குளிர்கால கொண்டாட்டம்!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 1 Second

உறைபனி உலகம் வேறு மாதிரி மாறப்போகிறது என்று தெரிந்தால் போதும், அதாவது மைனஸ் 51 டிகிரியில் இருந்து சில நாட்கள் மைனஸ் 55 வரை அண்டார்டிகா அளவுக்கு பனி உறைந்தது என்றால் அதுசரிதான். இடையிடையே சில சமயங்களில் மைனஸ் 25லிருந்து மைனஸ் 50 வரை ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அதுவே பூஜ்யம் டிகிரிக்கு வந்தது என்றால், ஒரே சந்தோஷம், கும்மாளம்தான். எல்லோரும் வெளியில் செல்ல, பிக்னிக் போக என ஏற்பாடுகள் ஆரம்பித்து விடுவார்கள்.

ஒவ்வொரு சீசனில் அவ்வளவு பாதிப்புகள் இருந்ததில்லை. ஆனால், 2018-ல் ஏப்ரல் 14-ம் தேதி அப்படி ஒரு பனிமழை பெய்துள்ளது. ஏப்ரல் நடுவில் அப்படி நிகழ்ந்ததென்றால், டிசம்பர் – ஜனவரியில் கேட்க வேண்டுமா, என்ன? இப்படிப்பட்ட பனி சூழ்ந்த வாழ்க்கையிலிருந்து விடுபட முடியுமா என்கிற அளவுக்கு நமக்கு வெறுப்பு வந்துவிடும். ஆனால் அங்கேயே இருப்பவர்களுக்கு இதுதான் வாழ்க்கை என்கிற புரிதலும், அத்தகைய நாட்களையும் கொண்டாட்டமாக மாற்றுவதும் பழக்கப்பட்ட நிலை. உறைந்த வீடுகளும், கார்களும், உறைந்த ஏரிகளும் வாழ்க்கையில் காண முடியாத காட்சிகள்.

பனிப் பொழிவினையே கொண்டாட்டமாக வரவேற்பது என்பது இயல்பு. அதே சமயம் கோடை காலத்தையும் இவர்கள் வேறு விதமாக வரவேற்கிறார்கள். சரியான கோடை என்றால் இங்கும் மே மாதம் தான் துவங்குகிறது. அதை வரவேற்கும் விதத்தில் ஏப்ரல் மாதத்திலிருந்து, ஏற்பாடுகள் துவங்கி விடுகின்றன. என்னென்ன காய்கறிகள், என்னென்ன பூச்செடிகள் பயிரிடலாம், என்ன மாதிரி நாற்காலிகள் தோட்டத்தில் போடலாம்.

எவ்வளவு தூரம் புல்தரை வளர்க்கலாம் போன்றவை அனைத்தும் குடும்ப ஆலோசனைகளாக இருக்கும். குழந்தைகளைப் பொறுத்தவரை, இதுநாள் வரை பனிச்சறுக்கு, துடுப்புப் போடுவது போன்ற விளையாட்டுக்களை விளையாடியதால், இனி நீச்சல், ஓடுதல், பட்டம் விடுதல் போன்றவற்றைப்பற்றி யோசிக்க ஆரம்பிப்பார்கள். காரணம், பள்ளிக் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பமாகி விடும். மீண்டும் ஆகஸ்ட் மாதம் தான் அவை தொடங்கும்.

இந்த சமயம், இந்தியாவிலிருந்தும் மற்ற நாடுகளிலிருந்தும் கல்லூரி மாணவ சேர்க்கைக்காக மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் வருகை தருவார்கள். ஊர் சுற்றிப்பார்க்க வெளிநாட்டினர் குழுமும்போது, உள்நாட்டினரும் விடுமுறையை கைதட்டி மகிழ்வர். புதைந்த பசுமை தலை தூக்க, நகரங்களே செழித்து நிற்க, பூங்காக்கள் கூட்டம் அலை மோத, ‘மால்’கள் ‘பார்க்கிங்’க்கு இடமில்லாமல் போக, உறைந்த ஏரிகள் நீர் தழும்ப, வாத்துக் குடும்பமாக அணிவகுத்துச் செல்ல, நீர் வீழ்ச்சிகள்…. என இயற்கையை நேசிப்பவர்களுக்கு, இத்தகைய காட்சிகள் சொர்க்கம்!

