By 16 February 2020 0 Comments

நியூஸ் பைட்ஸ்!! (மகளிர் பக்கம்)

திருநங்கைகளுக்கான சிறப்புக் கல்லூரி

இந்தியாவில் ஆண்களுக்கு, பெண்களுக்கு எனத் தனிக் கல்லூரிகள் இருக்கின்றன. அதேபோல, இப்போது திருநங்கைகள், திருநம்பியர்களுக்கும் தனி கல்லூரி தொடங்கப்படவுள்ளது. உத்திர பிரதேசம், ஃபாசில் நகரில் உருவாகிவரும் இக்கல்லூரியில் ஒன்றாம் வகுப்பு முதல், முதுகலை பட்டப்படிப்பு வரை பயின்று பயன்பெறலாம். மூன்றாம் பாலின மாணவர்கள் எந்த பாகுபாடும் இன்றி, பாதுகாப்பாகக் கல்வி கற்க, தனி கல்லூரிகள் வழிவகுக்கும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பெண்கள் தனியாக பயணிக்கச் சிறப்பு திட்டங்கள்

புத்தாண்டு வாழ்த்துடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தினார். அதில், தனியாக அல்லது குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெண்கள் இரவு பாதுகாப்பான இடத்தில் தங்கி காலை உணவுடன் சிறப்பு விடுதிகள் ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறினார். கேரளா முழுவதும் பல முக்கிய இடங்களில் அதற்கான நிலங்கள் தயாராக இருப்பதாகவும், விரைவில் தேவையான வசதிகளுடன் பெண் பயணிகளும் குழந்தைகளும் தங்க பாதுகாப்பான விடுதி உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். நிதி ஆயோக்கின் கடந்த ஆண்டிற்கான நிலையான வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஜாப் அணிந்து குத்துச்சண்டை

மலேசியாவைச் சேர்ந்த நோர் டையானாவுக்கு வயது 19தான். குத்துச்சண்டை வளையத்திற்கு வெளியே கூச்சத்துடன் தயங்கி நிற்கும் டையானா, வளையத்திற்குள் சென்றதும் ஃபீனிக்ஸ் பறவைப் போல மாறிவிடுகிறார். அதனால்தான் இவருடைய பெயரிலேயே ரசிகர்கள் ஃபீனிக்ஸை இணைத்து விட்டனர். இவரது திறமையைத் தாண்டி, வேறொரு சிறப்பும் இவரிடம் உண்டு. நோர் டையானாதான், ஹிஜாப் அணிந்து குத்துச்சண்டை செய்யும் முதல் வீராங்கனை. பல விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் மீறி இன்று தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வென்றிருக்கிறார் இவர்.

கோல்டன் குளோப் விருதுகள் வரலாறு படைத்த பெண்கள்

திரைத்துறையில் திறமையானவர்களை அங்கீகரிக்கும் கோல்டன் குளோப் விருதை ஆஸ்கருக்கு அடுத்தபடியாக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பர். சமீபத்தில் நடந்த 2019 கோல்டன் குளோப் விருது விழாவில் பெண்கள் சிலர் வரலாறு காணாத மாற்றத்தை நிகழ்த்தியிருக்கின்றனர். நடிகை சாண்ட்ரா ஓ, ஆங்கிலத்தில் ‘கிரேஸ் அனாடமி’ என்ற புகழ் பெற்ற டிவி தொடரில், கிறிஸ்டினா யாங் என்ற பாத்திரத்திற்கான சிறந்த துணை நடிகை விருதை ஏற்கனவே வென்றிருக்கிறார். இந்நிலையில் ‘கில்லிங் ஈவ்’ என்ற தொடரில் சிறந்த முன்னணி நடிகைக்கான விருதையும் வென்று, இரண்டு முறை கோல்டன் குளோப் விருதைக் கைப்பற்றிய முதல் ஆசியப் பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

மேலும் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய முதல் ஆசிய பெண் என்ற பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார். அடுத்ததாக சிறந்த திரைப்பட நடிகைக்கான விருதையும், ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த Awkwafina என்ற நடிகை ‘தி ஃபேர்வெல்’ என்ற காமெடி படத்திற்காக வென்றார். திரைப்படத்திற்கான சிறந்த நடிகை விருதை வென்ற முதல் ஆசிய பெண் என்ற பெருமை இவரைச் சேரும்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால்15,000

ஆந்திராவில் ‘அம்மா வோடி’ என்ற திட்டத்தின் கீழ், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கும், பாதுகாப்பார்களுக்கும் ஆண்டிற்கு 15,000 ரூபாய் வழங்கப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இதையடுத்து வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத்தைச் சேர்ந்த தாய்களுக்கு, அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்று குழந்தைகள் எங்குப் பயின்றாலும், அவர்களுக்கு 75% பள்ளி வருகை கணக்கு இருப்பின், இத்தொகை வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

போலீஸ் ரோந்து வண்டியிலும் எப்.ஐ.ஆர்

ஹைதராபாத்தில் இனி மக்கள், காவல் நிலையம் செல்லாமலே முதல் தகவலறிக்கை பதிவு செய்யலாம். இதன்படி, ஹைதராபாத்தில் மொத்தம் 60 காவல் நிலையங்களும், 122 ரோந்து வண்டிகளும் இருக்கின்றன. வயதானவர்கள், பெண்கள் எனப் பலர் காவல் நிலையம் சென்று எப்.ஐ.ஆர் பதிவு செய்யத் தயங்குவதால், அனைவருக்கும் வசதியாக, ரோந்து வண்டிகளிலேயே காவலர்களிடம் பெயர், முகவரியுடன் புகாரை எழுதி எப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம் என்று அரசு தெரிவித்திருக்கிறது. இதனால் எல்லை பிரச்சனைகள் எதுவும் இல்லாமல், முதலில் ஸீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்த பின்னர், முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, பின்னர் தகுந்த காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்படும்.Post a Comment

Protected by WP Anti Spam