விக்னேஸ்வரனும் மாற்று தலைமைக்கான வெளியும் !! (கட்டுரை)

Read Time:13 Minute, 1 Second

சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘பி ரீம்’ (B Team) போல செயற்படுவதாக, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா, கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தார். அத்தோடு, எதிர்வரும் பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கட்சி, தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாகக் கூட்டமைப்பு எடுத்த முடிவை எதிர்த்து, டெலோவில் இருந்து பிரிந்து சென்ற சிறிகாந்தாவும் என்.கே.சிவாஜிலிங்கமும் புதிய கட்சியை ஆரம்பித்து, விக்னேஸ்வரனோடு இணக்கமாக இருந்தனர்.

கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுத் தலைமைக் கோசக்காரர்களில், விக்னேஸ்வரனே முதன்மை இடத்தில் இருப்பதாக, அவரின் விசுவாசிகள் இன்னமும் நம்புகிறார்கள். வேறு தெரிவுகள் இல்லாத நிலையில், அப்படியான ஒரு கருத்துருவாக்கத்தைச் சில தரப்புகள் உருவாக்கியும் வருகின்றன.

இந்த நிலைதான், கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுத் தலைமை வெளியை, சரியான ஆளுமைகளைக் கொண்டு நிரப்புவதைத் தடுத்திருக்கின்றது.

இன்னொரு கட்டத்தில் அதுவே, கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி வகிக்கும் அதிகாரக் கட்டத்தை, மாற்றுத் தலைமைக் கோசக்காரர்களிடம் விக்னேஸ்வரனும் அவரின் தமிழ் மக்கள் கூட்டணியும் எடுக்கக் காரணமாகி இருக்கின்றது.

எதிர்காலத்தில், விக்னேஸ்வரன் பெரிய ஆளுமையாக நிலைப்பார் என்கிற நம்பிக்கையில், கடந்த காலத்தில் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய பலரும், இன்றைக்குப் போக்கிடமின்றி நிற்கிறார்கள்.

பொ.ஐங்கரநேசன், அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்களின் எதிர்கால அரசியல் குறித்து, அவர்களுக்கே எந்த நம்பிக்கையும் இல்லை. அதனாலேயே அவர்கள் தனிக் கட்சிகள், அமைப்புகளை ஆரம்பித்துவிட்டு, இலவு காக்க வேண்டி வந்திருக்கின்றது. இவர்களின் நிலையே, அண்மையில் டெலோவில் இருந்து வெளியேறிய சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் அணிக்கும் ஏற்பட்டிருக்கின்றது.

இன்னொரு பக்கம், விக்னேஸ்வரனைக் கூட்டமைப்பிலிருந்து வெளியே இழுப்பதன் மூலம், தமது அரசியலை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று நம்பிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் பேரவையும் பாரிய பின்னடைவைச் சந்தித்து நிற்கின்றன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையில், ஆரம்பத்தில் சில விடயங்களில் இணக்கமான போக்குக் காணப்பட்ட போதிலும், முன்னணியின் இளைஞர்களோடு பணியாற்றுவது சார்ந்து, சில காலத்துக்குள்ளேயே விக்னேஸ்வரனுக்கு அலுப்பு வந்துவிட்டது. அது, ஒரு கட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியை விலக்கி வைக்க வேண்டிய கட்டாயத்தையும் உருவாக்கிவிட்டது. அதுதான், பேரவையின் வைத்தியர்கள் பலர் விக்னேஸ்வரனோடு மணித்தியாலக்கணக்கில் பேச்சு நடத்தியும், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் புதிய அணிக்கான உருவாக்கத்தைத் தடுத்தது.

அப்போது, அந்த மாற்று அணி உருவாகியிருந்தால், யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்புக்கு இன்னும் பலத்த பின்னடைவு ஏற்பட்டிருக்கும். பொதுத் தேர்தலில் மாற்று அணி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை வெல்லும் அளவுக்கான நம்பிக்கையையும் விதைத்திருக்க முடியும்.

