‘கோர்ட்’ போட்ட கோட்டாவின் சிங்கப்பாதை !! (கட்டுரை)

Read Time:15 Minute, 47 Second

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், சமாதான காலப்பகுதியில், இராணுவ சீருடை இல்லாமல், சாதாரண உடையில் சர்வதேச செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டது, அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட விடயமாகும்.

செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னரும்கூட, பல அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள் உடனான சந்திப்பில், அவர் சாதாரண உடையிலேயே கலந்துகொண்டார்.

அதுபோல, தென்னிலங்கையிலும்கூட, அரசாங்கத்தின் தலைவர்கள், பாரம்பரிய உடையணிந்து கொண்டதற்கும் வேறு சிலர் மேற்கத்தேய உடையணிந்ததுக்கும் இலங்கை அரசியலில் பல்வேறு அரசியல், இராஜதந்திரப் பார்வைகள் உள்ளன.

இந்த உடை விவகாரம், அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் மாத்திரமல்ல, படைகளிலும்கூட, பல செய்திகளைத் தன்னகத்தே வைத்திருக்கிறது.

உதாரணத்துக்கு, தமிழீழ காவல்துறை என்ற பொலிஸ் அணியை, விடுதலைப் புலிகள் உருவாக்கும்போது, அந்த அணியினருக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடும் நீலம், மென் நீலம் ஆகிய நிறங்களையுடைய சீருடையை அறிமுகப்படுத்தினார்.

அதற்கான காரணத்தைக் கூறும்போது, “பொலிஸ் என்ற வார்த்தையைத் தமிழ் மக்கள், காக்கி நிறத்தோடு இணைத்துப் பார்த்து வந்ததுதான் வரலாறு. அந்தக் காக்கி நிறத்தைப் பார்க்கும்போதெல்லாம், அந்தக் காக்கிச் சீருடைக்குள் இருந்தவர்கள் செய்த அட்டூழியங்களும் சித்திரவதைகளும் அடக்குமுறைகளும்தான் மக்களுக்கு நினைவுகளில் மீண்டும் மீண்டும் வரும். ஆகவே, தமிழர் பிரதேசத்தில், பொலிஸ் படையணியொன்றை உருவாக்கும்போது, அதே காக்கி நிறத்தை அறிமுகப்படுத்துவது ஆரோக்கியமானதாக அமையாது; காக்கி நிறத்தை, யார் அணிந்தாலும் அவர்களை மக்கள் மனதளவில் அணுகமுடியாத தரப்பாக இருப்பதற்கே வாய்ப்புண்டு. ஆகவே, புதிய நிறத்தில், புத்துணர்ச்சிமிக்கதாக அந்தச் சீருடை அமையவேண்டும்” என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தெரிவித்திருந்தார்.

ஆக, சீருடை என்பதும் அதன் நிறமும், அதனை அணிபவர்களின் மீது பல்வேறு பார்வைகளைக் கொடுக்க வல்லது. ஒவ்வோர் உடையும், அது அமைந்த விதங்களிலும் நிறங்களிலும் பல்வேறு செய்திகளைத் தன்னகத்தே வைத்திருக்கிறது. இலங்கையில் மாத்திரமல்லாது, உலகெங்கிலும் இதற்குப் பல உதாரணங்களைக் காணலாம்.

அந்தவகையில், அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய, தனது முதலாவது நாடாளுமன்ற அமர்வுக்கு வந்தபோது அணிந்திருந்த உடையும், பல செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கிறது.

இலங்கை வரலாற்றிலேயே, மேற்கத்தேய உடையணிந்து, நாடாளுமன்றத்துக்கு வந்த முதலாவது ஜனாதிபதி, கோட்டாபய என்று நாடாளுமன்றத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த விவகாரத்தை, ஆய்வாளர்களின் கைகளில் விட்டுவிடாமல், தானே அதற்குரிய விளக்கத்தை அளித்ததன் மூலம், தனது உடை தொடர்பான முடிவுக்குப் பின்னாலுள்ள அரசியல் காரணத்தையும் அவரே விளக்கி இருக்கிறார்.

