By 21 December 2019 0 Comments

தானம் செய்யும் சாமன்யர்கள்… பலன் பெறும் பணக்காரர்கள்?! (மருத்துவம்)

க்ரைம் டைரி

உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஆணையம் (Transplantation Authority of Tamilnadu) என்ற முன்னோடி அமைப்பு நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதன்முதலில் செயல்பாட்டுக்கு வந்தது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டின் தலைநகராகவே தமிழகம் விளங்கி வருகிறது. இதனால் தொடர்ந்து 4 ஆண்டுகளாக உடல் உறுப்பு தானத்தில் நமது மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக தமிழகத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் சமீபத்தில் நடந்த பத்திரிகை சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

இது பெருமைகொள்ளத்தக்க விஷயம்தானா?! சாமன்யர்கள் தானமளிக்கும் உடல் உறுப்புகள் சாமன்யர்களுக்குக் கிடைக்கிறதா?!

2008-ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் இதுவரை 1,308 கொடையாளர்களிடமிருந்து 7,642 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 2,351 சிறுநீரகங்களும், 1,974 கருவிழிப்படலங்களும், 1,297 கல்லீரல்களும், 823 இதய வால்வுகளும், 573 இதயங்களும், 474 நுரையீரல்களும் தானமாகப் பெறப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை பயனாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக ஆயிரக்கணக்கானோர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். ஒருவரிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகள் உரிய விதிகளின்படியே பயனாளிகளுக்கு பொருத்தப்படுகின்றன.

‘உடல் உறுப்புகளை பயனாளிகளுக்கு அளிப்பதில் அரசு மருத்துவமனைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன் பின்னரே தனியார் மருத்துவமனைகளுக்கு உறுப்புகள் வழங்கப்படுகின்றன’ என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு அதிகாரிகள் கொடுத்துள்ள தரவுகள் ஒருபுறம் இருந்தாலும், உடல் உறுப்பு தானமாகப் பெற காத்திருப்போரின் எண்ணிக்கை என்னவோ நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. உண்மையில் மூளைச்சாவு அடைந்த நபர்களிடமிருந்து உறுப்புகள் எடுக்கப்பட்டு, அவற்றை தேவைப்படும் நபருக்கு பொருத்தும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் பெரும்பாலும் தனியார் மருத்துவனைகளில்தான் நடைபெறுகின்றன.

இதற்கு காரணம் என்ன? இப்படி தானமாக பெறப்பட்ட உறுப்புகள் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் சாமான்ய மக்களுக்கு கிடைக்கிறதா? என்பதே நம் எல்லோருடைய கேள்வி. உறுப்புகள் தானம் என்பதையே ஒரு வியாபாரமாகத்தான் உருவாக்கியிருக்கிறார்கள்.உறுப்புகள் தானம் பெறுகிற நிலை ஏன் உருவானது? தமிழகத்தைப் பொருத்தவரை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் அதிக அளவில் நடைபெற்றிருக்கிறது. இதற்கு காரணம் திருப்பூர் போன்ற நகரங்களில் சாயக்கழிவுகளில் உலோக வெளிப்பாடு அதிகம் இருப்பதே அங்குள்ள மக்கள் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மதுப்பழக்கம் போன்ற காரணங்களாலும் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. இப்படி வரும்முன் காப்போம் அடிப்படையில் நோய் தடுப்புக்கான எந்த திட்டத்தையும் அரசு வகுக்கவில்லை. சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஈரோடு பள்ளிபாளையத்திலும், சென்னையில் வில்லிவாக்கத்திலும் சிறுநீரகத் திருட்டு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் உடல் உறுப்புதானம் அவ்வளவாக பிரபலமாகவில்லை.

2008-ம் ஆண்டு ஹிதேந்திரன் நிகழ்வில்இருந்துதான் உடல் உறுப்புதானம் என்பது பிரபலமடைந்தது. ஹிதேந்திரன் என்னும் 12-ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு, அவருடைய உறுப்பை தானம் செய்தார்கள். எல்லா பத்திரிகைகளிலும் இது தலைப்பு செய்தியாக வெளியானது. அப்போது, எப்படி 18 வயது நிரம்பாத ஹிதேந்திரனுக்கு டிரைவிங் லைசன்ஸ் கொடுத்தார்கள்? மருத்துவத் தம்பதிகளுக்கு இந்த விழிப்புணர்வு கூட இல்லையா? என்ற கேள்வியை ஒரே ஒரு ஆங்கிலப் பத்திரிகை எழுப்பியது. இந்த கேள்விகளில் இருந்து திசைதிருப்பும்விதமாக உறுப்பு தானம் அமைந்துவிட்டது. அதிலிருந்துதான் தமிழகத்தில் உடல் உறுப்புதானம் என்பது மிகப்பெரிய விஷயமாக மாறியது; வியாபாரமாகவும் மாறியது.