‘மிஸி சிபி’ நதியிலிருந்து பிரிந்து வரும் கிளைகள் இந்த ‘மினியா போலிஸில்’ அங்கங்கே காணப்பட்டாலும், அதிலுள்ள நீர்வீழ்ச்சிகள் பிரமாதம். அத்தனையும் உறைந்து, மனிதர்களே இல்லாத பனிமலையாகக் காணப்பட்ட இடம் இப்பொழுது, நடக்க இடமில்லாமல் கூட்டம் அலை மோதும். தண்ணீர் கொட்டும் சப்தம் ஒருபுறமென்றால், அதை ரசித்து மகிழும் மக்களின் குரல் மறுபக்கம். பொதுவாக, இதுபோன்ற காட்சிகளை நாம் காலண்டர்களில் பார்த்திருப்போம்.

ஆனால் அந்த இடத்தில் நாம் நிற்கும் போது, அது கனவா, நனவா என்றே நமக்கு புரியாது. காதலர்கள், புதுமண தம்பதியர், குடும்பத்துடன் குதூகலிக்க வந்தவர்கள், வெளிநாட்டினர் என அனைவரையும் அந்த நீர்வீழ்ச்சி ஈர்த்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. பொதுவாகவே, கொட்டும் அருவி, ஓடும் மீன்கள், அலைகள் மோதும் சப்தம் இவற்றை இடைவிடாது பார்த்துக்கொண்டிருந்தால் நம் நினைவலைகள் கண்டிப்பாக மாறும். அதுவும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு மக்கள் மீண்டும் இயற்கையை ரசிக்க ஆரம்பிக்கிறார்கள்.

நீர்வீழ்ச்சி மட்டுமல்லாது, அதனுள் அதனையொட்டி அமைந்துள்ள இயற்கைப் பூங்கா, அதையடுத்து விழாக்கோலத்துடன் திகழும் உள் அரங்கம் போன்றவை மக்களை ஈர்க்கும் பொழுதுபோக்கு இடங்களாகும். அங்கங்கே குடும்பத்துடன் அமர்ந்து உல்லாசமாகப் பொழுது போக்கவும், உண்டு மகிழவும் வசதியான இருக்கைகள் நிறைய போடப்பட்டிருக்கும். சிலர் தங்கள் செல்லப் பிராணியையும் அழைத்து வருவர்.

குழந்தைகள் இஷ்டம் போல் பயமின்றி விளையாடுவார்கள். சில நேரங்களில், பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றைக்கூட இதுபோன்ற இடங்களில் கொண்டாடி மகிழ்வர். ‘மிஸிசிபி’ ஆற்றை அழகான கோணத்தில் பார்க்க வேண்டும் என்றால் ஒரு அடுக்குமாடி கட்டிடம் மேல் பார்த்து ரசிக்கலாம். இருபத்தைந்தாவது மாடியிலிருந்து பார்க்கும்பொழுது, முழு நகரமும் பச்சைப்பசேலென்ற நிறத்துடன் ‘சலசல’வென்ற நீரோட்டத்துடன் கொள்ளை அழகுடன் காணப்பட்டது. மற்றொரு புறம் இயற்கை சூழலில் கல்யாண ஒத்திகை நடத்திக் கொண்டிருந்தார்கள். மறுநாள் திருமணம் என்பதால், பெண்
வீட்டார், பிள்ளை வீட்டார் என தனித்தனியாக ஊர்வலமாக ஒத்திகை நடத்திக் கொண்டு இருந்தார்கள்.

மலையேறுவது என்பது இங்கு முக்கிய பொழுதுபோக்காகக் கருதப்படுகிறது. நீச்சல், கூடைப்பந்து, கிரிக்கெட் போன்றவை விளையாடுவது போன்று மலையேறுவதும் முக்கியமான உடற்பயிற்சி. மற்றும் பிடித்த விளையாட்டாகக் கருதப்படுகிறது. திறந்தவெளியில் இதற்காக சில செயற்கை மலைகள்கூட ஏற்படுத்தியிருப்பார்கள். மழைக்காலங்களில் ஏறுவதற்கென சில உள் அமைப்புக்களும் உண்டு. ஆனாலும், ஒவ்வொரு சரணாலயம் மற்றும் பூங்காக்கள் போன்ற இடங்களில் மலையேறுவதும் சிறந்த பொழுதுபோக்காக கருதப்படுகிறது.

