By 20 April 2020 0 Comments

தன்னம்பிக்கை கொடுக்கும் காஸ்மெட்டிக் சர்ஜரி!! (மகளிர் பக்கம்)

‘காஸ்மெட்டிக் சர்ஜரி என்றாலே அது அழகுக்காக மட்டுமே செய்யப்படுவது என்ற தவறான கருத்து பலருக்கும் உண்டு. பிறவிக் கோளாறுகளால் வேறுபட்ட மார்பகங்கள், பருத்த தொய்வலான மார்பகங்களினால் எதிர்கொள்ளும் தேவையற்ற எதிர்மறை விமர்சனங்கள், மார்பக புற்றுநோய் சிகிச்சையால் ஏற்படும் ஊனங்கள்…. போன்ற பல பிரச்னைகளால், சமூகத்தில் எழும் கேலி கிண்டலை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலைக்குக்கூட சிலர் முயற்சிக்கின்றனர். அந்த எண்ணத்தை மாற்றவும், அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுத்து உதவவும் இந்த சிகிச்சைகள் உதவும்’’ என்கிறார் காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.பி.செல்வம்.

‘‘பெண்ணின் உடல்வாகு காரணமாக சரியான வரன் அமையவில்லையே, வயசு கூடிக்கொண்டு போகிறதே என கவலைப்படும் பெற்றோர்கள்…. அளவுக்கு மீறிய பருத்த மார்பகங்கள் காரணமாக தீராத தோள்பட்டை, கழுத்து வலியால் அவதிப்படும் இளம் பெண்கள்….. குழந்தை பிறப்பிற்கு சில மாதங்களுக்குப் பிறகு அளவு சுருங்கி தொய்வலான மார்பகங்களினால் மன உளைச்சல் அடையும் நடுவயது தாய்மார்கள்…. புற்றுநோய்க்கான சிகிச்சையில் மார்பகங்கள் அகற்றப்பட்ட துரதிர்ஷ்டசாலிகள்…. இவர்கள் அனைவருக்கும் “மார்பக தோற்றப் பொலிவு மெருகூட்டும் காஸ்மெட்டிக் சிகிச்சை” மூலம் தீர்வு கிடைக்கும். மார்பக தோற்றம் மெருகூட்டும் சிகிச்சை எனப்படும் காஸ்மெட்டிக் பிரெஸ்ட் சர்ஜரியில் இந்தியாவின் அசுர வளர்ச்சியை உலக நாடுகள் வியப்புடனும், உன்னிப்பாகவும் கவனிக்கின்றன.

இது என்ன புது ஆபரேஷன் என திகைப்பவர்களுக்கு, ‘‘அமெரிக்கா சென்று சிலிகான் பொருத்திக்கொண்டு வந்ததே நடிகையின் கவர்ச்சிக்கு காரணம்’’ என்ற செய்தியை படித்திருந்தால் விவரம் தானாகவே விளங்கிவிடும். சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணின் முன், பின் அங்க அளவுகள் அமைந்தால் அவர் அழகான ஒரு பெண்ணாகத் தோற்றமளிப்பார். உண்மையை சொல்லப்போனால், மார்பகங்களை பெண்கள் பெருமையாகவும், பூரிப்பாகவும் கருதுகின்றனர். ஆண்களை, கவர்ச்சிப் பொருளாக ஆட்டிப்படைக்கும் அளவில் மார்பகத் தோற்றம் இல்லையே என்பது பெண்களில் சிலருக்கு ஏற்படும் ஏக்கம் என்பது நிரூபிக்கப்படாத உண்மை.

கடவுளின் படைப்பில் ஒவ்வொரு பெண்ணுக்கும் மார்பக அமைப்பு மற்றும் அளவு வித்தியாசப்படுகிறது. காலந்தொட்டு நிலவி வந்த பெண்களின் இந்த ஏக்கத்திற்கு தீர்வு தான் சிலிக்கான் பொருத்திக் கொள்வது அல்லது கொழுப்பு மாற்று சிகிச்சை. பொதுவாகப் பார்த்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெண்களை பணிக்குச் சேர்க்கும்போது அவர்களது அங்க அமைப்புகளையும் ஒரு தகுதியாக கருதுகின்றன. அவ்வளவு ஏன்? எடுப்பான தோற்றம் இருந்தால் மட்டுமே ஏர் ஹோஸ்டஸ் வேலை கிடைக்கும் அல்லது 5 ஸ்டார் ஓட்டல்களில் ரிசப்சனிஸ்ட் வேலை உறுதி என்பது அனைவரும் அறிந்ததுதான். எஞ்சினியரிங், எம்.பி.ஏ. என தகுதியான படிப்பு படித்திருந்தும், படைப்பிலேயே அங்கத்தில் சிறு குறை இருப்பதால் நல்ல பணி கிடைக்கவில்லையே என பெண்கள் பலரும் ஏங்கி தவிக்கின்றனர்.

