அபாண்டங்கள்!! (கட்டுரை)

Read Time:24 Minute, 0 Second

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற வகையில், அரசியல்வாதிகளாலும் அதிகார ஆசை பிடித்த தரப்பினராலும், அரசியல்வாதிகளின் வெற்றிக்காகப் பாடுபடும் ஒட்டுண்ணிக் குழுக்களாலும் போலிக் குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது வழக்கமானதே.

ஆயினும், அதற்காக ஓர் இனத்தை, மதத்தை அதனது கௌரவத்தைக் கேலிக்குள்ளாக்கும் விதத்தில் அபாண்டங்களைச் சுமத்த முடியாது. அப்படிச் சுமத்துபவர்கள் மறுகணமே அதை நிரூபிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

இப்படியான குற்றச்சாட்டுகளை, முஸ்லிம்கள் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றனர். அண்மைக் காலங்களில் இந்தப் போக்கு அதிகரித்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு அருகதை அற்றவர்கள், தம்மளவில் சுற்றவாளி என்று சொல்ல முடியாதவர்கள் எனப் பலரும், இதன் பாரதூரம் தெரியாமல் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தின் மீது, விரல்நீட்டுவதைக் காண முடிகின்றது.

ஓர் அரசியல்வாதியை, ஒரு சில மக்கள் பிரதிநிதிகளை அன்றேல், முஸ்லிம் சமூக முக்கியஸ்தர்களை நோக்கி நீட்டப்படும் சுட்டுவிரல்கள், மெதுமெதுவாக ஒட்டுமொத்த சமூகத்தை நோக்கியும் திருப்பப்படும் வேலை, மிக நூதனமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இது திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது என்பதை, முஸ்லிம் சமூகம் இப்போதுதான் மெல்ல மெல்லப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருப்பதாகத் தோன்றுகின்றது.

உலகெங்கும் ‘இஸ்லாமோபோபியா’ என்ற நோய், ஒரு வைரஸ் போல பரவ விடப்பட்டிருக்கின்றது. இஸ்லாத்தைப் பின்பற்றும் மக்களை, சர்வதேச அளவில் பயங்கரவாதிகளாக, அமைதிக்கு எதிரானவர்களாக, ஜனநாயக விரோதிகளாக, அடக்கியாளப்பட வேண்டிய மக்கள் பிரிவினராகக் காட்டுவதற்காகப் பல அரசாங்கங்களும் ஊடகங்களும் வேலை செய்து கொண்டிருக்கின்றன.

இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்படும், விடுதலைக் குழுக்களின் தூய விடுதலைச் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கவை என்றாலும் கூட, மேற்குலக நாடுகளில் ஆசீர்வாதத்தோடு உருவாக்கப்பட்ட ஆயுதக் குழுக்கள், பயங்கரவாத அமைப்புகளால், ஐரோப்பா தொடக்கம் தென்னாசியாவின் இலங்கை வரையும் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான வன்முறைகள், மேற்சொன்ன முஸ்லிம்கள் பற்றிய அச்சத்தை உருவேற்றுவதற்கு ஏதுவான களநிலையை அமைத்துக் கொடுத்திருக்கின்றன.

இன்னுமொரு வகையில் சொன்னால், அவ்வாறான ஓர் அச்சத்தை உருவாக்கும் உள்நோக்கிலேயே, இவ்வாறான திட்டங்கள் தீட்டப்படுகின்றன எனலாம்.

அதுமட்டுமன்றி, முஸ்லிம் நாடுகளின் கையிலுள்ள பொருளாதாரத்தைச் சீர்குலைத்தல், எண்ணெய் வளத்தைச் சூறையாடுதல், இலங்கை, இந்தியா போன்று முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் இஸ்லாத்தைப் பின்பற்றும் மக்களின் வியாபார பலத்தை இல்லாதொழித்தல், ஹலால் இல்லாத உணவுகளுக்கான சந்தை வாய்ப்பை அதிகரித்தல், ஆயுத விற்பனைக்கான களநிலையை உருவாக்குதல், சிறிய நாடுகளைப் பெரிய நாடுகள் தமது ஆதிக்கத்துக்குள் வைத்திருத்தல், இராணுவ நலன்கள் எனப் பல விடயங்களும், இதற்குப் பின்னால் ஒளிந்திருக்கின்ற மறைமுகக் காரணிகளாகும்.