இந்த நிலையில், தமிழ்த் தேசியப் பேரவை என்று பேரவையின் மறைமுக அணியாக முன்னணி, தேர்தல் களத்தில் குதித்து, யாழ். மாநகர சபையைக் குறிவைத்து இயங்கியது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்த வெற்றி அங்கு கிடைக்கவில்லை. ஆனால், அவர்கள் எதிர்பார்க்காத இடங்களான பருத்தித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை வெற்றிகளைத் தங்களின் வீம்புத்தனங்களால் கோட்டை விட்டார்கள்.

கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணி, தமிழ்த் தேசியப் பரப்பில் பெரிய அளவில் எழாமைக்கான காரணங்களாக, வாய்ப்புகளைத் தவறவிட்டமையையும் வீண் வீம்புத்தனங்களையும் தலைமைகளுக்கு இடையிலான தன்முனைப்புச் (ஈகோ) சிக்கலையும் சொல்ல முடியும். கூட்டமைப்புக்குள்ளும் இந்தச் சிக்கல்கள் உண்டு.

குறிப்பாக, தமிழரசுக் கட்சிக்குள் இவ்வளவு பிரச்சினைகளும் இன்னமும் உண்டு. ஆனால், இரா. சம்பந்தன் போன்ற ஒருவரின் முன்னால், இந்த விடயங்கள் பெரிய விடயங்களாக வருவதில்லை; எடுபடுவதுமில்லை.

ஒரு கட்டத்தில், தன்னுடைய முடிவுகளை இறுதி முடிவாகச் சம்பந்தனும் அவருக்கு இணக்கமான தரப்பும் முன்வைக்கின்றது. இதனால், பொதுவெளியில், ஊடகங்களில் ஒருவர் மேல் ஒருவர் மண்ணைவாரித் தூற்றினாலும் சம்பந்தனின் முன்னால் அதைச் செய்யத் துணிவதில்லை. அதனால், உள்முரண்பாடுகள் அதிகம் இருந்தாலும் கூட்டமைப்பு இன்னமும் நிலைபெற்றிருக்கின்றது.

விக்னேஸ்வரன் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே, கூட்டமைப்பை விமர்சிக்கக் தொடங்கினாலும் சம்பந்தனின் முன்னால், அவர் பணிவான போக்கையே கடைப்பிடித்தார். அதுதான், விக்னேஸ்வரன் இன்னும் பெரிய அரசியல் ஆளுமையாக வளர்வதைத் தடுத்தும் விட்டது.

விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று, தமிழரசுக் கட்சி அங்கலாய்த்த போதே, அவர் அதிலிருந்து விலகி, புதிய கட்சியை ஆரம்பித்திருந்தால், அவரின் பின்னால் பெரிய கூட்டமொன்று சேர்ந்திருக்கும்.

ஆனால், அதைச் சம்பந்தன் தலையிட்டுத் தடுத்தார். அதன் பின்னரான ஒரு வருட காலத்தில், விக்னேஸ்வரன் மீதான அபிமானம் மெல்ல மெல்லக் கரைந்து காணாமல் போனது. அவர் கட்சி ஆரம்பிக்கும் போது, அவரை மாற்றுத் தலைமையாக முன்னிறுத்திய பல தரப்புகள் அவரோடு இல்லை.

இன்றைக்கும் ஊடகங்களில், கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுத் தலைமை தான்தான் என்கிற தோரணையோடுதான் விக்னேஸ்வரன் பேட்டியளிக்கிறார்; அல்லது, கேள்வி – பதில் அறிக்கையை வெளியிடுகிறார். ஆனால், நல்லூரைத் தாண்டி அவரால், தன்னுடைய அரசியலை மக்கள் மயப்படுத்த முடிந்திருக்கிறதா என்பது கேள்விக் குறிதான்.

கிட்டத்தட்ட முன்னணியின் நிலையை அண்மித்த நிலையொன்றிலேயே, விக்னேஸ்வரனும் இருக்கின்றார். விக்னேஸ்வரனோடு ஒப்பிட்டால், முன்னணியிடம் கட்சி ஆதரவுப் பலம் அதிகம். ஆனால், விக்னேஸ்வரனை சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் இன் ஆதரவு ஓரளவுக்குத் தாங்கிப் பிடிக்கின்றது. மற்றப்படி, முன்னணியும் விக்னேஸ்வரனின் கூட்டணியும் ஒரு கட்டத்திலேயே நிற்கின்றன.

