By 29 January 2020 0 Comments

‘தலைக்கறிக்கு’ போட்டிபோடும் தலைநகரில் தமிழர் அரசியல்!! (கட்டுரை)

ஆட்சிக்கு வந்திருக்கும் கோட்டாபயவைத் தமிழர் தரப்பு எவ்வாறு சமாளிக்கப்போகிறது?

அதற்குத் தமிழர் தரப்பு வகுத்திருக்கும் புதிய அரசியல் வியூகங்கள் என்ன?

பழைய சூத்திரங்கள் இனிச் செல்லுபடியாகுமா?

தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகப் பார்க்கின்ற அரசியல் கருத்துகளை வெளிப்படையாகவே தெரிவித்துவரும் கோட்டாபயவை, தமிழர் தரப்பு இனி யாரை வைத்து மடக்கப்போகிறது? என்றெல்லாம் கேள்விகள், சந்தேகங்கள் வலுத்துக் கொண்டு வருகின்றபோது, தமிழர் தரப்போ, புதிய அரசியல் சிக்கல்களோடு குத்திமுறிந்துகொண்டிருப்பது, அண்மைக்கால அரசியல் நகர்வுகள் மூலம் வெளிச்சமாகி இருக்கிறது.

அதாவது, கொழும்பு தேர்தல் மாவட்டம் உட்பட, மேல் மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் போதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசிப்பது, தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.

முன்பெல்லாம் வெறும் அரசல் புரசலாக வெளிவந்துகொண்டிருந்த இந்தச் செய்தி, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சிக் கூட்டத்தின் மூலம் உத்தியோகபூர்வமாகி இருக்கிறது.

பதிவுசெய்யப்பட்ட எந்த அரசியல் கட்சியும், நாட்டின் எந்தப் பாகத்திலும் தேர்தலில் போட்டியிடலாம் என்பது ஜனநாயக உரிமை; அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால், தமிழ்மக்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்று, வலுவான ஒற்றைக் குரலாக, கொள்கையில் உறுதிப்பாட்டைப் பேணிவருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்றைய நிலையில், கட்சிக்குள் பல்வேறு பூசல்களைச் சந்தித்திருக்கிறது.

கூட்டமைப்பிலிருந்து பலர் பிரிந்துசென்று, புதுக்கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள். பிரியாதவர்கள்கூட, கூட்டமைப்புக்குள் இருந்துகொண்டு, இன்னமும் பல சிக்கல்களைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, கூட்டமைப்புக்கு எதிர்நிலையில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற தரப்புகள், தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த அரசியல் தளம்பல் நிலைமையைத் தங்களுக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொண்டு, “நாங்கள் அப்போதே சொன்னோம்தானே” என்று கோஷ்டி சேர்ந்து, ‘கோரஸ்’ பாடி, கூட்டமைப்பை மேலும் மேலும் பலவீனமாக்கும் வேலைகளை, மக்கள் மத்தியில் முன்னெடுத்து வருகின்றன.

இவ்வாறானதொரு நிலையில், தென்னிலங்கையில் போட்டி போடுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வியூகம் வகுப்பது தேவைதானா, இந்த நேரம் பார்த்து, கூட்டமைப்பு ‘விளக்குமாற்றினை’ தூக்குவது ஏன்?

இந்தக் கேள்விகளுக்குப் பின்னாலிருக்கும், பல ‘உள்ளடி அரசியல்’ நகர்வுகள்தான், இப்படியானதொரு புதிய அரசியல் விளைவை ஏற்படுத்தி இருக்கின்றன என்பது புரியும்.
இந்த விடயத்தைச் சில, நிகர் அரசியல் காட்சித்துண்டுகளின் வழியாகப் பார்க்கலாம்.

