By 25 February 2020 0 Comments

கிழக்கை முன்னுதாரணமாக்கி சகலருக்கும் சம அதிகாரங்கள்!! (கட்டுரை)

சமூக விடுதலைப் போராட்டங்களின் அடையாளத் தலைமையாக தேசிய காங்கிரஸ் பரிணமிக்கின்றமை இன்று நிரூபணமாகி வருகிறது. இவ்வாறான ஒரு போராட்டத்துக்கு வழிகாட்டும் தகுதியும் இக்கட்சியின் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லாவுக்கு உள்ளமை பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டும் வருகின்றன. அதிகாரங்களை மட்டும் இலக்கு வைத்த போக்குகள், உணர்ச்சியூட்டும் பிரச்சாரங்கள், மத உணர்வுகளை உசுப்பும் கோஷங்கள்,இனச்சாயலிலான கோரிக்கைகள், அடிக்கடி நிலைமாறும் கோட்பாடுகளால், ஒரு போதும் சமூகங்களின் இலட்சியங்களை வெல்ல முடியாது. இதைத்தான் இன்று தேசிய காங்கிரஸின் வியூகங்கள் பறைசாற்றியுள்ளன.

மர்ஹும் அஷ்ரஃபின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம் தனித்துவ தலைமைகள் எதையாவது சாதித்திருக்கலாம். ஆனால் இச்சாதனைகள் எவையும் காலத்தால் நிலைக்காதவை. அபிவிருத்தி, தொழில் வாய்ப்புக்கள் ஒரு சமூகத்தின் பொருளாதார வளத்தைப் பலப்படுத்தும் சாதனைகளாக இருந்தாலும் இருப்பை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளாக இருக்காது. எனினும் தேசிய காங்கிரஸின் செயற்பாடுகள் சமூகங்களின் இருப்பு, பாதுகாப்பு, பிரதேச ஆட்சியின் அடையாளங்களை, உறுதிப்படுத்தியுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டியே உள்ளது.

இன, மத அடையாளங்களுக்கு அப்பாலான இக்கட்சியின் சிந்தனைகள், தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் சாதுர்யத்தால் சரித்திரங்களாவது, எதிர்கால இளம் சமூகத்துக்கும் ஒரு எடுத்துக்காட்டு. தென்னிலங்கை அரசியல் களத்தை நாடி பிடிக்கும் அவரது தீட்சண்யம் மூன்று ஜனாதிபதித் தேர்தல்களில் (2005, 2010, 2019) வெற்றியீட்டின. எனினும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் இக்கட்சியின் வியூகம் பிழைத்ததாகவும் கூற முடியாது.தோற்பது நிச்சயம் எனத் தெரிந்தும் மஹிந்த வை ஆதரித்த தேசிய காங்கிரஸின் தூரதிருஷ்டியை, இன்று ஏனைய முஸ்லிம் தலைமைகள் உள்ளூர வியந்திருக்கும். ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதையும் செய்யாதென்ப தும், ராஜபக்ஷக்களின் தோல்வி தற்காலிகம் என்பதும், அதிகாரங்களுக்காக அடிக்கடி கட்சி மாறுவதும், சமூகப் போராட்டத்தை மலினப்படுத்துவதும் தேசிய காங்கிரஸ் தலைமைக்கு நன்கு தெரிந்திருந்தது.

இதனால், ஏனைய முஸ்லிம் தலைமைகளுக்கு ஏற்பட்டுள்ள இயலாமை இக்கட்சிக்கு ஏற்படவில்லை. ஏற்படாதிருந்தால், சாந்தமருது மக்களின் தனியான பிரதேச சபையை நல்லாட்சி அரசில் வென்றிருக்கலாம், முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக நோக்க நேரிட்ட ஈஸ்டர் தாக்குதலை தடுத்திருக்கலாம் சகல சமூகங்களுக்கும் சம சந்தர்ப்பம் வழங்கி கரைவாகுப்பற்று வடக்கு (கல்முனை வடக்கு) பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி அம்மக்களுக்கு அதிகார அடையாளத்தை வழங்க முடிந் திருக்கும். இன்னும் பெரும்பான்மைச் சமூகத்திடமிருந்து முஸ்லிம்கள் புறந்தள்ளப்படும் சந்தேகங்களைக் களைய முடிந்திருக்கும்.தெற்கு, வடக்கு பெரும்பான்மைவாதிகளை புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்புக்களூடாக இணங்கச் செய்திருக்க முடிந்திருக்கும். இந்த முடியாமைகள் இன்று இக் கட்சிகளின்(மு.கா,ம.கா) வேட்பாளர்களை ஐக்கிய தேசிய கட்சியில் நிறுத்தவும் நேரடியாகக் கூட்டணி அமைப்பதையும் தடுத்திருக்கின்றன. பௌத்த சிங்கள வாக்குகளை எதிர்வரும் தேர்தலில் அதிகமாக எதிர்பார்க்கும் ஐக்கிய தேசிய கட்சி, அடிக்கடி நிலைமாறும் இந்த முஸ்லிம் தலைமைகளை சந்தேகிப்பதும், தென்னிலங்கை பெரும்பான்மைச் சமூகம் இத்தலைமைகளை, அடிப்படைவாதிகளாக சந்தேகிப்பதுமே இதற்கான காரணங்களாகும். பிரதேச அடையாளத்தின் சாதாரண அடையாளமாக, சாய்ந்தமருதுவுக்கு நகர சபை வழங்கியதை, சஹ்ரானுக்கு வழங்கப்பட்ட பரிசாகவும் சாய்ந்தமருதுக் குண்டுதாரிகளுக்கு கிடைத்த பதவி உயர்வாகவும் வர்ணிக்கும் மரிக்கார், ஹிருணிகா ஆகியோரின் கருத்துக்கள், ஐக்கிய தேசிய கட்சிகளின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. இந்நிலையில் இக்கட்சிக்கு முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் தலைமைகளின் வியூகங்கள் வெற்றியளிக்கப்போவதில்லை.

