இயற்கை என்னும் இளைய கன்னி – காஞ்சனா!! (மகளிர் பக்கம்)

Read Time:24 Minute, 27 Second

இயற்கை என்னும் இளைய கன்னி’ என்ற பாடல் அவருக்காகவே புனையப்பட்ட பாடலோ என்று கூட பல நேரங்களில் தோன்றுவதுண்டு. அந்த அளவு உற்சாகம் ததும்ப, மந்தகாசப் புன்னகை முகத்தில் தோன்ற துள்ளலாக நடித்திருப்பார். குறைந்த அளவே சலசலத்தோடும் ஆற்று நீரோட்டத்தின் இடையே தென்படும் பாறைகளில், சற்றே புடவையை இரு கைகளால் உயர்த்திப் பிடித்தவாறே, ஒரு புள்ளிமானைப் போல் தாவித் தாவி ஓடும் அழகு உருவகமாக மனதில் பதிந்த ஒன்று.

தாயற்ற குழந்தைகளின் தாயானவள் மாலதி காஞ்சனா பல படங்களில் அழகுப் பதுமையாக கவர்ச்சிகரமான தோற்றத்தில் வெளிப்பட்டாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு சில படங்களில் மட்டுமே தன் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

இன்றளவும் காஞ்சனாவின் நடிப்புக்கு உதாரணமாகச் சொல்லப்படும் ஒரு படமென்றால் அது ‘சாந்தி நிலையம்’. அப்படத்தின் பாத்திர வார்ப்பு, ஆதரவற்று படித்து வளர்ந்து தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டிய ஏழ்மை நிலையிலிருக்கும் ஒரு பெண்ணுக்குப் பெரிதாக உறவுகளோ உற்சாகங்களோ உந்துதலோ இல்லாத வாழ்க்கையில், பிறரிடம் எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற அன்பைச் செலுத்தக்கூடிய வேடம். தான் படித்த அதே பள்ளியில் ஆசிரியப் பணியேற்று, குழந்தைகள் மீது அன்பைப் பொழியும் ஓர் ஆசிரியருக்கு அதை விட இன்பம் வேறேதுமில்லை.

அதே நேரம் வசதி படைத்த ஒரு ஜமீன் மாளிகையின் தாய், தகப்பன் இல்லாமல் சித்தப்பாவின் ஆதரவில் வாழும் குழந்தைகளுக்குத் தாதியாக, ஆசிரியராகப் பணியாற்றச் செல்லும் அவளுக்கு முழு நேரமும் அந்தக் குழந்தைகளின் அருகிலிருத்தலும் அவர்கள் அவள் மீது செலுத்தும் அன்புமே பேரானந்தம்.

அப்படிப்பட்டவளுக்கு அந்த வீட்டின் எஜமானனே காதலனாக வாய்த்தால் அவளது உற்சாகத்துக்குக் கேட்கவா வேண்டும். அதைத்தான் ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ பாடல் காட்சியில் அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் காஞ்சனா. அந்தப் பெண்ணின் உணர்வுகளை முழுவதும் உள்வாங்கி நடித்த ஒரு படம் அது. அந்தப் பாடலும் காலம் பல கடந்தும் நம் செவிகளை இனிமையாக நிறைத்துக் கொண்டிருக்கிறது. ஆரம்ப கால எஸ்.பி.பி.யின் குரலும் சுசீலாவின் குரலும் ஒத்திசைவாக ஒலிக்கும் இனிமை என்றும் இளமையானது.

மொழிகள் மாறினாலும் உணர்வுகள் மாறவில்லை.‘Sound of Music’ என்ற ஆங்கிலப் படத்தின் மூலக் கருவை உள்வாங்கித் தமிழுக்கு முன்னதாகவே 1968ல் கன்னடத்தில் இக்கதை ‘பேடி பந்தவளு (Bedi Bandhavalu)’ என்ற பெயரில் கல்யாண் குமார், சந்திரகலா, ஜெயம்மா நடிப்பில் கருப்பு வெள்ளைப் படமாக வெளியானது. அதனின்றும் சிற்சில மாற்றங்களுடன் ஈஸ்ட்மென் கலரில், சற்றே பகட்டாக ஏராளமான பொருட்செலவில் ஓராண்டு இடைவெளியில் 1969ல் ‘சாந்தி நிலையம்’ வெளியானது.