இந்தக் காரண காரியங்கள் ஊடே, இலங்கையிலும் கடந்த சில வருடங்களாக, முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறுப்புப் பிரசாரங்களும் முஸ்லிம் சமூகத்தின் மீதான அபாண்டமான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.

புத்திசாலிகள் என நினைத்துக் கொண்டு, படுமுட்டாள்தனமான குழுவால் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள், இந்தப் போக்கைக் கணிசமான சிங்கள, தமிழ் மக்கள் சரிகாணும் நிலைக்கு, இட்டுச் சென்றிருக்கின்றன.

அந்த வகையில், இந்தக் கும்பலுக்குத் துணைபுரிந்த யாராவது, முஸ்லிம் சமூகத்துக்குள் இருப்பார்களாக இருந்தால், அவர்கள் அந்தச் சமூகத்தாலேயே தண்டிக்கப்பட வேண்டும் என்பது வேறு விடயம்.

ஆனால், இலங்கையில் இவ்வாறான போக்குக்கு, மேற்குறிப்பிட்ட காரணங்களுக்குப் புறம்பாக, அரசியல் அதிகார வெறியும் இன மேலாதிக்கமும் முக்கிய வினையூக்கியாகத் தொழிற்படுகின்றன.

இலங்கையில் நடைபெற்ற எல்லா வன்முறைகள், இனஒடுக்குமுறைகள், வெறுப்புப் பிரசாரங்கள், அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால், பிரத்தியேகமான உள்நாட்டுக் காரணங்கள் இருப்பதாகவே கருதப்படுகின்றது.

சர்வதேச ரீதியிலாக, முஸ்லிம்களுக்கு எதிராக உள்ள களநிலையை, இலங்கையில் இருக்கும் சக்திகள், தமது தேவைக்கு ஏற்றாற்போல, கட்டமைத்துள்ளதாகச் சொல்ல முடியும்.

இலங்கையில் முஸ்லிம்கள், மதம் மாற்றத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள், பல காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. உண்மையில், எல்லா மதங்களிலும் இது இடம்பெறுகின்றது என்பதுடன், யாரையும் கட்டாயப்படுத்தி மதம் மாற்ற முடியாது என்பது தெரிந்திருந்தும், முஸ்லிம் சமூகத்தின் மீதே, வெளிப்படையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதுண்டு.

அதேபோன்று, ஹலால் நீக்கப்பட வேண்டும் என்ற கூப்பாடுகள் எழுந்தன. உண்மையில், ஹலால் என்பது உண்பதற்கு ஏற்ற, சுத்தமான உணவு என்ற யதார்த்தத்தை மறைத்து, ஹலால் என்பது இஸ்லாமிய உணவு போல, ஏனைய சமூகங்களுக்குக் காட்டப்பட்டது.

“நீங்கள் விரும்பினால் ஹலால் சாப்பிடுங்கள்; எங்களுக்குத் தேவையில்லை” என்று, முஸ்லிம்களைப் பார்த்துக் கூறினார்கள். முஸ்லிம் விரோத சக்திகள் மட்டுமன்றி, ஹலால் சான்றிதழ் இல்லாத அதாவது, உடல் நலத்துக்குக் கேடான உள்ளடக்கங்களைக் கொண்ட உணவுப் பொருள்களை, விற்பனை செய்யும் பல நிறுவனங்களும் இந்தப் பிரசாரத்தை உசுப்பேற்றி விட்டன.

பின்னர், முஸ்லிம்கள் தனித்துவமான ஆடைகளை அணியத் தேவையில்லை என்று, ஒரு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. உண்மையில், முகத்தை மூடுதல் என்பது, இஸ்லாமிய மார்க்கம் சார்ந்த விடயம் என்றாலும், பல்லின சமூகங்கள் வாழும் நாடொன்றில், நடைமுறைச் சாத்தியமற்றது என்று எடுத்துக் கொண்டால், புர்கா, நிகாப் அணிவதே தடை செய்யப்பட வேண்டும்.

ஆனால், முகத்தை மூடும் ஆடைகளுக்குத் தடை இருந்த காலத்திலும், தடை நீக்கப்பட்ட இன்றைய நாள்களிலும், சாதாரணமாகத் தலையை மூடும் ஹிஜாப், ஹபாயா ஆடை அணிகின்ற முஸ்லிம் பெண்களையும், கிட்டத்தட்ட ஒரு பயங்கரவாதியைப் போல நோக்குவதை, அவதானிக்க முடிகின்றது.