தலைநகர் கொழும்புக்குக் குடிபெயர்ந்து, பல காலமாக வாழ்ந்த – வாழ்ந்து வருகின்ற தமிழர்களின் அரசியல் விருப்பம் என்பது புதியதல்ல. ஜி.ஜி. பொன்னம்பலத்துக்கு முன்னரும் அதற்குப் பின்னருமாக, அந்த அரசியலுக்குப் பெரிய பாரம்பரியம் இருப்பதை அனைவரும் அறிவர்.

ஆனால், விடுதலைப் புலிகளின் வரவு, அவர்களது வளர்ச்சிக்குப் பின்னர், புலிகளின் ஆசிர்வாதம் பெற்றவர்களாக, இந்தக் கொழும்புத் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்ந்ததும்கூட, அனைவருக்கும் தெரிந்த கதை.

அந்த ஆசிர்வாதமே, அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய ஆதரவைப் பெற்றுத்தந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அது, அமைச்சர் மகேஸ்வரன் வரைக்கும் பின்னர் நீண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின்போது, கொழும்பைத் தளமாகக்கொண்ட பலர், அந்த அணியின் ஊடாக, யாழ்ப்பாணத்தில் ஆசனத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிசெய்து, விடுதலைப் புலிகளின் அபிமானத்தை வெற்றி கொள்வதற்குத் தவறியதால், தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை இழந்தனர். இவர்களில் கலாநிதி குமரகுருபரன், சட்டத்தரணி சிறிகாந்தா போன்ற பலர் அடங்குவர்.

இவ்வாறு வாய்ப்பிழந்தவர்கள், பின்னர் நாடாளுமன்றம் செல்வதற்குப் பல்வேறு காலகட்டப்பகுதிகளில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். வேறு கட்சிகளை அணுகி நின்றார்கள். கொழும்பில் எப்படியாவது போட்டியிடுவதற்கு முயன்று பார்த்தார்கள். அது சரிவரவில்லை. இதில் சில தகுதியானவர்களும் ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்பதை மறுக்கமுடியாது.

ஆக, கொழும்புத் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்து, நாடாளுமன்றம் செல்லவேண்டும் என்ற இந்த ஆர்வமும் நம்பிக்கையும் இன்னமும் இந்தக் கொழும்புத் தமிழ் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் நொதித்துக்கொண்டுதான் இருக்கிறது.

அதை எந்த வழியில் நெறிப்படுத்துவது? யாரைப் பிடித்து ஒப்பேற்றுவது என்பது, இவர்களுக்கு இருக்கின்ற பெரிய பிரச்சினை.

மறுபுறுத்தில், கொழும்பில் தமிழர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் என்பது, இப்போதைக்கு மனோ கணேசனாகத்தான் இருந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம். அவரது அரசியல் வளர்ச்சி என்பது, இன்றைய காலகட்டத்தில் இலேசுப்பட்டதல்ல.

இங்குள்ள பிரச்சினை, மனோ கணேசனைச் சுற்றித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதால், இதை இங்கு விரிவாகப் பார்ப்பது முக்கியம்.

2001ஆம் ஆண்டு முதல் தடவையாக, நாடாளுமன்றம் சென்ற மனோ கணேசன், அடுத்த தடவையும் 2004 ஆம் ஆண்டும் வெற்றிபெற்றுவிட்டு, அதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியால் கண்டியில் போட்டியிடக் கேட்கப்படுகிறார்.

அங்கு போட்டியிட்டுத் தோல்வி அடைந்ததுடன், அவரது நாடாளுமன்ற அரசியல் தேக்கமடைகிறது. ஆனால், அவர் சளைக்கவில்லை; 2011 இல் கொழும்பு மாநகர சபை ஆசனத்துக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுகிறார்.

