By 14 February 2020 0 Comments

புதிதாகச் சிந்திக்க தூண்டும் பிரதமரின் இந்திய விஜயம்!! (கட்டுரை)

2019நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று, 18ஆம் திகதி பதவியேற்று 11 நாள்களிலேயே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தமது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்குச் சென்றார். அப்போது அவர், இந்தியாவிலிருந்து வெளியிடப்படும் ‘இந்து’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றின் போது, அதிகாரப் பரவலாக்கலை உதாசீனம் செய்யும் வகையில் கருத்து வெளியிட்டு இருந்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு, பொருளாதார அபிவிருத்தியாகும் என்பதே அப்போது அவரது நிலைப்பாடாக இருந்தது. ‘30 வருடங்களுக்கு மேலாக, அதிகாரப் பரவலாக்கல் பற்றிக் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், எதுவும் நடைபெறுவதில்லை. தமிழ் மக்களுக்கு வேண்டியது தொழில்வாய்ப்பு, கல்வி போன்றவையே. அதையோ அபிவிருத்தியையோ அவர்களுக்கு வழங்க வேண்டாம் என்று சிங்கள மக்கள் கூறவில்லை’ எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

அவரது மூத்த சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷவும், இம்முறை பதவிக்கு வந்ததன் பின்னரான தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை, இந்தியாவுக்கே மேற்கொண்டிருந்தார். கடந்த வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட அந்த விஜயத்தின்போது, அவரை ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் பேட்டிகண்டார். அப்போது அவர், சுமார் 70 நாள்களுக்கு முன்னர் இனப் பிரச்சினை விடயத்தில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு முரணான கருத்தையே தெரிவித்திருந்தார்.

அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் உங்கள் சகோதரரான ஜனாதிபதி தெரிவித்திருக்கும் கருத்துகளின்படி, உங்களது அரசாங்கம் மாகாண சபைகளை இரத்துச் செய்யப் போகிறதா என அந்த ஊடகவியலாளர் கேட்கிறார். ‘இல்லை, இல்லை. நாம் மாகாண சபைகளை மேலும் பலப்படுத்துவோம். ஆனால், நாம் வழங்குவதைக் கொண்டு, மக்களுக்கு அவை உதவி செய்யவேண்டும். ஆனால் இதுவரை அது நடைபெறவில்லை’ என, மஹிந்த ராஜபக்‌ஷ அதற்குப் பதிலளிக்கும் போது கூறியிருந்தார்.

இதில் எதை நம்புவது? ஒருவர் அதிகாரப் பரவலாக்கலே அவசியமில்லை என்கிறார். மற்றொருவர், அதிகாரப் பரவலாக்கலின் தேசிய வடிவமான மாகாண சபை முறைமையைப் பலப்படுத்தப்போவதாகக் கூறுகிறார். உண்மையிலேயே, அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் என்ன செய்யப் போகிறதென்பது எவருக்கும் தெளிவாகவில்லை.

தமிழ்த் தலைவர்கள், அதிகாரப் பரவலாக்கலிலேயே தமிழ் மக்களின் தலைவிதி தங்கியிருக்கிறது என்றே நம்புகின்றனர். அதன் பிரகாரமே அவர்களது அரசியல் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஆனால், எந்தவோர் அரசாங்கமும், தற்போதைய அளவைவிடக் கூடுதலாக அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ளப் போவதில்லை என்பது, இப்போது தெட்டத் தெளிவாகி இருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கடந்த அரசாங்கம், இனப் பிரச்சினைக்குப் புதிய தீர்வொன்றை உள்ளடக்கிய புதிய அரசமைப்பொன்றை வரைய முயன்றது. அதற்காக, 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், அரசமைப்புச் சபையாக நாடாளுமன்றம் மாற்றப்பட்டு, அரசமைப்பில் கொண்டுவர வேண்டிய மாற்றங்களைப் பரிந்துரை செய்வதற்காக, 6 குழுக்களையும் நியமித்தது. அவற்றின் பரிந்துரைகளைக் கருத்திற்கொண்டு அரசமைப்பை வரைவதற்காக, பிரதமர் தலைமையில் வழிநடத்தல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

