தோற்கடிக்கப்படாத புலிகளின் சித்தாந்தம் !!! (கட்டுரை)

Read Time:14 Minute, 2 Second

சாம்பியாவுக்கும் இலங்கைக்கும் இடையே, நெருக்கமான இராணுவ ரீதியான ஒத்துழைப்புகளோ தொடர்புகளோ கிடையாது. இலங்கை இராணுவம், ஆண்டு தோறும் நடத்துகின்ற, கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்குகளில், சாம்பியா இராணுவம் பற்கேற்பது வழக்கம்.

அதுதவிர, சாம்பியா இராணுவத்தின் பயிலுநர் அதிகாரிகள் ஆறு பேரும், மேஜர் நிலையிலுள்ள பெண் அதிகாரி ஒருவரும் தற்போது, இலங்கையில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கற்கை நிறுவனங்களில், பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு அப்பால், இரண்டு நாடுகளுக்கும் இடையில் பெரியளவிலான பாதுகாப்பு உறவுகள் இல்லாத போதும், ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள சாம்பியா, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்காத நிலையிலும், அந்த நாட்டின் இராணுவத் தளபதியின் இலங்கைப் பயணம், பரபரப்புடன் பேசப்பட்டது.

கடந்த மாதம் 21ஆம் திகதியில் இருந்து, 26ஆம் திகதி வரையான ஐந்து நாள்கள், சாம்பியா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் W.M Sikazwe, மேலும் ஆறு இராணுவ அதிகாரிகள் சகிதம், இலங்கையில் பயணம் மேற்கொண்டு, உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவையும் சாம்பியா இராணுவத் தளபதி சந்தித்துப் பேசியிருந்தார். இதன்போது, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன வெளியிட்ட கருத்தே, சாம்பியா இராணுவத் தளபதியின் இலங்கைப் பயணம் பிரபலமடைவதற்குக் காரணம்.

இந்தச் சந்திப்பின் போது, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இஸ்லாமிய தீவிரவாதம் குறித்துப் பேசவில்லை.

21/4 தாக்குதல்களுக்குப் பின்னர், இஸ்லாமிய தீவிரவாதம், அதனைத் தோற்கடிக்க வேண்டிய அவசியம், அதற்கான மூலோபாயங்கள் குறித்தே, இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகள், அதிகளவில் கருத்துகளை வெளியிட்டு வந்தார்கள். திடீரென, சாம்பியா இராணுவத் தளபதியுடனான சந்திப்பில், விடுதலைப் புலிகள் பற்றியும், அவர்களின் சித்தாந்தம் குறித்தும் பேசியிருக்கிறார் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன. விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக, அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு, 11 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் தான், புலிகளின் சித்தாந்தம் பற்றி அவர் பேசியிருக்கிறார்.

மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இறுதிக்கட்டப் போரில் பங்கேற்ற இராணுவ அதிகாரிகளில் ஒருவர். போரில் முக்கிய பங்காற்றிய 53 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர். இறுதிப்போரில் நடந்த மீறல்களுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டிய அதிகாரிகள் என்று வரிசைப்படுத்தப்பட்டவர்களில் அவரும் ஒருவர்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இராணுவத்தில் இருந்தபோது, அவருடன் இணைந்து பணியாற்றியவர் என்ற வகையிலும், கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய போது, இறுதிக்கட்டப் போரை முன்னெடுப்பதில் அவருடன் இணைந்து செயற்பட்டவர் என்ற ரீதியிலும், காணப்பட்ட நெருக்கமே, மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்குப் பாதுகாப்புச் செயலாளர் பதவியைப் பெற்றுக் கொடுத்திருந்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது, இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளால் தான், இலங்கை இப்போது சர்வதேச அளவில் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுடன் இணைந்து, போரில் பங்கேற்ற தற்போதைய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு, அமெரிக்கா பயணத் தடை விதித்தமைக்கும், போர்க்கால மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளே காரணம்.

இஸ்லாமிய தீவிரவாதம், கடந்த ஆண்டு இலங்கைக்கு பேரிடியாக அமைந்த போதும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட போர், பதினோர் ஆண்டுகளாகியும் இலங்கை இராணுவத்தை, அரசாங்கத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டு தான் இருக்கிறது.

அதன் வெளிப்பாடாகத் தான், விடுதலைப் புலிகளுடன் எந்தத் தொடர்புமே இல்லாத சாம்பியா இராணுவத் தளபதியுடன், புலிகளின் சித்தாந்தம் குறித்துப் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன பேசியுள்ளதற்குக் காரணமாகும்.

2009 ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி, முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, “பிரபாகரனின் ஈழக்கனவு, நந்திக்கடலில் புதைக்கப்பட்டு விட்டது. புலிகளின் தனிநாட்டுக் கோட்பாடு, தோற்கடிக்கப்பட்டு விட்டது” என்று கூறியிருந்தார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் கூட, புலிகளின் சித்தாந்தம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவே தெரிவித்திருந்தார்.

எனினும், இந்த விடயத்தில் யதார்த்தபூர்வமான கருத்தை வெளிப்படுத்தி வந்தவர், இறுதிக்கட்டப் போரில் இராணுவத்துக்குத் தலைமை தாங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மட்டும் தான். அவர், “விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் புலிகளின் சித்தாந்தம் உயிர்ப்புடனேயே இருக்கிறது” என்று கூறிவந்திருக்கிறார்.

