கர்ப்பிணிகள் என்ன சாப்பிடலாம்? ( மருத்துவம்)

Read Time:12 Minute, 12 Second

கர்ப்பிணிக்கு உணவு விஷயத்தில் இலவச ஆலோசனைகள் நிறைய கிடைக்கும்.
‘குங்குமப்பூ போட்டு பால் குடி… பிள்ளை சிவப்பா பிறக்கட்டும்’
‘மறந்தும் அன்னாசி சாப்பிடாதே… அபார்ஷன் ஆயிடும்’
‘பேரீச்சை சாப்பிட்டால் குழந்தை கறுப்பாகப் பிறக்கும்.’

– இப்படி பல்வேறு அறிவுரைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப்
பஞ்சமில்லாமல் கிடைக்கும்.

ஏற்கெனவே கர்ப்பத்தை சுமந்துகொண்டு, பிரசவம் எனும் புதிய அனுபவத்துக்குக் குழப்பத்துடன் தயாராகிக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு இந்த ஆலோசனைகள் எல்லாம் மேலும் குழப்பத்தைத் தந்துவிடும்.உண்மையில் கர்ப்பிணிகள் என்னதான் சாப்பிட வேண்டும்? எவற்றையெல்லாம் சாப்பிடக் கூடாது? பார்க்கலாம்…

கர்ப்பிணிகள் சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்சம் கூடுதலாக அக்கறை காட்ட வேண்டியது முக்கியம்தான். இதுவரை அவர்களுக்கு மட்டுமே சாப்பிட்டார்கள். இப்போது உடலுக்குள் வளரும் குழந்தைக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.கர்ப்பிணியின் உடல் தேவையைப் பொறுத்து உணவின் வகையும் அளவும் வேறுபடும். அப்போது மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடுவதுதான் பொருத்தம். எனினும் பொதுவான பரிந்துரைகளும் உண்டு.

கர்ப்பிணிக்குக் கர்ப்பத்தின் தொடக்கத்தில் தினமும் 2 ஆயிரத்து 200 கலோரி உணவும், கர்ப்பத்தின் மத்திய மாதங்களிலிருந்து தினசரி 2 ஆயிரத்து 500 கலோரி உணவும் தேவை. கர்ப்பிணிக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால், பிறக்கும் குழந்தைக்கு வளர்ச்சிக் குறைபாடுகள் ஏற்படவும், எடை குறைவாக இருக்கவும் அதிக வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்கவே இந்த யோசனை.

உடல் எடை முக்கியம் தற்போது பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு உடல்பருமன்தான் மிகப் பெரிய பிரச்னை. ‘கர்ப்பமாகிவிட்டேன்’ என்று டாக்டரிடம் முதல் பரிசோதனைக்கு வரும்போது இருக்கிற உடல்வாகுக்கும் பிரசவத்துக்கு வரும்போது இருக்கிற உடல்வாகுக்கும் இடையே அசுர வித்தியாசம் இருப்பதைப் பல கர்ப்பிணிகளிடம் காணலாம்.

கர்ப்ப காலத்தில் உணவை அதிகமாகச் சாப்பிட வேண்டும் எனப் பொதுவாகத் தெரிந்துகொண்டு சாப்பிடுபவர்கள்தான் அதிகம். பதிலாக, எந்தச்சத்து அதிகம் தேவை என சரியாகத் தெரிந்துகொண்டு, அந்தச் சத்துள்ள உணவுகளை மட்டும் அதிகம் சாப்பிடுவது நல்லது. இப்படிச் சாப்பிடுவது கர்ப்பிணிக்கு உடல்பருமன் ஏற்படுவதைத் தடுத்து விடும்.

