By 12 April 2020 0 Comments

சூரிய நமஸ்காரம்!! (மகளிர் பக்கம்)

பன்னிரெண்டு நிலைகளே (சில மரபுகளில் பதினான்கு நிலைகள்) கொண்ட இந்த சூரிய நமஸ்காரத்தில்தான் எத்தனை விதங்கள்? வழக்கமாகச் செய்யும் சூரிய நமஸ்காரப் பயிற்சியை செய்ய இயலாதவர்களுக்கு, சில பிரச்னைகளால் அதைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கு, முட்டியிட்டுச் செய்யும் ஆசன வரிசை ஒன்று உள்ளது என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். ஆனால், ‘இதையும் செய்ய முடியாது’ என்ற நிலையில் உள்ளவர்கள் என்ன செய்வது? இப்படி யோசித்தவர்களுக்கு ‘உட்கார்ந்து செய்யும் சூரிய நமஸ்காரம்’ பதிலாகியுள்ளது!

இப்போது நாம் அந்தப் பயிற்சியைத்தான் பார்க்கப் போகிறோம். இதைப் பற்றி எப்போது யாரிடம் சொன்னாலும் ஒரு வியப்பு வந்து விடுகிறது. நன்றாக இருப்பவர்கள் கூட இதைப் பயிற்சி செய்ய ஆசைப்படுகிறார்கள். இந்தியாவைவிட வெளிநாடுகளில் இது அதிகம் அறியப்பட்ட ஒன்றாகிவிட்டது.

வல்லவருக்கு எதுவுமே ஆயுதமாகி விடுவது யோகாவிலும் நிறைய நடந்திருக்கிறது. யோகி கிருஷ்ணமாச்சாரி அவர்கள் எந்த நிலையில் உள்ளவர்களுக்கும் யோகப்பயிற்சி அளித்து, குணமடையச் செய்துள்ளார். தனது நூறு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும்போது கூட தனக்கேற்ற பயிற்சியை அவர் செய்துகொண்டிருந்தார். பி.கே.எஸ்.ஐயங்கார் அவர்கள் சாஸ்திரிய முறையில் ஆசனங்கள் செய்ய முடியாத சூழலில், உபகரணங்களைப் பயன்படுத்தி (நாற்காலி, குஷன், கயிறு, சுவர்…) புது முறையையே உருவாக்கி விட்டார். அது இன்று மிகவும் பிரபலமாகியுள்ளது.

எந்த வயதிலும், எந்த நிலையிலும் உடலை நன்கு ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று இறங்கி விட்டால், பயிற்சிக்கா பஞ்சம்? எந்த நிலையிலும் செய்வதற்கு நிறைய பயிற்சிகள் உள்ளன! சூரிய நமஸ்காரத்திலும் இப்படித் தேவைக்கு ஏற்ப – அதை மேலும் வலிமையாக்குவதாக இருந்தாலும், அல்லது எளிமைப்படுத்துவதாக இருந்தாலும் – பலர் மாற்றங்களைச் செய்துள்ளனர். அந்தப் பார்வையில், அந்தப் பயணத்தில் உருவானதுதான் இந்த உட்கார்ந்து செய்யும் ‘நாற்காலி சூரிய நமஸ்காரம்’.

உட்கார்ந்தபடிதான் ஏதாவது செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு இது மிக முக்கியமான பயிற்சியாகும். இதை நாற்காலியிலோ, ஸ்டூலிலோ அல்லது ஒரு தளத்திலோ வசதிக்கு ஏற்ப அமர்ந்துகொண்டு செய்யலாம். ஓர் அனுபவம் பெற்ற யோகா ஆசிரியரின் உதவியோடு, இந்தப் பயிற்சியை நீங்கள் உங்கள் சூழலுக்கு, உடல்நிலைக்கு ஏற்ப மாற்றவும் செய்யலாம். இதிலும் கூட சிலர் சூரிய நமஸ்காரத்தின் எல்லா நிலைகளையும் செய்வதில்லை. சில முக்கிய நிலைகளை மட்டும் எடுத்துக் கொண்டு செய்வர். சிலர் முதல் மூன்று நிலைகளிலேயே மாற்றங்களைப் புகுத்தி, திரும்பத் திரும்பச் செய்து பலன் பெறுகிறார்கள்.

ஆசனங்களில் மூழ்கி அதன் பல்வேறு இயல்புகளை நன்கு உணர்ந்தவர் லாரா அபிஷேக் அவர்கள். ஆசனங்களை கடுமையாக்கி எவருக்கும் சவாலாய் மாற்றுவதிலும், உடல் பிரச்னைகளுக்கும் நோய்களுக்கும் தீர்வு தருவதாக ஆசனங்களை மாற்றி அமைப்பதிலும் வல்லவர் இவர். தனது விநியோகா ஹீலிங் சென்டர் மூலம் யோக சிகிச்சையை அளிப்பதோடு, யோகா ஆசிரியர்களுக்கான பயிற்சியையும் அளித்து வருகிறார். அவர் பார்வையில் திறமையாய் வடிவமைக்கப்பட்டது இந்த ‘நாற்காலி சூரிய நமஸ்காரம்’.