2014 இல் மேல் மாகாண சபை ஆசனத்துக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று முன்னே வருகிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்னர், தன்னைத் தெரிவுசெய்த மக்களிடம் மீண்டும் தனது ஆதரவைக் கோருகிறார். 2015 இல் சொல்லி வைத்தாற்போல அடித்து வெல்கிறார்; நாடாளுமன்றம் செல்கிறார். இவ்வாறான வெற்றியாளன் மனோ கணேசனைத் தனது செல்லப் பிள்ளையாக வைத்திருந்த ரணில், கடந்த ஆட்சிக்காலத்தில் கூட்டமைப்புக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு எத்தனித்தார்.

அதாவது, கூட்டமைப்பினர் தனக்குச் சில விடயங்களில் கூடிய அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு விளைந்த தருணங்களில், கூட்டமைப்புக்கு வெடி வைக்கும் விதமாக, மனோவை வடக்குக்கு அனுப்பினார்; அங்கு மனோ கணேசனின் கட்சியை உருவாக்குவதன் மூலம், கூட்டமைப்புக்குச் சின்னத் தலையிடியைக் கொடுப்பதற்கு ரணில் முயற்சித்தார்.

புலிகளுக்கு எதிராகக் கருணாவை ரணில் எவ்வாறு பயன்படுத்தினாரோ, அதைப்போன்றதொரு வியூகத்தைக் கூட்டமைப்புக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு ரணில் சாதுரியமாகத் திட்டமிட்டார்.

இது, வடக்கு மக்களின் மத்தியில் நன்றாக எடுபடும் என்பது ரணிலுக்கு நன்கு தெரியும். ஏனெனில், கொள்கை அரசியல், சிங்கள ஆட்சிக்கு எதிரான நிலைப்பாடு என்று, என்னதான் இறுக்கமான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், வடக்கு மக்களில் ஒரு பகுதியினர், ‘தேவை அரசியலுக்கு’ செவிசாய்ப்பவர்கள் என்பது யதார்த்தம்.

கொழும்பிலும் வாழிடங்களிலும் தங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கு, ஒரு தமிழர் பிரதிநிதித்துவம் அவசியம் என்ற ‘தேவை அரசியலை’ இந்த மக்கள் ஆமோதிப்பவர்கள். வர்த்தக சமூகத்தில் ஒரு பகுதியினர் உட்படப் பலரும் இந்தப் பட்டியலில் அடங்குவர்.

அதேவேளை, கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மனோ கணேசன் மூலமாகப் பல தேவை அரசியலைச் செய்யவேண்டிய கட்டாயம் இருந்தது. உதாரணமாக, வடக்கிலும் கிழக்கிலும் கடந்த ஆட்சிக்காலத்தில் மனோ கணேசனின் அமைச்சுக் காலத்தில், அவரால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளைக் குறிப்பிடலாம்.

மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் இந்தப் பலவீனத்தை, மனோவின் ஊடாகப் பயன்படுத்திக் கொண்டால், அது கூட்டமைப்பின் வாக்கு வங்கிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது மாத்திரமல்லாமல், மறைமுகமாக ஓர் அரசியல் பிடியை கூட்டமைப்பின் மீது பிரயோகிக்கலாம் என்பது ரணிலின் கணக்காக இருந்தது.

ஆக, இந்த அரசியல் சூத்திரம், ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு, கடந்த ஆட்சியில் அரைகுறையாகக் கைவிடப்பட்டது. இருந்தாலும், இப்போது மனோவின் தலைமையில் அது மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாகவே தெரிகிறது.

மனோவின் அரசியல், தற்போது அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்கிறது. சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் களத்திலும் அவரது அரசியல் வினைத்திறனோடு முன்னேற்றம் காண்கிறது; மக்களின் மத்தியில் எடுபடுகிறது.

அவ்வப்போது, சர்சைகளை ஏற்படுத்தி, தன்னை மக்களின் கண்களில் வைத்திருக்கும் உத்தி உட்பட, பல விடயங்களை மிகுந்த சமயோசிதமாக அவர் அணுகிச்செல்கிறார். அவரது இந்த அரசியல் பாதையில், இப்போதெல்லாம் பார்த்துப் பாராமல் கூட்டமைப்பை நன்றாகத் தாக்குகிறார். அதன் இயலாத்தன்மைகளை மக்களின் முன்பாக அம்மணமாக்கிக் காண்பிக்கிறார்.

