By 20 April 2020 0 Comments

அருகம்புல்!! (மருத்துவம்)

மூலிகை மந்திரம்

முழுமுதற் கடவுளான விநாயகருக்கு உகந்தது அருகம்புல் என்பதை எல்லோரும் அறிந்திருப்போம். அந்த விநாயகர் புகழ் பாடும் பாடல் ஒன்றில் ‘வினைகளை வேரறுக்க வல்லான்’ என்று போற்றப்படுவார். அதேபோல அவருக்கு பிரியமான அருகம்புல்லும் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பல வினைகளை வேரறுக்க வல்லது என்று சொன்னால் அது மிகையில்லை.

அருகம்புல்லின் தாவரப்பெயர் Cynodon dactylon என்பதாகும். ஆங்கிலத்தில் Bermuda grass, Bahama grass, Couch grass என்றெல்லாம் அழைக்கப்படும். ஆயுர்வேதத்தில் அருகம்புல்லுக்கு தூர்வா, பார்கவி, ஷட்வல்லி, ஷட்பர்வா, திக்தபர்வா, ஷட் வீர்யா, சஹஸ்த்ர வீர்யா, அனந்தா என்றெல்லாம் பெயர்கள் உண்டு. முயலுக்கு விருப்பமான உணவு என்பதால் இதை ‘முயல் புல்’ என்றும் தமிழில் சொல்வதுண்டு.

மருத்துவ குணங்கள் அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் கட்டைகள்(தண்டு மற்றும் வேர்) ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும். தோலின் மேல் பகுதியில் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்தவல்லது அருகம்புல். சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் உட்பட பல சிறுநீரகக் கோளாறுகள், ஆஸ்துமா, உடலில் ஏற்படும் துர்நாற்றம், நெஞ்சகச் சளி, தீப்புண்கள், கண்களில் ஏற்படும் தொற்று நோய்கள், உடல்சோர்வு ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து அதிகப்படுதல், வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களைப் போக்க
வல்லது அருகம்புல்.

மேற்கூறிய நோய்கள் மட்டுமின்றிப் பின்வரும் பெயர்களுடைய ஏராளமான நோய் களையும் அருகம்புல் வேறறுக்க வல்லது.
அவை பின்வருமாறு…

1. புற்றுநோய்க்கு எதிரானது.
2. சர்க்கரை நோயை சீர் செய்யவல்லது.
3. வயிற்றுப்போக்கை குணப்படுத்துவது.
4.குமட்டல், வாந்தியைத் தணிக்கக்கூடியது.
5. நுண்கிருமிகளைத் தடுக்கவல்லது.
6. உற்சாகத்தைத் தரவல்லது.
7. மூட்டு வலிகளைத் தணிக்கக்கூடியது.
8. கிருமித் தொற்றினைக் கண்டிக்கவல்லது.
9. வற்றச் செய்வது.
10. அகட்டு வாய்வகற்றி.
11. காயங்களை ஆற்றவல்லது.
12. குளிர்ச்சி தரவல்லது.
13. மேற்பூச்சு மருந்தாவது.
14. சிறுநீரைப் பெருக்கவல்லது.
15. கபத்தை அறுத்து வெளித் தள்ளக்கூடியது.
16. ரத்தத்தை உறையவைக்கும் தன்மை உடையது.
17. மலத்தை இளக்கக்கூடியது.
18. கண்களுக்கு மருந்தாவது.
19. உடலுக்கு உரமாவது.
20. ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்தக்கூடியது.

இப்படி ஒரு நீண்ட பட்டியலைக் கொண்டுள்ள அருமருந்தாக அருகம்புல் திகழ்கிறது.
அருகம்புல் பற்றிய தேரையர் பாடல் :
‘போகாத தோஷவினை போகப் பிணியகன்று
தேகாதி யெல்லாஞ் செழிக்கவே ஸ்ரீ வாகாய்
அடர்தந்தை பிள்ளைக் கணியா தலால்
திடமாங் கணபதிபத் ரம்.’