அதாவது, தனது சகோதரர்களான, சமல், பசில், மஹிந்தபோல, தான் மண் சிவப்பு நிறச் சால்வையை அணியப்போவதில்லை என்றும், தனது அரசியல் கலாசாரம், புதிய வழியில் காணப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஆனால், அந்த நிறத்தில் இருந்து, தான் முற்றாகக் கழன்றுவிடவில்லை என்பதற்கு அடையாளமாக, மண் சிவப்பு ‘டை’ அணிந்து வந்ததையும் கோட்டாபயவின் முதலாவது நாடாளுமன்றப் பிரசன்னத்தின்போது காணக்கூடியதாக இருந்தது.

இந்த விடயத்தைச் சற்று ஆழமாகப் பார்த்தால், கோட்டாபய முன்பும்கூட, மண் சிவப்பு நிறச் சால்வையோடு, பௌத்த பாரம்பரிய ஆடையோடு, தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் கிடையாது. பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்தது முதற்கொண்டு, அவர் எப்போதும் மேற்கத்தேய ஆடையுடன்தான் தன்னை முன்னிறுத்தி இருக்கிறார்.

ஜனாபதியாகப் பதவியேற்ற பின்னர், இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் செய்தபோதும்கூட, மேற்கத்தேய உடையணிந்துதான் சென்று வந்திருக்கிறார்.

அப்படியிருக்கும்போது, முதலாவது நாடாளுமன்ற அமர்வின்போது, அவர் தனது உடை குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்க வேண்டிய தேவையுமில்லை; பேசியிராவிட்டால், அது பெரியதொரு விடயமாக ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருக்கவும் வாய்ப்புகள் இல்லை.

இருந்தபோதிலும், அவர், தனது உடையின் வாயிலாக, ஒரு செய்தியைச் சொல்ல விளைந்திருக்கிறார்.

அந்தச் செய்தி, இலங்கை அரசியலில் தன்னையொரு தனி மனிதராக அடையாளப்படுத்துவதற்கு மேற்கொண்டிருக்கும் பகிரதப்பிரயத்தனமே அன்றி வேறில்லை.

அதாவது, 2015 ஆம் ஆண்டு, அரசியல் தோல்வியுடன், ஆட்சிக் கட்டிலில் இருந்து தூக்கி எறியப்பட்டு, சிதறுண்டு கிடந்தவர்களைக் கூட்டி அள்ளி, அவர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து, புதிய கட்சியொன்றை உருவாக்கி, தனக்கு ‘ஆப்படித்த’ மைத்திரியைத் தனது வலையில் வீழ்த்தி, கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து, மிகப்பெரியதொரு ராஜபக்‌ஷ இராட்சியத்தை உருவாக்குவதற்கான அத்திபாரத்தைப் போட்டவர் மஹிந்த ராஜபக்‌ஷ.
அந்தவகையில், தற்போது அடைந்துள்ள கோட்டாபயவின் அரசியல் வெற்றியின் ஊடாக, மஹிந்த போட்டிருக்கும் அரசியல் கணக்கு மிகப்பெரியது. கோட்டாபயவுக்குப் பின்னரான காலப்பகுதியில், தனது மகன் நாமலை அரியணை ஏற்றுவதற்கும், தனது காலத்தில் அதற்கான சகல வாய்ப்புகளையும் உருவாக்கிவிடுவதற்கும் அல்லும் பகலும் தாயக்கட்டைகளை உருட்டிக் கொண்டிருக்கிறார் மஹிந்த.

கடந்த காலங்களில் விட்ட எந்தத் தவறையும், இந்தத் தடவை விட்டுவிடக்கூடாது என்று பார்த்துப் பார்த்து, இலங்கை அரசியலை செதுக்கிக்கொண்டிருப்பவர் அவர்.