அந்தக் குழு, 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இடைக்கால அறிக்கையாக சில ஆலோசனைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒப்புதலும் அந்த ஆலோசனைகளுக்குக் கிடைத்தன. ஆனால், அந்த ஆலோசனைகளின்படியும் ஏறத்தாழ மாகாண சபைகளை ஒத்த அதிகாரப் பரவலாக்கல் முறையொன்றே பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. அந்த ஆலோசனைகளில் காணப்பட்ட ஒரு மாற்றமாக, இலங்கை ஓர் ‘ஒருமித்த நாடு’ எனத் தமிழில் மட்டும் அழைக்கப்பட்டு இருந்தது.

அதிகாரப் பரவலாக்கல் என்ற விடயத்தில், இலங்கை அரசியல் தலைவர்களால் செல்ல முடிந்த இறுதி எல்லையைத்தான் அது எடுத்துக்காட்டியது. அதற்குமப்பால் செல்ல அவர்கள் தயங்குகிறார்கள். அதற்கும் அப்பால் சென்றால், எதிர்க் கட்சிகள் அதன் மூலம் அரசியல் இலாபம் அடையும், அதனால் அடுத்த தேர்தல்களில் தமக்குச் சிங்கள மக்களின் வாக்குகள் கிடைக்காது என்ற அச்சமே அதற்குக் காரணமாக இருந்தது. ஐ.தே.கவே இவ்வாறு அஞசுவதாக இருந்தால், நாட்டில் பெரும்பாலான பேரினவாதிகளைக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியால் அந்தளவேனும் இந்த விடயத்தில் முன்னோக்கி நகர முடியாது.

அதேவேளை, எதிர்வரும் தேர்தல்களில், தமக்குத் தமிழ் மக்களின் குறிப்பாக வடமாகாண தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்காதென்பது பொதுஜன முன்னிணிக்கு இப்போது உறுதியாகிவிட்டுள்ளதாலும், அம்முன்னணியும் தமிழ் மக்களின் ஆதரவை நாடி எதையும் செய்யுமென எதிர்ப்பார்க்க முடியாது. அவ்வாறாயின், தாம் உரிமைகளாகக் கருதுபவற்றை நிறைவேற்றிக் கொள்ள, தமிழ்த் தலைவர்கள் என்ன செய்ய முடியும்? தமது இந்திய விஜயத்தின் போது கோட்டாபய ராஜபக்‌ஷ, அதிகாரப் பரவலாக்கல் கொள்கையை நிராகரித்த போது, அதன் மூலம் அவர் வெளிநாட்டுத் தலையீட்டை நியாயப்படுத்தியுள்ளார் எனச் சில தமிழ்த் தலைவர்கள் கூறினர். உண்மை தான்; ஆனால், எந்த வெளிநாடு, இலங்கையிலுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கத் தலையிடப் போகிறது?

இந்தியா அதனைச் செய்யப்போவதில்லை என்பது இப்போது தெளிவாகிவிட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரும், கோட்டாபய ராஜபக்‌ஷவை கடந்த டிசெம்பர் மாதம் புதுடெல்லியில் சந்தித்தபோது, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளையும் முறையான அதிகாரப் பரவலாக்கலின் அவசியத்தையும் அவர்கள் எடுத்துரைத்தனர். அவற்றையெல்லாம் கேட்டுவிட்டு வெளியே வந்த ராஜபக்‌ஷ, அதிகாரப் பரவலாக்கலல்ல, அபிவிருத்தியே தீர்வு என இந்திய ஊடகங்களிடம் கூறினார். ஆனால், இந்திய அரச தலைவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.