அப்படிப்பட்ட பெண்களுக்கு தன்னம்பிக்கையும், மன உறுதியும் மார்பக தோற்றப் பொலிவூட்டும் சிகிச்சையில் கிடைக்கும். இதில் மற்றொரு சிக்கலான விஷயம் என்னவென்றால், ஆண் டாக்டர் தனது குறிப்பிட்ட அங்கத்தில் சிகிச்சை அளிப்பதை, பெண்களுக்கு இயற்கையிலேயே உள்ள நாணம் மற்றும் கூச்ச சுபாவம் தடுக்கிறது. அதன் காரணமாக குறை உள்ள பல பெண்கள் சிகிச்சைக்கு தயங்கி வந்தனர். ஆனால் தற்போது மாறிவரும் உலகில், வாழும் கடவுளாக டாக்டர்களை மக்கள் மதிப்பதால், பெண்களும் தங்களது சுபாவத்திலிருந்து விலகி, தற்போது அறுவை சிகிச்சையை நாடுகின்றனர். தோற்றப்பொலிவுக்கு எனக் கருதுவதற்கு பதில், தோல்வி பயத்திலிருந்து மீண்டு, தன்னம்பிக்கையை மீட்கும் நடவடிக்கை எனக் கருதி பெண்கள் தற்போது இந்த அறுவை சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

தோற்றத்தை மாற்றிக்கொள்ள கருதும் பெண்கள் தைரியமாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். சிகிச்சைக்கு பின்னர் அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டு, சமுதாய மாற்றத்தை அனுபவிப்பது உறுதி. பருவத்தை எட்டிய அல்லது 18 வயதுடைய எந்த ஒரு பெண்ணும், தனது மார்பகம் எடுப்பாக இல்லையே என்ற கவலையை போக்க இந்த சிகிச்சைகள் பயனளிக்கும். குறிப்பிட்டு கூறவேண்டுமானால், மன அழுத்தத்தை குறைத்து, சமுதாயத்தின் மேம்பட்ட உறவுகளை புதுப்பித்துக்கொள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த சிகிச்சைகள் மிகவும் அவசியம். தொடக்க காலத்தில் இந்த அறுவை சிகிச்சைக்கு எதிர்ப்புகள் வலுத்தது. மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக, பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கு பல லட்சங்கள் செலவழிக்க வேண்டும் என்பதும் முக்கிய காரணமாகும்.

ஆனால், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அசுர வளர்ச்சியால் மார்பக அறுவை சிகிச்சை நடைமுறைகள் எளிமையாகவும், மிகவும் பாதுகாப்பாகவும் உள்ளன. பெண்ணின் விருப்பத்துடன் மார்பகத்தின் அளவுகளை கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்வது எளிது. மார்பகத்தைப் பெரிதாக்க வேண்டுமானால் அதற்காக தொடை, புட்டம் போன்ற பகுதியில் உள்ள கொழுப்பை மாற்றி வைத்து மார்பகங்களை பெரிதாக்கலாம். மார்பகத்திலிருந்து கொழுப்பைக் குறைத்து வடிவத்தை சிறியதாக்கவும் செய்யலாம். இன்றைய நவீன மருத்துவ சாத்தியத்தில் இதற்கான செலவுகளும் பல மடங்கு குறைந்துள்ளது. எனவே, நடுத்தர பெண்கள் பலரும் தாங்களாக இந்த மாற்றத்தைப் பெரிதும் விரும்பி மருத்துவர்களை நாடத் தொடங்கி உள்ளனர்’’ என்றார் டாக்டர் செல்வம்.Post a Comment

Protected by WP Anti Spam