வீழ்வதிலிருந்து எழுவதற்கே ‘மெகா’ திட்டம் போட்டு, சாதிக்கக்கூடிய மஹிந்தவுக்கு, எழுந்தவுடன் இன்னும் எழுச்சி கொள்வதற்குச் சொல்லியா கொடுக்கவேண்டும்?

ஆனால், இதற்குச் சாத்தியம் உள்ளதா?

ஏனெனில், ஜனாதிபதிப் பதவியை வெற்றிகொண்டதன் மூலம், ஆட்சியை முற்றுமுழுதாகத் தனது கைப்பிடிக்குள் கொண்டுவந்துவிட்டதாக எண்ணிக்கொள்ளும் கோட்டாபய, தற்போது நடைபோடுகின்ற ‘லேட்டஸ்ட்’ பாதை வேறு திசைகளாகத் தெரிகிறது.

அதாவது, வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில், எப்படியாவது மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு இலக்கு வைத்திருக்கும் கோட்டாபய, அதை எப்படியாவது பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் கூட்டணியுடன் சேர்ந்து சாதித்துக் கொள்வதன் மூலம், ஸ்ரீ லங்கா என்ற நாட்டைத் தனது தலைமையின் கீழ், முற்றிலுமாக உறுஞ்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற யோசனையோடுதான் எல்லோரையும் பார்த்து, மெல்லியதாகப் புன்னகைக்கிறார்.

அந்தவழியில் சென்று, நாட்டை முற்றிலுமாகப் பௌத்த தேசமாக மாற்றுவது, பௌத்தத்தை அரச மதமாக்குவது, மத ரீதியான ஆட்சியின் கீழ், நாட்டை முற்றாகக் கொண்டுவந்துவிடுவது என்பவற்றையெல்லாம், செய்யமாட்டார் என்பதற்கு ஆதாரமாகக் கோட்டாபய, எந்தவிதமான பன்முகத்தன்மையையும் இதுவரையும் காண்பிக்கவில்லை.

“நான் சிங்கள மக்களின் வாக்குகளால் வென்றவன்” என்று, பகிரங்கமாகவே அறிவிக்கும் ‘அரசியல் திமிர்’, அவரிடம் தேவைக்கு அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற அதிகாரமும் அவரது கைகளுக்குச் சென்றுவிட்டால், அதன் பிரதிபலிப்புகள் எவ்வாறிருக்கும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஆனால், இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையானது, அவரது பதவிக் காலம்.

அவர், எவ்வளவு காலத்துக்கு பதவியில் நீடிக்கிறாரோ, அதுவரைக்கும்தான் அவர் நினைத்தது நடக்கும் என்பது, கோட்டாபயவுக்கு நன்கு தெரிந்த ஒன்று.

அத்துடன், அவரது அரசியல் பின்புலமும்கூட, எப்போதும் ஒற்றைத் தலைமைத்துவத்தை நம்புவதாகவே இருந்திருக்கிறது. கோட்டாபய, அவரது அண்ணன் மஹிந்தவைப்போல, அடிமட்ட அரசியலைச் செய்து, படிப்படியாக முன்னுக்கு வந்தவர் கிடையாது.

ஆகவே, யார் மீதும் நம்பிக்கையில்லாத, தன்னால் மாத்திரமே தனது முடிவுகளை நெறிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உடைய, ஒற்றைச் சிந்தனைவாதிதான் கோட்டாபய.

ஆக, இப்போதைக்கு அவரது எதேச்சதிகாரம் மிக்க ஜனாதிபதிக் கனவுக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது, அரசமைப்பின் 19 ஆவது திருத்தமே ஆகும்.

