மூடி இல்லாத முகங்கள் கேட்டோம்… !! (கட்டுரை)

Read Time:12 Minute, 5 Second

அமர்க்களம், படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய, ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்..’ என்ற பாடல், 1999 ஆம் ஆண்டு காலப் பகுதியில், பட்டிதொட்டி எங்கும் ஓங்கி ஒலித்தது.

இந்தப் பாடல் தனித்துவமானது. ‘அமர்க்களம்’ படத்தையே, சமர்க்களம் ஆக்கியது எனலாம். அதாவது, கதாநாயகன் எவற்றை எல்லாம் விரும்பிக் (நியாயமாக, ஏற்றுக் கொள்ளக் கூடிய வேண்டுதல்கள்) கேட்டார் என, ஒவ்வொரு வரிகளும் எடுத்து இயம்புகின்றன. அந்தப் பாடலின் ஒரு வரியே, ‘மூடி இல்லாத முகங்கள் கேட்டேன்’ என்பதாகும்.

ஈழத்தமிழ் மக்களுக்கும், அந்த பாடல் வரிகள் அப்படியே பொருந்துகின்றன. ஈழத் தமிழ் மக்கள், ஏனைய இனங்களுக்கு, முற்றிலும் தீங்கு பயக்காத, நியாயமான கோரிக்கைகளைக் கேட்டாலும், அவை யாவும் கேளிக்கைகளாகவும் வேடிக்கைகளாகவும் பார்க்கப்பட்டதே, கடந்த 70 ஆண்டு கால, கசப்பான வரலாறு ஆகும்.

தமிழ் மக்களது கோரிக்கைகளை, 70 ஆண்டு காலமாகக் கேட்டும் பார்த்தும் வந்த, மாறிமாறி ஆட்சி செய்த, இலங்கை அரசாங்கங்களின் நோக்கிலும் போக்கிலும் மாற்றங்கள் ஏற்படவில்லை. இதனால், தமிழ் மக்கள் விரும்பி, விரும்பத்தக்க மாற்றங்களை அனுபவிக்கவில்லை.

இந்த அரசாங்கங்கள், முக மூடிகளை அணிந்து கொண்டே, இனப் பிணக்கைக் கேட்டும் பார்த்தும் வந்துள்ளார்கள்; அதற்கே பழக்கப்பட்டும் விட்டார்கள். முரண்பாடுகள் நிறைந்த, இலங்கையின் இனப் பிணக்கை, சமநிலை குழம்பாமல், அறிவையும் ஆற்றலையும் கொண்டு, தீர்க்க முயலவில்லை; தீர்க்க முடியவில்லை.

சிங்கள மக்களுக்குத் தமிழ் மக்கள், கற்பனை எதிரிகள் ஆக்கப்பட்டார்கள். ‘நீ என்ன நினைக்கிறாயோ, ஈற்றில் அதுவாகவே ஆகின்றாய்’ என்பது போல, இன்று நிஜ எதிரிகள் போல ஆக்கப்பட்டு விட்டார்கள்.

இதனால், தமிழ் மக்களும் சிங்கள மக்களை, முகமூடிகள் கொண்டு பார்க்க வேண்டிய நிலைக்கு, இன்று சென்று விட்டார்கள்.

இது இவ்வாறு நிற்க, இன்றைக்கு ஓராண்டுக்கு முன்னர் (ஏப்ரல்-21), நம்நாட்டில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, இஸ்லாமிய மக்கள் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளானார்கள்.

அவர்களைச் சந்தேகக் கண் கொண்டே பெருமளவானோர் பார்த்தனர். இஸ்லாமியப் பெண்கள், முகத்தை மூடி அணிகின்ற அவர்களது பண்பாடே, பல சர்ச்சைகளை உண்டாக்கியது.

