By 9 January 2020 0 Comments

எனது தேர்வு நாடகமும், பொம்மலாட்டமும்!! (மகளிர் பக்கம்)

‘‘குழந்தைகளை நிறைய மதிப்பெண்கள் எடுக்க வைக்க பல யுத்திகளைக் கையாளும் நிறுவனங்கள் பல உண்டு. ஆனால் குழந்தை நல்ல மாணவனாய் உருவாகக் கற்றுத்தர யாருமில்லை. அதற்கான தேவைதான் இப்போது நிறைய இருக்கு’’ எனப் பேசத் தொடங்கிய செல்வத்தின் சொந்த ஊர் மதுரை.

‘‘குழந்தைகளுக்கு நன்னெறிக் கல்வியை போதிக்க முடிவு செய்து ‘நாடகக் கல்வி வழியே அறம்’, அதாவது dharma through drama அடிப்படையில் குழந்தைகளை தேடித்தேடி தினம் ஒரு பள்ளியாக நகர்கிறேன்’’ எனப் பேசத் தொடங்கினார் செல்வம்.‘‘மிகவும் வறுமையான நிலையில் இலவச விடுதி ஒன்றில் தங்கி அரசுப் பள்ளியில் படித்தேன். நான் படித்த பள்ளி எனக்கு கலையையும் நாடகத்தையும் நிறையக் கற்றுக் கொடுத்தது.

5ம் வகுப்பில் படிக்கும்போது நானே நாடகம் போடத் தொடங்கினேன். அப்போது மதுரையைச் சேர்ந்த வீதி நாடகத்தின் முன்னோடி தியாபிலஸ் அப்பாவு என்பவரிடம் நாடகக் கலை குறித்து கற்றுக் கொண்டேன். தென் மாவட்டங்களில் வீதி நாடகம் போடுவதில் பிரபலமானவர் அவர்.

அவரிடத்தில் பத்து ஆண்டுகள் பயிற்சி எடுத்ததில் கலையை சமூக மாற்றத்துக்கு பயன்படுத்துவது எப்படி எனக் கற்றுத் தேர்ந்தேன். கைகளில் இருக்கும் பொருட்களை வைத்து நாடகம் போடும் கலையையும் அவர் கற்றுத் தந்தார். அவர் இயக்கிய சிட்டிங் பட்டாங்குவே, பிச்சுக் கடாசுங்க போன்ற நாடகங்களில் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறேன்.

வீதி நாடகக் கலைஞராக இந்தியா முழுவதும் பயணம் செய்து 500-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதோடு, குழந்தைகள் மேம்பாட்டிற்கான தொண்டு நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளேன்’’ என்கிறார் நாடகத்திற்குள் தான் வந்த கதையைச் சுருக்கமாக.‘‘மதுரையில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றில் பகுதி நேர ஆசிரியராகப் பணியாற்றியபடி, தமிழகத்தில் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை நோக்கி நகர்கிறேன்’’ என்றவர், ‘‘எப்போதும் குழந்தைகளோடு பயணிப்பதே எனக்குப் பிடித்தமான விஷயமாக உள்ளது.

என்னை உற்சாகப்படுத்துவதில் என் மனைவிக்கும் பெரும் பங்கு உண்டு’’ என்கிறார் தன் வாழ்க்கை துணையை நினைத்தபடி.
‘‘ ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே’ என்றவர், என் குழந்தை நல்லா படிக்கனும் என்பதைவிட நல்ல குழந்தையா வளரனும் என்கிற ஆசை பெரும்பாலான பெற்றோர்களின் கனவு.

நான் பள்ளியில் படிக்கும்போது நன்னெறி பாடத்திற்கென(moral science) தனியாக வகுப்பு இருந்தது. பொய் சொல்லாதே, திருடாதே, விட்டுக்கொடுத்தல், பொறுமை, பிறருக்கு உதவி செய்தல், உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல் என பல தலைப்புகளில் நன்னெறிக் கதைகள் அதில் இருக்கும். அவற்றைப் படித்து வளர்ந்த நமது தலைமுறை சிறப்பாக வளர்ந்தது. காலப்போக்கில் இது காணாமல் போக, தனியார் பள்ளிகளில் இப்போது வேல்யூ எஜுகேஷன் கிளப் ஆக்டிவிட்டி என்று ஒன்றை வைத்துள்ளார்கள்.

குழந்தைகளுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளாகத் தேர்ந்தெடுத்து 125 பள்ளிகள் வரை பயணித்திருக்கிறேன். இதற்கு நாடகம் ஒரு நல்ல ஊடகமாக எனக்கிருந்தது. நாடகத்தின் வழியே இதுவரை 4000ம் குழந்தைகளுக்கு மேல் சந்தித்துள்ளேன்.

