போன் செய்தால் பார்சல் தயாராக இருக்கும்!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 2 Second

மயிலை என்றாலே கபாலிதான் நினைவுக்கு வருவார். அடுத்து நமக்கு நினைவு வருவது சின்னசாமி சாலையில் உள்ள அந்த உணவகம். சாலையோர உணவகம்தான் என்றாலும், இரவு ஏழரை மணிக்கெல்லாம் அங்கு கூட்டம் அலைமோத ஆரம்பித்துவிடுகிறது. இரவு 11 மணி வரை பரோட்டா, முட்டை மசாலா, இறால் ஃபிரை, இட்லி சாம்பார், மஷ்ரூம் தோசை, பன்னீர தோசை, பொடி தோசை… என சுவையான மற்றும் வெரைட்டியான உணவுகளை வழங்கி வருகிறார்கள் மோகன் மற்றும் சாந்தி தம்பதியினர்.

‘‘என்னுடைய பூர்வீகம் சென்னை, தி.நகர் தான். அப்பா கார்ப்ரேஷனில் தான் வேலைப் பார்த்து வந்தார். பத்தாம் வகுப்பு வரை தான் படிச்சிருக்கேன். அதன் பிறகு எல்லா பெண்களைப் போல் எனக்கும் திருமணமானது. என் கணவர் மோகனின் பூர்வீகம் கேளம்பாக்கம் என்றாலும், அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மயிலாப்பூரில். அவரும் பத்தாம் வகுப்பு வரை தான் படிச்சிருக்கார். அதன் பிறகு தொலைதூர கல்வி மூலம் டிகிரி படிச்சார். ஆனால் சில காரணங்களால் தொடர முடியவில்லை’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் கணவர் மோகன். ‘‘நான் பத்தாம் வகுப்பு முடிச்ச கையோடு, ஒரு பிரின்டிங் பிரசில் ப்ரூப் ரீடரா வேலைப் பார்த்தேன். இதற்கிடையில் ஷேர்மார்க்கெட்டிலும் சில காலம் இருந்தேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே சினிமா மேல் தனி ஈடுபாடு இருந்தது.

அதனால் கே.பாலசந்தர் சாரின் மகன் கைலாசம் அவர்களிடம் வேலைக்கு சேர்ந்தேன். அவர்களின் மின்பிம்பங்கள் நிறுவனம் தயாரிப்பில் கதையல்ல நிஜம், நையாண்டி தர்பார், கனாகாணும் காலங்கள் போன்ற நிகழ்ச்சியில் வேலை பார்த்தேன். பொதுவாகவே சினிமா பொறுத்தவரை நமக்கு நிரந்தர வருமானம் என்பது இருக்காது. இந்த சமயத்தில் எனக்கு திருமணமானது. குடும்பத்தை நடத்த வருமானம் அவசியம் என்பதால் சினிமா துறையை விட்டு வெளியே வந்து ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சேன்’’ என்றவர் இந்த உணவகம் ஆரம்பித்தது பற்றி விவரித்தார்.

‘‘நாங்க மொத்தம் ஐந்து பேர். மயிலாப்பூரில் எங்க அப்பாவின் பூர்வீக வீட்டில் தான் வசித்து வருகிறோம். எங்க வீட்டுக்கு கீழ் பகுதியில் இடம் இருக்கும். அங்கு தான் 1998ம் ஆண்டு முதன் முதலில் என்னுடைய அண்ணன் மசாலா பால்… பஜ்ஜின்னு மாலை நேரத்தில் சின்னதாக செய்து வந்தாங்க. அது நல்லா பிக்கப்பானது. அதன் பிறகு அவங்க காலையில் டிபனும் போட ஆரம்பிச்சாங்க. அதுவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. காலையில் உணவு சாப்பிட வந்தவங்க மதியம் மற்றும் மாலை நேர உணவும் வழங்குமாறு கேட்டாங்க. ஆனால் அண்ணன், அண்ணியால மதியம் மற்றும் இரவு நேரமும் உணவு வழங்க முடியவில்லை. அதனால் மதிய நேர உணவினை இன்னொரு அண்ணன் எடுத்து செய்தாங்க. அந்த சமயத்தில் தான் என்னுடைய பெரிய அண்ணன் என்னை இரவு நேர உணவகத்தை பார்த்துக்க சொன்னாங்க. எனக்கும் ஆட்டோ ஓட்டுவதற்கு பதில் நமக்கான ஒரு தொழில் செய்தால் நன்றாக இருக்கும்ன்னு தோணுச்சு.