எம்.எஸ்.வி. யின் இசையில் அற்புதமான பாடல்கள், கண்ணுக்குக் குளிர்ச்சியாக மார்க்கஸ் பாட்லே யின் ஒளிப்பதிவு, காஞ்சனா, பண்டரிபாய், ஜெமினி, நாகேஷ், ரமா பிரபா மற்றும் குழந்தை நட்சத்திரங்களின் மழலைத்தன்மையை மீறிய ‘பெரிய மனுஷ’ தோரணையிலான நடிப்பு என அனைத்தும் கச்சிதம்.

60களுக்கான படங்களின் தோரணை சற்றும் மாறாத ஒரு படம். ஆதரவற்ற பெண் என்பதால், ஜமீன் குடும்பத்தார் அனைவருமே திருமணமாகி மனைவி உயிருடன் இருக்கிறாள் என்ற மாபெரும் உண்மையை மூடி மறைத்து மாலதியை (காஞ்சனா) தங்கள் குடும்பத்து மருமகளாக்கிக் கொள்ள நினைக்கும் எண்ணம், தங்கள் சுயநலத்தை முன்னிறுத்திய குரூர எண்ணமாகவே தோன்றுகிறது. தன் வாழ்க்கையில் தனிமையையும் துயரத்தையுமே சந்தித்து வளர்ந்த ஒரு பெண்ணுக்கு அவர்கள் இழைக்கும் மாபெரும் துரோகமும் கூட.

ஆனால், படம் இது பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை என்பது துயரம். படம் நெடுக காஞ்சனாவுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம். அப்போதே காஞ்சனா முதிர்கன்னியின் வயதையும் எட்டி விட்டார். காஞ்சனாவின் அசல் வாழ்க்கையின் ஒரு பிரதி பிம்பமோ இப்பாத்திரம் என்று கூட நினைக்கத் தோன்றும்ஆங்கிலத்தில் நடிகை ஜூலி ஆண்ட்ரூஸ், கன்னடத்தில் சந்திரகலா, தமிழில் காஞ்சனா என மூவருமே குழந்தைகளுடனான தாய்மைப் பரிவை வெளிப்படுத்தும் நெருக்கமான உணர்வுக்கு மிக அருகில் நெருங்கி, பேரன்புப் பெண்களாக நடித்திருந்தார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். மொழிகள் பலவானாலும் பெண்ணின் உணர்வுகள் மட்டும் மாறவேயில்லை.

தரின் நாயகியாகப் பல படங்களில் வாய்ப்புதரின் காதலிக்க நேரமில்லையைத் தொடர்ந்து அவரது ‘கொடிமலர்’, ‘சிவந்த மண்’, ‘அவளுக்கென்று ஒரு மனம்’, ‘உத்தரவின்றி உள்ளே வா’ (தரின் தயாரிப்பில் உருவான படம், இயக்குநர் சக்கரவர்த்தி) போன்ற படங்களிலும் நடித்தார் காஞ்சனா. அனைத்துப் படங்களின் கதாபாத்திரங்களுமே வேறுபட்ட தன்மை கொண்டவை.

வாயாடிப் பெண்ணாக…
‘சியாமளா’ என்ற ஒரு வங்காளக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட ‘கொடிமலர்’ சோக ரசத்தைப் பிழிந்து தரும் ஒரு படம். இரு சகோதரிகளில் மூத்தவள் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி; இளையவளோ அக்காவுக்கும் சேர்த்தே பேசி விடக்கூடிய துறுதுறுப்பான வாயாடிப் பெண். தோழிகளுடன் சேர்ந்து ஏரியில் குளிப்பதற்காகச் செல்வதும் அவர்களுடன் ஆட்டம், பாட்டம் என கும்மாளம் போடுவதுமாக இருப்பவள்.