இருவினையால் வந்த உயிரையும், உள்ளத்தையும் பற்றிய தோஷங்கள் அனைத்தும் அருகம்புல்லால் போய்விடும். மேலும் உடலைப் பற்றிய பிணிகள் அகன்று உச்சி முதல் பாதம் வரை செழிப்புறும். சிவபெருமானின் மூத்த பிள்ளையான கணபதிக்கு அணிவிக்கப் பெறுவதால் அனைத்து வகையிலும் சிறந்தது அருகம்புல் என்று அருகம்புல்லின் புகழ் பாடுகிறார் தேரையர்.

இதேபோல அருகம்புல்லின் பெருமை பற்றி அகத்தியர் குணபாடத்தையும் இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.‘அருகம்புல் வாதபித்த ஐயமோ டீளைசிறுக அறுக்குமின்னுஞ் செப்ப – அறிவுதரும்கண்ணோ யொடு தலைநோய் கண்புகையி ரத்தபித்தம்உண்ணோ யொழிக்கு முறை.’

அருகம்புல் வாத, பித்த, சிலேத்துமம் என்கிற முத்தோஷத்தையும் தணிக்கவல்லது. விடாப்பிடியாய்ப் பற்றிக் கொண்டு துன்பம் தரும் சளியை கரைத்து வெளியேற்றக்கூடியது. அருகம்புல்லை உள்ளுக்கு உபயோகப்படுத்துவதால் அறிவு கூர்மையாகும்.

கண் நோய்கள் அகலும். தலைவலி, பித்தம், உள்ளுறுப்புகளின் அழற்சி ஆகியவை தணியும்
என்பது மேற்கண்ட அகத்தியர் பாடலின் பொருளாகும்.அருகம்புல்லில் அடங்கியுள்ள சத்துக்கள் அருகம்புல்லில் அடங்கியுள்ள மருந்துப் பொருட்கள் ஒரு நீண்ட பட்டிலை உடையது.

1. மாவுச்சத்து
2. உப்புச்சத்து
3. நீர்த்த கரிச்சத்து
4. அசிட்டிக் அமிலம்
5. கொழுப்புச்சத்து
6. ஆல்கலாய்ட்ஸ்
7. நார்ச்சத்து
8. ஃப்ளேவோன்ஸ்
9. லிக்னின்
10. மெக்னீசியம்
11. பொட்டாசியம்
12. பால்மிட்டிக் அமிலம்
13. செலினியம்
14. வைட்டமின் ‘சி’ உட்பட எண்ணற்ற சத்துக்களைத் தன்னுள் கொண்டது அருகம்புல்.

மருத்துவப் பயன்கள்

அருகம்புல்லின் தண்டுப்பகுதி மற்றும் வேர்ப்பகுதி ஆகியன நாட்டு மருத்துவத்தில் இதயக் கோளாறுகளைக் போக்க உபயோகிப்பட்டு வருகிறது. குறிப்பாக மாரடைப்பு, இதய நாளங்களின் அழற்சியைத் தடுப்பதாக அருகம்புல் உள்ளது. ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கும் தன்மையுடையதாகவும் அருகம்புல் விளங்குகிறது.