2003ம் ஆண்டு முதல் நானும் என் மனைவியும் இரவு நேரம் மட்டுமே உணவகத்தை எடுத்து நடத்த ஆரம்பிச்சோம்’’ என்றவர் அவரே சமைக்கவும் துவங்கியுள்ளார். ‘‘ஆரம்பத்தில் நாங்க ஆட்கள் கொண்டு தான் உணவு சமைத்து வந்தோம். ஆனால் எங்களுக்கான எந்த ஆட்களும் சரியாக அமையவில்லை’’ என்று பேசத் துவங்கினார் சாந்தி. ‘‘உணவகம் என்றால், தரமான உணவு மட்டும் இல்லை சுவையாகவும் கொடுக்கணும். அதில் நானும் என் கணவரும் மிகவும் உறுதியாக இருந்தோம். அதனால் நானும் என் கணவர் இருவருமே சமைக்க ஆரம்பித்தோம். பரோட்டாவிற்கு மட்டும் ஒரு மாஸ்டர் இருக்கார். கடைக்கு செல்வது, பொருட்கள் வாங்குவது போன்ற வேலைகளை எல்லாம் அவர்தான் பார்த்துக் கொள்வார். மத்தபடி உணவினை பார்சல் செய்வது, அங்கு பரிமாறுவது, கல்லாவின் பொறுப்பு எல்லாம் என்னுடையது. ஆரம்பத்தில் என் கணவருக்கு இதில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லை.

காரணம் வெளியே வேலைக்கு சென்று வந்தவரால், இங்கு கடையில் பரிமாறுவது, தட்டு கழுவுவது என்று நினைக்கும் போது கொஞ்சம் தயங்கினார். ஆனால் குழந்தை, குடும்பம் என்று வரும் போது வருமானம் அவசியம். மேலும் இது நம்முடைய உழைப்பு, அதனால் அதில் கூச்சப்படுவது அவசியமில்லைன்னு அவருக்கு புரிய வைத்தேன். அவரும் புரிந்து கொண்டார். இப்போது இதில் முழு ஈடுபாட்டுடன் மேலும் பெரிய அளவில் கொண்டு வரவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார். உணவகம் ஆரம்பித்து ஐந்து வருடம் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. இதற்கிடையில் எங்களுக்கு இரண்டாவதாக மகள் பிறந்தாள். அந்த சமயத்தில் எனக்கு உடல் நலமில்லாமல் போனதால் கடையினை முழுமையாக பார்த்துக் கொள்ள முடியவில்லை.

கைக்குழந்தை வேறு என்பதால் கடையினை வாடகைக்கு விட்டோம். நாமளே கடையை எடுத்து நடத்தும் போது, அதில் நல்ல வருமானம் பார்க்க முடியும். ஆனால் அதை மற்றவருக்கு கொடுக்கும் போது, ஒரு குறிப்பிட்ட தொகை தான் நமக்கு கிடைக்கும். குடும்பத்தை நகர்த்த வேண்டுமே. என் கணவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். ஐந்த வருஷத்திற்கு பிறகு அவரின் நிறுவனம் நாவலூருக்கு மாற்றலானது. அவ்வளவு தூரம் சென்று வருவதற்கு மிகவும் சிரமம் என்பதால், 2013ம் ஆண்டு மறுபடியும் நாங்களே கடையினை எடுத்து செய்ய ஆரம்பித்தோம். கடையை பொறுத்தவரை நாங்க மூவரும் ஒவ்வொரு நேரம் பார்த்துக் கொண்டாலும், வருமானம் என்று வரும் போது, உடன்
பிறப்பாக இருந்தாலும், பிரச்னை ஏற்படுவது இயல்பு தான். அதனால் நாங்க ஒவ்வொருவரும் தனித்தனியாக தான் இந்த கடையினை நடத்தி வருகிறோம். எங்களுக்கு வரும் வருமானத்தை நாங்க பிரித்துக் கொள்வது கிடையாது. அவரவர் உழைப்புக்கு கிடைக்கும் வருமானம் அவர்களுடையது என்று எங்களுக்குள்ளே முடிவு செய்து கொண்டோம்.

