By 17 December 2019 0 Comments

ஹைதராபாத் மோதல் கொலைகள்: எதைக் கொண்டாடுவது? (கட்டுரை)

கொலைகள் என்றும் கொண்டாடத் தக்கவை அல்ல; அது கொலைகாரனுக்கான தண்டனையாக இருந்தாலும், கொண்டாட முடியாதவை மட்டுமல்ல, கொண்டாடக் கூடாதாவை; ஆனால், கொலைகள் கொண்டாடப்படும் சமூகத்தில் நாம், வாழத் தலைப்பட்டுள்ளோம். இது, எம்மையும் நாம் வாழும் சமூகத்தையும், பற்றிய பல கேள்விகளை எழுப்புகிறது. நாம் திறந்த மனதுடன் உரையாட வேண்டிய சில விடயங்களை, அண்மைய நிகழ்வுகள் முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளன.

கடந்த மாதம் 27ஆம் திகதி, இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில், பிரியங்கா என்ற பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரும், கடந்த வாரம், சம்பவம் நடந்த இடத்தில், பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நான்கு பேரும் தப்ப முயற்சித்ததாகவும் பொலிஸாரைத் தாக்க முயன்றதாகவும் தற்காப்புக்காகச் சுட்டதில், நால்வரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும் பொலிஸ் அறிவித்தது. பொலிஸாரின் இச்செயலை, எல்லோரும் கொண்டாடித் தீர்த்தனர். குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனையை வழங்கியதன் மூலம், நீதி கிடைத்து விட்டதாக ஆறுதல் கொண்டனர். இந்நிகழ்வு சமூக வலைத் தளங்களிலும் கொண்டாடப்பட்டது.

அவ்விடத்துக்கு வந்த பொதுமக்கள், “காவல்துறை வாழ்க” என முழக்கமிடுகிறார்கள்; பூக்களைத் தூவுகிறார்கள். பொலிஸாரைத் தோளில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். இனிப்பு வழங்குதல், பட்டாசு வெடிப்பு எனக் கொண்டாட்டம் உச்சத்துக்குச் செல்கிறது. இவை ஊடகங்களில், திரும்பத் திரும்பக் காட்டப்படுகின்றன.

அதிகாலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த நான்கு உடல்களும், பிரேத பரிசோதனைக்காக, மத்தியானம் மூன்று மணிவரை, குறித்த இடத்தில் காட்சிப் படுத்தப்படுகின்றன. அதற்குப் பின்னரே, அவை பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்படுகின்றன. அப்பூதவுடல்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்திலே, கிட்டத்தட்ட 12 மணித்தியாலங்களுக்கு மேலாகக் கிடத்தப்பட்டன. இவை அனைத்தும், திட்டமிட்ட திரைக்கதை போலவே அமைந்துள்ளன.

இந்த நிகழ்வு, ‘போலி மோதல்க் கொலை’களை (என்கவுன்டர்) ஒத்திருந்தது. ஆனால், இந்தச் சட்ட விரோதமான செயலை, நியாயப்படுத்தும் கடமையை, ஊடகங்கள் செய்தன. அதை மக்களின் பொதுப்புத்தி மனநிலை, ஏற்றுக் கொண்டது.

குற்றவாளிகளைக் கொன்று, நீதி வழங்கியதற்காகத் தெலுங்கானாப் பொலிஸார், இன்று கொண்டாடப்படுகிறார்கள். ஆனால், கொல்லப்பட்ட பிரியங்கா காணாமல் போனபோது, பொலிஸாரின் நடவடிக்கைகள், கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டியவை.

நவம்பர் மாதம் 27ஆம் திகதி இரவு, பிரியங்கா கடத்தப்படுகிறார். உடனே அவர், சகோதரிக்குத் தகவல் தெரிவிக்க முற்படுகிறார். அவரது தந்தை, பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்க முயற்சிக்கிறார். அந்தப் புகாரை, அந்தப் பொலிஸ் நிலையத்தில், கடமையில் இருந்த பொலிஸார் பெற்றுக் கொள்ளாமல், அது தமது ஆளுகை வரம்பில் இல்லை எனப் பதிலளிக்கின்றனர்.

அடுத்து, மற்றொரு பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்படுகின்றது. அங்கு மிகச் சாதாரணமாக, “உங்கள் மகள், யாருடனாவது ஓடிப் போயிருப்பாள்” எனப் பதிலளிக்கிறார்கள். தேடுதல் என்பது, மிகத் தாமதமாகவும் அலட்சியமாகவும் பொலிஸாரால் நடத்தப்படுகிறது.

