நோயெதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 37 Second

பொதுவாக ஒருவர் அடிக்கடி சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படுவதற்கு காரணம் உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே. அதிலும், இன்று உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸைக் கண்டு அனைவரும் கதிகலங்கிப் போயிருக்கும் நிலையில், ஏற்கனவே பலவீனமாக இருப்பவர்கள் சற்று கூடுதலாக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக இந்த வைரஸைக்கண்டு எல்லோரும் பயப்படத் தேவையில்லை.

குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள்தான் பயப்பட வேண்டும். உடலை பாதிக்கக்கூடிய கிருமிகளிலிருந்து காத்துக் கொள்ள நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டும். சாதாரணமாக நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை இரண்டு வகைகளில் பெறுகிறோம். ஒன்று மரபுவழியாக அமைந்த சக்தி, மற்றொன்று உணவுப்பழக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை பின்பற்றினாலே போதும். அந்த வகையில் நோயெதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கக்கூடிய சில உணவு வகைகளைப் பார்ப்போம். நம் தமிழ்நாட்டு சமையலில் மிளகு, இஞ்சி, பூண்டு, மஞ்சள் இல்லாத உணவே இல்லை என்று சொல்லலாம். இந்த மூன்றும் பாக்டீரியாக்களை ஒழிப்பதில் சிறந்த பொருட்கள்.

பூண்டு

பூண்டில் இருக்கும் ஆன்டிஆக்சிடெண்டுகள் மற்றும் அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் அழிக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், நோயெதிர்ப்பு மண்டல ஹோமியோஸ்டாஸிஸை பராமரிக்கவும் நோயெதிர்ப்பு உயிரணுக்களில் நன்மை பயக்கும் விளைவுகளை வெளிப்படுத்தவும் செய்கிறது.

இஞ்சி

3.85 மிமீட்டர் நீளம் உள்ள 100 கிராம் இஞ்சியில் மிக உயர்ந்த நிலை ஆக்சிஜனேற்றங்கள் இருக்கிறது. ஆண்டிமைக்ரோபியல் திறனைக் கொண்டுள்ள இஞ்சி, தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவக்கூடியது. நுண்ணுயிர்களுக்கு எதிராக போராடும் சக்தி இதற்கு உண்டு.

மிளகு

ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிமைக்ரோபியல் திறன் கொண்டுள்ள கருப்பு மிளகு நுண்ணுயிர்களுக்கு எதிராக போராடும் ஒரு முக்கியமான ஆரோக்கியமான உணவாகும்.

ரெஸ்வெராட்ரோல் (Resveratrol)

எனப்படும் பாலிபினால் நிறைந்த உணவுகளான கருப்பு திராட்சை (Black grapes), கருப்பு உலர்திராட்சை (Black raisins), பிஸ்தா (Pistachios) மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில், ஆக்ஸிஜனேற்ற பண்பும், ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களுக்கு எதிராக வினைபுரியும் செயல்பாட்டைக் கொண்டுள்ளது. ரெஸ்வெராட்ரோலின் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு மற்றும் ஈகோசனாய்டுகளின் உற்பத்தியில் ஈடுபடும் என்சைம்களைத் தடுக்கும் திறன் அதன் அழற்சி எதிர்ப்பில் (ஆன்டிஇன்ஃப்ளமேஷன்) பங்களிக்கிறது. நோயைத் தடுப்பதிலும் இது குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.

வைட்டமின் ‘ஏ’ உள்ள உணவுகள்

சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட், முருங்கைக்கீரை, ஆடு, கோழி, மாட்டிறைச்சியின் ஈரல், முட்டை, பப்பாளிப்பழம், மாம்பழம், பசலைக்கீரை போன்றவற்றில் வைட்டமின் ’ஏ’ மிகுந்துள்ளது. வைட்டமின் ஏ நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதால் ‘அழற்சி எதிர்ப்பு வைட்டமின்’ என்று அழைக்கப்படுகிறது. உடல் செல் மண்டலத்தின் நோயெதிர்ப்பு மறுமொழிகள் மற்றும் மனித நோயெதிர்ப்பு செயல்முறைகளை சீர்படுத்தும் செயல்பாட்டில் ‘வைட்டமின் ஏ’ முக்கிய பங்கு வகிக்கிறது.

