By 28 December 2019 0 Comments

நல்ல பத்திரிகை!! (மகளிர் பக்கம்)

தாங்கள் அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் துன்பங்களை வெளி உலகத்துக்குத் தெரிவிக்கவேண்டும் என்று முடிவு செய்தபோது, தில்லியின் தெருக்குழந்தைகள், ஊடக செயல்பாட்டாளர்களைத் தேடிப் போகவில்லை. பதிலாக, அவர்கள் சொந்தமாக ஒரு பத்திரிகை ஆரம்பித்து, அதில் தாங்களே நிருபர்களானார்கள்! தெருக்குழந்தைகள் வெளியிடும் உலகத்தின் ஒரே பத்திரிகையான ‘பாலக்நாமா’ எட்டாயிரம் பிரதிகள் விற்பனையுடன் பதினான்காவது ஆண்டாக தொடர்கிறது.

இதே போல் உலகம் முழுவதும் குழந்தைகளால் பல பத்திரிகைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு பத்திரிகைக்கு தேவையான மொத்த செய்திகளையும் சேகரிப்பது, அவற்றை டைப் செய்வது, பிழை திருத்தம் செய்வது, தலைப்பிடுவது, லே அவுட் செய்து பக்கம் வடிவமைப்பது என எடிட்டர் பணி முதல் ஒரு இதழ் தயாரிப்புக்கான எல்லா வேலைகளையும் ஒற்றை ஆளாகச் செய்து அசத்திக்கொண்டிருக்கிறார் அரசுப் பள்ளி மாணவி இயல். அவருக்கு இப்போதுதான் வயது 13.

“புதுக்கோட்டை – மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன். அம்மா பால்வாடி டீச்சர், அப்பா புகைப்பட கலைஞர். தம்பி ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். அப்பா ‘புதுகை தந்தி’ என்கிற பெயரில் ஒரு பத்திரிகை நடத்தி வருகிறார். அவர் செய்தி சேகரிக்கச் செல்லும் போதும், பத்திரிகை டிசைன் செய்யும் போதும் நானும் கூடவே சென்று பார்ப்பேன். இதே போல் நாமும் ஏன் பத்திரிகை நடத்தக் கூடாது என்று தோன்றிய போது, கடந்த ஆண்டு கோடை விடுமுறையில் எப்படி டிசைன் பண்ண வேண்டும், செய்தி சேகரிக்க வேண்டுமென்பதை அப்பாவிடம் கற்றுக் கொண்டேன்.

அப்பாவிடம் சொல்லி எனக்கு ஒரு லேப்டாப் வாங்கி தரச் சொல்லி அதில் செய்தித்தாள் வடிவமைப்பை மேற்கொண்டேன். அதற்கு ‘நல்ல பத்திரிகை’ என்று பெயர் வைத்து, கல்வி, அரசுப் பள்ளிகள் தொடர்பான செய்திகள், கல்வி கண்காட்சி, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றின் அடிப்படையில் செய்திகள் வெளியிட்டு வருகிறேன்” என்று கூறும் இயல், தன்னுடைய படிப்புக்கு இடையிலும் இதழுக்கான செய்திகளை பல்வேறு பள்ளிகளிலிருந்தும் மின்னஞ்சல் மூலமாகப் பெற்று வருகிறார்.

பிழை இல்லாமல் ஆங்கிலம், தமிழில் விரைவாக டைப் செய்ய ஏழாம் வகுப்பு படிக்கும்போதே கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கும் இயலின், இந்த இதழியல் பணிகளுக்கு அவருடைய பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்களும் மிகுந்த ஊக்கமளித்து வருகின்றனர். இவர்களோடு அமெரிக்கத் தமிழ்ச் சங்கத் தலைவர் அகஸ்டியன் பாராட்டி, ‘உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்கிறேன். தொடர்ந்து பத்திரிகை நடத்துங்கள்’ என்று கூறி இயலின் இந்த பணிக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

“முதல் இதழ் ஜூலை மாதம் இரண்டு பெரிய சைஸில் கொண்டு வந்தேன். அடுத்த இதழுக்கு நிறைய நேரம் எடுத்துக் கொண்டு எட்டு பக்கமாக வடிவமைத்தேன். மற்ற பத்திரிகைகளில் வரும் தலையங்கம், எப்படி ஒரு செய்தியை எழுதுவது, எவ்வாறாகத் தலைப்பு-துணை தலைப்புகள் வைக்க வேண்டுமென்று கவனித்து, ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு என்னுடைய பத்திரிகையில் அதைப் பின்பற்றுகிறேன். பள்ளி மாணவர்களின் ஓவியங்கள், அவர்களின் படைப்புகளைக் கேட்டு வாங்கி அதையும் பிரசுரித்து வருகிறேன்.

எனது செய்திக்குத் தேவையான புகைப்படங்களையும் நானே எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறும் இயல் 2,000 பிரதிகளை அச்சிட்டு அதைத் தானே கொண்டுபோய் ஒவ்வொரு பள்ளியாகச் சேர்த்து வருகிறார். ஒரு சிறந்த பத்திரிகையாளராக வரவேண்டுமென்பது இயலின் கனவு, ஆசை… அது நிறைவேற வாழ்த்துவோம்.Post a Comment

Protected by WP Anti Spam