாக்குறுதிகளை வழங்கிய ​ஐ.தே.க., தம்மை ஏமாற்றி விட்டதாக உணரவே, அவர்கள் படிப்படியாக அக்கட்சியை விட்டுப் பிரிந்து, 2018ஆம் ஆண்டு, அதாவது கடந்த வருடம் பொதுஜன பெரமுனவின் அலையோடு இணைந்து கொண்டுள்ளார்கள் என்றே ஊகிக்க வேண்டியுள்ளது.

அத்தோடு, மத்திய வங்கி பிணை முறி விவகாரம் படித்தவர்களின் மனதை மாற்றியது. இவர்கள் அனைவரும் பொதுஜன பெரமுனவோடு இணைந்து கொள்ள, அக்கட்சியின் இனவாதப் பிரசாரமும் ஓரளவுக்கு உதவியிருக்கலாம். ஆயினும், ​ஐ.தே.க தமது வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், நிலைமை இந்தளவு மோசமாகியிருக்காது.

பொதுஜன பெரமுனவுக்கும் அபிவிருத்தி விடயத்தில், எந்தவோர் ஆக்கப்பூர்வமான திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, அக்கட்சியின் ஆட்சியும் நிரந்தரமானதல்ல.

​ஐ.தே.க மீண்டும் பதவிக்கு வரலாம். ஆனால், அது விரைவில் நடைபெறுமா, இல்லையா என்பது, அக்கட்சியின் வியூகங்களிலேயே தங்கியிருக்கிறது.

புதிய அரசாங்கம் நிலைக்குமா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பல ஜனரஞ்சகமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் வெளியே செல்லும் போது, முன்னர் போலன்றி, இரண்டு பாதுகாப்பு வாகனங்களுடனேயே செல்கிறார்.

மைத்திரி-ரணில் அரசாங்கம், தேசியப் பாதுகாப்பை மிக மோசமான நிலைக்குத் தள்ளியதாகக் கூறி, பதவிக்கு வந்த ஜனாதிபதி, முன்னைய தமது ஆட்சிக் காலத்தில், பத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் சூழப் பயணம் செய்தார்; இப்போது, இரண்டு பாதுகாப்பு வாகனங்களுடன் மட்டும் செல்கிறாரே என்று, எதிர்க்கட்சிகள் கேட்கலாம். ஆயினும், ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கதாகும்.

அதேவேளை, 30 அமைச்சர்களை நியமிக்க, அரசமைப்பின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தும் அவர், தமது அமைச்சரவைக்குப் பிரதமர் உட்பட, 16 அமைச்சர்களையே நியமித்துள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு வந்த உடன், பொது மக்களைப் பாதிக்கும் பல வரிகளைக் குறைத்துள்ளார். மைத்திரி-ரணில் அரசாங்கம், பொருளாதாரத்தை அழித்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டி, பதவிக்கு வந்த ஒரு கட்சியின் ஜனாதிபதியே, இவ்வாறு வரிகளைக் குறைத்துள்ளார். இதுவும், பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு, மேற்கொண்ட நடவடிக்கையாக இருக்கலாம் எனப் பலர் நினைக்கின்றனர். எனினும், இப்போதைக்கு இந்த நடவடிக்கையைப் பாராட்டலாம்.

அரச அலுவலகங்களில், அரசாங்கத்தின் தலைவர்களின் படங்களுக்குப் பதிலாக, குடியரசின் இலட்சினையைக் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அரசாங்கங்கள் மாறும் போதெல்லாம், படங்களை மாற்றுவதற்குப் பதிலாக, இது நல்ல ஆலோசனை தான்.

தமது, முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக அவர், கடந்த வாரம் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். அங்கு, ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளின் போது, அவரிடம் தமிழர் பிரச்சினையைப் பற்றிக் கேட்கப்பட்டது. அவர் மழுப்பாமல், “அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை, முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. பெரும்பான்மை மக்கள் விரும்பாத எதையும் செய்ய முடியாது” என்றும் கூறினார்.

அவ்வாறாயின், ‘13 பிளஸ்’ திட்டத்தை அமுலாக்குவோம் என, மஹிந்த ராஜபக்‌ஷ பொதுஜன பெரமுனவோடு இணைந்துள்ள தமிழ்க் கட்சிகளுக்கு, கடந்த ஓகஸ்ட் மாதம் வாக்குறுதியளித்தாரே என்று சிலர் கேட்கலாம். ஆயினும், தாம் செய்ய நினைக்காததைச் செய்வேன் எனக் கூறாமல், ஜனாதிபதி உண்மையைக் கூறியதைப் பாராட்டத் தான் வேண்டும். அது, சரியா, பிழையா என்பது வேறு விடயம்.

