அக்கா கடை!: அவர் இல்லாத வெறுமையை உணர்கிறேன்!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 20 Second

மதியம் 12.30 மணி, மதிய உணவு அருந்தும் நேரம். அந்த பிரதான ஓட்டலில் உணவு அருந்துவதற்காக வந்திருந்த அந்த வயதான தம்பதியினருக்கு காலில் சக்கரம் கட்டிக் கொண்டு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அது மட்டும் அல்லாமல், அவர் பரிமாறி இருக்கும் உணவு என்னென்–்ன என்ற விளக்கம் அளித்துக் கொண்டு இருந்தார். மேலும் அவர்கள் சாப்பிடும் வரை அருகில் இருந்து கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டு இருந்தார் பிரேமா மாமி.

‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். அப்பா கேட்டரிங் சர்வீஸ் வைத்திருந்தார். அம்மாவும் அப்பாவும்தான் அதனை நிர்வாகம் செய்து வந்தாங்க. அம்மா கேட்டரிங்கு தேவையான மசாலா பொருட்கள் எல்லாம் தயார் செய்வாங்க. சில சமயம் 20 பேருக்கான சமையல்னா அம்மாவே வீட்டில் சமைச்சிடுவாங்க.

இப்படி மசாலா வாசத்தோடதான் நான் வளர்ந்தேன். வீட்டில் எப்போதும் ஏதாவது ஒரு விழாவுக்காக சமையல் நடந்து கொண்டு இருக்கும். அதனாலேயே எனக்கு சின்ன வயசில் இருந்தே சமையல் கலை மேல் தனி ஆர்வமுண்டு. வீட்டில் அவங்க சமைக்கும் போது நான் கூடவே இருந்து பார்ப்பேன். சின்னச் சின்ன வேலைகள் செய்து கொடுப்பேன். ஆனா, அம்மா என்னை சமைக்க அனுமதி செய்ததில்லை. என்றாலும், சில சமயம் எப்போதாவது நான் சமைப்பேன். அப்போது அதில் என்ன நிறை குறைன்னு அம்மா சொல்லித் தருவாங்க. அதன்படி மறுபடியும் நான் சமைத்து பார்ப்பேன்.

அப்பா பெரும்பாலும் கல்யாணத்துக்கு தான் கேட்டரிங் செய்வார். அப்ப எனக்கு பத்து வயசு இருக்கும். ஒரு முறை அப்பா திருமணத்திற்கு கேட்டரிங் ஆர்டர் எடுத்து இருந்தார். நானும் அவருடன் சென்றேன். அங்கு சாப்பாட்டு பந்தியை பார்த்து நான் பிரமித்து விட்டேன். கிட்டத்தட்ட
125 பேர் ஒரே நேரத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம்.

எல்லாருக்கும் ஒரே நேரத்தில் சாப்பாடு பரிமாறணும். அப்பாவிடம் கேட்ட போது சிரித்துக் கொண்ேட தலை அசைத்தார். முதலில் கொஞ்சம் பதட்டமாதான் இருந்தது. அதன் பிறகு பழகிடுச்சு. அப்பாவுக்கு நான் சில சமயம் என்ன சாப்பாடு போடலாம்ன்னு மெனு தயார் செய்வேன். சில சமயம் மளிகை சாமான்களுக்கான லிஸ்ட்டும் போட்டுத் தருவேன்’’ என்றவர் அதன் பிறகு கல்யாணமாகி கும்பகோணத்தில் செட்டிலாகி விட்டார்.

‘‘என் கணவரும் ஓட்டல் துறையில்தான் வேலை பார்த்து வந்தார். கல்யாணத்திற்கு பிறகு கும்பகோணத்தில் செட்டில் ஆயிட்டேன். அங்கு பத்து வருஷம் இருந்தோம். அங்கு போன பிறகுதான் நான் முழுமையாக சமையலே செய்ய ஆரம்பிச்சேன். என் கணவருக்கு நான் செய்யும் தென்னிந்திய உணவு வகைகள் ரொம்ப பிடிக்கும். அதே போல் எனக்கும் உணவு குறித்து சில ஐடியாக்கள் எல்லாம் சொல்வார். அதன்படி நானும் டிரை செய்து பார்ப்பேன். இதற்கிடையில் என் கணவருக்கு மஸ்கட்டில் வேலை கிடைச்சது.