அலுவலகங்களிலும் பாடசாலைகளிலும் ஏன் பரீட்சை மண்டபங்களிலும் கூட, ஹபாயா, ஹிஜாப் அணிந்து செல்லும் முஸ்லிம் பெண்கள் கூட, மாற்று இன அதிகாரிகளால் நெருக்குவாரப்படுத்தும் நிலை இன்னும் மாறவில்லை.

எவ்வாறிருப்பினும், முகத்தை மூடும் ஆடைகளுக்கான தடை நீக்கப்பட்டாலும் கூட, முஸ்லிம் பெண்கள் புர்கா, நிகாப் அணிந்து கொண்டு, ஏனைய இன மக்கள் வந்துபோகும் இடங்களில் கண்டமாதிரி நடந்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது.

இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், கிழக்கில் கிட்டத்தட்ட 300 தமிழ்க் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டதாக ஓர் உரையில் குறிப்பிட்டிருந்தார்.

கிழக்கில் மொத்தமாகக் கூட, அந்தளவுக்கு முஸ்லிம் கிராமங்கள் இல்லாத நிலையில் 300 தமிழ்க் கிராமங்களை முஸ்லிம்கள் அபகரித்ததாக ஓர் அரசியல்வாதி கூறியமை, மிகப் பெரிய அபாண்டம் என்பதை, முஸ்லிம்கள் மட்டுமன்றி தமிழ் முற்போக்காளர்கள் சிலரும் கண்டித்தனர்.
முஸ்லிம் சமூகத்தின் அபிமானத்தைப் பெற்ற, ஓர் ஓய்வுநிலை நீதியரசர் இவ்வாறு கூறினால், மற்றவர்களின் நிலை என்ன என்ற வினாக்கள் எழுந்தன. கடைசியில், தான் ஏதோ ஓர் அடிப்படையற்ற தகவலை அடிப்படையாக வைத்துத் தவறுதலாகக் கூறி விட்டதாக, சி.வி மழுப்பலாக ஒரு விளக்கமளித்திருந்தார். ஆனால், அதனால் ஏற்பட்ட சமூகத் தாக்கத்தை, அவரால் சரிப்படுத்த முடியாது.

இது இவ்வாறிருக்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், கிட்டத்தட்ட முஸ்லிம்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் போல, சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்பட்டனர். அரசியல்வாதிகள், இனவாதிகள் மட்டுமன்றி, பல்வேறு அரச மேலதிகாரிகளும் கூட, முஸ்லிம்களைப் பயங்கரவாதத்துக்கு ஆதரவான பேர்வழிகள் போல, நையாண்டி செய்து, ‘சஹ்ரான்கள்’ என்று அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்த சம்பவங்கள் ஏராளம் உள்ளன.

இந்தப் பின்னணியில், குறிப்பாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் குறிவைக்கப்பட்டனர். அப்போது, மாகாண ஆளுநர்களாகப் பதவிவகித்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர், பயங்கரவாதிகளுடன் தொடர்பைப் பேணினார்கள் என்ற வெற்றுக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இவர்கள் பதவி விலக வேண்டும் என்று, பௌத்த பிக்குகள் சிலர் உண்ணாவிரதம் இருந்ததுடன், இதற்கு ஓரிரு தமிழ் அரசியல் குழுக்களும் ஆதரவளித்தன.

உண்மையில், யாருக்கேனும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருந்தால் அது நிரூபிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்றுதான் முஸ்லிம்களும் சொன்னார்கள்; சொல்கின்றார்கள். அதனாலேயே, பல பயங்கரவாதிகளைப் பாதுகாப்புத் தரப்பினரிடம் முஸ்லிம்களே காட்டிக் கொடுத்தார்கள் என்பதை, மறந்து விடக் கூடாது.

ஆனால், நிரூபிக்க முடியாத அடிப்படையில், ஆதாரம் எதுவுமின்றி அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக, விசாரணை நடத்திய தெரிவுக் குழுவானது, மேற்குறிப்பிட்ட முஸ்லிம் தலைவர்கள் யாரும் நேரடியாகப் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார்கள் என்பதைக் கண்டறியவில்லை.

பொது அரங்கில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தோர், அதற்கான ஆதாரங்களைத் தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்கவில்லை. அப்படியென்றால், அவையெல்லாம் அடிப்படையற்ற வெறும் கட்டுக்கதைகள் என்ற முடிவுக்கே வரவேண்டி இருந்தது.