புலிகளைத் தோற்கடித்து விட்டதாகவும், புலிகளின் சித்தாந்தம், ஈழக்கனவை நந்திக்கடலில் புதைத்து விட்டதாகவும் பிரகடனம் செய்த அரசியல் தலைவர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் இப்போது புலிகளின் சித்தாந்தம் அழிக்கப்படவில்லை என்று கூற முனைகிறார்கள்.

விடுதலைப் புலிகள், தனிநாட்டுக்கான போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அது அவர்களின் கனவாக, சித்தாந்தமாக இருந்தது என்றாலும், தனிநாட்டுக் கோரிக்கை என்பது, தனியே விடுதலைப் புலிகளால் மாத்திரம் முன்வைக்கப்பட்டதொன்று அல்ல.

1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து, தமிழ் மக்களின் ஆணையைக் கேட்டிருந்தது. அந்த தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆணையும் அளிக்கப்பட்டது.

இலங்கைத் தீவில் ஒன்றாக வாழ்வதற்கு தமிழர்கள் விரும்பிய போதும் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைகளும், இன வன்முறைகளும், நில ஆக்கிரமிப்புகளும், வாய்ப்புகள் மறுக்கப்பட்டதும் தான் தனிநாட்டுக் கோரிக்கையை தமிழர்கள் முன்வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டமைக்கு முக்கிய காரணம்.

பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தபோது, தமிழ்த் தலைவர்கள் யாரும், தனிநாட்டைப் பிரித்துக் கொடுக்குமாறு வலியுறுத்தவில்லை. சிங்களப் பேரினவாத அடக்குமுறைகள் தான், அவ்வாறான நிலைக்குத் தமிழர்களைத் தள்ளிச் சென்றிருந்தது. தமிழர்களின் தரப்பில் இருந்தே, விடுதலைப் புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்னெடுத்தனர்; தலைமை தாங்கினர்.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், தனிநாட்டுக் கோட்பாடு அழிந்து விடும் என்றும், அவ்வாறான சிந்தனை தமிழர்களுக்கு இனி வராது என்றே, சிங்கள அரசியல்வாதிகளும் இராணுவ அதிகாரிகளும் நினைத்திருந்தனர்.

போர் முடிந்து, ஒரு தசாப்தத்துக்குப் பின்னரும், தமிழ் மக்கள் தமக்கான அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதும், சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துவதும், பெரும்பான்மையின அரசியல்வாதிகளுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் புலிகளின் சித்தாந்தப் பிரசாரமாகவே தெரிகிறது.

புலிகளின் சித்தாந்தத்தை தோற்கடிப்பதற்கு, தனிநாட்டுக் கொள்கையை வலுவிழக்கச் செய்வதற்கு, அரசாங்கத்துக்கு போதிய வாய்ப்புகள் இருந்தன. அதை போருக்குப் பின்னர், ஆட்சியில் இருந்த இரண்டு அரசாங்கங்களும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

போரின் போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நியாயத்தைப் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அநீதி இழைத்தவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை எந்த அரசாங்கமும் செய்யவில்லை. இனிவரும் அரசாங்கங்களும் செய்யப் போவதில்லை.

அடுத்து, தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளை வழங்கி, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். அதையும் இந்த 11 ஆண்டுகளில் நிறைவேற்ற எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த இரண்டு முக்கியமான காரணிகளையும் தீர்க்காமல், விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட கோட்பாட்டைத் தோற்கடிக்கவே முடியாது.

ஏனென்றால், தமிழ் மக்கள் எப்போதெல்லாம் ஆட்சியாளர்களால் அநீதிகளை எதிர்கொள்கிறார்களோ, அடக்குமுறைகளைச் சந்திக்கிறார்களோ, அப்போதெல்லாம் அவர்களுக்கு விடுதலைப் புலிகளின் நினைப்பு வரும். புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த நிலை வருமா என்ற சிந்தனை வரும்.

அவ்வாறான சிந்தனை வரும் வரை, செயற்பாட்டு நிலையில் இல்லாவிடினும் கருத்து நிலையிலாவது புலிகளின் சித்தாந்தம், உயிர் வாழ்ந்து கொண்டேயிருக்கும். இராணுவ ரீதியாகப் புலிகளை அழித்து விட்டாலும், புலிகளின் சித்தாந்தத்தையிட்டு இன்றும் அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்புகளும் அச்சம் கொண்டிருக்கின்றன.

அதைத் தோற்கடிப்பதற்கான வழிகள் அரசாங்கத்துக்குத் தெரியும். ஆனால், அந்த வழிகளைப் பின்பற்றுவதற்கு சிங்கள பௌத்த பேரினவாதச் சிந்தனை, கோட்பாடுகள் அரசாங்கத்துக்கு இடமளிக்காது. புலிகளின் சிந்தாந்தத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் சிலரே, பிரசாரம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பொய்யானது. சிங்களப் பௌத்த பேரினவாத சிந்தனை தான், அதன் உயிர்ப்புக்கு இன்னமும் காரணமாக இருக்கிறது என்பதே உண்மை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க அதிபரின் காதல் மனைவி மெலனியா…! யார் இவர்..? (வீடியோ)
Next post இரவு விருந்தில் ட்ரம்புக்கு பரிமாறப்பட்ட இளம் ஆட்டு கறி பிரியாணி, வறுத்த மீன்! (வீடியோ)