ஆனால் இன்று, அகில உலகமும், நிஜ முகக்கவசங்களை அணிந்து கொண்டே ஜீவிக்கின்றது. அவ்வாறு, முகக் கவசங்களை அணிந்தால்த்தான், எம் உடலில் உயிர் வாழும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பக்கத்து வீட்டுக்காரனைக் கூட, எட்டத்தில் வைத்தே உரையாட வேண்டி உள்ளது. வீடு தேடி வருகின்றவர்களைப் படலையில் வைத்தே, பதில் கூறி அனுப்ப வேண்டி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய்த் தடுப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள், வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு, 2009ஆம் ஆண்டுக்கு முன்னரான வாழ்வை, ஒருகணம் கொஞ்சமேனும் மீள நினைவு ஊட்டுகின்றது.

ஊரடங்குச் சட்டம், பொருள்களுக்குத் தட்டுப்பாடு, வரிசையில் நின்று பொருள்களைப் பெறல் என, இந்தச் சொற்கள், தமிழ் மக்களுடன் பல தசாப்த காலங்கள், விருப்பமின்றி உறவாடிய வார்த்தைகள் ஆகும்.

கொரோனா வைரஸ், தனிமைப்படுத்தல், 14 நாள்கள், மரணம் போன்றவற்றால், இன்று இலங்கை வாழ் மக்களும் உலக மக்களும் அடுத்து என்ன நடக்குமோ என, வெளியே ஏக்கத்துடன் வாழ்கின்றனர்.

இந்த ஏக்கம் போலவே, போரால் உயிரிழப்புகள், காணாமல் ஆக்கப்படுதல்கள், நில அபகரிப்புகள் எனப் பல்வேறு மன அழுத்தங்களை, நெஞ்சத்துக்குள்ளே சுமந்து கொண்டு, தமிழ் இனம் பல ஆண்டு காலம் வாழ்ந்து வருகின்றது.

இன்றுள்ள கொரோனா வைரஸ் முற்றுகையை விடப் பல மடங்கு, ஆபத்துகள் நிறைந்த முற்றுகை வாழ்வைத் தமிழ் இனம் கடந்த காலங்களில் அனுபவித்து வந்துள்ளது.

இன்று, முழு உலகமும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடி வருகின்றது. ஆனால், அன்று முழு உலகமும் ஒன்று சேர்ந்து, தம்மைக் காப்பாற்றத் தவறி கைவிட்டு விட்டார்களே என, தமிழ் மக்கள் கவலையுடன் நினைவு கூருகின்றனர்.

இன்றைய நிலையில், கொரேனா வைரஸ் பரவுகையைத் தடுத்து நிறுத்தி, எம்முடைய வாழ்வைப் பாதுகாக்கும் பொறிமுறை, எம்முடைய கையில், ஓரளவு உள்ளது. ஆனால், தமிழ் மக்கள் மீது, தொடர்ச்சியாகப் பல்லாண்டு காலமாகத் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரம், போர் என்பவை, பல அப்பாவித் தமிழ் மக்களைத் துவம்சம் செய்து விட்டன.

இதற்கிடையே, கொரோனா வைரஸின் கொடுமைக்குள், உலகம் முழுமையாக உறைந்திருக்க, யாழ்ப்பாணம், மிருசுவில் படுகொலையில் குற்றவாளியாக இனம் கானப்பட்டு, மரணதண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்க என்ற படைவீரர், ஜனாதிபதியால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டு இருக்கின்றார்.

முழுத் தேசமாக ஒன்றினைந்து, கொரோனாவை விரட்டி அடிப்போம் என, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. ஆனால், மறுவளமாக இத்தகைய இடர்பாடுகளுக்கு மத்தியிலும், அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகள், ஒரு தேசமாக ஒன்றினைய, தமிழ் மக்களது இதயங்கள் இடம் கொடுக்குமா?

இன்று, கொரோனா அச்சத்துக்குள் மூழ்கி, மிச்சம் இல்லாது போய் விடுவோமோ எனத் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் உலக மக்களும் திகில் நிறைந்த வாழ்வுக்குள் உள்ளனர், குறிப்பாக, ஊரடங்குச் சட்டம், பொருள் தட்டுப்பாடு காரணமாக, பட்டினிச் சாவைச் சந்தித்து விடுவோமோ போன்ற, ஒருபோதும் உணராத புதிய பயப்பீதிக்குள் மூழ்கிப் போய் துடிக்கிறார்கள்.