அதனால குடும்பத்துடன் அங்கு ேபாய் செட்டிலாயிட்டோம். கிட்டத்தட்ட 14 வருஷம் மஸ்கட்டில் ஒரு ஓட்டலில் அவர் வேலை பார்த்து வந்தார். அங்கு போன பிறகு பசங்களும் வளர்ந்துட்டாங்க. அதனால ஏன் அப்பா செய்த கேட்டரிங் தொழிலை செய்யக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. ஆனால் எப்படி யாரிடம் இருந்து ஆரம்பிக்கிறதுன்னு எனக்கு தெரியல.

பொதுவாகவே வெளிநாட்டில் வார இறுதி நாட்களில் நண்பர்களை எல்லாம் அழைத்து விருந்து வைப்பது வழக்கம். ஒரு முறை என் மகளின் பிறந்த நாளின் போது, நாங்களும் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம். மஸ்கட்டில் நாங்க வசித்த இடத்தில் பெரும்பாலும் இந்தியர்கள் தான் வாழ்ந்து வந்தனர். ஒருமுறை விருந்துக்கு வந்திருந்த நண்பர்கள் என் உணவு பிடித்துவிட்டு, அவர்களுக்கு செய்து தரும்படி கேட்டாங்க.

எனக்கும் அப்பாவின் கேட்டரிங் தொழிலை துவங்க இது சரியான தருணமாக தோன்றியது. அதனால் மறுப்பு ஏதும் சொல்லாமல் செய்து ெகாடுத்தேன். அப்படி நான் முதலில் செய்து கொடுத்தது தீபாவளிக்கான பலகாரங்கள். பிறகு விழாக்களுக்கான கேட்டரிங்கும் செய்ய துவங்கினேன்’’ என்றவர் அதன் பிறகு அமெரிக்காவில் உள்ள ஓட்டல் ஒன்றில் தென்னிந்திய உணவகத்தில் செஃப்பாக பணியாற்றியுள்ளார்.

‘‘ஒரு முறை மஸ்கட்டில் என் கணவர் வேலை பார்த்து இருந்த ஓட்டலுக்கு அமெரிக்காவின் பிரபல ஓட்டலின் உரிமையாளர் வந்திருந்தார். அவருக்கு என் கணவரின் உணவு பிடித்து இருந்தது. அதனால் மரியாதை நிமித்தமாக எங்க வீட்டுக்கு சாப்பிட அழைத்தார். நான் ெதன்னிந்திய உணவினை அவருக்கு பரிமாற, அவருக்கு அந்த உணவு ரொம்பவே பிடித்துவிட்டது.

என்னையும் என் கணவரையும் அவரின் ஓட்டலில் வேலைக்கு வருமாறு கேட்டுக்கொண்டார். அதனால் நானும் என் கணவரும் அமெரிக்காவுக்கு பயணமானோம். அங்கு அவர் வட இந்திய ரெஸ்டாரன்ட்டை பார்த்துக் கொள்ள, நான் தென்னிந்திய உணவகத்துக்கு செஃப்பாக நியமனமானேன். அங்கு இருந்த ஐந்து வருஷம்தான், ஒரு ஓட்டலில் கிச்சன் எவ்வாறு செயல்படுகிறது என்று தெரிந்து கொண்டேன்.

அது நாள் வரை 50 பேருக்கு என கணக்கு பார்த்து சமைத்து வந்தேன். ஓட்டல் என்று வரும்போது, அங்கு எத்தனை பேர் வருவாங்கன்னு நம்மால் கணிக்க முடியாது. ஆனாலும் மெனுகார்டில் குறிப்பிட்டு இருக்கும் எல்லா உணவுகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் வார இறுதிநாட்களில் வரும் கூட்டத்தைக் கணக்கில் கொண்டு தான் சமைக்கவே செய்யணும். ேமலும் அங்குள்ள பாத்திரத்தின் அளவை பார்த்தாலே அதில் எத்தனை பேருக்கு சமைக்கலாம் என்று தெரிந்துவிடும். அதன்படிதான் சமைப்போம்’’ என்றவர் இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டு சென்னையில் வந்து செட்டிலாகிவிட்டார்.