மறுநாள், ஒரு பாலத்தின் அடியில், முற்றிலும் எரிந்த நிலையில், ஒரு பிரேதம் கண்டெடுக்கப்படுகிறது. அப்பிரேதம் பிரியங்காவினுடயதுதான் என்று, அவரின் சகோதரி அடையாளம் காட்டுகிறார்.

இந்தச் சம்பவம் குறித்துச் செய்தியாளர்கள், தெலுங்கானா உள்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பும்போது, “பிரியங்கா படித்த பெண்தானே; ஏன் பொலிஸாரின் உதவி மய்யம் எண் 100க்கு அழைக்காமல், தனது சகோதரிக்கு அழைப்பை எடுத்தார்” என, அவர் கேட்டார்.

இந்தப் பதில், அரச தரப்பின் அலட்சியத்தை எடுத்துக் காட்டியது. இதனால், அரசாங்கத்தின் மீதும் பொலிஸாரின் மீதும், மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதே நாளில், லொறி ஓட்டுநரும் ஏனைய மூன்று உதவியாளர்களும் கைது செய்யப்படுகிறார்கள்.

இவர்கள் நான்கு பேரையும் பொலிஸார், நீதிமன்றக் காவலிலிருந்து, விசாரணைக்காகத் தமது கட்டுப்பாட்டில் எடுக்கிறார்கள்; அதையடுத்து, அந்த நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

நீதியின் மீதான அவநம்பிக்கை

இங்கு, குற்றம் சாட்டப்பட்ட அந்த நால்வரும்தான், இந்தக் குற்றத்தைச் செய்தார்கள் என்பது, நிரூபிக்கப்படவில்லை. அவர்கள் நால்வரும், குற்றம் சாட்டப்பட்ட சந்தேக சபர்கள் மட்டுமே!

எனவே, குற்றம் சாட்டப்பட்ட, குற்றம் நிரூபிக்கப்படாதவர்களையே, பொலிஸ் சுட்டுக் கொன்றுள்ளது என்ற உண்மை, பலருக்குத் தெரியாது. மூன்றாம் உலக நாடுகளில், நீதிமன்றங்களில் வழக்குகளை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலப்பகுதி, நீதித் துறையின் மீது நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்குப் பொறுப்புக் கூறவேண்டியது, நீதித் துறையும் வழக்குகளை விசாரிக்கும் பொஸிஸுமே ஆகும். ஆனால், இவ்வாறான ‘என்கவுன்டர்’கள் மூலம், பொலிஸ் நல்லபெயரைப் பெற்றுவிடுகிறது.

இந்த நிகழ்வு, ஒற்றை நிகழ்வாக, மக்களின் கூட்டு மனச்சாட்சியின் நிலையை எடுத்துக் காட்டுகிறது. 2019 நவம்பர் 27ஆம் திகதி, பிரியங்கா மட்டும்தான் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டாரா? இல்லை!

அன்று, ராஞ்சியில் 26 வயது பழங்குடியினப் பெண், துப்பாக்கி முனையில் வன்புணர்வு செய்யப்பட்டிருகிறார்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 20 வயதுப் பெண் ரோஜா, வன்புணர்வு செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

கடலூர், நெய்வேலியில் 32 வயதுப் பெண், தனது உறவினருடன் இரு சக்கர வாகனத்தில் வரும்போது, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்.

வதோரோவில் 14 வயதுப் பெண்ணும் சண்டிகரில் 11 வயதுப் பெண்ணும் ஒரு ஓட்டோ டிரைவரால் கடத்தப்பட்டு, மூன்று நாள்கள் தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

இவை, எதைக் கோடிட்டுக்கு காட்டி நிற்கின்றன என்பதையும், நாம் யோசிக்க வேண்டும்.
இங்கு, ஒரு நிகழ்வை நினைவூட்ட விரும்புகிறேன். காஷ்மீரில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஆஷிபா எனும் சிறுமி, கோவிலில் வைத்து, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட, அந்தக் குழந்தைக்காக வாதாடும் வழக்கறிஞர் மிரட்டப்பட்டார். அந்த வழக்கு, இன்னமும் தீர்ப்பளிக்கப்படாமல் உள்ளது. ஆஷிபாவைப் போல், ஆயிரக்கணக்கானோர் நீதி கோரிக் காத்துக் கிடக்கிறார்கள்.

வன்புணர்வுக் கொலைகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டியவைதான்; சட்டத்தின் ஆட்சி நடைமுறைப்படுத்தபட்டு, இந்த வழக்குகளுக்கான தண்டனையும் சட்டப்படிதான் நிகழ்த்தப்பட வேண்டும். போலி மோதல் கொலைகள், சட்டத்தின் ஆட்சி சீரழிந்து போனதன் வெளிப்பாடு ஆகும்.