இந்நிலையில், இப்போது மீண்டும் முஸ்லிம் கட்சித் தலைவர்களான ஹக்கீமையும் ரிஷாட்டையும் விசாரிக்க வேண்டும் என்ற குரல்கள் மேலெழத் தொடங்கியுள்ளன.

முஸ்லிம்கள் அப்போது எதைச் சொன்னார்களோ, அதைத்தான் இப்போதும் கூறுகின்றார்கள். அதாவது, யாராவது உண்மையில் குற்றமிழைத்திருந்தால், நேர்மையான முறையில் சட்டத்தின் முன் நிறுத்தி, நிரூபித்துத் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

ஆனால், முஸ்லிம் சமூகத்தின் மீதோ, அரசியல்வாதிகள் மீதோ அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதன் மூலம், அரசியல் நெருக்குதலை மேற்கொள்ளும் முயற்சியாக, எதுவும் இடம்பெறக் கூடாது என்பதே, மக்கள் விருப்பமாகும்.

இதே பாணியிலேயே, டொக்டர் ஷாபி விவகாரமும் போய்க் கொண்டிருக்கின்றது. கடந்த ஆட்சியில் கிட்டத்தட்ட விசாரணைகள் முடிவுக்கு வந்து விட்ட ஒரு விவகாரம், மீண்டும் இந்த ஆட்சியில் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது. இதுவும் சோடிக்கப்பட்ட, அபாண்டமான குற்றச்சாட்டு என்று துறைசார் விற்பனர்கள் கூடச் சொல்லியுள்ள நிலையிலேயே, ஷாபி மீண்டும் விசாரணைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்.

அதேபோன்று, ஓரிரு சிங்கள, தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் முஸ்லிம்கள் முகம்சுழிக்கும் விதமான கருத்துகளை, அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். அவ்வாறான பலரை, முஸ்லிம்கள் மட்டுமன்றி தமிழர்களும் சிங்கள மக்களும் நன்கு அறிவார்கள்.

அந்தத் தொடரில், கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சமீபத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். “முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ், தமிழர்களுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் காணிகளை, ஒரே இரவில் அபகரித்தார்” என்று இவர் சொல்லியுள்ளார்.

இது, உண்மையா பொய்யா என்பதற்கு அப்பால், இவ்வாறு ஒரு நில அபகரிப்பு நடந்திருந்தால், கருணா அதற்கெதிராக, அப்போதே கிளர்ந்தெழுந்து அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.
இப்போது இவ்விடயத்தைச் சட்ட ரீதியாக அணுகி, ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும். அதாவுல்லாஹ்வோடு நெருக்கமான சுதந்திரக் கட்சியின் முக்கியப் பொறுப்பிலும் பிரதியமைச்சுப் பதவியிலும் அமைதியாக இருந்து விட்டு, இப்போது அரசியலுக்காக ஒரு கருத்தை அவர் சொல்வாரென்றால், அது அபத்தமானதாகும்.

முஸ்லிம் தனிநபர் ஒருவர், முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர், ஏதாவது தவறைச் செய்தால், முதலில் அதை ஒரு தனிநபர் சார்ந்த விடயமாகப் பார்க்க வேண்டுமே தவிர, அதை முஸ்லிம் என்ற அடையாளத்தோடு நோக்குவது நிறுத்தப்பட வேண்டும்.

ஓர் இனமாக, சமூகமாகத் திட்டமிட்டு அந்தக் குற்றம் இளைக்கப்பட்டு இருந்தால் மாத்திரமே, அவ்விவகாரம் முஸ்லிம் சமூகத்தின் மீதான குற்றச்சாட்டாக முன்வைக்கப்படலாம்.

எது எவ்வாறிருப்பினும், முஸ்லிம்களை மட்டுமன்றி எந்தவோர் இன, மதப் பிரிவைச் சேர்ந்த மக்களையும் ஒடுக்குவதற்காகவும் நெருக்குவாரப்படுத்துவதற்காகவும் எல்லா அடிப்படையிலும் தேவையற்ற, அடிப்படையற்ற, அபாண்டமான குற்றச்சாட்டுகளும் பிரசாரங்களும் நிறுத்தப்பட வேண்டியது, இன ஐக்கியத்துக்கான அடிப்படை நிபந்தனையாகும்.