ஏற்கெனவே சரியான உடல் எடை உள்ள கர்ப்பிணிகள் அதிகபட்சமாக 11 கிலோ கூடலாம். முதல் மூன்று மாதங்களில் ஒன்று முதல் இரண்டு கிலோ எடை வரையும், அதற்குப் பிறகு மாதாமாதம் ஒன்றரை கிலோ வரையும் எடை கூடலாம்.ஏற்கெனவே உடல்பருமன் இருப்பவர்கள் அதிகபட்சமாக 7 கிலோ எடை கூடலாம். குழந்தை பிறந்த பிறகும் சில அம்மாக்களுக்கு உடல்பருமன் நீடிப்பதற்கு கர்ப்பத்தின்போது உடல் எடை கூடுவதே அடிப்படைக் காரணம். எனவே, இவர்கள்தான் அதிக எச்சரிக்கையுடன் இருந்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பத்தின் தொடக்கத்தில் 45 கிலோவுக்குக் குறைவாக உடல் எடை இருப்பவர்கள் 12 முதல் 18 கிலோ வரை எடை கூடலாம்.
கர்ப்ப காலம் முழுமையும் உடல் எடை அதிகரிப்பதைக் கர்ப்பிணிகள் கண்காணிக்க வேண்டும். குறுகிய காலத்தில் உடல் எடை திடீரென அதிகரிப்பதும் ஆபத்து; குறைவதும் ஆபத்து.

இதற்காகவே, இந்த எச்சரிக்கை!

சத்துகளைப் பொறுத்தவரை கர்ப்பிணிகளுக்குப் புரதம், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை சிறிது அதிகம் தேவை.புரதச்சத்துதான் ஆதாரம் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்குப் புரதச்சத்துதான் ஆதாரம். பால் மற்றும் பால் பொருட்கள், கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை போன்ற முழுத்தானியங்கள், முளைக்கட்டியப் பயறு, சுண்டல், பருப்பு வகைகள், இறைச்சி, மீன், முட்டை, காளான் போன்ற உணவுகளை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே உடற்பருமன் உள்ளவர்கள் சீஸ், பனீர், ஐஸ்கிரீம், மென்பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். வியாபாரரீதியில் விற்கப்படும் புரதச்சத்துப் பானங்கள் அவசியமில்லை.

கர்ப்பம் தொடங்கும்போது கர்ப்பிணிக்குத் தினமும் 50 கிராம் புரதம் தேவை. ஐந்தாவது மாதம் தொடங்கிய பிறகு 60 கிராம் புரதம் தேவை. இதில் அசைவ உணவு மட்டும் 20 கிராம் தேவை. இதற்கு தினமும் ஒரு முட்டை, சிக்கன் சூப் எடுத்துக் கொள்ளலாம்.கால்சியம் தேவைகர்ப்பம் தொடங்கும்போது கர்ப்பிணிக்குத் தினமும் 500 மி.கி. கால்சியமும் ஐந்தாவது மாதம் தொடங்கிய பிறகு 1000 மி.கி. கால்சியமும் தேவை. கர்ப்பிணிகள் தினமும் அரை லிட்டர் பாலும் 2 கப் தயிரும் சாப்பிட வேண்டும்.

இதிலிருந்து குழந்தையின் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். பால் பொருட்களுக்கு அலர்ஜி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரைகளைச் சாப்பிடலாம். கோதுமை, கேழ்வரகு, ராஜ்மா, கொண்டைக் கடலை ஆகியவற்றிலும் கால்சியம் மிகுந்துள்ளது. காய்களும் பழங்களும் முக்கியம் காய்கறிகளும் பழங்களும்தான் வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்களைத் தருகின்றன. தினமும் மூன்று முறை காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

பச்சைக்காய்களில் தயாரிக்கப்பட்ட சாலட்கள் சிறந்தவை. இதுபோல் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். இதை 200 கிராம் பழம், 130 கிராம் கீரை, 120 கிராம் காய், 100 கிராம் கிழங்கு மற்றும் வேர்கள் எனப் பிரித்துச் சாப்பி
டுவது நல்லது. தினமும் ஒரு கீரை, ஆப்பிள், வாழைப்பழம், கேரட் சாப்பிட்டால் இந்த அளவு கிடைத்துவிடும். இதனால் மலச்சிக்கலும் தவிர்க்கப்படும்.
கேரட் மற்றும் அடர்ந்த பச்சை நிறக்காய்களிலிருந்து வைட்டமின் ஏ சத்து கிடைத்துவிடும். முழுத்தானியங்கள் மற்றும் மாம்பழத்திலிருந்து வைட்டமின் பி 6 சத்தும், சிட்ரஸ் பழங்கள் மற்றும் தக்காளியிலிருந்து வைட்டமின் சி சத்தும் கிடைத்துவிடும்.

சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு வைட்டமின் பி 12 சத்துள்ள மாத்திரைகள் தேவைப்படும். மருத்துவர் யோசனைப்படி இதை ‘மல்ட்டி வைட்டமின்’ மாத்திரைகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம், இந்த வைட்டமின் அசைவ உணவுகளில்தான் உள்ளது.இரும்புச்சத்து அவசியம் உடலில் இரும்புச்சத்தின் அளவு குறைந்தால் ரத்த சோகை ஏற்படும். இது கர்ப்பிணிக்கும் குழந்தைக்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி பிரசவத்தில் சிக்கலை உண்டாக்கும். இதைத் தவிர்க்க இரும்புச்சத்து மாத்திரை, மருந்துகளைக் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே சாப்பிடத் தொடங்க வேண்டும். கர்ப்ப காலத்தில் தினமும்36 மி.கி. தேவைப்படுகிறது.

இரும்புச்சத்து தேவை

சோளம், கேழ்வரகு, கம்பு, தினை, கோதுமை, சாமை, முட்டை,இறைச்சி, மீன்போன்றவற்றில் இரும்புச் சத்து தேவைக்கு உள்ளது. இவை தவிர எல்லா கீரைகளிலும் முளை கட்டிய பயறுகளிலும் இது உள்ளது. மேலும், பேரீச்சை, அன்னாசி, கறுப்புத் திராட்சை, அத்தி, பிளம்ஸ், தக்காளி, பச்சைக்காய்கறிகள், அவரை, சோயாபீன்ஸ், காலிஃபிளவர், முருங்கை, முட்டைக்கோஸ், முள்ளங்கி, சுண்டக்காய், புரோக்கோலி, பீட்ரூட், பீர்க்கங்காய், பூசணிக்காய், டர்னிப் ஆகியவற்றிலும் இரும்புச்சத்து அதிகமுள்ளது.

ஃபோலிக் அமிலம் முக்கியம்

கர்ப்பம் தரிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே மருத்துவரின் ஆலோசனைப்படி ஃபோலிக் அமிலம் மாத்திரையைச் சாப்பிட ஆரம்பிக்கலாம். கருச்சிதைவைத் தடுப்பதற்கும், சிசுவின் உடலில் எந்தக் குறையும் இல்லாமல் வளர்வதற்கும் கர்ப்பம் ஆரம்பித்த தினத்திலிருந்தே ஃபோலிக் அமிலம் மிகவும் அவசியம்.

தினமும் 400 மைக்ரோகிராம் அளவுக்கு இது தேவை. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களுக்குக் கட்டாயம் இதைச் சாப்பிட வேண்டும். ஈரல் இறைச்சி, பச்சைக்காய்கறிகள், கீரைகள், பயறுகள், பாதாம், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, நெல்லிக்காய், காலிஃபிளவர், ஃபிளக்ஸ் விதைகள் போன்றவற்றில் இது அதிகம்.

இவற்றைக் குறைத்துக் கொள்க!

காபி, தேநீர், காற்று அடைக்கப்பட்ட செயற்கை குளிர்பானங்கள் போன்றவை இரும்புச்சத்து குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் ஆற்றலுள்ளவை. எனவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும் அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடேங்கப்பா இவங்களுக்கு பின்னால் இவ்வளோ ரகசியம் மறஞ்சுருக்கா!! (வீடியோ)
Next post அம்மை நோய்கள் அலர்ட்! ( மருத்துவம்)