சிரிப்பே சிறப்பு!! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 40 Second

ஹா…  ஹா…  ஹா…
‘கொஞ்சம் சிரிங்க பாஸ்… எல்லாமே சரியாயிரும்’ என்கிறார்கள் சிரிப்பையே மருத்துவமாகப் பரிந்துரைக்கும் Laughter yoga-வின் ரசிகர்கள். ‘வசூல்ராஜா’ படத்தில் டென்ஷனான நேரங்களில் எல்லாம் அடக்க முடியாமல் சிரித்து ரிலாக்ஸ் ஆவாரே பிரகாஷ்ராஜ்… அதேதான்!சென்னையில் பங்குச்சந்தை வர்த்தகத் தொழிலை செய்துவரும் சம்பத், இந்த சிரிப்பு யோகாவை தமிழ்நாட்டில் மட்டுமல்ல… வெளிநாடுகளிலும் தொடர்ந்து நடத்தி வருகிறார். சிரிப்பின் மேல் உள்ள காதலால் தன்னுடைய பெயரையே சிரிப்பானந்தா என மாற்றிக் கொண்டவர் இவர். சிரிப்பு யோகா பற்றி என்ன சொல்கிறார்… கேட்போமே!

‘‘எந்த நோக்கமும் இல்லாமல் இயல்பாக நாம் வெளிப்படுத்தும் உணர்வான சிரிப்புக்கு மருத்துவரீதியாக எண்ணற்ற பலன்கள் உள்ளன. இந்த சிரிப்புடன் எளிமையான யோகாசனப் பயிற்சிகளையும் கலந்து எல்லோராலும் செய்ய முடிகிற வகையில் வடிவமைக்கப்பட்டதுதான் சிரிப்பு யோகா.இது ஒன்றும் புதிய விஷயமல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே ‘ஹாஸ்ய யோகா’ என்ற பெயரில் நம்மவர்கள் செய்துவந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், ‘வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்று நம் முன்னோர் சொன்னதைத்தான் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்த பிறகு, Laughter yoga என்று உலகம் பின்பற்றிக் கொண்டிருக்கிறது.

பொதுவாக இதுபோன்ற தெரபியை ஏற்றுக் கொள்ளாத அலோபதி மருத்துவம்கூட, சந்தேகம் இல்லாமல் சிரிப்பு யோகாவை ஏற்றுக்கொண்டு விட்டது. அமெரிக்காவில் சிரிப்பு யோகாவுக்கென தனித்துறையே ஏற்படுத்தியிருக்கிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்களின் டென்ஷனை குறைக்க சில அமெரிக்க மருத்துவமனைகள் சிரிப்பு யோகாவை கட்டாயமாக்கியிருக்கிறது’’ என்றவரிடம் இதன் பலன்கள் பற்றிக் கேட்டோம்.

‘‘யோகாசனம், மூச்சுப்பயிற்சி, சிரிப்பு மூன்றும் கலந்தது என்பதால், மூன்றின் பலனும் சிரிப்பு யோகாவில் கிடைக்கும். சிரிக்கும்போது ஆக்சிஜனை அதிகம் சுவாசிக்கும் தன்மையை நுரையீரல் பெறும். ஆக்சிஜன் போதுமான அளவு கிடைக்கும்போது ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். இதன்மூலம் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தம் சென்று ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளை சிரிக்க வைக்க கிலுகிலுப்பை ஆட்டினால் கூட போதும். பெரியவர்களை சிரிக்க வைப்பதோ கஷ்டம். ஜோக் சொன்னால் சிலருக்குப் புரியும், சிலருக்குப் புரியாது.

அதனால், ஒரு நகைச்சுவையை உணர்ந்து ரசித்து சிரிக்கும்போது கிடைக்கும் பலனை, செயற்கையாக பாவனை செய்யச் சொல்லி பயிற்சி கொடுக்கிறோம்.ஒருவர் ரசித்து உணர்ந்து சிரிக்கிறார் என்பது உடலுக்கு முழுமையாகத் தெரியாது. அதனால் செயற்கையாகச் சிரித்தாலும் அதேபலன் நமக்குக் கிடைக்கும். ‘நினைத்தது நடக்கும் வரை நடந்தது போல நடிக்க வேண்டும்’ என்பார்களே. தொடர்ந்து பாவனை செய்து வந்தால், நாளடைவில் தானாகவே நகைச்சுவை உணர்வு வந்துவிடும்’’ என்றவரிடம் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் சிரிப்பு யோகா பலன் தந்திருக்கிறதா என்று கேட்டதும், ‘ஏன் இல்லை’ என்று இன்னும் உற்சாகமாகிறார்.

