ஈழத்தமிழர் பிரச்சினையில் வசமாகச் சிக்கிய அ.தி.மு.க !! (கட்டுரை)

Read Time:12 Minute, 59 Second

குடியுரிமைச் சட்டமூலத்தை ஆதரித்த அ.தி.மு.கவுக்கும் எதிர்த்து வாக்களித்த தி.மு.கவுக்கும், கடும் போராட்டம் தமிழகத்தில் உருவாகியிருக்கிறது.

அ.தி.மு.க கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, தனது ஒரு வாக்கையும் மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு, ஈழத்தமிழர் பிரச்சினையில், எதிர்பாராத விதமாகச் சிக்கிக் கொண்டிருக்கிறது அந்தக் கட்சி.

பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சரும் “இந்தியாவில் யாருக்கும் பாதிப்பில்லை” என்று கூறியருக்கிறார்கள் என்பதை, டெல்லியில் பிரதமரைச் சந்தித்து விட்டு வந்த, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

“இலங்கைத் தமிழர்களுக்கு, இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே அ.தி.மு.கவின் கொள்கை. அதை பிரதமரிடம் வலியுறுத்தி இருக்கிறேன்” என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால், ஈழத் தமிழர்களுக்கு, குடியுரிமை வழங்கும் வாய்ப்பைக் கொடுக்காத குடியுரிமைச் சட்டத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக ஏன் வாக்களித்தோம் என்பது பற்றிய விளக்கத்தை, அவர் அளிக்கவில்லை. இது, எதிர்க்கட்சிகளுக்கு தீனிபோடும் விடயமாகவே அமைந்திருக்கிறது.
ஈழத்தமிழர் பிரச்சினையை வைத்து, மீண்டும் தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில் உள்ள போட்டி, கடுமையாக இருக்கிறது.

2006 முதல் 2011 வரை, காங்கிரஸ் கட்சியின் ஆதரவில், தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தியது தி.மு.கட்சி ஆகும். அப்போது, ஈழத் தமிழர் பிரச்சினைகளில், மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருக்க முடியாமல், தி.மு.க தர்மசங்கடத்துக்கு உள்ளானாலும், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் போன்றவற்றை முன் வைத்து, நிலைமையைச் சமாளித்தது.

ஆனாலும், ஈழத் தமிழர்களுக்கு எதிரானது தி.மு.க’ என்ற அ.தி.மு.கவின் பிரசாரத்தை, குறிப்பாக, மறைந்த ஜெயலலிதாவின் பிரசாரத்தை, முறியடிக்க முடியாமல் தி.மு.க தலைவர் கருணாநிதியே சிக்கலுக்குள்ளானார்.

கருணாநிதி போன்ற தலைவர், குறிப்பாகத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் தலைவர் என்ற பெயரை எடுத்திருந்த அவர், ஈழத்தமிழர் பிரச்சினையில் சறுக்கல் ஏற்பட்டது என்றால், அது 2006-2011இல் அவர், தமிழக முதலமைச்சராக இருந்த காலகட்டம்தான்.

2009 மக்களவைத் தேர்தலில், ஈழத் தமிழர் பிரச்சினையை மய்யமாக வைத்தே, தி.மு.க- காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான பிரசார யுத்தத்தைக் கடுமையாக நடத்தினார் ஜெயலலிதா.

அந்தப் பிரசாரத்துக்கு, அந்தத் தேர்தலில் அவருக்கு உள்ள பயனை, அறுவடை செய்ய முடியவில்லை. ஆனால், 2011 சட்டமன்றத் தேர்தலில், அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார்.

இந்த வெற்றி, ஈழத் தமிழர் பிரச்சினையில், பெரிய அரசியல் மாற்றத்தைத் தமிழகத்தில் ஏற்படுத்தியது. ராஜீவ் கொலை வழக்கில், நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்டு, சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் முன் கூட்டியே விடுதலை செய்ய, ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அந்த உத்தரவு, இன்றுவரை நிறைவேற்ற முடியாத சட்டச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது என்பது உண்மை. அமைச்சரவைத் தீர்மானம் போட்டு அனுப்பப்பட்டும், இன்றுவரை அந்த ஏழு பேரின் விடுதலைக்கான ஆணையை, மாநில ஆளுநர் பிறப்பிக்கவில்லை.