மொட்டு கட்சியை நாடும் முஸ்லிம் பிரமுகர்கள்

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து, நான்கு மாதங்களில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பின்னர், மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் சாத்தியமுள்ளது.

2015ஆம் ஆண்டு தேர்தலிலேயே, மொட்டு என்ற சின்னத்தையும் பொதுஜன பெரமுனவையும் வளர்ச்சியடையச் செய்யும் பணியில், ராஜபக்‌ஷ குடும்பம் முழு மூச்சாக இறங்கி விட்டது. இதன் காரணமாக, நான்கரை வருடங்களுக்குள் அவர்களால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடிந்துள்ளது.

தேசிய அரசியலில் சுதந்திரக் கட்சியைப் பின்தள்ளிவிட்ட பொதுஜன பெரமுன கட்சி, அடுத்ததாக ஐ.தே.கவையும் விஞ்சிச் செல்வதற்கான அனைத்து வியூகங்களையும் வகுப்பதாகத் தெரிகின்றது. இதன் ஓர் அங்கமாக முஸ்லிம், தமிழ் பிரதேசங்கள் உட்பட, அனைத்துப் பகுதிகளிலும் பொதுஜன பெரமுனவின் தளங்களைக் கட்டியெழுப்புவதற்கும், மொட்டுச் சின்னத்தை ஒரு வர்த்தக நாமம் (Brand) போல, மக்கள் மயப்படுத்துவதற்கும் எதிர்வரும் பொதுத் தேர்தலை, அக்கட்சி பயன்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

தற்போதைய நிலைவரப்படி, இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் ஆளும் தரப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இல்லை என்பதாலும், ஹக்கீமையும் ரிஷாட்டையும் நம்பிப் பயணிப்பது சிக்கலானது என, ராஜபக்‌ஷக்கள் கருதுவதாலும், எல்லா முஸ்லிம் தொகுதிகளிலும் மொட்டுக்குப் பலம்பொருந்திய பிரதிநிதிகளை நிறுத்தும் பணிகள் இடம்பெறுகின்றன.

ஏற்கெனவே, பொதுஜன பெரமுனவுடன் நெருக்கமாக இருக்கின்ற முஸ்லிம் கட்சிகள், முஸ்லிம் அரசியல் அணிகளை மட்டும் வைத்துக் கொண்டு, வடக்கு, கிழக்கு பகுதிகளிலும் அதற்கு வெளியிலும் உள்ள முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளை வெல்வது, கல்லில் நார் உரிக்கின்ற வேலை என்றே ஜனாதிபதியும் பிரதமரும் கருதுவதாகச் சொல்ல முடியும்.

அந்த அடிப்படையிலேயே மேலும் விசுவாசமான, மக்கள் ஆதரவுள்ள ஆளுமைகளை, மொட்டுக் கட்சி நோட்டமிடுகின்றது. மிக முக்கியமாக, எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காக வைத்து, வேட்பாளர் தேடும் படலமும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள பல முக்கியஸ்தர்கள், ஆளுமைகள், அரசியல்வாதிகளைப் பொதுஜன பெரமுனவும் அதன் இடைத் தொடர்பாளர்களும் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுள் பலருடன் மொட்டுக் கட்சி இரகசியப் பேச்சுகள், மந்திராலோசனைகளை மேற்கொள்வதாகவும் அறிய முடிகின்றது.

இதேபோன்று, தங்களைப் ‘பெரிய அரசியல் புள்ளி’ எனப் பம்மாத்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற பேர்வழிகள், மஹிந்த தரப்பை நெருக்க ஆலாய்ப் பறக்கின்றனர். இன்னும் சில அரசியல்வாதிகள், ராஜபக்‌ஷ தரப்பு எப்போது கூப்பிடுவார்கள் என்று, தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருக்கின்றனர். என்ன நடந்தாலும், மொட்டுக் கட்சியானது தம்மை நாடி வருகின்ற நபர்களில் ஏமாந்து விடாது, முஸ்லிம் சமூகத்தில் அக்கறையுள்ள, செயற்றிறன் வாய்ந்த, உருப்படியான ஆள்களை வேட்பாளர்களாகத் தெரிவு செய்யவதில் கவனம் செலுத்த வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாலிப வயோதிக அன்பர்களே…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post இரண்டு திருமணம் – கையில் பணம் இல்லை – நடிகை மருத்துவமனையில்! (சினிமா செய்தி)