அப்படியான கட்டத்தில் நின்றுகொண்டுதான், கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி வகிக்கும் ஆளுமையை, புதிய கூட்டணிக்குள் தான் வகிக்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் நினைக்கிறார்.

யாழ்ப்பாணத்தைத் தாண்டிய அரசியலையோ, அதற்கான செயற்பாட்டுத் தளத்தையோ இன்னமும் கொண்டிருக்காத ஒரு தரப்பு, வடக்கு, கிழக்குப் பூராவும் அரசியல் கட்டமைப்பைக் கொண்டிருக்கின்ற கூட்டமைப்புக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்துவது என்பது, அபத்தமான கட்டம்தான்.

அவ்வாறான ஒரு நிலைதான், விக்னேஸ்வரனுக்குப் பின்னால், திரண்ட பல தரப்புகளும் பின்வாங்கிக் கொள்ளவும் தனித்துவிடப்படவும் காரணமாகும்.

இவ்வாறான கட்டத்தில், விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியப் பரப்பின் முக்கிய ஆளுமையாக, ஒளிவட்டம் தீட்டிய யாழ். மய்யவாத புலமைத்தரப்பும் செயற்பாட்டாளர்களும் கருத்துருவாக்கிகளும் மௌனமாகிவிட்டார்கள்.

இப்போது, மாற்றுத்தலைமைக்கான வெளி என்பது, எந்தவித அடைவுகளும் இன்றி அநாதரவாகக் கிடக்கின்றது. அது, ஒரு கட்டத்துக்கு மேல், மெல்ல மெல்லச் சுருங்கி, மாற்று என்கிற அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கி, கூட்டமைப்பை நோக்கி நகர்ந்து அடங்கிவிடும்.

அப்போது, தமிழ்த் தேசியப் பரப்பில் மாற்றுத் தலைமைக் கோசம் எழுவது தடுக்கப்பட்டு, ஏகநிலைக் கட்சிக் காட்சி மீண்டும் அரங்கேறிவிடும்.

யாராக இருந்தாலும், தங்களின் கடந்த காலச் செயற்பாடுகளை அலசி ஆராய்ந்து, அதிலிருந்து அடுத்த கட்டத்தை அடைவதுதான் உண்மையான அரசியல். அப்படியான கட்டத்தில், பொதுத் தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் சென்று சிந்திக்க வேண்டிய கட்டத்தை, விக்னேஸ்வரனை நோக்கி ஒளிவட்டம் தீட்டிய தரப்புகள் அடைந்திருக்கின்றன.

ஏனெனில், அரசியலும் அதற்கான செயற்பாடும் ஒற்றை இரவில் நிகழ்ந்துவிடும் அற்புதம் அல்ல. அது, அதிக அர்ப்பணிப்பையும் புத்திசாலித்தனத்தையும் வேண்டுவது. மக்களிடம் நெருக்கமாகவும் இணக்கமாகவும் பணியாற்றக் கோருவது.

ஆக, ஒவ்வொரு கட்டத்தின் தோல்விகளையும் பின்னடைவுகளையும் சரியாக ஆராய்ந்து, அடுத்த கட்டங்களை வரையறுப்பதுதான், உண்மையான வெற்றியைத் தேடித்தரும்.

மாற்றுத் தலைமைக் கோசங்காரர்கள், நிற்க வேண்டிய இடம் அதுதான். அந்த அதிசயம் நிகழ்ந்தால், தமிழ்த் தேசிய அரசியலில் அற்புதங்கள் நிகழலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் உணர்வை தூண்டும் உணவுகள் பொட்டாசியம், வைட்டமின் பி அவசியம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post சமூக வலைத்தளம் மூலம் மாதம் 25 ஆயிரம் சம்பாதிக்கலாம்!! (மகளிர் பக்கம்)