ஈழத் தமிழர் பிரச்சினையில் 1991களுக்குப் பிறகு 2011 இல் அ.தி.மு.கவுக்குச் சாதகமான சூழல் உருவானது என்றால் அது, ‘தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி’ ஆட்சி மத்தியிலும் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியால் தி.மு.க ஆட்சியில் நீடித்ததும்தான் காரணம். இதனால் தி.மு.க தனது
‘ஈழத் தமிழர் கொள்கை’ நிலைப்பாட்டில், பெரும் சோதனையைச் சந்தித்து, அதிலிருந்து மீள்வது எப்படி என்று, கருணாநிதிக்குப் பிறகு வந்த, தி.மு.க தலைவர் ஸ்டாலினும் காத்திருந்த நேரத்தில்தான் குடியுரிமைச் சட்டத் திருத்தச் சட்டமூலம் வடிவில், அந்தக் ‘கைகாட்டி’ தி.மு.கவுக்கு கிடைத்துள்ளது.

ஆகவே, அ.தி.மு.கவுக்குச் சாதகமான சரித்திரம், இப்போது தி.மு.கவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆதரவாக திரும்புகிறது. 2016இல் ஜெயலலிதா இரண்டாவது முறையாக, முதலமைச்சராகப் பொறுப்பேற்று மறைந்த பிறகு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி, தற்போது நடந்து வருகிறது.

ஜெயலலிதாவைத் தவிர்த்து, அ.தி.மு.க சார்பில் முதலமைச்சர்களான ஓ. பன்னீர்செல்வமாக இருந்தாலும், தற்போது முதலமைச்சராக நீடிக்கும் எடப்பாடி பழனிசாமி ஆனாலும், ‘பா.ஜ.க ஆதரவு’ என்ற ஒரே காரணத்தால்த்தான் பதவியில் நீடிக்கிறார்கள்.

சட்டமன்றத்தில், எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரும் இல்லாத பா.ஜ.கவின் தயவு இல்லையென்றால், அ.தி.மு.க ஆட்சியால் இங்கு நீடிக்க முடியாத என்ற எண்ணம் பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவி விட்டது. அதனால் பா.ஜ.கவுக்கு என்ன இலாபம் என்றாலும், தேர்தல் ரீதியாகக் கூட்டணிக்கு, பா.ஜ.கவுக்கு மக்களவைத் தேர்தலில், அ.தி.மு.க பயன்பட்டது.

வெற்றி பெற இயலவில்லை என்றாலும், மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கு கூட்டணி தமிழகத்தில் கிடைக்கவில்லை என்று, ஒரு வீண் குற்றச்சாட்டு வராமல் பாதுகாத்துக் கொள்ள, பா.ஜ.கவுக்கு அ.தி.மு.க உதவியது.

ஆனால், தேர்தல் கூட்டணி என்ற இலாபத்தைத் தாண்டி, பா.ஜ.கவுக்குள்ள இலாபம் என்பது, அதன் கொள்கைகள் சிலவற்றைத் தமிழகத்தில் தங்கு தடையின்றி நிறைவேற்ற வாய்ப்பாக அமைந்துள்ளது.

அதேநிலைப்பாட்டில் இப்போது குடியுரிமைச் சட்ட திருத்தச் சட்டமூலத்திலும் மாட்டிக் கொண்டுள்ளது. அ.தி.மு.க 125 வாக்குகளைப் பெற்று, அந்தச் சட்டமூலத்தை மாநிலங்களவையில் நிறைவேறி, இன்று குடியுரிமைச் சட்டத் திருத்தமாக அமுலுக்கு வந்துள்ளது.

இந்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு வாக்குகள் 105 என்பதால், அ.தி.மு.க மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்திருந்தால், இந்தச் சட்டமூலம் தோல்வியடைந்திருக்கும் என்பதே, இப்போது அ.தி.மு.கவுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சிக்கல்.

