By 2 April 2020 0 Comments

மூத்தோர் சொல்லும் முழுமையான ஆரோக்கியமும்!! (மருத்துவம்)

வைத்தியர் என்றால் தகுதியற்றவர், மருத்துவர் என்றால் மேன்மையானவர் என்ற கருத்து இப்போதும் சில இடங்களில் நிலவுகிறது. இது உண்மையா அல்லது தவறான கருத்தா என முடிவுக்கு வரும் முன்னர் ‘வைத்தியர்’ என்ற சொல்லுக்கு அர்த்தத்தை பார்த்து விடுவோம்.

‘வைத்யா’ என்ற சொல்லின் தமிழ்ச்சொல்லே வைத்தியர். வித்தையைப் பெற்றவரே வைத்தியன். வித்யா என்றால் ‘அறிவு’, ‘ஞானம்’ என்று பொருள்படும். இது அவ்வளவு எளிதில் கிடைத்து விடுகிறதா? மிகவும் கஷ்டப்பட்டுத்தானே பெற முடியும். இன்றைய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இல்லாத அக்காலத்தில் பல ஆண்டுகள் குருகுலக் கல்வியில் உடன் வைத்தியமுறை ஆரம்பிக்கப்பட்டது. ஆக ‘வைத்தியர்’ என்பவர் அக்காலத்தில் மருத்துவக்கலையில் நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் வல்லமை பெற்றவராக இருந்திருக்கின்றனர்.

தற்போது பொதுமக்களில் சிலர் மனதில் பதிந்திருக்கும் தவறான பிம்பம் அல்ல வைத்தியர். இக்காலத்தில் இருப்பதுபோலவே அக்காலத்திலும் போலி வைத்தியர்கள் இருந்திருக்கின்றனர் என்பதை ‘சரஹ ஸம்ஹிதை’ என்ற பழமையான ஆயுர்வேத நூல் மூலம் அறியலாம். இந்நூலில் போலி வைத்தியர்கள் அறிகுறிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பண்டைய காலத்தில் குருகுலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்திய முறைக்கு நான்கு அங்கங்கள் பின்பற்றப்பட்டன.

அவை:

(1) கண்ணால் பார்த்து படித்து நன்கு கற்று அறியும் முறை: இதில் உடல் அங்கங்களின் அமைப்பு, நோயாளியை நேரடியாக பரிசோதித்து சிகிச்சை அளித்து குணமளிக்கக் கூடியவை. இந்த முறைதான் இன்றைய நவீன கால மருத்துவ முறையில் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. இது அன்றைக்கே பின்பற்றப்பட்ட முறை என்பது பெருமைக்குரிய ஒன்று.

(2) அனுமானம்: இது ஊகத்தின் அடிப்படையில் இருப்பவை. இதற்கு கூர்மையான புத்தியும், சிந்திக்கும் திறனும் அதிகளவில் தேவை. உடலில் அரிப்பு ஏற்பட்டால் எந்தெந்த காரணத்தினால் அரிப்பு ஏற்படும் என்று அறிந்து சரியாக காரணத்தை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

(3) உபமானம்: மற்றவர்களுடன் உவமைப்படுத்தி படிக்கும் முறை. உதாரணத்திற்கு சிறுநீரகம்போல் இருப்பதால் முந்திரி பருப்பிற்கு (விருக்க பீஜம்) என்று பெயர். விருக்க என்றால் சிறுநீரகம் என்றும் பொருள். இதுபோன்று நோய்களாலும் அதன் அறிகுறிகளையும் மற்ற பொருளுடன் ஒப்பிட்டு கற்பிக்கும் முறை.

(4) ஆப்த வாக்கியம்: இது முன்னோர்களின் சொல் அல்லது சான்றோர்களின் வாக்கியம் என்று பொருள்படும். இது முன்னோர்களுக்குள்ள அனுபவத்தின் அடிப்படையில் அவர்களுக்கு இருக்கும் ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில் கற்பிக்கப்பட்டவை. ஆயுர்வேத மருத்துவத்துறையில் ‘ஆப்த வாக்கியம்’ என்ற முறைக்கு நான்காவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா விஷயங்களிலும் போலிகள் உருவாவதுபோல முன்னோர்களின் வாக்கியங்களிலும் போலியான அனுபவம் இல்லாத கருத்துரைகள் சொல்லப்பட்டுள்ளன.