‘‘25 வயதிலேயே எனக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டது. ‘வேலையின் டென்ஷனால் உங்களுக்கு சின்ன வயதிலேயே டயாபடீஸ் வந்துவிட்டது. மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள், டென்ஷனை குறைக்க ஹியூமர் கிளப், சிரிப்பு யோகா கற்றுக் கொள்ளுங்கள்’ என்று டாக்டர் ஆலோசனை சொன்னார்.சிரிப்பை யோகாவாக செய்தாலே போதும் என்று தேடிக் கொண்டிருந்தபோதுதான், சிரிப்பு யோகாவை பிரபலமாக்கிய மதன்கட்டாரியா என்ற அலோபதி மருத்துவரைப் பற்றி
கேள்விப்பட்டேன்.

‘சிரிப்பு, மன அழுத்தத்தைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நல்ல மனநிலையோடு நாள் முழுவதும் மகிழ்ச்சியோடு வைத்திருக்கும்… கடினமான நேரங்களிலும் பாசிட்டிவான மனநிலையைக் கொடுத்து உற்சாகத்தோடு செயல்பட வைக்கும்’ என்று அந்த டாக்டர் தான் கற்றுக் கொடுத்தார்.இப்போது என்னுடைய சர்க்கரை கட்டுக்குள் இருக்கிறது. இன்சுலின் போட்டு கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்த நான், இப்போது இன்சுலினே போட்டுக் கொள்வதில்லை.

‘ரத்த அழுத்தம் குறைந்திருக்கிறது’, ‘தற்கொலை முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்’ என்று சிரிப்பு யோகா கற்றுக் கொண்ட பலரும் என்னிடம் கூறியிருக்கிறார்கள். இந்த பலன் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அரை மணி நேரம் சிரிப்பு யோகா செய்தாலே போதும்’’ என்கிறார் சிரிப்பானந்தா.

‘‘நெருக்கடி மிகுந்த வாழ்க்கையால் எல்லாருமே எந்திரமயமாக மாறிவருகிறார்கள். இந்த இறுக்கத்திலிருந்து உடலையும் மனதையும் சிரிப்பு யோகாவின் மூலம் தளர்த்திக் கொள்ளும்போது வாழ்க்கையே மாறிவிடும். வாழ்க்கையைப் பார்க்கும் விதமும் மாறிவிடும். வாழ்க்கையின் முழு டென்ஷனும் உள்ளுக்குள்ளே இருக்கும்போது அது நோய்களை உருவாக்கும் முக்கியக் காரணியாக மாறிவிடுகிறது.

இப்போது நாகரிகம் என்ற பெயரில் உணர்வுகளைக் கட்டுப்படுத்துகிறார்கள். இது பெரிய தவறு.தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொள்ள விரும்புவது, சிரித்துப் பேசினால் நம்மைப் பயன்படுத்திக் கொள்வார்களோ என்ற சந்தேகம் போன்ற மனத்தடைகளால் சிரிப்பையே மறந்துவிடுகிறார்கள்.உண்மையில், சிரிக்கிறவர்கள்தான் சீரியஸான சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள், முழு செயல்திறனும் அவர்களிடமிருந்துதான் வெளிப்படும், அவர்கள்தான் வெற்றியாளர்களாகவும் இருக்கிறார்கள். இந்த ரகசியம் பலருக்கும் தெரிவதில்லை.

எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன என்று சொல்வார்கள். அன்பை சிரிப்பின் வழியாகவும் போதிக்கலாம் என்பதால்தான் சிரிப்புக்கு மதங்களும் முக்கியத்துவம் அளித்திருக்கின்றன.‘சிரிப்பை யோகப் பயிற்சியாக செய்ய வேண்டும், ஒரு தியானம் போலவே ஆழ்ந்து செய்ய வேண்டும் என்கிறது இந்து மதம். ‘சிரியுங்கள்… மறுபடியும் சொல்கிறேன் சிரியுங்கள்’ என்று சிரிப்பை இரண்டுமுறை உறுதியாக வலியுறுத்துகிறது பைபிள். ‘மற்றவரை முந்திக்கொண்டு நீங்கள் புன்னகையுங்கள்’ என்கிறது இஸ்லாம்.

புத்தரின் அமைதியான ஓர் உபன்யாச கூட்டத்தில் திடீரென காஷ்யபன் என்ற சீடர் வாய்விட்டு சிரிக்கிறார். உடனே புத்தர் தன்னுடைய கையில் வைத்திருந்த தாமரையைக் கொடுத்து விட்டுச் சென்றார் என்பது புத்த மதத்தில் பிரபலமான ஒரு கதை. ஆமாம்… சிரிப்பு என்பது மருத்துவரீதியானது மட்டுமல்ல… தெய்வீகமானதும் கூட!நகைச்சுவையை ரசித்து சிரிக்கப் பழகுங்கள். எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் சிரியுங்கள். வாழ்க்கையே மாறும்’’ என்று சிரித்து முடிக்கிறார்.

