கர்ப்ப கால நீரிழிவை கண்டு கொள்ளாமல் விடலாமா? (மருத்துவம்)

Read Time:11 Minute, 59 Second

கர்ப்ப காலத்தில் பல பெண்கள் தற்காலிக நீரிழிவுக்கு ஆளாவதும், பிரசவத்துக்குப் பிறகு அது சரியாவதும் நாம் அறிந்ததே. இந்த நீரிழிவானது பல பெண்களுக்கு அறியப்படாமலே இருப்பதுதான் சமீபத்திய அதிர்ச்சி.3.8 முதல் 21 சதவிகித இந்தியப் பெண்கள் கர்ப்பகால நீரிழிவால் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னை அறியப்படாமலோ, அறிந்தும் கண்டுகொள்ளப் படாமலோ போகும் போது, கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படக் கூடும். நாளடைவில் நிரந்தர நீரிழிவும் உண்டாகலாம். கருச்சிதைவும் நேரலாம். அது மட்டுமல்ல… குழந்தைகளுக்கும் பிரச்னைதான். அளவு மீறிய எடையோடு பிறப்பு, குறைப் பிரசவம், சுவாசப் பிரச்னைகள் உண்டாகக் கூடும். சில குழந்தைகளுக்கு தாழ்நிலை சர்க்கரை அல்லது டைப் 2 நீரிழிவு ஏற்படும் அபாயமும் உண்டு.

கர்ப்ப கால நீரிழிவை எப்படி அறிவது?

* இந்திய வழிமுறைகளின் படி…
உணவருந்தாமல் இருக்கும் நிலையில் (ஃபாஸ்ட்டிங்), 75 கிராம் குளுக்கோஸ் கலந்த நீர் அருந்தி, 2 மணி நேரத்துக்குப் பிறகு, விரலில் ஒரு துளி ரத்தம் எடுத்து பரிசோதிக்கப்படும். இந்த அளவு 140mg/dlக்கு அதிகம் எனில், கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். இந்தச் சோதனை எளிமையானது. ஒரு துளி ரத்தமே போதும். ஆனால்,
இச்சோதனையில் துல்லியம் குறைவு. 40 சதவிகித மகப்பேறு மருத்துவர்களும் 30 சதவிகித நீரிழிவு மருத்துவர்களும் இவ்வழிமுறையையே விரும்புகின்றனர். இவர்களில் 15 சதவிகிதத்தினர் இதையே கர்ப்ப கால நீரிழிவை உறுதி செய்யும் முறையாகப் பின்பற்றுகின்றனர்.

* சர்வதேச வழிமுறைகளின் படி…
உணவருந்தாமல் இருக்கும் நிலையில் (ஃபாஸ்ட்டிங்), ரத்த சர்க்கரை அளவு 92mg/dlக்கு அதிகமாக இருந்தாலோ… 75 கிராம் குளுக்கோஸ் கலந்த நீர் அருந்தி, 1 மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவு 180mg/dlக்கு அதிகமாக இருந்தாலோ… 1 மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவு 153mg/dlக்கு அதிகமாக இருந்தாலோ
கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். சர்வதேச அங்கீகாரம் பெற்ற இச்சோதனை முறை மிகத் துல்லியமானது. எனினும், கர்ப்பிணிகள் இச்சோதனைக்கு வந்து, காத்திருந்து செய்து கொள்வது இந்தியச் சூழலில் அவ்வளவு எளிதாக இல்லை (குறிப்பாக கிராமப்புறப் பெண்களுக்கு). இச்சோதனை விரலில் அல்லாது ரத்த நாளங்களில் ரத்தம் எடுத்தோ செய்யப்படும். 18.3 சதவிகித மகப்பேறு மருத்துவர்களும் 19 சதவிகித மற்ற மருத்துவர்களும் மட்டுமே சர்வதேச வழிமுறைகளை விரும்புகின்றனர். நடைமுறையில் இதையே கர்ப்ப கால நீரிழிவை உறுதி செய்யும் முறையாகப் பின்பற்றுவோர் இன்னும் குறைவே. இந்திய நிலைமை இதுதான்…

சென்னை, திருவனந்தபுரம்,ஹைதராபாத், மும்பை ஆகிய பெரு நகரங்களில்தான் கர்ப்ப கால நீரிழிவு அதிகம் காணப்படுகிறது. கிராமப்புறங்களில் வாழ்க்கை முறை மற்றும் சூழல் காரணமாக இப்பிரச்னை குறைவாகவே உள்ளது. இந்தியாவில் 3 ஆயிரத்து 841 மருத்துவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 84.9 சதவிகித மருத்துவர்கள் கர்ப்ப கால நீரிழிவுக்கான சோதனையை அவசியம் மேற்கொள்வதாகத் தெரிவித்தனர். 67 சதவிகித மருத்துவர்கள் மட்டுமே கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களுக்குள் இச்சோதனையை செய்துவிடுகின்றனர். எனினும், ஒட்டுமொத்தமாக அலசும்போது, மருத்துவ சேவை குறைபாடு காரணமாகவோ, கர்ப்பிணி குடும்பத்தினரின் கவனக் குறைவு அல்லது அறியாமை காரணமாகவோ, ஏறத்தாழ 50 சதவிகித மருத்துவர்கள் கர்ப்ப கால நீரிழிவு பரிசோதனையை எந்த ஒரு வழிமுறையிலும் செய்ய முடியாமலே போகிறது. 2014ல் மத்திய சுகாதார அமைச்சகம் கர்ப்ப கால நீரிழிவை அறிய டிப்சி வழி முறையை (Diabetes in Pregnancy Study group of India) பின்பற்றும் படி அறிவுறுத்தியது. சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் வி.சேஷய்யா உருவாக்கிய இந்த வழிமுறை எளிமையானதே. கர்ப்பத்தை உறுதி செய்ய ஒரு பெண் முதல் முறை வரும் போதே, 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு, 2 மணி நேரத்துக்குப் பிறகு விரலில் ஒரு துளி ரத்தம் மட்டும் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அப்போது ரத்த சர்க்கரை அளவு 140mg dlக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் கர்ப்பகால நீரிழிவு (Gestational diabetes) உறுதி செய்யப்படும்.

