By 30 December 2019 0 Comments

லூசிகளை பாதுகாக்க தவறும் அரசு!! (மகளிர் பக்கம்)

நாளுக்கு நாள் குழந்தைகள் மற்றும் பெண்களின் மீதான வன்முறை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுவும் கூட்டு மனோபாவத்துடன் நாலாப்பக்கமும் இந்த அக்கிரமம் அரங்கேறுகிறது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த தென்னாப்பிரிக்கா நாம் தான். ஆம்; உலகிலேயே அதிகளவில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான வன்முறையை நிகழ்த்துகிற தேசம் தென்னாப்பிரிக்கா. இதை மெய்ப்பிக்கிறது ‘டிஸ்கிரேஸ்’ என்ற திரைப்படம்.

மனதைப் பதைபதைக்க வைக்கும் கதைக்குள் செல்வோம். டேவிட் லூரிக்கு வயது 52. கேப்டவுனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கிளாசிக் இலக்கியத்தின் மீது தீராத காதல் கொண்ட அவருக்குக் கவிஞர் பைரனைப் பற்றிய ஒரு நூல் எழுத வேண்டும் என்பது பெருங்கனவு. மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனித்து வாழும் அவருக்கு லூசி என்ற ஒரு மகள் இருக்கிறாள். அவளும் அப்பாவைப் பிரிந்து தனியாக ஒரு கிராமத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறாள்.

லூரி எப்போதும் காமக் கொந்தளிப்பில் சுழல்கிறார். அதை தணித்துக்கொள்ள அடிக்கடி பாலியல் தொழிலாளிகளிடம் செல்கிறார். தன்னிடம் பாடம் பயிலும் மெலனி என்ற மாணவியின் மீது அவருக்கு ஒருவித ஈர்ப்பு உண்டாகிறது. அவளைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொள்கிறார். இந்த விஷயம் பல்கலைக்கழகத்திற்குத் தெரியவருகிறது. தான் செய்த தவறை மறைக்காமல் லூரி ஏற்றுக்கொள்கிறார். மாணவியுடனான உறவு அம்பலமானதால் மிகுந்த மானக்கேட்டிற்கு ஆளானதாக வேதனைப்படுகிறார். அதனால் நகரை விட்டு வெளியேறுகிறார். வேறு வழியேதும் இல்லாததால் கிராமத்தில் உள்ள மகள் லூசியிடம் தஞ்சமடைகிறார்.

லூசிக்குப் பாதுகாப்பாக பெத்ரஸ் என்ற உதவியாளன் அங்கே இருக்கிறான். லூரிக்குத் தன் மகள் மூலம் பேவ்சா என்ற பெண் அறிமுகமாகிறாள். பேவ்சா பிராணிகளைக் கருணை கொலை செய்யும் பிராணிகள் நல மருத்துவமனையை நடத்தி வருகிறாள். லூரி பேவ்சாவிற்கு உதவியாக வேலை செய்கிறார். தனியாக இருக்கும் அவளுடனும் லூரி உறவு வைத்துக்கொள்கிறார். எதிர்பாராத ஒருநாள் மூன்று கொள்ளையர்கள் லூசியின் வீட்டிற்குள் நுழைந்து லூரியை பயங்கரமாகத் தாக்குகின்றனர்.

இரண்டு பேர் லூசியைக் கொடூரமாக வன்புணர்வு செய்துவிடுகின்றனர். தன் கண் முன்னாலேயே மகள் வன்புணர்வு செய்யப்படுவதைப் பார்த்தும், காப்பாற்ற முடியாத இயலாமையால் மிகுந்த கவலைக்குள்ளாகிறார் லூரி. காமம் பற்றிய அவரது பார்வையே முற்றிலும் மாறுகிறது. பெண் உடலை அவளின் அனுமதியின்றி ஆக்கிரமிப்பின் மூலம் அடைவது அவளைக் கொலை செய்வதற்குச் சமம். அது எவ்வளவு பெரிய குற்றம் என்று உணர்கிறார். மெலனி நினைவில் வந்து போகிறாள். அவளுக்குத் தான் செய்த குற்றத்தை எண்ணி எண்ணி வருந்துகிறார்.

