இதயத்திற்கு தமானது குடைமிளகாய்!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 49 Second

கலர் கலராய் விற்கப்படும் குடை மிளகாய், பார்க்க மட்டும் இல்லேங்க ஆரோக்கியத்திலும் அபாரமானது. குடைமிளகாய், நம் நாட்டு உணவை ருசிப்படுத்த வெளி நாட்டில் இருந்து கடல் கடந்து வந்த அற்புதமான காய் வகை. சைனீஸ் உணவுகளில் ருசிக்கும், அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் இந்த காய்கறி வகைக்கு இப்போது இந்தியாவிலும் வரவேற்பு மிக அதிகம். இப்போது இந்திய பாரம்பரிய உணவுகளிலும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் கலந்து காணப்படுகிறது.

காரத்திற்காக பச்சை மிளகாய் சேர்க்கப்படுவதுண்டு. அந்த அளவுக்கு காரமற்றது குடைமிளகாய் என்றாலும், கலர் கலராய் உணவுகளுக்கு அழகூட்டுவது குடைமிளகாயின் சிறப்புத் தன்மை. குடை மிளகாயின் பூர்வீகம் அமெரிக்க நாடுகள். இப்போது இந்தியாவில் அமோகமாக விளைச்சல் செய்யப்படுகிறது. இதற்கு ஒரு பொதுப் பெயர் இல்லை. நாட்டிற்கு நாடு இதன் பெயர் மாறுபடுகிறது. இங்கிலாந்தில் ‘சில்லி பெப்பர்’ என்றும், அமெரிக்கா மற்றும் கனடாவில் ‘பெல் பெப்பர்’ என்றும், ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளில் ‘காப்சிகம்’ என்றும் அழைக்கிறார்கள். ஸ்வீட் பெப்பர் என்றும் அழைப்பதுண்டு.

இதில் இருக்கும் காரத்தன்மைக்கு காரணம், ‘காப்ஸேயில்’ என்ற ரசாயனம். காரத்தன்மையின் பத்து சதவீதம் குடை மிளகாயின் விதையிலும், தோலின் வெளிப்பகுதியிலும் அடங்கியிருக்கிறது. மீதமுள்ள 90 சதவீத காரத்தன்மை உள்தோல், மத்திய பகுதி, விதையை உற்பத்தி செய்யும் திசுக்கள் அடங்கியுள்ள பகுதிகளில் உள்ளது. வைட்டமின் ‘சி’ மற்றும் கரோட்டினாய்டுகளின் மூலாதாரமாக குடைமிளகாய் விளங்குகிறது. ‘கரோட்டினாய்டுகள்’ உணவிலிருந்து கிடைக்கக்கூடிய முக்கியமான ஊட்டச்சத்து ஆக்ஸிஜனேற்றியாகும்.

கூடுதலாக, குடைமிளகாய், மிதமான முதல் உயர் அளவிலான பைட்டோ கெமிக்கல்களைக் கொண்டிருக்கிறது. அவை தாவர அடிப்படையிலான உணவின் ஊட்டச்சத்து அல்லாத ஆக்ஸிஜனேற்ற கூறுகளாக இருக்கின்றன, அவை உடலின் செல்கள் மற்றும் தசைகள் சேதமடைவதால் வரக்கூடிய சீரழிவு நோய்களின் (Degenerative diseases) அபாயத்தைக் குறைக்கலாம்.

குடைமிளகாயில் இருக்கும் ஊட்டச்சத்து அளவுகள்

பரிந்துரைக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 3 மடங்கு வைட்டமின் ‘C’ குடைமிளகாயில் இருக்கிறது. குடைமிளகாயில் கரோட்டினாய்டுகள் (Carotenoids)
மற்றும் பாலிபினால்கள் (Polyphenols) உள்ளன. அவை பல்வேறு சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளன. கேப்சிகம் பல்வேறு வண்ணங்களில் கிடைத்தாலும், ஊட்டச்சத்துக்களின் அளவு ஒன்றுக்கொன்று சற்று மாறுபடும். பச்சை நிற குடை மிளகாயில்தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதன் விவரம் வருமாறு

எரிசக்தி – 16 (kcal)
புரோட்டீன் – 1.11 கிராம்
மொத்த கொழுப்பு – 0.34 கிராம்
நார்ச்சத்து – 2.06 கிராம்
வைட்டமின் ‘C’- 123 மிலிகிராம்
தையமின் – 0.05 மிலிகிராம்
ரிபோப்ளோவின் – 0.03 மிலிகிராம்
நியாசின் – 0.56 மிலிகிராம்
பான்தோனிக் ஆசிட் – 0.21 மிலிகிராம்
பைரிடாக்சின் – 0.15 மிலிகிராம்
மற்றும் பீட்டாகரோட்டின், லூட்டின், பாலிபினால்கள் போன்ற நுண்ணூட்டச் சத்துக்களும் உள்ளன.

ஹைப்பர் கிளைசீமியா (Hyperglycemia) மீதான விளைவு

குடைமிளகாயில் இருக்கும், பாலிசாக்கரைடுகளை (Polysaccharides ) குளுக்கோஸாக ஹைட்ரோலைஸ் செய்யக்கூடிய என்சைம்கள், இன்சுலின் எதிர்ப்பு குறைதல், இன்சுலின் உணர்திறன் அதிகரித்தல், குளுக்கோஸ் சகிப்புத்தன்மையின் முன்னேற்றம், பீட்டா செல்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல வழிமுறைகள் வழியாக, நீரிழிவு எதிர் விளைவைக் கொண்டிருக்கிறது.