இது ஒரு முக்கியமாக இடம்!

கூட்டமைப்பைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட, பல்வேறு வடக்குக் கட்சிகள் அரசியல் ரீதியாகச் சேறடிக்கின்றன, விமர்சனம் என்ற பெயரில், ஏதேதோ எல்லாம் செய்கின்றன.

ஆனால், கூட்டமைப்புக்கு அதைப்பற்றி எந்தக்கவலையும் கிடையாது. ஏனெனில், இவ்வாறு சேறடிக்கும் தரப்புகளின் அரசியல் கொள்ளளவு, எவ்வளவு என்பது கூட்டமைப்பின் தலைமைக்கு நன்றாகவே தெரியும்.

இன்னும் சொல்லப்போனால், இந்த விமர்சனத் தரப்புக்கள் அனைத்தும் சேர்ந்துதான் கூட்டமைப்புக்கான இலவச விளம்பரத்தைச் செய்துவருகின்றன; விக்னேஸ்வரன் உட்பட.
ஆனால், மனோ கணேசன் அப்படியானவர் அல்லர்.

மனோ கணேசன் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் அரசியல் மொழி தெரிந்தவர். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசோடு, பேசுகின்ற வல்லமையைக் கொண்டிருப்பவர். எந்தத் தரப்போடும் உறவுகளை முற்றாக முறிப்பவர் அல்லர். அரசியலின் நெளிவு சுளிவுகளை அறிந்து, கடந்த 20 வருடங்களாக, அரசியலில் ஆழஅகலக் காலூன்றி நிற்கின்றார்.

இப்படிப்பட்டவர், வடக்கில் காலூன்றப் பார்க்கிறார் என்றால், அவர் குறித்துக் கூட்டமைப்பும் அச்சமும் கவலையும் அடையத்தான் வேண்டும்.

மனோ கணேசன் வடக்கில் காலூன்றப் பார்ப்பதும் ஆசனங்களைக் கைப்பற்ற முயற்சிப்பதும் வெற்றியளிக்குமா என்றொரு கேள்வி எழலாம்.

ஆனால், அவரது முயற்சிக்கு, இப்போது பலன் கிடைக்காவிட்டாலும் எதிர்காலத்தில் கிடைப்பதற்கான ஆரம்பமாக இது இருக்கும். அதேவேளை, அவர் எதிர்பார்க்கின்ற, கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் நோக்கை நிறைவேற்றும் என்பதில் சந்தேகமில்லை.

அதன் விளைவுதான், கூட்டமைப்பின் தென்னிலங்கை அரசியல் பிரவேசம். அதாவது, ‘நீ எங்கள் மடியில் கை வைத்தால், நாங்கள் உன் மடியில் கை வைப்போம்’ என்ற தத்துவத்துடன், ஏற்கெனவே அரசியல் ஆசையோடு, பன்னெடுங்காலமாகப் ‘படையெடுத்து ஓய்ந்தவர்களின்’ பின்னணியோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கொழும்பில் கால் வைக்கப் பார்க்கிறது.

இந்த அரசியல் பிரவேசமானது, வெறுமனே பழிக்கு பழி என்ற ஒற்றை வரியின் ஊடாகப் பார்க்கப்படக் கூடியது அல்ல; பார்க்கப்பட வேண்டியதும் அல்ல.

சிறுபான்மை சமூகத்தின் வாக்கு வங்கிகளைச் சிறுபான்மைச் சமூகங்களே வேட்டையாடி வீணடிப்பதால், வெற்றியை வேறோரு தரப்பிடம் தாரைவார்த்துக் கொடுக்கும் முயற்சியாகவே இது போய்முடியும்.Post a Comment

Protected by WP Anti Spam