எந்த விஷயத்தையும் பாடமாக நடத்தினால் குழந்தைகளுக்குப் பிடிக்காது. அதையே நாடகம் வழியே கற்பித்து, எந்தக் கதாபாத்திரம் பிடித்திருந்தது, யார் மாதிரி வாழ ஆசைப்படுகிறாய் என்ற கேள்வியை முன்வைத்தால் நாடகத்தில் இடம்பெற்ற நல்ல கதாபாத்திரத்தைதான் குழந்தைகள் கை காட்டுவார்கள். குழந்தைகளின் தேர்வு பெரும்பாலும் அன்பான கேரக்டர், விட்டுக் கொடுக்கும் கேரக்டர், உதவி செய்யும் கேரக்டர் என்பதாகவே இருக்கும்.

நாடகங்களை வீடு, பள்ளி, சமூகம் என மூன்றாய் பிரித்துக் கொள்வேன். எனது நாடகத்தின் கதை மாந்தர்கள் மாவீரன் அலெக்சாண்டரோ, வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்ல. வரலாற்று நாடகங்களை நான் தொடுவதும் இல்லை. தினசரி வாழ்வில் குழந்தைகள் எதை பார்க்கிறார்கள். அதில் அவனுக்கு எது சந்தோஷம் தந்தது? நல்லது என்ன? கெட்டது என்ன? இதுதான் என்னுடைய பெரும்பாலான நாடகம்.

வீட்டில் அம்மாவுடன் ஒரு குழந்தை சண்டை போட்டுவிட்டு பள்ளிக்கு வந்தால் அன்றைய என் நாடகம் அதுதான். கதையினை அந்த நொடியில் உருவாக்கி, மாணவர்களை நடிக்க வைப்பேன். கதையின் முடிவை அவர்களே சொல்வார்கள். அப்போது குழந்தைகள் பல கோணங்களில் யோசிப்பார்கள். அங்கே அவர்கள் சிந்தனை தூண்டப்படுகிறது. நல்ல விஷயங்களும் அவர்களிடத்தில் விதைக்கப்படுகிறது.

ஐந்து வயதிற்கு உட்பட்ட குட்டிக் குழந்தையாய் இருந்தால் விதவிதமான பொம்மைகளை வைத்து அப்பா, அம்மா, அத்தை, பாட்டி, மாமா, அண்ணன், அக்கா, ஆசிரியர் என பல கதாபாத்திரங்களை உருவாக்கி பொம்மலாட்டம் வழி குட்டிக் குட்டி நாடகங்களை அறங்கேற்றுவோம். என்னுடைய எந்த ஒரு நாடகமும் மூன்று நிமிடத்தைத் தாண்டாது.

நாடகத்திற்காக நான் குழந்தைகளை செலவு செய்ய வைப்பதில்லை. என் கைகளில் என்ன கிடைக்கிறதோ அதை வைத்தே நாடகத்தில் நடிக்க வைப்பேன். வண்ணங்களை பூசுவதிலும், உடைகளை மாற்றுவதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. வாழ்க்கையின் யதார்த்தத்தை நாடகத்தில் கொண்டு வருவேன். சூழ்நிலைக்கு ஏற்பவும் நாடகம் இருக்கும்.

நம் குழந்தைகளுக்குத் தேவை ரோல் அல்ல, ரோல் மாடல். கண்ணனாகவும், ஏசுவாகவும் சித்தரிப்பதை விட ஆசிரியராக, மாணவனாக, நண்பனாக நீ நன்றாக நடித்தாய் என்பதைச் சொல்லும்போது குழந்தையின் மனதில் மாற்றத்தைக் காண முடியும். வசனத்தைப் மனப்பாடம் செய்து நான் குழந்தைகளை நடிக்க வைப்பதில்லை. அவர்களை அவர்களாகவே பங்கேற்க செய்வதுடன், அவர்களிடமே எல்லாவற்றையும் கேட்டு வாங்கி விடுவேன்.

குழந்தையை எனது நாடகம் எப்படி மாற்றப் போகிறது… அவன் இனி எப்படி இருக்கப் போகிறான் என்பதில்தான் என் நாடகத்தின் வெற்றி இருக்கிறது. குப்பையை எடுத்து குப்பைத் தொட்டியில் குழந்தை போட்டுவிட்டாலே என் நாடகம் சக்ஸஸ். இதில் ஆக்ஷனை விட ரியாக் ஷனே முக்கியம்.

அதுவே என் எதிர்பார்ப்பும். ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை கீழே தள்ளும்போது, விழுந்தவன் பரவாயில்லை தெரியாமல்தானே செய்தாய் எனச் சொன்னால் என் நாடகம் வெற்றி. ‘இதுக்கு முன்பு என் குழந்தை வா போன்னு கூப்பிட்டான் சார்… இப்ப வாங்க போங்க எனக் கூப்புடுறான் சார்…’ என பெற்றோர்கள் சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கும். சின்ன வயதில் குழந்தைகளிடத்தில் எதை விதைக்கிறோமோ அதைத்தானே அறுவடை செய்வோம்’’ என்கிறார்.