ராஜபக்‌ஷவினரை மட்டும் இனவாதிகளாகக் காட்டிய இத்தலைமைகள் 2005, 2010, 2019 ஜனாதிபதித் தேர்தல்களில் முஸ்லிம்களைத் தவறாகவே வழிநடத்தின. மட்டுமல்ல பின்னர் இவர்கள் அமைச்சுப் பதவிகளுக்காக, அதே ராஜபக்‌ஷக்களை போற்றிப் புகழ்ந்ததையும் இன்று தேசிய காங்கிரஸ் நினைவூட்டி, இத்தலைமைகளின் சுயநலத்தை தோலுரிக்கிறது. இது இவ்வாறிருக்க நோர்வேயின் வருகைகையப் புரிந்து கொள்ளாமலும் அவர்களது நோக்கங்களை அறியாததும்போல ஹக்கீம் நாடகமாடியிருந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஒரே மேசையிலிருந்து தனித்தரப்பு கிடைக்காததை இணங்கிக் கொண்டதையும் வரலாறு அறியும். மேலும் ஹக்கீம் அரச தரப்பாகவேயன்றி, மு.காவின் தனித்தரப்பாகச் செல்லவில்லை என்று ரணிலின் அரசு ஆணித்தரமாக பறைசாற்றிய பின்னரும் தனித்தரப்பாகவே செல்வதாக சுயபிரகடனம் செய்து ஜெனீவா கூட்டத்திற்குச் சென்றமையும், இயலாமையை மறைப்பதற்கான நாடகமே.மேலும் இவ்வாறு சென்றவர்கள் ஆயுதப்போராட்டத்தால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அழிவின் விபரங்களை பெக்ஸில் அனுப்பும்படி அங்கிருந்தவாறே கேட்டமை வாய்ச்சவடால் மட்டுமேயாகும். இத்தலைமைகள் சிலவேளைகளில், தமிழர்கள் சார்பானவர்களாகவும் இன்னும் பல வேளைகளில் முஸ்லிம்களின் தலைவர்களாகவும் வேறு பல தருணங்களில் அரசுக்கு ஆதரவானவர்களாகவும் தந்திரமாக நடித்து வருவதை எமது சமூகம் மறப்பதற்கில்லை.

எனவே இவர்கள் தொடர்ந்தேச்சையாக வெவ்வேறு நாடகங்களில் நடிப்பதையும், பன்முகப் பாத்திரங்களில் தோன்றுவதையும் இனியாவது கைவிட வேண்டும். இத்தலைமைகளின் இவ்வாறான வேடங்களால் நாடு இன்று குழம்பிப்போயுள்ளது. தென்னிலங்கை களத்தை நாடிபிடிக்கத் தெரியாதமை, அடிக்கடி கட்சி மாறி நம்பிக்கை இழக்கின்றமை, ஐக்கிய தேசியக் கட்சிக்காக முஸ்லிம் சமூகத்தையே உயில் எழுதிக் கொடுத்ததான போக்குகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரஃபின் அடி நாதத்தோடு முரண்படுவது முஸ்லிம் சமூகத்தைக் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. ஆயுதப்போராட்டம் மௌனித்த பின்னரும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் எழுந்துள்ள எதிரொலிகளும் இன, மத,பிரதேசங்களுக்கான அரசியல் நடைமுறைகளுக்குப் பிரிவினைவாதச் சாயம் பூசும் நிலையையே ஏற்படுத்தி வருகிறது. இன்னும் தனித்துவ கட்சிகளின் தாவல்போக்குகள் இனங்களுக்கிடையில் விகார நிலையையே தோற்று வித்தும் வருகிறது.

எனவே இந்நாட்டு மக்கள் விரும்பும் முறையில் எல்லாச் சமூகங்களும் தேசப் பொதுமையில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியுள்ளது.இதனால்தான் நாட்டின் சகல சமூகங்களின் பிரச்சினைகள் தீரும்போதே, முஸ்லிம்களின் பிரச்சினைகளும் தீருமென்ற பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் (நுஆவின்) வழியில், அரசியலில் மக்களைப் பொதுமைப்படுத்துவதற்காக தேசிய காங்கிரஸ் பயணிக் கிறது. எனவே சகல சமூகங்களினதும் நிம்மதிக்கான தேசிய காங்கிரஸின் இந்தப் போராட்டத்திற்கு வழிவிட வேண்டிய தேவைகளுக்காவும் கிழக்கை இதற்கான முன்மாதிரியான மாகாணமாக, வழி நடத்தும் வரலாற்றுப் பொறுப்புக்களுக்குமாக,மேற்சொன்ன நாடகங்கள், நாடகப் பாத்திரங்களில் நடிப்பதிலிருந்து இந்த சந்தர்ப்பவாதத் தலைமைகள் முற்றாக விலகி மௌனித்து வழிவிடுவதே யதார்த்தமாகும்.Post a Comment

Protected by WP Anti Spam