ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி -EPRLF (Napa)- பத்திரிகை அறிக்கை….

Read Time:8 Minute, 53 Second

eprlf.bmpதரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பு மறுக்கப்படுவதாக வீறு கொண்டெழுந்த இளைஞர்களின் போராட்டம் இன்று தமிழ் மாணவர்களின் பாடசாலைக் கல்வியை சீரழிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. மாணவர்கள் உட்பட எல்லா சமூகப் பிரிவுகளும் அரசியலில் பிரிக்க முடியாத அம்சம் ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசியல் நோக்கங்களுக்காக மாணவர்களின் கல்வி உட்பட மக்களின் எந்த ஒரு அடிப்படை தேவையையும், அத்தியாவசிய சேவையையும் சீர்குலைக்க நினைப்பது மொத்த சமூகத்துக்கும் கேடாகும்.

கடந்த ஆகஸ்ட் 11 ம் திகதி முகமாலையிலும் அல்லைப்பிட்டியிலும் புலிகள் மேற்கொண்ட ஊடுருவும் தாக்குதல்களை தொடர்ந்து யாழ் குடாநாட்டில் ஊரடங்கு உத்தரவ பிற்றப்பிக்கப்பட்டது. இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.

மக்கள் தமது அத்தியாவசிய தேவைகள், அன்றாட அலுவல்களை கவனிப்பதற்காக படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டது. பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சென்றுவரக் கூடிய வகையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் நேரத்தை வடபகுதி இராணுவத் தலைமை அதிகரித்திருந்தது பாடசாலைகள் இயங்குவதற்கு இடமளித்திருந்தது.

இதனையடுத்து ஆகஸ்ட் 30 தொடக்கம் குடாநாட்டில் தென்மராட்சி வடமராட்சி தவிர்ந்த சகல இடங்களிலும் பாடசாலைகளில் கல்விச் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்களும், ஆசிரியர்களும் கல்வி கற்பதற்கான சூழல், மனநிலை பற்றிய பிரச்சினைகளை முன்நிறுத்தாது தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஒரு வாரம் வரை இவ்வாறு பாடசாலைகளுக்குச் சென்று வந்த மாணவர்களோ, ஆசிரியர்களோ பாதிக்கப்பட்டதாக முறைப்பாடுகள் எதுவும் இல்லை.

மாணவர்களின் போக்குவரத்திற்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ் சாலையில் சேவையில் ஈடுபடுத்தியுள்ள 46 பஸ்களில் 26 பஸ்களை பாடசாலை சேவையில் ஈடுபடுத்தியிருப்பதாக யாழ் சாலை முகாமையாளர் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஏ 9 பாதையை திறந்து இராணுவ நெருக்கடி நீங்கும் வரை கல்விச் செயற்பாட்டை புறக்கணிக்குமாறு யாழ் மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் என்ற பேரில் அறிக்கை விடப்பட்டது. பத்திரிகைகளில் இந்த அறிக்கையை பார்த்த பெற்றோர் அதனை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டனர். தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப அஞ்சினர்.

யாழ் குடாநாட்டில் அனைத்து நடவடிக்கைகளும் படிப்படியாக வழமைக்கு திரும்பிவருகின்ற போதும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வது மட்டும் அச்சுறுத்தி தடுக்கப்பட்டுள்ளது. ஏ 9 பாதை திறப்பதற்கு மாணவர்கள் பகடைக்காயாக்கப்பட்டுள்ளனர். இதனை யாழ் மாவட்ட மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாதபோதும் மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாத நிலையில் உள்ளனர்.

வடமராட்சியில் காலையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது 10 மணிக்கு மேல் தளர்த்தப்பட்டு பிற்பகலில் பாடசாலைகளை நடாத்துமாறு தெரிவிக்கப்பட்ட போது காலை நேரந்தான் கற்றலுக்கு உகந்தது என்று அறிக்கை விடுத்தவர்கள் இப்போது அதிகாலையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட போதும் பாடசாலைகளில் கல்விச் செயற்பாட்டை தொடர முடியாது அது பற்றி கருத்துத் தெரிவிக்கவும் முடியாது மௌனமாகியுள்ளனர்.