‘‘பெண்களும் கல்யாணம், குடும்பம்னு செட்டிலாயிட்டாங்க. எங்களுக்கும் இந்தியா திரும்பிடலாம்னு எண்ணம் ஏற்பட்டது. அதனால் இங்கு வந்துட்டோம். என் கணவரின் நண்பர் டெக்கன் ஓட்டலின் பொது மேலாளர் என்பதால், அவர் இங்கு வேலைக்கு சேர்ந்தார். ஒரு முறை வீட்டுக்கு வந்த அவர், மாமி சமையல்னு வருடத்தில் பத்து நாள் தென்னிந்திய உணவுத் திருவிழா நடத்தலாம். அதை என்னை நிர்வகிக்க சொன்னார். அப்படித்தான் மாமி சமையல் திருவிழா ஆரம்பிச்சது. இது ஏழாவது வருடம்.

தொடர்ந்து நான் இந்த திருவிழாவை நடத்திக் கொண்டு வருகிறேன். ஆனால் இந்த வருடம்தான் என் கணவர் என்னுடன் இல்லை. கடந்த வருடம் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் ேபானது. என்னால் முடிந்த சிகிச்சை எல்லாம் பார்த்தேன். பணம் தான் செலவானதே தவிர என்னால் அவரை மீட்க முடியவில்லை.

திருவிழாவின் போது, அவர் இருந்த ஆறு வருடமும் எனக்கு ரொம்பவே சப்போர்டிவ்வா இருந்தார். ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்வார். இந்த வருஷம் அவர் இல்லாத வெறுமையை நான் ரொம்பவே உணர்றேன். அவர் என்ன நினைத்தாரோ தெரியல, அவருக்கு பின் எனக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காக என்னை இந்த ஓட்டலில் தென்னிந்திய உணவகத்தின் செஃப்பாக அவர் நண்பரிடம் சொல்லி நியமித்தார். நான் இங்கு சேர்ந்து இரண்டரை வருடமாகிறது’’ என்றவர் காலை ஒன்பது மணிக்கெல்லாம் ஓட்டலுக்கு வந்திடுவாராம்.

‘‘இங்கு மதியம் மட்டும் முழு சாப்பாடு. இரவு நேரத்தில் தோசை, இட்லி, ஆப்பம், இடியாப்பம், ஸ்டூ… என பலவகையான டிபன் ஐட்டம்கள் உண்டு. பத்து வயசில் இருந்து சமைக்கிறேன். அதனால் வாடிக்கையாளர்களின் தேவை என்ன என்று தெரிந்து கொண்டு சமைப்பேன். என்னுடைய சமையலில் புளி பயன்படுத்த மாட்டேன். வத்தக்குழம்புக்கு கூட தக்காளிதான் பயன்படுத்துவேன்.

புளிப்பு வேண்டும் என்றால் மாங்காய் சேர்த்துக் கொள்வேன். அதே போல் உணவிலும் அதிக காரம், மசாலாக்கள் இருக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதனாலேயே என்னுடைய சமையலை விரும்பி சாப்பிடுறாங்க. உணவுக்கான மிளகாய் தூள், இட்லி பொடி, வடாம், ஊறுகாய் முதல் நானே தயாரிக்கிறேன். கடைகளில் இருந்து ரெடிமேட் பொடிகள் பயன்படுத்துவதில்லை.

காரணம், என் சமையல் சாப்பிடும் போது வீட்டில் அம்மாவின் கைப்பக்குவத்தில் சாப்பிடுவது போல் இருக்கணும். எந்தப் பிரச்னையும் வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமா இருக்கிறேன். காலை ஒன்பதரை மணிக்கெல்லாம் வந்திடுவேன். இரவு பத்து மணியாயிடும். தற்போது மதியம் மற்றும் இரவு நேர உணவுகள்தான் தயார் செய்கிறோம். மாலையில் பஜ்ஜி, போண்டா, வடை போடலாம்னு எண்ணம் இருக்கு’’ என்றார் பிரேமா மாமி புன்னகைத்தபடி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ளை சர்க்கரையும் ஒரு காரணம்!! (மருத்துவம்)
Next post அழியாமல் வாழும் விலங்குகள்!! (வீடியோ)