குற்றம் சந்தேகமற நிரூபிக்கப்பட வேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் போலி மோதல் கொலைகளுக்கு இல்லை; அதன்நோக்கம் பொதுமக்களின் அறச்சீற்றத்தைக் கட்டுப்படுத்துவதும் திசைதிருப்புவதுமே ஆகும். இதில் கொல்லப்படுபவர்கள், குற்றத்துடன் தொடர்பில்லாத அப்பாவிகளாகக் கூட இருக்கலாம். எனவே, போலி மோதல் கொலைகள் குறித்துக் கொண்டாடத்தக்கது அல்ல!

மரணத்தைக் கொண்டாடும் மனநிலை

கொலைகள் கொடுமையானவை; அவை ஏற்படுத்துகிற வேதனை கொடுமையானது. எனினும், சாவின் அவலத்தைப் பொழுதுபோக்காக்குகின்ற ஒரு பண்பாடு, ஊடகங்களின் வழி, நம்மிடையே பரவியுள்ளது. அது எந்தக் கொலையையும் விடக் கொடுமையானது.

இன்று, ஊடகங்கள் அனைத்துக்குமான ‘சந்தை’யை உருவாக்கியுள்ளன. அதில், அவலங்களைக் காட்சிப்படுத்தல் ஒரு முக்கியமான அம்சம். இதன் மோசமான பின்விளைவு யாதெனில், அவலத்தை ஒரு பொழுது போக்காக்குவதும், அதற்கான மக்களின் அங்கிகாரமும் ஆகும்.

திரைப்படங்களில், மனிதரைச் சித்திரவதை செய்கிற காட்சிகளையும் குரூரமான சண்டைக் காட்சிகளையும் அருவருப்பூட்டுகின்ற விதமாக வழங்கப்படுகிற மனித அவலங்களையும் நாம், பார்க்கப் பழக்கப்படுத்தப்படுகிறோம்.

இது, திரைப்படங்களைத் தாண்டி, தொலைக்காட்சி வழி, தொலைக்காட்சித் தொடர்களால் எம்மைத் தினம்தினம் ஆட்கொள்கிறது. இவ்வாறான இரசனை, வேர் கொண்ட பிறகு, அதை வளர்த்தெடுப்பதில், தொலைக்காட்சிகளின் பங்கு பெரியது.

மிருகத்தனமாக அடித்துத் துன்புறுத்தப்படுவதையும் கதறக் கதற வெட்டிக் கொல்லப்படுவதையும் நீண்ட நேரமாகக் காட்டுவது அல்லது பார்ப்பது, தமிழ்த் தொலைக்காட்சியில், தொடர் நாடகங்களில் வழமையாகி விட்டது. சாவீட்டுக் காட்சிகளும் நீண்ட நேரத்துக்குக் காட்டப்படுகின்றன.

இவற்றையெல்லாம் பார்த்து, இரசிக்கப் பழகி விட்டவர்களுக்கு, அவை உண்மையான சம்பவங்களாக அமைகிற போது, அவற்றையும் பார்த்து, அனுபவிக்கக் கூடிய விடயங்களாகி விடுகின்றன.

இது வெறுமனே ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் குற்றம் மட்டுமல்ல; ஒரு சமூகம் என்ற வகையில், நாம் எல்லோருமே இவ்வாறான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள். இந்த விதமான காட்சிகள் நம்மில், எந்த விதமான எதிர்வினையை ஏற்படுத்துகின்றன? அதிர்ச்சி, கோபம், அருவருப்பு, வெறுப்பு? ஒருவேளை, முதற்தடவை அப்படியான பாதிப்பு இருந்திருக்கலாம். ஆனால், நாம் விவரமாகக் காணுகிற ஒவ்வொரு மனித அவலத்தின் விவரணமும், அடுத்து வருவதைக் காண, நம்மை ஆயத்தமாக்குகின்றன.

சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் அப்படி இருப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதுதான் உண்மை. இங்கே, அரச கட்டமைப்புகள் முழுவதும் நீதிமன்றம், பொலிஸ், இராணுவம் என அனைத்துமே, சொத்துடையவர்களின் உயர்குடிகளின் சேவகர்களாகவே, செயற்படுகின்றன. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கொலைகள், அது எவ்வடிவாயினும் கொண்டாட்டத்துக்க உரியவில்லை. இவ்விடத்தில், கொலைகளைக் கொண்டாடுவோருக்கு ஒரு செய்தி; ‘வாழ்க்கையைக் கொண்டாட இயலாதவர்ளே, மரணத்தைக் கொண்டாடுகிறார்கள்’.Post a Comment

Protected by WP Anti Spam