முன்னர் அமைச்சர்கள், தாம் விரும்பிய எண்ணிக்கையில் தமது நண்பர்களுக்கு, ஆலோசகர் பதவிகளை வழங்கினர். இப்போது அமைச்சர்கள், ஓர் ஆலோசகரை மட்டுமே, நியமிக்க முடியும் என்றும் அவர் பணித்துள்ளார்; பாராட்டுக்குரியது.

இந்த நடவடிக்கைகள், விரயத்தைக் குறைத்த போதிலும், நாட்டை அபிவிருத்தி செய்யாது. அதற்கான திட்டங்கள், அரசாங்கத்திடம் இருக்கிறதா என்பதே கேள்வியாகும். அபிவிருத்தி என்பது, நாடு முழுவதிலும் வீதிகளை மேம்படுத்துவதல்ல; அபிவிருத்திக்கு அதுவும் தேவை தான்; ஆனால், அதனால் மட்டும் நாடு அபிவிருத்தி அடையாது. அதற்காக, அரசாங்கத்தினதும் நாட்டு மக்களினதும் வருமானத்தையும் தொழில் வாய்ப்புகளையும் அதிகரிக்கும் புதிய திட்டங்கள், தீட்டப்பட வேண்டும்.

நாடு சுதந்திரமடைந்தது முதல், 1978ஆம் ஆண்டு வரை, எந்தவோர் அரசாங்கத்திடமும் அவ்வாறான திட்டம் இருக்கவில்லை.

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் காலத்தில், சோவியத் ஒன்றியம், களனி டயர் தொழிற்சாலை, சாலாவ ஒட்டுப்பலகைத் தொழிற்சாலை போன்றவற்றை வழங்கிய போதிலும், அரசாங்கங்களிடம் ஒரு கைத்தொழில் திட்டம் இருக்கவில்லை.

வெள்ளையர்கள் ஆரம்பித்த பெருந்தோட்டத்துறையே, 1978ஆம் ஆண்டு வரை, நாட்டின் பிரதான வருமானமாக இருந்தது.

ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவே நாட்டின் பொருளாதாரத்தை மாற்றிய, ஒரே தேசியத் தலைவர் ஆவார். அவரது காலத்தில் சுதந்திர வர்த்தக வலயங்கள் ஆரம்பிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானவர்களுக்குத் தொழில்கள் வழங்கப்பட்டன. மகாவலி துரித அபிவிருத்தித் திட்டங்கள் மூலம், பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் வளமாக்கப்பட்டன.

ஆனால், அதன் பின்னர், பொருளாதாரம் மீண்டும் தேங்கிக் கிடக்கிறது. ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் காலத்தில், 200 ஆடைத் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அவை முறையாகத் திட்டமிடப்படாததால், காலப்போக்கில், அவற்றில் பல மூடப்பட்டன.

அத்தோடு, போரின் காரணமாகவும் அரசாங்கங்களின் திறமையற்ற அணுகுமுறைகள் காரணமாகவும் சீனித் தொழிற்சாலைகள், ஒட்டுப்பலகைத் தொழிற்சாலை, புல்மோட்டை இல்மனைட் தொழிற்சாலை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலை போன்றவை மூடப்பட்டன.

மஹிந்தவின் அரசாங்கம், அபிவிருத்தி என்ற பேரில் ஆரம்பித்த ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் என்பவற்றின் நிலைமை குறிப்பிட வேண்டியதில்லை.

புதிய அரசாங்கம், இவற்றைப் பாடமாக எடுத்து, அதிகரிக்கும் சனத் தொகைக்கு ஏற்ப, வருமானத்தையும் தொழில் வாய்ப்புகளையும் தொடர்ச்சியாக அதிகரிக்கத் திட்டங்களைத் தீட்டாவிட்டால், இந்த அரசாங்கமும் ​ஐ.தே.க அரசாங்கத்தைப் போலவே நீடிக்காது.

அதையிட்டு, எவரும் மகிழ்ச்சியடைய முடியாது. எந்த அரசாங்கமேனும், நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய வேண்டும் என்பதுவே, மக்களின் எதிர்பார்ப்பாகும்.Post a Comment

Protected by WP Anti Spam