அதேவேளை அக்காளை யாரேனும் இழிவுபடுத்தினால் திருப்பி அடி கொடுக்கத் தயங்காதவள். அக்காளின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்து, பிறந்த வீட்டுக்கே திரும்பி வர, அவளின் மைத்துனனைக் காதலித்து மணந்துகொண்டு அதே வீட்டின் இளைய மருமகளாகி மாமியாருக்குத் தக்க பதிலடி கொடுக்கிறாள். தன் அக்காவுக்கு நியாயம் கிடைக்கத் தன் கணவனுடன் இணைந்து நியாயமான பல வாதங்களை முன்னிறுத்தி ஜெயிக்கிறாள். அக்காளாக விஜயகுமாரியும், தங்கையாக காஞ்சனாவும் நடிப்பில் வெளுத்து வாங்கினார்கள்.

வாய் பேச முடியாத பெண்ணானாலும் அக்காளே படத்தின் முதன்மை நாயகி. காஞ்சனாவுக்கு ஆடல் பாடலுடன் கிராமத்துப் பெண்ணாக நடிப்பதற்கும் நிறைய வாய்ப்புள்ள படமாக அமைந்தது. கதாநாயகியர் இருவரில் ஒருவரை துயரத்தின் விளிம்பிலும் மற்றவரை கொண்டாட்டம் மிக்கவராகவும் சித்தரித்தது.

புரட்சிப் பாதையில் பயணித்த இளவரசி சித்ரலேகா

தரின் ‘சிவந்த மண்’ படத்தின் நாயகி. போர்ச்சுகீசிய அரசுக்கு விலை போகும் வசந்தபுரியின் திவான், நாட்டையே அவர்களிடம் அடகு வைக்கிறான். மன்னரை சிறைப்படுத்தி விட்டு, நாட்டைத் தன் வசமாக்கிக்கொண்டு, மக்களை வெறி கொண்டு வேட்டையாடுகிறான். திவானை எதிர்த்து மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்புக் குரல்களும் புரட்சியாளர்களும் உருவாகிறார்கள்.

அந்தப் புரட்சிக் குழுவின் ஒரே ஒரு பெண்ணாக நாட்டின் இளவரசி சித்ரலேகாவும் இருக்கிறாள். பெரும்பாலும் கவர்ச்சி நடனங்களை ஆடியே ராணுவ வீர்ர்களைக் கவிழ்க்கும் வேலையை ஒரு புரட்சிக்காரி செய்து விட முடியும் என்ற புது தியரியை இயக்குநர் தர் வெளிப்படுத்தினார். இளவரசியாக காஞ்சனா தன் பாத்திரத்தை சிறப்பாகவே செய்தார்.

முதன்முதலாக ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்தி, கண்ணுக்குக் குளிர்ச்சியாக ரசிகர்களுக்கு அளித்த பெருமையும் தரையே சாரும். படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், பாடல்கள் விருந்தாக அமைந்தன. எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ‘பட்டத்து ராணி பார்க்கும் பார்வை’ பாடல் அதில் மாஸ்டர் பீஸ்.

தோழிகள் இருவரின் நட்பு
அவளுக்கென்று ஒரு மனம் பெண்ணின் ஆழ்ந்த மன உணர்வுகளையும், அவளின் மென்மையான காதலையும், தோழிக்காக தன்னையே வருத்திக்கொண்டு அழிந்து போகும் ஒரு பெண்ணின் கதை. தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் என்றால் அவர் நடிகை பாரதி. காஞ்சனாவுக்கு இதில் இரண்டாம் இடம்தான்.

இரு தோழிகளுமே பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் அன்பும் மரியாதையும் பாசமும் கொண்டவர்களாக உருவாக்கப்பட்டிருந்தார்கள். இரு பெண்களின் குணாதிசயம், காஞ்சனா சற்றே காதலில் மயங்கினாலும் தன் நிலை உணர்ந்து சுதாரித்துக்கொண்டு, தன் காதலனுக்கு எழுதும் அந்தக் கடிதத்தின் வரிகள் என ஒவ்வொன்றும் மிகச் சிறப்பானவை. பெண்ணுக்கான மாண்பு, மரியாதையை மிக அழுத்தமாக வலியுறுத்தியது இப்படம்.