லிபிட் புரொஃபைல் (Lipid Profile) விளைவு

இருதய நோய்களுக்கான முக்கிய ஆபத்து காரணியாக டிஸ்லிபிடீமியா (Dyslipidemia ) செயல்படுகிறது. இது உலகில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். பல ஆய்வுகள் குடைமிளகாயில் உள்ள ‘கேப்சைசின்’ மொத்த கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள், குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதங்கள் (எல்.டி.எல்) ஆகியவற்றைக் குறைக்கக்கூடிய மற்றும் உயர் அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதங்களின் (எச்.டி.எல்) அளவை அதிகரிக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளன என்பதை நிரூபிக்கின்றன. மேலும், இதிலிருக்கும், கொழுப்பை குடல் உறிஞ்சுதல் மற்றும் மலத்தில் கொழுப்பு மற்றும் பித்த அமிலம் வெளியேற்றத்தை குறைத்தல் போன்ற ஹைப்போலிபிடெமிக் விளைவை முக்கியமாகக் கூறலாம். இதன்மூலம் இதயத்தை பாதுகாப்பதில் குடைமிளகாய் முக்கிய பங்காற்றுவதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

உயர் ரத்த அழுத்தம்

இதயநோயின் முக்கிய ஆபத்துக் காரணிகளில் ஒன்று உயர் ரத்த அழுத்தம். குடைமிளகாயில் இருக்கும் ‘காசைசின்’, ரத்தநாளங்களை நீர்க்கச் (Vasodilation) செய்வதன் மூலம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும், ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் “ஆஞ்சியோடென்சின் மற்றும் என்சைம் (Angiotensin-Converting Ensyme)” இன் செயல்பாட்டைத் தடுக்கிறது.

உடல் பருமன்

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடைமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். இதில் இருக்கும் கேப்சைசினாய்டுகள் (Capsaicinoids ) மற்றும் கேப்சினாய்டுகள் (Capsinoids) கொழுப்பு மற்றும் கலோரி செலவினங்களை எரிப்புகளை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது எடை குறைக்க உதவுகிறது.

ஆக்ஸிஜனேற்றம் (Antioxidants)

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உயிரணுக்கள் சேதத்தைத் தடுக்கும் மற்றும் அதன் மூலம் புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்க உதவக்கூடியது. குடைமிளகாயில் உள்ள முக்கிய கூறுகளான வைட்டமின் ‘சி’, கரோட்டினாய்டுகள், கேப்சைசினாய்டுகள் மற்றும் லைகோபீன் ஆகியவை ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த கூறுகள், சருமத்தில் ஏற்படும் கரும்படலத்துக்கு (Pigmentation) காரணமான ஃப்ரீரேகல்களை
வெளியேற்றுகின்றன.

வயது முதிர்வுக்கு…

குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. வயது முதிர்வால் வரக்கூடிய மூட்டு வலிக்கும் மருந்தாகிறது.

கல்லீரல் செயல்பாட்டுக்கு…

பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் இருக்கிறது. குடை மிளகாயை பயன்படுத்தி வயிறு உப்புசம், வாயு தொல்லை பிரச்சனையை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

செரிமான மண்டலத்திற்கு…

குடைமிளகாய் செரிமான மண்டலத்தின் நல்ல ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. ‘கேப்சைசின்’ உமிழ்நீர் மற்றும் இரைப்பை நீர் சுரப்பதைத் தூண்டுகிறது, இது உணவை செரிமானப்படுத்துவதற்கும் இரைப்பை குடல் அசாதாரணங்களை சமாளிப்பதற்கும் இன்றியமையாதது. கேப்சைசின் இரைப்பை ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது, இது திறமையான உணவு உறிஞ்சுதலுக்கு முக்கியமானது. அல்சர் நோயைத் தடுக்கக்கூடிய ஆற்றலும் இதற்கு உண்டு.

கண் பார்வைக்கு…

கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகள் வராமலும் குடைமிளகாய் காக்கிறது.

புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள்

குடைமிளகாயில் உள்ள ‘கேப்சைசின்’ புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதிலும் புற்றுநோய் செல்கள் இறப்பைத் தூண்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. வாய்வழி, சுவாசக்குழாய், உணவுக்குழாய், இரைப்பை, கணையம், கல்லீரல், பெருங்குடல், நுரையீரல், மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களுக்கு காரணமான புற்றுநோய் செல்களின் அழிவைத் தூண்டுவதில் ‘கேப்சைசினாய்டுகளின்’ பங்கு குறித்து பல்வேறு ஆய்வுகள் நிரூபிக்கின்றன. அதிக நீர் ஊற்றி வேகவைத்து வடிப்பதாலும், அதிக சூட்டில், ஆயிலில் வறுப்பதாலும் வைட்டமின் ‘சி’ , கரோட்டினாய்டுகள், பாலிபினால்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள் இழப்பு ஏற்படும் என்பதை ஆய்வுகள் எச்சரிக்கின்றன. மிதமான தீயில், குறைந்த ஆயில் ஊற்றி வதக்குவதால் ஓரளவு ஊட்டச்சத்து இழப்பைத் தவிர்க்கலாம். மைக்ரோவேவில் வேகவைப்பது மிகச் சிறந்தது. செப்புப் பாத்திரத்தில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தண்டுவடம் பாதித்தால்…!! (மருத்துவம்)
Next post வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)