இரண்டாவது வாய்ப்பு கொடுங்கள்!! (மருத்துவம்)
வேலன்டைன்ஸ் டே கொண்டாட்டத்தில் ‘பிரேக்-அப்’ பற்றியும் கொஞ்சம் பேசுவோம். இன்றைய தலைமுறையினர் எந்த அளவிற்கு காதலை கொண்டாடுகிறார்களோ அதே வேகத்தில் அதைத் தூக்கி எறியவும் தயங்குவதில்லை. தங்கள் காதலன்/ காதலியால் மோசமாக ஏமாற்றம் அடைந்துவிட்டோம். இனி அவ்வளவுதான் என்ற விரக்தியில், சர்வசாதாரணமாக பிரேக்-அப் முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இது பலரின் வாழ்வையே சீர்குலைத்துவிடுகிறது. வெளித்தோற்றத்தில் வேண்டுமானால் தாங்கள் அதனால் பாதிக்கவில்லை என்று காண்பித்துக் கொண்டாலும் பலர் அதனால் மனச்சீர்குலைவுக்கு ஆளாகிறார்கள். தடாலடியாக ‘பிரேக் அப்’ முடிவுக்கு பதில், உங்கள் பார்ட்னருக்கு ஒரு செகன்ட் சான்ஸ் கொடுக்க யோசிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
உங்கள் காதலன்/ காதலி தன் கடந்தகால தவறுகளிலிருந்து வெளிவரவும், தன்னைத் திருத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பு கொடுப்பது தவறில்லை. ஆனால், அவர் அதற்குத் தகுதியானவரா என்பதையும் அவர் திருந்தி வந்தால், உங்களால் மீண்டும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உங்களுக்கு இருக்கிறதா என்பதையும் மட்டும் உறுதி செய்து கொள்வது நல்லது. நீங்கள் அவருக்கு கொடுக்கும் மறு வாய்ப்பு, அவர்களே தங்கள் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ளலாம் அல்லது நல்லதை கற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு விருப்பப்பட்ட நபராக தன்னை மாற்றிக் கொள்வதன் மூலம் மீண்டும் உங்கள் உறவு புதுப்பிக்கப்படலாம். இதுவே உங்கள் தவறாக இருப்பின், மற்றவர்கள் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதை விரும்புவீர்கள் இல்லையா?!
யாருடைய தவறு? இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் எதனால் வந்தது? சரியானதுதானா? என முழுவதுமாக பிரச்னையைப்பற்றி இருவரும் மனம்விட்டு பேசுங்கள். ஏனெனில், தயக்கத்தால் மனதிற்குள் மீதம் வைத்திருக்கும் பேசப்படாத விஷயங்கள் பின்னாளில் மற்றொரு மோதலுக்கு வழிவகுக்கக்கூடும். பிரச்னையை மனம்விட்டு பேசித்தீர்த்துக் கொள்வதன் மூலம், நம்பிக்கையோடு உறவை புதுப்பித்துக்கொள்ள முடியும் என்றால், நிச்சயம் அதற்காக இருவரும் கௌரவத்தை விட்டுக் கொடுப்பதில் தவறேதுமில்லை.