அவர்கள் அதைப்பற்றி கவலையேனும் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே இந்தியத் தலைவர்கள், வடமாகாணத் தமிழ்த் தலைவர்களின் முக்கியக் கோரிக்கையொன்றை, அதாவது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பான கோரிக்கையை முற்றாகவே நிராகரித்துவிட்டனர்.

2017ஆம் ஆண்டில் ஜெய்சங்கர், இந்திய வெளிவிவகாரச் செயலாளராக இலங்கைக்கு விஜயம் செய்தார். இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், எத்தனையோ மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் எனவே, இந்த இணைப்பு விடயத்தில் தொற்றிக் கொண்டு இருக்காமல், வேறு வழிகளில் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயலுமாறு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனிடம் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்த் தலைவர்கள் தமது உத்திகளைப் புதிதாகச் சிந்தித்து தயாரித்துக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. அவர்கள் இவ்வளவு காலமும் அபிவிருத்தியைப் புறக்கணித்துவிட்டே அரசியல் உரிமைகளைக் கோரிவந்தனர். 2012ஆம் ஆண்டில், மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 14ஆவது மாநாட்டின்போது உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் ஒரு மரணப்பொறி என வர்ணித்திருந்தார். அதேவேளை, அபிவிருத்திப் பணிகளைவிட அரசியல் பிரேரணைகளுக்கே வடமாகாண சபையும் முன்னுரிமை வழங்கியது. இறுதியில், போர் முடிவடைந்து 11 ஆண்டுகள் சென்றடைந்த போதிலும், வடமாகாணம் அடைய வேண்டிய அபிவிருத்தியை அடையவில்லை. அரசியல் உரிமைகளையும் பெறவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கூறுவதைப் போல், அரசியல் உரிமைகளின் இடத்தில் அபிவிருத்தியை வைக்க முடியாதுதான். ஆனால், அரசியல் உரிமைகளுக்காகப் போராடும் போதே கூடியவரை அபிவிருத்தியையும் அடைய முயல்வது பிழையாகாது. பிழையாயின், நாடு சுதந்திரமடைந்து 72 ஆண்டுகளாகியும் கிடைக்காத உரிமைகள் கிடைக்கும்வரை, இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகவும் விவசாயிகள் – தண்ணீருக்காகவும் காணிக்காகவும், வீடற்றோர் வீட்டு வசதிக்காவும், பொதுமக்கள் தொழிற்சாலைகளுக்காகவும், போர் விதவைகள் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காவும் போராடாமல் இருக்க வேண்டுமா?

கூட்டமைப்பை புறக்கணிக்கும் அரசாங்கம்

அரசாங்கம், அதிகாரப் பரவலாக்கல் உள்ளிட்ட தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளைப் பற்றியோ அல்லது தமிழ்ப் பிரதேசங்களில் பொருளாதார அபிவிருத்தியைப் பற்றியோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கத் தயாரில்லைப் போல்தான் தெரிகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்த கருத்துகள் மூலம், இது விளங்குகிறது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளர் பத்ம ராவு சுந்தர்ஜியுடன் நடத்திய பேட்டியின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பற்றி இவ்வாறு அவர் கூறுகிறார். “எமது நாடாளுமன்றத்தில், பல ஆண்டுகளாகப் பிரதிநிதித்துவப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஒருபோதும் அபிவிருத்தி விடயத்தில் ஆர்வம் காட்டியதில்லை. அவர்கள், அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகவும் தனியான நாடொன்றை உருவாக்கிக்கொள்வது தொடர்பாகவுமே பேசி வருகிறார்கள்” என்றார்.