‘30 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகே இந்த வழிமுறை கர்ப்பிணிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. இந்தியச் சூழலுக்கு இவ்வழிமுறையே சிறந்தது’ என்கிறார் டாக்டர் வி.சேஷய்யா. இதற்கு சமூகக் காரணங்களும் உண்டு. பொதுவாக இந்தியப் பெண்கள் கர்ப்ப காலத்தின் போது விரதம் இருக்கவோ, உணவருந்தாமல் இருக்கவோ பெரியவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் மருத்துவமனைக்கு ஃபாஸ்ட்டிங் சோதனைக்கு ஏற்ப வருவது ஒரு குழப்பமான விஷயமே. மீண்டும் ஒருநாள் உணவு அருந்தாமல் வரும்படி கூறினாலும், மூன்றில் ஒரு பங்கு பெண்களே வருவார்கள். வராமல் போன பல கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு அறியப்படாமல் போகும் அபாயம் இப்படித்தான் அதிகரிக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

சர்வதேச வழிமுறைகளுக்கு நிகரான துல்லியம் கொண்ட பரிசோதனை முறையையே இந்தியாவிலும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் துல்லியம் மிக்க உறுதிப்படுத்தலை நாம் பெற முடியும். அதே நேரத்தில் இப்பரிசோதனை மிக எளிமையானதாகவும் மாற்றப்பட வேண்டும். நீண்ட தொலைவில் இருந்து மருத்துவமனை வருவோருக்கும், இச்சோதனைக்காக மீண்டும் ஒருமுறை (ஃபாஸ்ட்டிங்) வர முடியாதவர்களுக்கும் கூட பயன் அளிக்கும் வகையில் அந்த முறை இருக்க வேண்டும்.மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியின் வளர்ச்சி வேகத்தோடு ஒப்பிடுகையில், இது ஒன்றும் எவரெஸ்ட் உச்சியை எட்டும் அளவுக்கு சிரமமான காரியம் அல்ல! செய்வீர்களா? நீங்கள்
செய்வீர்களா? நாம் வெல்வோம்! சென்னை ராயபுரம் எம்.வி. நீரிழிவு மருத்துவமனை ‘நீரிழிவை வெல்வோம்’ எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி இளைஞர்களிடமும் ஆரோக்கியம் மற்றும் இளமையை வலியுறுத்த பயிற்சி அளித்தல் இதன் முதல் படி. செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இந்திய மருத்துவர்கள் கல்லூரியுடன் இணைந்து இந்நிகழ்வு மேற்கொள்ளப்படுகிறது. நீரிழிவைத் தடுப்பதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துவதிலும், நலமான வாழ்க்கைமுறையை பரப்புவதிலும், நீரிழிவை கண்டுபிடிப்பதிலும் கவனம் செலுத்துவதுமே இத்திட்டத்தின் செயல்பாடுகள். “நீரிழிவைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடு வதற்கான சரியான வயது 18 முதல் 25 ஆகும். இதன் காரணமாகவே இந்நிகழ்ச்சியைத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் நடத்த முடிவெடுத்தோம்.

தமிழகக் கிளை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இந்திய மருத்துவர்கள் கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்க உள்ளோம். இவர்கள் தங்கள் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு முறையான உடற்பயிற்சி, சத்தான உணவு ஆகியவை மூலம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் வைத்துக் கொள்ள வழிகாட்டுவார்கள்” என்கிறார் எம் வி நீரிழிவு மருத்துவமனைத் தலைவரும் முதன்மை நீரிழிவு மருத்துவருமான டாக்டர் விஜய் விஸ்வநாதன்.இந்திய மருத்துவர்களின் கல்லூரி டீன் டாக்டர் முருகநாதன் “உலக சுகாதார அமைப்பின் ’நீரிழிவை வெல்வோம்’ இலக்கை எட்ட இந்தியா முழுவதும் இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்” என்கிறார். “நீரிழிவு நோயாளிகளுக்கும், குடும்பங்களுக்கும், சுகாதார அமைப்புகளுக்கும், தேசிய அளவிலான பொருளாதாரங்களுக்கும், நீரிழிவு மற்றும் அதன் சிக்கல்கள் கணிசமான வருவாய் இழப்பை மருத்துவச் செலவு, பணி விடுப்பு காரணமாக ஏற்படும் இழப்பு ஆகியவை மூலம் ஏற்படுத்துகின்றன” என்கிறார் நீரிழிவை வெல்வோம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த மேதகு தமிழக ஆளுநர் டாக்டர் கே.ரோசய்யா. ‘தமிழகத்தில் நீரிழிவு மேலாண்மைக்கான செலவு அதிகரித்து வருவதால், இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டுமென வலியுறுத்தினார் எம்.வி.நீரிழிவு ஆய்வு மைய டீன் பேராசிரியர் டாக்டர் எஸ்.என்.நரசிங்கன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதுவரை நீங்கள் கண்டிராத வெறித்தனமான Attractions!! (வீடியோ)
Next post நீரிழிவு நோய்க்கு மாற்று மருத்துவம் சாத்தியமா? (மருத்துவம்)