குடாநாடு முழுவதும் நேரம் மாறுபடாது காலை 6 முதல் மாலை 6 வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. கல்வியுடன் தொடர்புடைய அனைத்து அலுவலகங்களும் செயற்படுகின்றன. ஆசிரியர்கள் தினமும் பாடசாலைகளுக்கு வந்து வரவை பதிந்து கொள்கிறார்கள். மாணவர்களின் வரவிற்காகக் காத்திருப்பதாக தெரிவிக்கிறார்கள் மாணவர்கள் பாடசாலை செல்வதற்கு மட்டும் சூழலும் மனநிலையும் இல்லை என்று கூறப்படுகின்றது. அரசியல் இலாபம் எய்துவதற்காக மாணவர்களின் கல்வி கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. மாணவர் அமைப்புக்கள் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக குரல் கொடுத்த காலம் போய் மாணவர்களின் பேராலேயே மாணவர்களின் கல்வி சீரழிக்கப்படுகின்றது.

பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலையில் மாணவர்கள் தனியார் கல்விநிலையங்களில் தமது கல்வியை செப்டம்பர் நடுப்பகுதிவரை இடையூறின்றித் தொடர்ந்தனர். தனியார் கல்வி நிலையங்களில் மாணவர்கள் கல்வி கற்கக் கூடிய சூழல் நிலவினால் பாடசாலைகள் ஏன் இயங்க முடியாது என்ற கேள்வியை தர்க்காPதியாக நியாயப்படுத்த முடியாதென்ற ஒரே காரணத்தினால் தனியார் கல்விநிலைய நிர்வாகிகளுக்கு இரகசியமாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தலையடுத்து அவர்களும் தமது கல்வி நிலையங்களை மூடியுள்ளனர்.

இப்போதும் வசதியுள்ள, அறிமுகங்கள் உள்ள பெற்றோர் க.பொ.த சாதாரண தரப் பாPட்சையில் தோற்றவுள்ள தமது பிள்ளைகளுக்கு ஆசிரியர்களை வீடுகளுக்கு வரவழைத்து கல்வி கற்பிக்கின்றனர். இந்த வசதி வாய்ப்புகள் அற்ற, பெரும்பான்மையாகவுள்ள, பின்தங்கிய மக்களின் பிள்ளைகளே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் பாடசாலையை பகிஷ்கரிக்குமாறு இதர கட்சிகள் அழைப்பு விடுத்தால் தமிழ் மாணவர்களின் கல்வி பாழடிக்கப்படுவதாகவும், திட்டமிட்டு சீரழிக்கப்படுவதாகவும் வெளிப்பட்ட கண்டனக் குரல்கள், பத்திரிகைகளின் செய்திக் கட்டுரைகள், ஆசிரியத் தலையங்கங்கள் எதனையும் இன்று காண முடியவில்லை.

தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நலனிலிருந்தும், எமது இளம் சந்ததியின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டும், எமது சமூகத்தின் கல்வி மேம்பாடு குறித்தும் அக்கறைப்படுபவர்கள் இந்த அச்சுறுத்தலும், புறக்கணிப்பும் கைவிடப்பட வேண்டும் என்றே வேண்டுகின்றனர். இதனை அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், தமிழ் பெரியார்கள், கல்விச் சமூகம் எனப்படுவோர் எடுத்துக் கூறவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். எவ்வித நிபந்தனையும் இன்றி மாணவர்கள் கல்விச் செயற்பாட்டை தொடர அனைவரும் குரல்கொடுப்போம்.

சிவராஜா மோகன்
யாழ் பிராந்திய செயலாளர்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி � பத்மநாபா
இல 310, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 021 222 2022
04.10.2006

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியல் இந்தியாவின் இந்திரா நூயி முதலிடம்
Next post அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் யுனிசெவ் வலியுறுத்தல்