இதற்கு மாடலாக இருப்பவர் கிருஷ்ணவேணி அவர்கள். இவர் ஓர் அனுபவம் வாய்ந்த யோகா ஆசிரியை. பள்ளி மாணவர்களுக்கும் பெண்களுக்கும் பல ஆண்டுகளாக யோகா வகுப்புகள் எடுத்து வருகிறார். எனது தேடலில் ஓரிருவர் மட்டுமே சூரிய நமஸ்காரத்தை நன்கு புரிந்துகொண்டு, அதை நாற்காலியில் இருந்து செய்யும்படி செய்துள்ளனர்; சாராம்சத்தைக் கொண்டு வந்துள்ளனர். பலர் தங்கள் அனுபவம் – புரிதலுக்கு ஏற்ப பலவாறு இருந்து செய்யும் நமஸ்காரத்தை அமைத்துள்ளனர். இனி பயிற்சியில் இறங்கி விடுவோம்.

* நாற்காலியில் உட்கார்ந்து, சிறிது அமைதியாகி, தேவையெனில் சில மூச்சுகளை எடுத்துக் கொள்ளலாம். பிறகு கைகளைக் குவித்து வணங்கும் நிலை.

* அந்த நிலையிலிருந்து மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே, கைகளை மேல்நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். கைகள் இரண்டும் காதுகளை ஒட்டியபடி நீண்டிருக்கும். முகவாய் சற்று கீழிறங்கிய நிலையில் இருக்கும். கால்கள் சேர்ந்திருக்கும்

* ஓரிரு வினாடிகளுக்குப்பின், மூச்சை வெளிவிட்டுக் கொண்டே உடலை முன்புறமாகக் குனிந்து, இரு உள்ளங்கைகளையும் தரையில் இரு கால்களை ஒட்டியபடி வைக்கவும். மேலுடல் கால்களின் மீது நன்கு படிந்து, மூச்சு முழுவதும் வெளியேறி இருக்கும் (படம் 3).

* ஓரிரு வினாடிகளுக்குப் பின் மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மெதுவாக ஒரு காலை மடித்து, மேல் உடலை சற்று பின்புறமாக வளைக்க வேண்டும் (படம் 4).

* ஓரிரு வினாடிகளுக்குப் பின் மூச்சை வெளியே விட்டுக் கொண்டே இரு முழங்கால்களையும் கைகளால் கவனமாகப் பிடித்தபடி மேலே இழுத்து, மேலுடலை முன்புறமாக வளைத்து, தொடைகளுடன் சேருமாறு நெருக்க வேண்டும் (படம் 5).

* அந்த நிலையிலிருந்து மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே முழு உடலையும் கை, கால்களை விரித்து நீட்ட வேண்டும். இந்த நிலையில் பாதங்கள் கூட நன்கு நீட்டப்பட்டிருக்கும் (படம் 6).

* இந்த நிலையிலிருந்து மூச்சை வெளியே விட்டுக் கொண்டே முன்னால் உள்ள ஸ்டூலில் கைகளைக் குவித்து, நமஸ்கார நிலைக்கு வர வேண்டும்

* ஓரிரு வினாடிகளுக்குப் பின், ஒவ்வொரு நிலையாக வந்த வழியே பின்னோக்கி மெல்ல மூச்சுடன் சென்று, கடைசியாக துவங்கிய நிலைக்குப் போக வேண்டும்.

இரு கால்களையும் சமமாகப் பயன்படுத்தி, தேவையான சுற்றுகளை செய்யலாம். பயிற்சிக்குப் பின் அமைதியாக இருக்கலாம்; மூச்சுப்பயிற்சி அல்லது பிராணாயாமப் பயிற்சி செய்யலாம். அல்லது தரையில் படுத்துக் கூட முழு ஓய்வு எடுக்கலாம். வழக்கமான சூரிய நமஸ்காரத்தின் முழுப்பலனும் கிடைக்காது என்றாலும், ஒன்றும் செய்ய முடியாத நிலையை இந்தப் பயிற்சி மாற்றுகிறது. அவர்களுக்கு ஒரு நல்ல மாற்றம் இது. ‘நம்மாலும் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையை – மன வலிமையை – மகிழ்ச்சியைத் தருகிறது இது.

யோகாவை – ஆசனங்களை – சூரிய நமஸ்காரத்தை நன்கு தெரிந்த ஒருவரின் வழிகாட்டுதல்படியே இப்பயிற்சியைச் செய்ய வேண்டும். அவர்தான் நபருக்கு ஏற்ப மிக எளிதாகக் கூட வடிவமைத்து, பயிற்சியை பிரச்னையில்லாத ஒன்றாக மாற்ற முடியும்.அனுபவப்பட்டவர்களின் சரியான வழிகாட்டலில் பயிற்சியை நன்றாகச் செய்வதோடு, உரிய பலன்களையும் பெறமுடியும். சிறு சிறு ஆலோசனைகள் கூட பெரும் அனுபவமாகவும் பலன் கொண்டதாகவும் வரலாறாகவும் மாறியுள்ளன. இதையும் தாண்டி பயிற்சியை எப்படி நீங்கள் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து பலன்களும் அனுபவமும் அமையும்.

முன்பு பார்த்த வழக்கமான சூரிய நமஸ்காரத்தின் பலன்கள் என்னென்ன என்றுகூட நிறைய பேர் கேட்டு வருகிறார்கள். நியாயமான எதிர்பார்ப்புதான். இன்று எதைச் செய்தாலும் ‘அதனால் என்ன கிடைக்கும்’ என்று நினைப்பது மேலோங்கியிருக்கும்போது, சூரிய நமஸ்காரம் மட்டும் விதிவிலக்கா என்ன?Post a Comment

Protected by WP Anti Spam