நகைச்சுவைக்கு நடுவில் ஒரு குளிர் தென்றல்
நான்கு பிரம்மச்சாரி நண்பர்களுக்கு இடையில் தற்செயலாக அடைக்கலம் தேடி வந்த ஒரு பாவப்பட்ட பெண்ணாக ஒரு அழகு தேவதையாக படம் முழுதும் நடமாடுவார் காஞ்சனா, அடைக்கலம் கொடுத்த அந்த வசதியான இளைஞனின் காதலியாக படம் நெடுக காதலும் டூயட்டுமாக நகர்ந்தாலும் நண்பர்கள் பட்டாளத்தின் நகைச்சுவைச் சிதறல்களுக்குப் பஞ்சமேயில்லை. மற்றொரு தாயும் மனநிலை பிறழ்ந்தவளான மகளும் அடைக்கலமாக அதே வீட்டுக்குள் வர, அந்தப் பெண் (ரமாபிரபா) நகைச்சுவையில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டார். நகைச்சுவை அதகளம் இப்படம் என்றால் அது மிகையில்லை.

எம்.ஜி.ஆர். படங்களில் இரண்டாவது நாயகி
எம்.ஜி.ஆருடன் ‘பறக்கும் பாவை’, ‘நான் ஏன் பிறந்தேன்’ என இரு படங்களில் மட்டுமே நடித்தார். இரண்டாவது நாயகியாகவே இப்படங்களில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இரு படங்களிலுமே கதாநாயகனை ஒருதலையாகக் காதலிக்கவும் கனவுக் காட்சிகளில் மட்டும்
டூயட் பாடும் யோகமும், வாய்ப்பும் காஞ்சனாவுக்குக் கிடைத்தது.

பறக்கும் பாவையில் ‘முத்தமோ மோகமோ தத்தி வந்த வேகமோ’ பாடலில் காஞ்சனா மிகக் குறைந்த அளவான கவுனுடன் ’பார்பி டால்’ போல் சுழன்று சுழன்று ஆடினார். பொறுமையையும் அன்பையும் மேற்கொள்ள வேண்டிய நர்ஸ் பணியில் இருக்கும் பெண்ணொருவர், ஒருதலைக் காதலுக்காக வேறொரு பெண்ணைக் கொல்லத் துணிவதாக இறுதியில் அந்த சஸ்பென்ஸ் உடைபடும்போது பார்வையாளர்களான நமக்கு அதிர்ச்சியை விட, சிரிப்பும் ‘பாவம், காஞ்சனா’ என்ற பச்சாதாபமும் எழுந்தது.

‘நான் ஏன் பிறந்தேன்’ படத்திலோ நடக்க முடியாதவராக, சக்கர நாற்காலியில் முடங்கிக் கிடக்கும் நோயாளிப் பெண்ணாக அறிமுகமாகி, நாயகன் அளிக்கும் மனோதத்துவ சிகிச்சையால் நடமாட மட்டுமல்லாமல் ஓடியாடித் திரியும் அளவுக்கு ஒரு சராசரிப் பெண்ணாக மாறுவதுடன், அதுவே நாயகன் மீது காதல் கொள்ளவும் வழி வகுக்கிறது.

நீதி நெறி பிறழாத வழக்கறிஞராக துலாபாரம் படம் வெளியாகி 50 ஆண்டுகளாகி விட்டது. இப்போதும் நினைவில் நிற்கும் படமாக அது இருக்கிறது. கதாநாயகி சாரதா ஏற்ற வேடத்துக்குச் சற்றும் குறையாத பாத்திரம் காஞ்சனா ஏற்ற அவருடைய கல்லூரித் தோழி வேடம். கல்லூரிக் காலத்துடன் தோழிகள் இருவரின் நட்பு காலாவதியாகி விடாமல் வாழ்நாள் முழுவதும் நட்பைத் தொடர்பவர்களாக அதை உயர்த்திப் பிடிப்பவர்களாக இருவரும் சித்தரிக்கப்பட்டிருந்தார்கள்.

பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளும் கூட அவர்களின் நட்பைச் சிதைக்கவில்லை என்பது இங்கு முதன்மையானது. அதேபோல் தான் விரும்பித் தேர்ந்தெடுத்த வழக்கறிஞர் தொழிலுக்கு நேர்மையானவளாகவும் இருக்கிறாள். குழந்தைகளுக்கு உணவில் விஷம் வைத்துக் கொன்று விட்டதாகக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிக் கூண்டில் நிற்பவள் தன் உயிர்த்தோழியே என்றாலும், நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் வாதாடி அவளுக்கு தண்டனை பெற்றுத் தருவதும், பின் தோழியாக அவளை சிறையில் சந்தித்து தன் மன உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதுமாக அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார் காஞ்சனா. துலாபாரம் 1969 (தமிழ்), மனுஷலு மாறாலி (Manushalu Maaraali 1970), சமஜ் கோ பதல் டாலோ (Samaj Ko Badhal Daalo 1970) என தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இந்த வேடத்தை ஏற்று நடித்திருந்தார் காஞ்சனா.

வெற்றிப் படங்களில் காஞ்சனா இருந்தார்
அவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்ற படங்களே என்றாலும், காஞ்சனாவால் மட்டுமே அந்த வெற்றி கிடைத்து விடவில்லை. தமிழில் பெரு வெற்றி பெற்ற பல படங்களில் அவரின் பங்களிப்பும் இருந்தது. பல படங்களில் அவர் இரண்டாவது நாயகியாகவே இருந்திருக்கிறார். அதிலும் சில படங்களில் அவருடைய நடிப்பு தனித்தன்மையுடன் விளங்கியது. அவற்றில் குறிப்பிடத்தக்க படங்கள் ‘கொடி மலர்’, ’அவளுக்கென்று ஒரு மனம்’, ‘துலாபாரம்’ போன்றவை.

‘அதே கண்கள்’ தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் படம். சஸ்பென்ஸ், கிரைம் த்ரில்லர் வகையில் வந்த இப்
படத்தில் காஞ்சனாவுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகளை விட தன் கல்லூரித் தோழிகளுடனும், காதலனுடனும் ஆடிப் பாடிப் பொழுதைக் கழிப்பதற்கே நேரம் சரியாகப் போனது. ஆனால், ஒரு விஷயம் இவர் நடித்த படங்களில் எல்லாம் இவருக்கு மிகப் பிரமாதமான பாடல்கள் அமைந்தன.

‘தங்கை’ படத்தில் இரவு விடுதியில் கவர்ச்சியாக நடனமாடும் பெண்ணாக நடித்ததுடன், சிவாஜியை ஒருதலைப்பட்சமாகக் காதலித்து உயிரை விடுபவராக நடித்தார். அதேபோல், ‘விளையாட்டுப் பிள்ளை’ யிலும் ஒரு சமஸ்தானத்தின் மெத்தப் படித்த நவநாகரிகம் மிக்க இளவரசியாக நடித்திருந்தார். தமிழில் இறுதியாக ‘அவன் ஒரு சரித்திரம்’ படத்தில் ‘வணக்கம் பல முறை சொன்னேன், சபையினர் முன்னே’ எனப் பாடியவாறே அறிமுகமாவார். மேற்கண்ட மூன்று படங்களிலும் சிவாஜி கதாநாயகன். காஞ்சனா இரண்டாவது நாயகி மட்டுமே. இதற்குப் பின் 80களில் ஜானி, மௌனராகம் போன்ற படங்களில் நடித்தார் என்பதை விட தலைகாட்டி விட்டுப் போனார் என்பதுதான் சரியாக இருக்கும்.

மேடை நாடகங்களிலும் கூட தன் பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார் காஞ்சனா.
பின்னர் இந்திப் படங்களில் நடிக்க வந்த நடிகை வித்யா பாலன், காஞ்சனாவின் சாயலில் அவரை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறார்.

காதலிக்க நேரமில்லாமலே போன முரண் வாழ்க்கைதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் 150 படங்களுக்கு மேல் நடித்தவர். 70களிலேயே காஞ்சனாவுக்குத் தமிழ்ப்படங்களின் தொடர்பற்றுப் போனது. இறுதியாக அவர் முதன்மைப் பாத்திரம் ஏற்ற படம் என்றால் அது ‘அவன் ஒரு சரித்திரம்’ படம்தான்.