அ.தி.மு.கவின் ஆதரவு, தோற்கடிக்கப்பட வேண்டிய சட்டமூலத்துக்கு வெற்றி வாய்ப்பைக் கொடுத்து விட்டது என்ற கருத்து எங்கும் பரவியிருக்கிறது. ஆகவே, அ.தி.மு.க நினைத்திருந்தால், இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை பெற்றுக்கொடுத்திருக்க முடியும் என்ற கருத்து, வலுவாகத் தமிழகத்தில் கால் ஊன்றியுள்ளது.

அதற்கு பதிலாக, அ.தி.மு.க எடுத்து வைக்கும் ‘இரட்டைக் குடியுரிமை’ வாதம், எடுபடவில்லை. குறிப்பாக, குடியுரிமையே இல்லை என்ற சட்டமூலத்தை நிறைவேற்ற ஆதரவளித்து விட்டு, இரட்டைக்குடியுரிமை கோரியுள்ளது எப்படி என்ற கேள்வியை எதிர்கட்சிகள் எழுப்புகின்றன.

மாநிலங்களவையில் மத்திய அரசின் சட்ட திருத்தத்துக்குத் துணை நின்று, 11 வாக்குகளைச் செலுத்தியதால், “ஈழத் தமிழர் பிரச்சினையில், துரோகம் செய்து விட்டது அ.தி.மு.க” என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, திருக்குறள், ஐ.நா உரையில் தமிழ், தமிழ் மொழி பற்றி பிரதமர் அடிக்கடி பேசுவது உள்ளிட்ட விடயங்கள், காங்கிரஸ் போல் அல்ல. தமிழர்களுக்கு- குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கட்சிதான் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி- அதில் கால் வாசிக் கிணறு தாண்டிய நிலையிலேயே இந்த குடியுரிமை சட்ட திருத்தத்தால் வம்பில் மாட்டிக் கொண்டுள்ளது பா.ஜ.க. இதுவும் காங்கிரஸ் கட்சி போல் ‘ஈழத் தமிழர் விரோத மனப்பான்மை’ உள்ள கட்சி என்ற பிரச்சாரத்தை மேலும் வலுப்படுத்த இந்த சட்ட திருத்தம் ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது. அதனால்தான் தி.மு.க தலைவர் ஸ்டாலின்இ ‘அ.தி.மு.க- பா.ஜ.க. தமிழர் விரோத கூட்டணி’ என்ற பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.

ஆகவே, குடியுரிமைச் சட்ட திருத்தத்துக்கு, மாநிலங்களவையில் வாக்களித்த அ.தி.மு.க, 1991களில் இருந்தது போன்று, ஈழத் தமிழருக்கு எதிரான கட்சி, சிறுபான்மையினருக்கு விரோதமான கட்சி என்ற முத்திரையைப் பெற்றுள்ளது.

1980களில் இருந்து, ஈழத்தமிழர்களுக்காக பல போராட்டங்கள் நடத்தி, அதற்காக இந்த கட்சியை தடை செய்ய வேண்டும் என்றே நெருக்கடிக்குள்ளான பா.ம.கவின் தலைவர் டொக்டர் ராமதாஸின் காலத்திலேயே ஒரேயொரு வாக்கை போட்டு, ஈழத்தமிழர் விரோத கட்சி என்ற முத்திரையைப் பெற்றுள்ளது.

அ.தி.மு.கவில் ஜெயலலிதா இல்லை; தி.மு.கவில் கருணாநிதி இல்லை. அதேநேரத்தில் எதிர்த்து வாக்களித்து, சிறுபான்மையினரிடம் வாக்கு வங்கியை நிலைநிறுத்திக் கொண்டதோடு, கருணாநிதியின் இறுதிக் காலத்தில் ‘ஈழத்தமிழருக்கு விரோதமான கட்சி தி.மு.க’ என்று ஏற்பட்ட முத்திரையை, வெற்றிகரமாக நீக்கியிருக்கிறார் மு.க. ஸ்டாலின். இப்போதைய சூழ்நிலையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கட்சி தி.மு.க;எதிரான கட்சி அ.தி.மு.க என்ற நிலை உருவாகியிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு! (அவ்வப்போது கிளாமர்)
Next post இதயம் ஜாக்கிரதை!! (மருத்துவம்)