இந்தியாவிலேயே உறுப்பு தானமளிப்பதில் முதன்மை மாநிலம் என்று பெருமையோடு சொல்கிறோம். ஆனால், சாமானியன் இதனால் பலனடைந்திருக்கிறான் என்பதற்கு எத்தனை உதாரணங்கள் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், சாமான்யர்கள்தான் பெரும்பாலும் உடல் உறுப்பு தானம் செய்பவர்களாக இருக்கிறார்கள். இதன் பின்னணியில் இன்னொரு காரணமும் இருப்பதாக சொல்கிறார்கள்.

தனியார் மருத்துவமனைகள் மிகப்பெரிய நெட்வொர்க் வைத்திருக்கின்றன. எங்கு விபத்து நடக்கிறதோ அங்கெல்லாம் உடனே தொடர்பு கொண்டு, உடல் உறுப்புகளை தானம் பெறும் வேலைகளை செய்கிறார்கள். அதற்காக கணிசமான தொகையை கொடுக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்தக்குழு விபத்தில் பலியானவரின் குடும்ப உறுப்பினர்களிடம் சென்று பணத்தாசை காண்பித்து, அதை வாங்கி வந்துவிடுகிறார்கள் என்று ஒரு சர்ச்சை இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் இதுபோல் உறுப்புகளுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் இல்லாததும் இந்த சர்ச்சை எழுவதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

அரசு மருத்துவமனைகளில் இதயமாற்று அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லை. அதனால் வெறும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே செய்கிறார்கள். முன்பு மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் இதய மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இப்போது அதற்கான வசதிகள் இல்லாததால் நிறுத்திவிட்டார்கள்.

ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்ததையும் இப்போது நிறுத்திவிட்டதாக சொல்கிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் அனைத்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் செய்வதற்கான முறையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இருப்பதால் 90 சதவீத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.

அறுவை சிகிச்சைக்குப் பிறகான பராமரிப்பு சிகிச்சைகள் இருக்கின்றன. அவற்றை அரசு மருத்துவமனைகள் கடைபிடிக்கின்றனவா என்றால் இல்லை. தானமாக பெறப்பட்ட உறுப்பு வேறொருவரின் உடலில் பொருத்தும்போது அவரது உடல் அதை நிராகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி நிராகரிக்காமல் இருக்க சில மருந்துகளும், பராமரிப்பு சிகிச்சைகளும் தேவைப்படுகின்றன.

இதுபோன்ற வசதிகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை. உறுப்புகள் தானத்திற்கான நெறிமுறையை(Protocol) மீறும் செயல்களும் இங்கு நடந்து கொண்டிருக்கின்றன. உறுப்பு தேவைப்படுவோர் காத்திருப்பு பட்டியலில் நம் நாட்டினருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும்போது கார்ப்பரேட் மருத்துவமனைகளில், அயல்நாட்டினர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

இந்த விஷயத்தில் தமிழக மாற்று ஆணையம்(Transplant Authority of Tamilnadu (TRANSTAN) விதிமுறைகளை மீறுகிறது என்பதை 2018-ம் ஆண்டு, கேரளாவில் நடந்த விபத்து ஒன்றில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் சிறுநீரகம் திருடப்பட்டு தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சம்பவத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதற்காக மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரத் துறையால் அமைக்கப்பட்ட விசாரணை கமிட்டி தெரிவித்திருந்தது.
மேலும் குறிப்பிட்ட தனியார் மருத்துவனைகளின் ஏஜென்டுகளாக வேலை செய்பவர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ள நோயாளிகளின் தனிப்பட்ட அடையாள எண்ணை மாற்றிவிடுகிறார்கள்.

TRANSAN அமைப்பு, உறுப்புகளின் தேவைக்காக பதிவுசெய்யப்படும் வலைதளப் பக்கத்தை புதுப்பிக்காமல் இருப்பதே இந்த எண்கள் மாறாட்டம் நடைபெற வசதியாக இருக்கிறது’ என்பதையும் அந்த விசாரணைக் கமிட்டி சுட்டிக்காட்டியுள்ளது. உறுப்பு தானம் கொடுப்பவர்களில் 90 சதவீதத்தினர் பொருளாதார நிலை காரணமாகவே, வற்புறுத்தலின் பேரில் தங்கள் உறுப்புகளை தானமாக கொடுக்கிறார்கள் என்பதும் நிதர்சனமான உண்மை.
சரி… இந்த பிரச்னைக்கான தீர்வுகள்தான் என்ன?

1. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும்.

2. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான கட்டமைப்பு வசதிகளை அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்த வேண்டும்

3. அரசு மருத்துவமனைகளில், அறுவைசிகிச்சைக்குப்பிறகு கொடுக்க வேண்டிய பராமரிப்பு நடவடிக்கைகளுக்கான கட்டமைப்பு வசதிகளை அமைத்துத் தர வேண்டும்.

4. ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

5. உறுப்பு மாற்று ஆணையத்தில்(Transplant Authority of Tamilnadu) அரசாங்கத்தின் சார்பான உறுப்பினர்கள் தவிர, சமூகத்தைச் சார்ந்த உறுப்பினர்களும் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இவை அனைத்தும் பின்பற்றப்படாத பட்சத்தில் உறுப்பு தானம் என்பது சரியான நபருக்குச் செல்லாது என்பதே என் கருத்து.Post a Comment

Protected by WP Anti Spam