இவை மூட நம்பிக்கை என்று சொல்லி முழுவதும் முன்னோர்களின் சொல்லை ஒதுக்கி விட்டனர். மேலும் பல முதுமொழிகள் இங்கு தவறாக திரியப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக ‘ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்’ என்ற பழமொழியில் மிகப்பெரிய தவறு உள்ளது. உண்மையில் ‘ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்’ என்பதே உண்மையான பழமொழி. இதுபோன்றே, பல முன்னோர்களின் சொல்லும் பழமொழிகளும் தவறாக திரித்து கூறப்பட்டுள்ளன.

உண்மையில் முன்னோர்களின் சொல்லில் முழுமையான ஆரோக்கிய கருத்துரைகள் அடங்கியிருக்கின்றன என்பதே உண்மை. ஆனால், இன்றைய நவீன இளைஞர்களுக்கு முன்னோர்களின் சொல் கசக்கச் செய்கிறது. அவர்களுக்கு எல்லாம் ‘முன்னோர்களின் சொல்லும், முதுநெல்லிக்கனியும் கசக்கும் முன்னே; இனிக்கும் பின்னே என்ற பழமொழி பொருத்தமாக இருக்கும். ஆக ஆரோக்கிய சம்பந்தமாக முன்னோர்களின் கருத்துகளைப் பின்பற்றி ஆரோக்கியமாக வாழக் கற்றுக் கொள்வோம்.

மறக்கக் கூடாத சில முன்னோர்களின் பழமொழிகள்

(1) பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு உண்ணலாம் : பகைவன் வீட்டு உணவு என்பது விஷம் போன்ற விஷயங்களால் நம்மை அச்சுறுத்தலாம். அதற்கும்கூட 10 மிளகு இருந்தால் போதும். உணவின் விஷம் நீங்கும் என்பதை மேம்படுத்திக் கூறும்பொருட்டு 10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு உண்ணலாம் என்று கூறியுள்ளனர்.

(2) நொறுங்கத் தின்றால் நூறு வயது: அஜீரணம் இல்லாத வாழ்வே நீண்ட வாழ்நாளுக்கு வழிகோலும். அதற்கு நாம் உண்கிற உணவு ஒன்று உமிழ்நீருடன் கலந்து அரைக்கப்பட்டதுதான் உணவு இரைப்பையில் செரிப்பதற்கு ஏதுவாக இருக்கும். அவசர கதியாக சரியாக நொறுங்காமல் தின்றால் அது அஜீரணத்திற்கு வழிகோலும். அஜீரணமே அனைத்து நோய்க்கும் காரணம்.

(3) லங்கனம் பதமம் ஒளஷதம்: லங்கனம் என்றால் பட்டினி கிடத்தல் என்று பொருள். பதமம் என்றால் சிறந்தது/ உயர்ந்தது என்று பொருள். ஒளஷதம் என்றால் மருந்து என்று பொருள். பட்டினியே மிகச் சிறந்த மருந்து. ஆம்… உடல் உறுப்புகளுக்கு ஓய்வு அளித்தலே மிகச் சிறந்த மருந்து. அதை பட்டினி மூலம்
நிறைவேற்றலாம்.

(4) மாதுளை, தாதுவேளை வளர்ந்த வீடு… வயிற்றிலே நெஞ்சிலே கணக்கம் இல்லை!: மாதுளை வயிற்றிலும் ஏற்படும் பிரச்னைகளுக்கு சிறந்தது தாதுவேளை. நெஞ்சில் ஏற்படும் சளித்தொந்தரவுகளுக்குச் சிறந்தது.

(5) கந்தை ஆனாலும் கசக்கி கட்டு… கூழானாலும் குளித்துக் குடி: கந்தல் ஆடை என்றாலும் அவற்றை நன்றாக துவைத்து பயன்படுத்த வேண்டும். கூழ் என்றால் குளித்த பின்னும்தான் குடிக்க வேண்டும் என்பதாகும். இது ஆரோக்கியத்திற்காக வாழ்க்கை நடைமுறையை மேம்படுத்துவதற்கு
கூறப்பட்டதாகும்.

இதுபோன்று பல்வேறு வித மருத்துவ கருத்துக்களைப் பழமொழி மூலமாக கூறிச் சென்றுள்ளனர். இதேபோல் இன்னும் பல முதுமொழிகளை முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். ஆக முன்னோர்களின் சொல்லிலும் ஆரோக்கியம் அடங்கி இருக்கிறது என்பதை இதன்மூலம் அறியலாம்.Post a Comment

Protected by WP Anti Spam