By 17 December 2019 0 Comments

உடை தான் நம்முடைய அடையாளம்!! (மகளிர் பக்கம்)

நீங்க அழகா இருக்கீங்க, இந்த டிரஸ் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னா போதும், உடனே மனசுல பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சுரும். நாம் யார் என்பதை நிர்ணயிக்கறதே உடைதான். அதுலயும் பெண்கள் எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கறாங்களோ இல்லையோ அவங்க உடைக்கு எப்போதுமே முதல் இடம்தான்.

அதேபோல, இன்னும் பலர் துணிகளை தைத்துப் போட்டுக் கொள்ளும் பழக்கத்திலும் உள்ளனர். இவர்களுக்கென சென்னையில் ‘ஷிலோஹ் பொட்டிக்’ என்ற பெயரில் தனி ஒரு பெண்ணாக பிரத்யேகமாக துணிக் கடை வைத்து நடத்தி வருகிறார் ரோஷினி.

‘‘சென்னையில்தான் படித்து வளர்ந்ததெல்லாம். ஐ.டி நிறுவனம் ஒன்றில் எச்.ஆராக கொஞ்ச காலம் வேலை பார்த்தேன். அங்கு அடிக்கடி நீல்கிரிஸ் மார்க்கெட் ஸ்டால் போடுவாங்க. அதை பார்த்து நாமும் ஏன் பிசினஸ் பண்ணக் கூடாதுன்னு தோணுச்சு. இது பல நாள் கனவெல்லாம் கிடையாது, அந்த ஒரு நாள் யோசனைதான்.

வீட்டில் இதைப் பற்றி பகிர்ந்து கொண்ட போது பெற்றோர் உறுதுணையாக இருந்தாங்க. அப்பா இன்ஜினியர், அம்மா டாக்டர். இவங்க எப்போதும் பிசியாவே இருக்கக்கூடிய ஆட்கள். இவர்களை போல நானும் இருக்க ஆசைப்பட்டேன். சும்மா இருப்பதில் எனக்கும் துளி அளவும் விருப்பமில்லை” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ரோஷினி.

நாம் பல்வேறு பிசினஸ் செய்யலாம். ஆனால், அந்த பிசினசில் முன்னேற அதன் நுணுக்கங்களையும், மக்களின் தேவைகள் என்னவாக இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டால் மட்டுமே அதில் வெற்றி காண முடியும். சூப்பர் மார்க்கெட்டுகளில் மக்கள் தங்களுக்கு என்ன தேவையோ அதை அவர்களாகவே எடுத்துக் கொள்கிறார்கள். அதில் பிராண்டுகளையும் தேர்ந்தெடுக்கிறார்கள். விரும்பியபடி பொருட்களை வாங்கலாம் என்பதால் சூப்பர் மார்க்கெட்டுகளை நோக்கி வாடிக்கையாளர்கள் அதிகம் வருகிறார்கள். இதிலும் உள்ளூர் கடைகளுக்கு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. இதை உணர்ந்த ரோஷினி, முதலில் சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்துள்ளார்.

‘‘சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்தால் அதை எப்படி நடத்த வேண்டும், எவ்வளவு மணி நேரம் அதற்காக ஒதுக்க வேண்டுமென தீவிரமாக ஆய்வு செய்தேன். விசாரித்த இடங்களில் ஓரளவு பணமும், அதற்கான அனுபவமும் இருந்தால் தொடங்கலாம் என்றார்கள். பெற்றோரின் ஆதரவோடு சூப்பர் மார்க்கெட் தொடங்கினேன்” என்று கூறும் ரோஷினி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாகச் சென்னை குன்றத்தூரில் இதை நடத்தி வருகிறார்.

“ஒரு நாள், கிரிஸ்டியன் தோழி ஒருத்தி கல்யாணத்திற்காக, அவளுக்கு கல்யாண உடை அணிவதற்காக உதவியாகச்
சென்றிருந்தேன். இந்த கவுன் வாடகைக்கும் சரி, வாங்குவதற்கும் சரி ஒரு சில கடைகளில் தான் கிடைக்கிறது. விலையும் அதன் தன்மைக்கு ஏற்ற வகையில் இருந்தது.

நாம் ஏன் இது போன்ற துணிகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு கடை வைக்கக் கூடாது என்று யோசனை அந்த சமயத்தில் தோன்றியது. இதனையடுத்து அண்ணா நகரில் ஒரு பொட்டிக் (boutique) கடை ஒன்றை ஆரம்பித்தேன். டிசைனிங் படிக்கவில்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக நெட்டில் பார்த்துக் கற்றுக்கொண்டேன். கவுன் தைப்பதற்கும், வாடகைக்கும் குறைந்த விலையில் இங்கு கிடைப்பதால், நடுத்தர மக்களும் வந்து செல்கின்றனர். இது போக பழைய பட்டுப் புடைவைகள் பாலீஸ் போட்டு புதுசு போல் செய்து கொடுக்கிறோம்.

ஒரு பெண் தன்னுடைய நூறு சதவீதம் திறமையைக் காட்ட வேண்டுமென்கிற அவசியமில்லை. ஆனால், அவள் தன்னுடைய ஐம்பது சதவீத திறமையை வெளியில் காண்பித்தாலே திறமைக்கான போரே இந்த சமூகத்தில் நடக்கும். இருந்தாலும் பெண்கள் தடைகள் கடந்து பல துறைகளிலும் இன்று முன்னேறியதுடன் அவர்களுடைய அடையாளத்தையும் செதுக்கி வருகின்றனர்.

ஆரம்பத்தில் எல்லா பிசினஸ் போல் எனக்கும் கொஞ்சம் டல்லாகத்தான் போனது. பின் எந்தெந்த இடங்களில் குறைகள் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து அதை சரி செய்ய ஆரம்பித்தேன். எனது ‘ஷிலோஹ் பொட்டிக்’ பெயரில் சமூக வலைத்தளங்களில் அப்டேட் செய்தேன். இதனை பார்த்து மக்கள் வர ஆரம்பித்தனர். பிசினசில் லாபம், நஷ்டம் இரண்டுமே இருக்கும். அதற்கேற்றார் போல் மனப் பக்குவம் கொண்டு செயல்பட்டதால் தற்போது ஐந்து கடைகள் நடத்தி வருகிறேன்.

பெண்கள் பல வேலைகள் கையாளுவதில் சிறந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் வீட்டிலும், அலுவலகத்திலும் பெரும்பாலான பெண்களின் திறனை யாரும் அங்கீகரிப்பதில்லை. எப்போதும் சாதிக்கும் பெண்களை மட்டுமே பாராட்டிக் கொண்டிருக்கும் நாம், ஏன் நாமும் சாதிக்கக் கூடாது என்று சிந்திப்பதில்லை” என்கிறார்.Post a Comment

Protected by WP Anti Spam