குடும்பத்திற்குள் பிரச்னையும் ஏற்படாது பாருங்க. எங்க உணவகத்தின் ஸ்பெஷலே ஆப்பம் வடைகறி, குருமா, தேங்காய்ப்பால், கொத்து பரோட்டா, சிக்கன் கிரேவி, பிரான் மசாலா, கொத்தமல்லி தோசை, புதினா தோசை, முட்டை தோசை, போடி தோசை… ன்னு ஓரளவுக்கு வெரைட்டி கொடுக்கிறோம். அசைவ உணவு என்பதால் பலர் விரும்பி சாப்பிட வராங்க. மேலும் எங்க தெருவில் டிராவல்ஸ் நிறுவனம் இருப்பதால், சிலர் எங்களுக்கு ஃபோன் செய்து பார்சல் எடுத்து வைக்க சொல்வாங்க’’ என்றவரை தொடர்ந்தார் மோகன். ‘‘எல்லா விதமான அசைவ உணவும் தரணும்னுதான் விருப்பம். என்ன மட்டன் விலை அதிகம், கட்டுப்படியாகாது என்பதால் மட்டனை தவிர்த்து விடுகிறோம். பீஃப், போர்க் எப்போதும் செய்வதில்லை. அப்பா பால் வியாபாரம் தான் செய்து வந்தார். எங்க வீட்டில் பெரிய மாட்டு பண்ணை வச்சிருந்தோம். பசு மாட்டினை கடவுளாக எங்க வீட்டில் கும்பிடுவது வழக்கம்.

அதை மட்டும் எப்போதுமே சமைக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதே போல் சைவத்திலும் ஃபிரைட் ரைசில் நிறைய வகை செய்யணும்ன்னு எண்ணம் இருக்கு. அதற்கு என சரியான மாஸ்டர் இன்னும் கிடைக்கவில்லை. ஆள் கிடைச்சா கண்டிப்பா அந்த உணவினையும் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது. அப்படி ஒரு எண்ணத்தில் தான் மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளியில் கிளைகள் துவங்கினோம். அங்கு ஆட்கள் போட்டு பார்த்துக் கொண்டோம். ஆனால் அவர்களால் சரியாக செயல்படுத்தமுடியவில்லை. நஷ்டம் தான் ஏற்பட்டது. முதலில் இந்த உணவகத்தை நல்ல படியாக நடத்தணும்னு இருக்கேன்.

சாலையோர கடை என்பதால் சின்னச் சின்ன பிரச்னைகள் வரும். அதை எல்லாம் சமாளிச்சு தான் ஆகணும். இங்கு பெரும்பாலும் கார்ப்ரேஷன் சார்ந்த பிரச்னை தான் இருக்கும். பல கடைகளுக்கு உரிமம் இருக்காது. உணவும் தரமா கொடுக்கமாட்டாங்க. ஆனால் நாங்க எங்க கடைக்கு உரிமம் வாங்கி இருக்கோம் உணவில் எந்த வித சுவையூட்டிகளையும் கலப்பதில்லை. வீட்டு சாப்பாடு போல் தான் இருக்கும். இயற்கை உபாதைகளான மழை மற்றும் புயல் நேரத்தில் வியாபாரம் தடைபடும். அதையும் சமாளிக்கணும். அடுத்து அதிக கூட்டம் இருக்கும் நேரத்தில் ஒரு சிலர் சாப்பிட்டுவிட்டு காசு தராமல் போயிடுவாங்க. இது போன்ற சின்ன சின்ன பிரச்னைகளை சமாளிச்சு தான் வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறோம்’’ என்ற தம்பதியினர் முழு நேரம் செயல்படக்கூடிய தரமான ஓட்டல் ஒன்றை அமைக்கும் திட்டத்தில் உள்ளனராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவுக்கு ஆதரவு – அச்சுறுத்தும் அமெரிக்கா! (உலக செய்தி)
Next post வாழ்வென்பது… பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)