‘‘சேட்டை செய்யும் மூன்று குழந்தைகள் என் நாடகத்தில் நடித்த பின்பு பள்ளியின் சிறந்த மாணவர்களாகவே மாறிவிட்டார்கள். சில பிரச்சனைகளை ஒரே வகுப்பில் மாணவர்களிடத்தில் புரிய வைக்க முடியாது. தொடர்ந்து 2 முதல் 3 நாடகங்களை போட்டால்தான் மனதில் பதியும்’’
என்கிறார் அனுபவம் தந்த ஆசானாக.

ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும்போது சொல்லித் தரும் வழி முறையினை (presence of mind) மாற்றிக்கொண்டே இருத்தல் வேண்டும் என்றவர், ‘‘தினமும் ஒரே மாதிரியாக பார்க்கும் தன் ஆசிரியரை அப்படியே மாணவர்கள் இமிடேட் செய்து காட்டுகிறார்கள்.

அந்த அளவுக்கு அவர்களிடத்தில் உள்வாங்கும் திறன் உள்ளது. ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு புது ஆளாக ஆசிரியர்கள் தெரிய வேண்டும். குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது சவால் நிறைந்த வேலைதான். அதற்கு ஆசிரியர்களுக்கும் நிறைய பயிற்சி தேவை. அதையும் சேர்த்தே செய்கிறேன். ஆசிரியர்கள் எப்போதும் உற்சாகமாய் இருங்கள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுமையை செய்யுங்கள்’’ என்கிறார் இந்த நவீன ஆசிரியர்.

‘‘கை தட்டுவதைக்கூட குழந்தைகள் எண்ணுவார்கள். அவனுக்கு மூன்று தடவை… எனக்கு இரண்டு தடவைதான் கை தட்டுன என்பார்கள். அந்த அளவுக்கு அவர்களது உற்று நோக்கும் தன்மையும், கவனமும் சிறப்பாக இருக்க, சிந்தனையும் வித்தியாசமாய் ஆழம் நிறைந்ததாய் இருக்கும் என்றவர், குழந்தைகள் தங்கள் சிந்தனையை வெளிப்படுத்த முடியாமல் ரொம்பவே தவிக்கிறார்கள்’’ என்கிறார்.

‘‘ஒரு வகுப்பில் அன்று மாணவர்களுக்கு தேர்வு விடைத்தாள் கொடுத்து இருப்பார்கள். மாணவன் முகத்தில் மதிப்பெண் குறித்த வருத்தம் நிறைய இருக்கும். அந்த மனநிலையை உடைக்காமல், சொல்லுகிற செய்தி அவர்கள் மனதில் ஏறாது. குழந்தைகளை நாம் நெருங்கினால், அவர்கள் நம்மை உணர்வுப்பூர்வமாக அணுகுவார்கள். மிகச் சிறந்த ஆசிரியராக நம்மை நினைப்பார்கள். அவர்கள் குடும்பத்தில் ஒரு நபராய் பார்க்கத் தொடங்குவார்கள். எனவே குழந்தைகளின் நம்பிக்கை மிகுந்த ஆசிரியராகவும் நாம் இருக்க வேண்டும்’’ என்கிறார் இவர்.

‘‘எனது இலக்கு எப்போதும் 3 முதல் 13 வயதுக் குழந்தைகள் மட்டுமே. குழந்தைகளைத் தவிர நான் எதையும் சிந்திப்பதில்லை. ஒரு குழந்தை படைப்பாளியாக மாறிவிட்டால் கண்டிப்பாக தவறு செய்ய மாட்டான். அவர்களின் அடிப்படையை சரி செய்துவிட்டால் வெற்றியாளனாக மாறி விடுவான்.

எனவே கலை மற்றும் படைப்பின் வழியாக அவர்களை சிந்திக்கத் தூண்டுகிறேன். ‘நான் இந்த சமுதாயத்தில் வேறு… நான் நடித்தால், நான் பாடினால் இந்த சமூகம் பார்க்குது, பாராட்டுது’ என்கிற சிந்தனை அவனுக்குள் மாற்றத்தை தருகிறது. பாராட்டை குழந்தைகள் ருசிக்க ஆரம்பித்தால் அந்த போதையில் இருந்து வெளியில் வர மாட்டார்கள்.

தொலைக்காட்சியும், நவீன கைபேசிகளும் நம் குழந்தைகளை நெறிப்படுத்தவில்லை. பெற்றோரும் எனக்கு போன் செய்து ‘என் குழந்தை திருடுறான் சார், பொய் சொல்றான் சார், எதிர்த்துப் பேசுறான் சார், எதையாவது செய்து அவன மாத்துங்க சார்’ எனச் சொல்கிறார்கள்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவு இங்கே குறைந்துவிட்டது. பெற்றோர் ஆசிரியரையும், ஆசிரியர்கள் பெற்றோரையும் கை காட்ட குழந்தைகளோ அவர்கள் இருவரையும் கை காட்டுகிறார்கள்.நீ நல்லது செய்தால் உன்னைச்சுற்றி எல்லாமே நல்லதாய் நடக்கும். இதுவே நாடகத்தின் வழியே குழந்தைகள் என்னிடத்தில் கற்றுக்கொள்ளும் பாடம்’’ என்றார் நிறைவாக.Post a Comment

Protected by WP Anti Spam