நினைத்தபடி எப்போது வேண்டுமானலும் நாடாளுமன்றத்தைக் கலைக்க வல்ல அதிகாரத்தையும் ஆணைக் குழுக்களுக்குள் ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பிரித்துப் போட்டிருப்பதும் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரே நபர் போட்டியிடலாம் என்ற நடைமுறையையும் நசித்து வைத்திருப்பதுதான் அரசமைப்பின் 19 ஆவது சீர்திருத்தம் ஆகும்.

இந்தச் சீர்திருத்தச் சட்டத்தை, தான் பதவிக்கு வந்தால் நீக்கிவிடுவது என்று, கோட்டாபய முன்பு சாடை மாடையாகக் கூறிவந்தாலும், இப்போது பதவிக்கு வந்த பின்னர், நிச்சயமாக நீக்கவேண்டும் என்ற சாரப்படப் பேசத்தொடங்கி விட்டார். அது அவர் சார்ந்த கட்சியின் பொது முடிவாக அறிவிக்கப்படாவிட்டாலும் கூட, ஒரு ஜனாதிபதியாக அவர் பல இடங்களில், 19 ஆவது திருத்தச்சட்டம் பற்றி, பேசிவருகிறார். ஜனாதிபதியின் கைகளுக்கு, மேலதிக விரல்கள் வேண்டும் என்ற தோரணையில், அவரது அண்மைக்கால பேச்சுகள் காணப்படுகின்றன.

கோட்டாபயவின் இந்தத் திட்டம் எவ்வளவு தூரம் சாத்தியமாகும்?

ஏனெனில், அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ்தான், தற்போது பிரதமராக உள்ள மஹிந்தவின் பதவிக்குக்கூட பாதுகாப்பு இருக்கிறது. அது நீக்கப்பட்டு விட்டால், பிரதமரை நீக்கும் அதிகாரம்கூட, ஜனாதிபதிக்குச் சென்றுவிடும்.

அப்படியானால்,

‘ஒற்றை ரூட்’ எடுத்து, ஓடத் தலைப்படும் கோட்டாபயவின் திட்டத்துக்கு, மஹிந்த இசைந்து கொடுப்பாரா?

ஜனாதிபதிக் கதிரையில், அடுத்ததாக நாமலை இருத்தி, அழகு பார்க்க வேண்டும் என்ற திட்டங்களோடு காய் நகர்த்திக் கொண்டிருக்கும் மஹிந்தவின் தாயப் பலகையைக் கோட்டாபய குழப்புவதற்கு, மஹிந்த அனுமதிப்பாரா?

இந்த வகையான காய்நகர்த்தல்களில் மஹிந்தவை வெற்றிகொள்ள வேண்டுமானால், கோட்டாபய முதலில் கட்சியின் ஆதரவைத் தனதாக்கிக்கொள்ள வேண்டும். அது சாத்தியப்படாத வரை, கோட்டாபய தொடர்ந்தும் தனித்தவில்தான் அடித்துக்கொள்ள வேண்டும்.

ஆக, அரசமைப்பின் 19ஆவது சீர்திருத்தத்தை, ஏதாவது ஒரு வகையில் நீக்குவதற்கு, கோட்டாபய காலை முன்வைத்தார் என்றால், அப்போதுதான் ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கு மத்தியில் உள்ள உண்மையான ‘பாசம்’, எத்தனை டிகிரியில் கொதித்துக் கொண்டிருக்கிறது என்பது தெரியவரும்.

கோட்டாபயவின் வெற்றிகள் அனைத்தும், அவரது வெற்றிகளா அல்லது அவருக்கு பின்னால் இருந்த மஹிந்தவின் மூளை பெற்றுக் கொடுத்த வெற்றிகளா என்பதும் அப்போதுதான் தெரியவரும்.

கோட்டா பயணம் செய்யப்போவது, சிங்கப் பாதையா என்பதும் அப்போதுதான் தெரியவரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ZUMBA FOR STRAYS..!! (மகளிர் பக்கம்)
Next post காங்கேயம் காளை வளர்ப்பு முறை!! (வீடியோ)