பூஜ்யம் டிகிரிக்கு சீதோஷ்ணம் வந்துவிட்டாலே, இதுபோன்ற இடங்களில், அதுவும் விடுமுறை நாட்களில் கூட்டம் தாங்காது. இயற்கை மற்றும் விலங்கினங்களை விரும்பினால் மட்டுமே இத்தகைய இடங்கள் நமக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்று சொல்லுமளவிற்கு மிகக்குறுகிய படிகள். பல்வேறு திருப்பங்கள். சில இடங்களில் தரைகள் மேடு பள்ளமாகக் காணப்படும்.

நாம் மட்டும் செல்கிறோமென்றால் பொறுமையாகச் செல்லலாம். அது முடியாது. பின்னால் வருபவர்களும், இடம்விட்டுச் செல்ல வேண்டும். இருமருங்கிலும் புதர்கள் போன்று பல்வேறு செடிகள், மூலிகைகள் உட்பட மண்டிக்கிடக்கும். இடறி விட்டால், புதர்களில் விழுந்து விடுவோம். பிராணிகளை வாழவிட வேண்டும் என்பதற்காக எதையும் துன்புறுத்தாமல் விட்டு விடுவர்.

அங்குதான் வண்ணமயமான கலர்க்குருவிகளையும், பெரிய அணில்களையும் காணலாம். வெள்ளை நிற அணிலும் இங்குண்டு. பத்துப்படிகள் ஏறியவுடன் திரும்பிப் பார்த்தால், ஒரு வித பயம் நம்மை கவ்விக் கொள்ளும். எப்படிடா இவ்வளவு தூரம் ஏறினோம் என்று நினைப்போம். உடன் வயதான தம்பதிகள் கைப்பிடியுடன் ஏறிச் செல்வதைப் பார்த்தால், உற்சாகமாகி நடக்கத்தூண்டும். அத்தகைய இயற்கைச்சூழலில், இதமான காற்றில், அமைதியான சூழலில் எவ்வளவு நடந்தாலும் களைப்பே தெரியாது.

இந்த காலத்தில் புதுப்புது செடிகளை நிறைய பயிர் செய்வார்கள். எல்லாத் திருப்பங்களிலும், அமர்வதற்கான பெஞ்சுகள், தண்ணீர்க்குழாய்கள், கழிவு அறைகள் என அனைத்தும் சுத்தமாக இருக்கும். அங்கங்கே ஓய்வு எடுத்துக்கொண்டு மேலே நடக்கலாம்.

இடையே மான்கள் துள்ளி ஓடுவதையும், சில சிறுத்தைக் குட்டிகளையும் கண்டு ரசிக்கலாம். இங்குள்ள அனைவருக்குமே உடல்நலத்தில் அக்கறை ஜாஸ்தி என்பதை மிகத் தெளிவாக புரிந்துகொள்ள முடியும். ஏரிக்கரை பக்கம் பார்த்தால், நடைப்பயிற்சி, ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் என அனைத்துப் பயிற்சிகளிலும் மக்கள் சுறுசுறுப்பாகஇயங்குவதைப் பார்க்க முடியும்.

பெரியவர்கள், முதியவர்கள் என்ற பாகுபாடின்றி உடல்நலத்தில் கவனம் செலுத்துவதில் வல்லவர்கள். அதனால்தான், எண்பது வயதானாலும் வேகமாக நடக்கிறார்கள். வேகமாக கார் ஓட்டுகிறார்கள். எந்நேரமும் சுறுசுறுப்பு. ‘பார்க்’ போன்ற இடங்களில் மிகச்சிறு வயதிலேயே குழந்தைகளையும் உடற்பயிற்சியில் ஈடுபடுத்துகிறார்கள். அலுவலகம் முடித்து வீட்டிற்கு வந்தபின், பொழுதுபோக்கை மேற்கொள்கிறார்கள். இதுதான் இவர்கள் சுறுசுறுப்பிற்குக் காரணம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுநீரக கல் ஏன் வருகிறது? (மருத்துவம்)
Next post கம்பீரக் குரலுக்குச் சொந்தக்கார அம்மா பி.எஸ்.சீதாலட்சுமி!! (மகளிர் பக்கம்)