பிரபல இதய சிகிச்சை மருத்துவரான சொக்கலிங்கம், சிரிப்பு யோகாவின் மருத்துவரீதியான பலன்கள் பற்றிக் கூறுகிறார்.
‘‘சிரிப்பு நோய் வராமல் காக்கும் திறன் கொண்டது மட்டுமல்ல… வந்த நோயையும் குணப்படுத்தும் திறனும் கொண்டது.
சிரிக்கும் உணர்வு மனதில் வந்தவுடன் எண்டார்பின், மெலட்டோனின், கார்ட்டிசால் போன்ற ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கின்றன. பல நோய்களைத் தீர்க்கும் வல்லமை கொண்டவை இந்த ஹார்மோன்கள். இவற்றை மருந்தாகச் சாப்பிட முடியாது, சிகிச்சையாகவோ எடுத்துக்கொள்ள முடியாது. சிரிப்பின் மூலமே பெற முடியும்.

கைகளைத் தட்டி சிரிக்கும்போது உள்ளங்கையில் இருக்கும் எல்லா நரம்புகளும் அக்குபிரஷரால் தூண்டப்படுகின்றன. இந்த தூண்டலின் மூலம் மூளைக்குத் தகவல் சென்று இதயமும் மூளையும் சேர்ந்து நீண்ட காலம் வாழும் திறனைப் பெற்றுவிடுகிறது. வயிறு குலுங்கச் சிரிக்கும்போது வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், மலச்சிக்கல் போன்றவையும் வராது.இரவில் நகைச்சுவைக் காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டே சிலர் தூங்கிவிடுவதைப் பார்த்திருப்போம்.

இதற்குக் காரணம், எண்டார்பின் ஹார்மோன் சுரக்கும்போது மன அழுத்தம் குறைந்து, உடல் தளர்வாகி தூக்கத்தை உருவாக்கிவிடுகிறது. இதுவே எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் படங்களைப் பார்த்தால் அட்ரினலின் ஹார்மோன் அதிகம் சுரந்து தூக்கம் கெடும். கோபம், பொறாமை, பயம் போன்ற எதிர்மறை எண்ணங்களின் விளைவாகவும் அட்ரினலின் ஹார்மோன் அதிகம் சுரக்கும். பல நோய்கள் உருவாக காரணமாக இருப்பதே அட்ரினலின் ஹார்மோன்தான். இதைத் தடுப்பதற்கு சிரிப்பின் மூலம் கிடைக்கும் ஹார்மோன்கள்தான் நல்ல வழி.

இவையெல்லாம் மனதிருப்திக்காக சொல்லப்படுகிற கருத்துகள் இல்லை. அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மைகளே. குடல் புண், ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய் என எல்லா நோய்களுக்கும் தவறான வாழ்க்கை முறையும் எதிர்மறையான சிந்தனைகளும்தான் பெரும் காரணமாக ஏற்படுகிறது. இதய நோய்களைப் பொறுத்த வரை மனமே மிக முக்கிய காரணியாக இருக்கிறது. அமைதியாக, மகிழ்ச்சியாக சிரித்து வாழக் கற்றுக் கொண்டால் இதயத்தின் ரத்தக்குழாயில் இருக்கும் அடைப்புகூட குணமாகிவிடும். ஒரு மூத்த இதய மருத்துவர் என்ற முறையில் இந்தக் கருத்தை நான் ஆணித்தரமாகவே கூறுகிறேன்.

தந்தை பெரியார், காமராஜர் போன்ற பல தலைவர்களுக்கு மருத்துவராக இருந்திருக்கிறேன். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் மருத்துவராக இருக்கிறேன். இந்தத் தலைவர்கள் எல்லோருமே நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் என்பதும் அவர்களின் நீண்ட ஆயுளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.பாசிட்டிவான மனநிலையோடு சிரித்துக் கொண்டு இருக்கிறவர்களுக்கு, நோயை உருவாக்குகிற மரபணுவே 9 வருடங்களில் மாறிவிடுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மருத்துவமனையில் என்னுடைய அறை 8வது மாடியில் இருக்கிறது. ஆனால், ஒருமுறைகூட நான் லிஃப்ட்டை பயன் படுத்தியதில்லை. ‘லிஃப்ட்ல வாங்க சார்… சீக்கிரம் போயிரலாம்’ என்று சொல்வார்கள். ‘சீக்கிரம் போயிரக் கூடாதுன்னுதான் லிஃப்ட்ல வர்றது இல்லை’ என்று சொல்வேன். உணவு, உடற்பயிற்சி, உற்சாகம் என்ற 3 ‘உ’க்களை வாழ்க்கையில் பிடிவாதமாகப் பின்பற்றுவதால் 70 பிளஸ்சிலும் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.‘சிரிப்பை என்னிடம் இருந்து எடுத்துக் கொண்டால் அந்த நொடியே நான் இறந்துவிடுவேன்’ என்று மஹாத்மா காந்தி கூறினார். ஆமாம்… சிரிப்பை இழக்கும்போது ஒருவன் இறக்க ஆரம்பித்துவிடுகிறான்!’’ என்று சிரிக்கிறார் சொக்கலிங்கம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூலிகை மந்திரம்! (மருத்துவம்)
Next post உறவின் தொடக்கத்தில் முன் விளையாட்டுக்கள்!! (அவ்வப்போது கிளாமர்)