‘ஆரியக் கூத்தாடினாலும், காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டும்’ என்பார்கள். அதுபோல, இவ்வாறான அனர்த்த நிலையிலும், பேரினவாத அரசாங்கங்களின் இவ்வாறான நடவடிக்கைகளை, சிங்களப் பெரும்பான்மையின மக்கள், நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்; அறிந்து கொள்ள வேண்டும்.

கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மூன்றாவதாக (தற்போதைய நிலைவரங்களின் பிரகாரம்) நாடாக, அமெரிக்க உள்ளது. ஐரோப்பாவில் வளம் பொருந்திய நாடான இத்தாலி, சராசரியாக் தினசரி 700 பேரைக் கொரோனா வைரஸுக்குப் பலி கொடுத்து வருகின்றது. உலகின் இரண்டாவது அதிக சனத்தொகையைக் கொண்ட, தெற்காசியாவின் வல்லரசான இந்தியாவில் கூட, கொரோனா வைரஸ் தாக்கத்தாலான மரணங்கள், சம்பவித்து வருகின்றது.

பெரும் இராணுவப் படை பலம், பொருளாதாரப் பலம், ஆளணி பலம் என அனைத்துப் பலம்களும் கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் கிருமிக்கு முன்பாக, மண்டியிட்டு நிற்கின்றன. அணு ஆயுதத்தைக் கண்டு பிடித்தும் பிரயோகித்தும் பார்த்த நாடுகள், கொரோனா வைரஸைப் பார்த்துப் பயந்து போய் நிற்கின்றன; திணறுகின்றன.

கொரோனா கொடூரம், உலகின் இயல்பு நிலையை, முற்றிலும் மாற்றி அமைத்து உள்ளது. சுருங்கக் கூறின், அனைத்து நாடுகளும், ஆட்டம் கண்டுள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இப்போது இந்தப் பூமி, பாரிய உயிரிழப்புகளைக் கண்டு வருகின்றது.

ஆகவே, அன்று வெளியே தெரியாத முக மூடிகளை அணிந்து கொண்டு, சிங்களப் பேரினவாதத்துக்குள்ளும் பௌத்த மதவாதத்துக்குள்ளும் ஒழிந்து கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இன்று, முக மூடிகளை அணிந்து கொண்டு, அன்றைய வேலைத்திட்டங்களின் மீதிகள், சீர் செய்யப்படுகின்றன.

எது எவ்வாறு இருப்பினும், எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஒழிக்கப்பட்டு, மிக விரைவில் உலகம் வழமைக்குத் திரும்பும்; திரும்ப வேண்டும் என, எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகின்றோம்.

அதன் பின்னரும், ஒற்றையாட்சி, ஒரு மதத்துக்கு மட்டும் முன்னுரிமை, அதிகாரப் பரவலாக்கம் அர்த்தாமற்றது, இனப்பிணக்கு இங்கில்லை, பொருளாதாரப் பிரச்சினையே உள்ளது, தமிழ் மக்கள் ஒருபோதும் அரசியல் தீர்வைக் கேட்கவில்லை என்றே, கதைத்துக் கொண்டு இருக்கப் போகின்றார்களா? அல்லது, ஒரு தேசமாக, உண்மையாக எழச்சியுடன் எழுந்து, இந்நாட்டையும் மக்களையும் பாதுகாக்கப் போகின்றார்களா?

ஆரம்பத்தில் கூறப்பட்ட, ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என்ற பாடலில், ‘வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்’ என்ற ஒரு வரியும் வருகின்றது. ஆகவே, நாம் அனைவரும், இலங்கை என்ற அன்னையின் மடியில் சந்தோசமாக வாழலாம். இவை யாவும், பெரும்பான்மைச் சிங்கள மக்களின் கைகளிலேயே முற்றிலும் தங்கி உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை!! (அவ்வப்போது கிளாமர்)
Next post முன்னுதாரணமாக மாறிய திருப்பூர் ஆட்சியர்! (வீடியோ)