ஆயுர்வேதத்தில் அருகம்புல்

அருகம்புல் சற்று காரமானது, கசப்பு சுவையுடையது, உஷ்ணத்தன்மை கொண்டது, பசியைத் தூண்டக்கூடியது, காயங்களை ஆற்றவல்லது, வயிற்றிலுள்ள பூச்சிகளை புழுக்களை வெளியேற்றவல்லது, காய்ச்சலைத் தணிக்கவல்லது, ஞாபக சக்தியைப் பெருக்கவல்லது, வாய் துர்நாற்றத்தையும், உடலில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்கக் கூடியது, வெண்குட்டம் என்னும் தோல் நோய்க்கு மருந்தாவது, நெஞ்சகச் சளியைக் கரைக்கக் கூடியது. மூலத்தை(ரத்தமூலம் உட்பட) குணப்படுத்தவல்லது, ஆஸ்த்துமாவை எதிர்க்கக் கூடியது, கட்டிகளை கரைக்கவல்லது, மண்ணீரல் வீக்கத்தைக் குறைக்கவல்லது என்றெல்லாம் ஆயுர்வேதத்தில் அருகம்புல் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும், பித்த மேலீட்டால் ஏற்படும் வாந்தியையும், தாகம் என்னும் நாவறட்சியையும், பாதங்கள், கைகள் மற்றும் உடலின் எந்தப் பகுதியில் எரிச்சல் கண்டாலும் அதைப் போக்குவதற்கும், வாயில் எப்பொருளைச் சுவைத்தாலும் சுவையை உணர இயலாத நிலையை மாற்றுவதற்கும் அருகம்புல் உதவும் என்கிறது ஆயுர்வேதம்.

யுனானி மருத்துவத்தில் அருகம்புல்

எரிச்சல் எங்கிருப்பினும் அதைப் போக்கவும், நுகர்வு உணர்வை மேம்படுத்தவும், சிறந்த மலமிளக்கியாகவும், இதயம் மற்றும் மூளைக்கு உரம் ஊட்டவும், வியர்வையைத் தூண்டவும், ஞாபகசக்தியைப் பெருக்கவும், வாந்தியைத் தடுக்கவும், தாய்ப்பாலைப் பெருக்கவும், கெட்டிப்பட்ட சளியைக் கரைத்து வெளியேற்றவும், வாயுக்கோளாறைப் போக்கவும், குழந்தைகளுக்கு அடிக்கடி துன்பம் தருகிற சளியோடு கூடிய காய்ச்சலை விரட்டவும், உடல்வலியைத் தணிப்பதற்கும், வீக்கத்தைக் கரைப்பதற்கும், பல் நோயைக் குணப்படுத்துவதற்கும், ஈரல் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் யுனானி மருத்துவத்தில் அருகம்புல் பயன்படுத்தப்படுகிறது.

ஹோமியோ மருத்துவத்தில் உடலின் எப்பகுதியிலும், எவ்விதத்திலும் ஏற்படு கிற ரத்த ஒழுக்கை நிறுத்துவதற்கும், எவ்வித தோல் நோயையும் தணிப்பதற்கும் அருகம்புல்லைப் பயன்படுத்துகிறார்கள். (சொரி, சிரங்கு, படை போன்ற எவ்வித சரும நோயாகிலும் அருகம்புல் குணம் தரவல்லது. உள்ளுக்கும் கொடுத்து மேலுக்கும் உபயோகிப்பதால் இப்பயன் நிச்சயமாகக் கிடைக்கக்கூடியது ஆகும்.)

மனநோய்க்கும் மருந்தாகும் அருகம்புல்

இன்றைய நவீன வாழ்வில் மன அழுத்தம் எல்லோரையும் பாடாய்ப்படுத்தி வருகிறது. இதுபோல் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறவர்கள் அருகம்புல் வெளியில் வெறும் காலுடன் நடந்தால் மன அழுத்தம் மறைந்துபோவதைக் கண்டு ஆச்சரியம் கொள்வார்கள்.இதேபோல் Halucination என்கிற மனம் தொடர்பான பிரச்னைக்கும் அருகம்புல் நல்ல மருந்தாகிறது.

நம்மை அறியாமல் உணரும் ஏதோ ஓர் உருவம், ஸ்பரிசம், சப்தம், நாற்றம், சுவை ஆகிய நிலை கொண்ட ஹாலுசினேஷனுக்கு அருகம்புல் தெளிவைத் தரும். இனம் புரியாத மயக்கநிலையை மறைக்க உதவுகிறது. நாம் உதாசீனப்படுத்திவிட்டு மிதித்து செல்கிற அருகம்புல்லில் ஒரு மருத்துவமனையே அடங்கியுள்ளது என்பதை அறிந்தால் வியப்பு மேலிடுகிறது அல்லவா?!Post a Comment

Protected by WP Anti Spam