“பிரதமர் மோடி இங்கிருந்தும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்புக்கு விஜயம் செய்தபோதும், இலங்கையின் தமிழர்களைப் பற்றியும் இந்திய அரசாங்கம் அவர்கள் விடயத்தில் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பவை பற்றியும் வலியுறுத்தினர். உங்கள் பதில் என்ன?” என்று, இந்து பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளர் சுஹாசினி ஹைதர், பிரதமர் மஹிந்தவிடம் கேட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த அவர், “அவர்களது ஆர்வத்தைப் பற்றி எப்போதும் நாமறிவோம். போர் முடிவடைந்தவுடனேயே தேர்தலை நடத்தி, வடமாகாண மக்களுக்குத் தமது முதலமைச்சரைத் தெரிவு செய்து கொள்ள நாம் இடமளித்தோம். நாம் தோல்வியடைவதை அறிந்தே நாம் அந்தத் தேர்தலை நடத்தினோம். ஆனால், எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

இப்போது, நாம் ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்தலையும் அதனை அடுத்து மாகாண சபைத் தேர்தல்களையும் நடத்தவிருக்கிறோம். வடக்கே சென்று எதிர்க்கால நடவடிக்கைகளைப் பற்றி அவர்களுடன் கலந்துரையாட நாம் ஒரு குழுவை நியமிப்போம்” என்று, அதற்குப் பிரதமர் பதலளித்துள்ளார்.

“எதிர்க்கால நடவடிக்கைகள் என்றால், அரசமைப்பின்படி 13ஆவது திருத்தமும் அதிகாரப் பரவலாக்கலும் உள்ளடக்கப்பட்டதாக இருக்குமா?” என்று கேட்டதற்கு, “அதையும் பேசுவோம். நாம் இந்த விடயத்தில் முன்னேற வேண்டும். பேச்சுவார்த்தை நடத்த எமக்கு அந்தப் பிரதேசத்தைப் பற்றிய பொறுப்பை ஏற்கும் எவராவது இருக்க வேண்டும். இதற்குச் சிறந்த வழி தேர்தலை நடத்துவதும் அதன் பின்னர் எதிர்காலத்தைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர்களது பிரதிநிதிகளை அழைப்பதுமே ஆகும். தற்போதைய நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பேச்சுவார்ததையில் அக்கறை காட்டவில்லை. அவர்கள், இலங்கையில் பெரும்பான்மை மக்கள் ஏற்காத விடயங்களைத்தான் கேட்கிறார்கள்” என, அவர் பதிலளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறக்கணிப்பதாக இருந்தால், அரசாங்கம் வடபகுதி தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி எவரோடு பேச்சுவார்த்தை நடத்தப்போகிறது? கடந்த ஞாயிற்றுக்கிழமை, முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்பட்டது. அதனுடன், அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துமா? அந்தக் கூட்டணி, அதிகாரப் பரவலாக்கல் என்ற விடயத்தில் தமிழ் கூட்டமைப்பைப் பார்க்கிலும் ஒருபடி முன்சென்று, சமஷ்டி என்ற பெயர்ப் பலகையுடனேயே நிற்கிறது.

அவ்வாறாயின், பிரதமரது வாதத்தின்படி, அரசாங்கம் அந்தக் கூட்டணியுடனும் பேச்சுவார்த்தை நடத்த முன்வராது. அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், விடுதலைப் புலிகளின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் சிறப்புத் தளபதி கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் போன்ற சில தமிழ்த் தலைவர்கள் ஆளும் கட்சியுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அவர்களை ஏற்றுக்கொண்டு, அவர்களுடன் பேசித் தமிழ் மக்களின் பிரச்சினைகள் விடயத்தில் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டு இருக்கிறதாகவும் நினைக்கலாம்.

அவர்கள் மூலமும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கலாம்தான். அதன்மூலம் அதிகாரப் பரவலாக்கலைப் பார்க்கிலும் அபிவிருத்தியையே மக்கள் விரும்புகிறார்கள் என்று நிரூபிக்க அரசாங்கம் உத்தேசித்து இருக்கிறது போலும்.Post a Comment

Protected by WP Anti Spam