நகரில் உள்ள மெலனியின் வீட்டிற்குச் செல்கிறார். அவளின் பெற்றோரிடமும் அவளிடமும் மன்னிப்புக் கேட்கிறார். ஆனால், யாரும் அவரை மன்னிக்கத் தயாராக இல்லை. நாட்கள் ஓடுகின்றன. லூசியை வன்புணர்வு செய்த கொள்ளையர்கள் பெத்ரஸின் உறவினர்கள் என்று தெரியவர லூரி மிகுந்த அதிர்ச்சியடைகிறார். இதற்கிடையில் லூசி கர்ப்பமடைகிறாள். இந்நிலையில் மகளிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு லூரி நகரத்திற்கே திரும்புகிறார். நகரில் உள்ள அவருடைய வீடும் கொள்ளையர்களால் நாசமாக்கப்பட்டு சிதைந்து போயிருக்கிறது. மீண்டும் தன் மகளின் வீட்டிற்கே திரும்பி வருகிறார்.

பெத்ரஸிற்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள். கர்ப்பமடைந்த லூசியை மூன்றாவதாக திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். லூசியும் பெத்ரஸ் உடனான திருமணம்தான் தனக்குப் பாதுகாப்பு என்ற நிலைக்கு ஆளாகி வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறாள். மகளின் முடிவு லூரியை நிலைகுலையை வைக்கிறது. எதுவும் செய்ய முடியாத அவர் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி முடிவில் தன்னை பிராணிகள் நலத்தில் ஈடுபடுத்திக்கொள்கிறார். படம் நிறைவடைகிறது. இதன் இயக்குனர் ஸ்டீவ் ஜேக்கப்ஸ்.

இந்தப் படம் பல்வேறு விதமான சூழலை நம் முன்னே வைக்கிறது. முதலில் பாலுணர்வு சார்ந்த பிரச்சனைகள். லூரி தன் மனைவியிடம் விவாகரத்துப் பெற்ற பிறகுதான் தன்னால் கட்டுப்படுத்த முடியாத பாலுணர்வால் சொராயா என்ற பாலியல் தொழிலாளியைத் தேடிச் செல்கிறார். சொராயா பாலியல் தொழிலில் இருந்து விலகுகிறாள். அவளிடம் மீண்டும் செல்ல முடியாத சூழலில் தன் மாணவியைக் கட்டாயப்படுத்தி தன் பாலுணர்வைத் தீர்த்துக்கொள்கிறார். அந்த உறவு வெளியே அம்பலமாகி மிகுந்த மானக்கேட்டிற்கு ஆளான போதும் லூரியால் பாலுணர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தன் மகளின் தோழி பேவ்சா உடனும் உறவு கொள்கிறார்.

லூரியால் பாலுணர்வை கடைசி வரைக்கும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியவில்லை. அதுவே அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதுவே அவரின் மானக்கேட்டிற்கு ஆரம்பமாக இருக்கிறது. லூரி பாலியல் பிரச்சனைக்குத் தீர்வாக சொராயா, மெலனி, பேவ்சா மற்றும் பல பெண்களுடன் உறவு கொண்டாலும் அதில் அவருக்கு கடைசியில் மிஞ்சுவது மானக்கேடும், வெறுமையும் மட்டுமே. இறுதியில் தன் மகள் கயவர்களால் வன்புணர்வுக்கு ஆளாகும்போதுதான் பெண்களின் உடல் தன் காமத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதற்கான ஓர் இடம் இல்லை என்பதை உணர்கிறார். பிறகு அவரின் வாழ்க்கையே மாறுகிறது.

லூரியின் மகள் லூசி, அவளின் உதவியாளனும், பாதுகாப்பாளனுமான பெத்ரஸால் ஏவப்பட்டவர்களாலேயே வன்புணர்வு செய்யப்படுகிறாள். கொள்ளையர்கள் லூசியை வன்புணர்வு செய்வதன் மூலம் கருக்கொண்ட லூசியை யாரும் திருமணம் செய்ய முன் வரமாட்டார்கள் என்பது பெத்ரஸின் எண்ணம். தான் லூசியைத் திருமணம் செய்தால் அவளின் நிலத்தை அபகரிக்கலாம் என்பது அவனது திட்டம். உண்மையில் லூசிக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பெத்ரஸே அவளுடைய பாதுகாப்பின்மைக்குக் காரணமாகின்றான்.

இது இங்கே அரங்கேறும் அவலங்களுக்கும் பொருந்திப்போகிறது. நந்தினி, நிர்பயா, ஆஃசிபா, பிரியங்கா ரெட்டி… என்று நம் சூழலும் தென்னாப்பிரிக்காவையே பிரதிபலிக்கிறது. எந்த அரசும் தன் மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அது தவறினால் அந்த அரசிற்கு மிகுந்த மானக்கேடு.Post a Comment

Protected by WP Anti Spam