அதன் பின் குணச்சித்திர வேடங்களில் குறைந்த நேரமே தமிழ்ப் படங்களில் தோன்றினார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்ட படங்களில் முதன்மை நாயகியாக காஞ்சனாவே இருந்தார். பிற மொழிகளை விட தெலுங்குத் திரையுலகில் அவரது பங்களிப்பு மிக அதிகம். தாய்மொழி தெலுங்கு என்பதாலோ என்னவோ தெலுங்கு பூமி அவரை அதிகமாகப் பயன்படுத்திக்
கொண்டது.

‘காதலிக்க நேரமில்லை’ எனத் தொடங்கிய அவரது திரை வாழ்க்கையின் எஞ்சிய காலம் வரையில் அவருக்குக் காதலிக்க நேரமில்லாமலே போனது எத்தகைய முரண்? தன் சொந்த வாழ்க்கையின் துயரங்களிலேயே தோய்ந்து, தான் எங்கிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளாமல், முற்றிலும் தன்னை மறைத்துக் கொண்டு வாழ நேர்ந்த நிலைமையாலும் கவனம் முழுவதும் அதிலேயே செலுத்தப்பட்டதாலும் யாரையும் காதலிக்கவோ திருமணம் பற்றியெல்லாம் சிந்திக்கவோ நேரமில்லாமலே போனது. மிக விரைவாகவே முதுமைத்தோற்றம் அவரை ஆட்கொண்டு விட்டது.

எல்லோருக்கும் முதுமை வரும். இளமைத் தோற்றம் எப்போதும் நீடித்திருப்பதில்லை. நடிகைகள் என்றால் என்றும் பதினாறாகவே இருக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை. காஞ்சனாவின் முதுமைத் தோற்றம் குறித்து மிக எள்ளலுடன் எழுதப்பட்ட சில எழுத்துகளை வாசிக்க நேர்ந்தபோது அப்படித்தான் எனக்குத் தோன்றியது.

தற்போது 80 வயதை எட்டிப் பிடித்து அதையும் நிறைவு செய்து விட்ட அவர் நெற்றி நிறைய விபூதி, குங்குமம், ஆலய வழிபாடு என ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்டவராக ஒரு துறவியைப் போல தன் தங்கை குடும்பத்துடன் பெங்களூருவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வானவில் எப்போதாவதுதான் தோன்றி ஒளிரும், அப்படியான ஒரு வண்ணமயமான வானவில் தான் நடிகை காஞ்சனாவும்.

(ரசிப்போம்! )

காஞ்சனா நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

மணாளனே மங்கையின் பாக்கியம், காதலிக்க நேரமில்லை, வீர அபிமன்யு, மோட்டார் சுந்தரம் பிள்ளை, தேடி வந்த திருமகள், பறக்கும் பாவை, கொடி மலர், மறக்க மடியுமா?, அதே கண்கள், பாமா விஜயம், தங்கை, நாலும் தெரிந்தவன், செல்லப்பெண், பொண்ணு மாப்பிள்ளே, சாந்தி நிலையம், துலாபாரம், நூறாண்டு காலம் வாழ்க, சிவந்த மண், விளையாட்டுப் பிள்ளை, காதல் ஜோதி, அவளுக்கென்று ஓர் மனம், உத்தரவின்றி உள்ளே வா, பாட்டொன்று கேட்டேன், நான் ஏன் பிறந்தேன்?, நியாயம் கேட்கிறோம், எங்களுக்கும் காதல் வரும், அவன் ஒரு சரித்திரம், நினைவில் ஒரு மலர், ஜெயா நீ ஜெயிச்சுட்டே, ஜானி, ஜம்போ, லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, பகடை பன்னிரெண்டு, கிராமத்துக் கிளிகள், காட்டுக்குள்ளே திருவிழா, மௌன ராகம், குளிர் கால மேகங்கள், நானும் நீயும், கிழக்காப்பிரிக்காவில் ஷீலா, நீதியா நியாயமா?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
Next post இலங்கை சுற்றுலா |விசா பெற எளிய வழிமுறை!! (வீடியோ)