வைட்டமின் ‘சி’ உணவுகள்

ஆரஞ்சு, கொய்யா, நெல்லிக்காய், எலுமிச்சை, குடைமிளகாய், தக்காளி போன்றவற்றில் வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ளது. வைட்டமின் ‘சி’ ஒரு ஆக்ஸிஜனேற்றி என்பதோடு, ஃப்ரீ ரேடிக்கல்களால், உயிரணுக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. உடல் முழுவதும் உள்ள திசுக்களின் வளர்ச்சி மற்றும் பழுதுபார்க்க இது அவசியம்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்

சால்மன் மீன், ஆலிவ் ஆயில், ஆளிவிதை (Flax seeds), வால்நட், முட்டை மற்றும் அவகேடோ போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. பொதுவாக ஒமேகா 3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், இதயத்தின் வளர்சிதை மாற்றம் மற்றும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற திறனை மேம்படுத்துகின்றன.

மஞ்சள்

மஞ்சளைப்பற்றி சொல்லவே தேவையில்லை. முக்கியமாக மஞ்சளில் இருக்கும் குர்குமின், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நாள்பட்ட அழற்சி நோய்களை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது உடலில் ஃப்ரீரேடிகல்ஸ் உள்ளடக்கத்தை குறைக்க உதவுகிறது. குர்குமின் அதன் அழற்சி எதிர்ப்பு விளைவுகளின் மூலம் மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. முடிந்தவரை சாம்பார், பொரியல், குழம்பு, கூட்டு என எந்த சமையலாக இருந்தாலும் மஞ்சள் சேர்த்து செய்யுங்கள்.

தக்காளி

தக்காளி பழங்களில் இருக்கும் பைட்டோ கெமிக்கலான லைகோபீன், முக்கிய எதிர்வினை ஆக்ஸிஜன் இனம் (Reactive Oxygen Species) என்பதால், ஃப்ரீ ரேடிகல்ஸ்களை அழிப்பதில் திறமையான ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது மரபணுவில் (DNA) உள்ள உயர் எதிர்வினை எலக்ட்ரானை மிகவும் நிலையான ஃப்ரீ ரேடிக்கல்லாக மாற்றக்கூடியது. இதன்மூலம் நோய்க்கிருமிகளைத் தடுப்பதில் சிறந்த எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களாக செயலாற்றுகிறது.

அன்னாசிப்பூ

பிரியாணியில் வாசனைக்காக ‘அன்னாசிப்பூவை’ சேர்க்கும் வழக்கம் நம்மிடம் உண்டு. அன்னாசிப்பூவில் உள்ள லிமோனேன் ஒரு கலவையான ஆக்ஸிஜனேற்றியாகும் என்பதால், செல்களின் அழிவுக்கு காரணமான லிப்பிட் பெராக்ஸைடேஷனைத்(Lipid peroxidation) தடுக்கவும், ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்கவும் மற்றும் புரத ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் தொடர்புடைய புரத மறுப்பைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இது ஒரு அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சக்தியாக செயல்படுவதோடு, காயங்களை குணப்படுத்துவதை துரிதப்படுத்துகிறது.

கடல் உணவுகள்

கடல் உணவுகளான இறால், நண்டு, கடல் சிப்பி போன்றவற்றிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

பூசணி விதைகள்

வெள்ளை மற்றும் சிவப்பு பூசணி விதைகளில், ஆளிவிதைக்கு அடுத்தபடியாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இவற்றையும் சாலட் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் வைட்டமின் ‘சி’, ‘ஏ’ மற்றும் ‘இ’ நிறைந்துள்ளது. இதோடு மினரல் சத்துக்களும் நிறைவாக உள்ளன. இதையும் வாரத்தில் ஒரு முறையாவது சேர்த்துக் கொள்ளலாம்.

தயிர்

தயிர் ஒரு சிறந்த புரோபயாடிக் உணவாகும். இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், வைட்டமின் ‘டி’ யில் இருக்கும் நோய் எதிர்ப்பு சத்தியை தூண்டி வேகமாக செயல்பட வைக்கும். பச்சடி, வெள்ளரி பழம், செர்ரி பழம் போன்றவற்றை தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.

கிரீன் டீ

நோய் தொற்றுகளிலிருந்து உடலை பாதுகாக்கும். கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் மிகுந்துள்ளதால் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் ஆற்றல் உள்ளது. இரவு பாலில் மஞ்சள் சேர்த்து குடிக்கலாம். இஞ்சி, பூண்டு, மிளகு, துளசி, ஏலக்காய் போன்றவற்றை தட்டிப்போட்டு அத்துடன் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டால் சளி, தொண்டை வலிக்கு இதமாக இருக்கும். முருங்கைக்கீரை பொறியல் அல்லது சூப் வைத்து சாப்பிடலாம். சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேகவைத்து, வெல்லம், ஏலக்காய் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

தக்காளி, மிளகு, பூண்டு ரசம் வைத்து சூடாக அடிக்கடி குடிக்கலாம். சட்னி, சாம்பார் எதாவது ஒன்றில் பூண்டை கட்டாயம் சேர்த்துக் கொள்வது நல்லது. கூடியவரை வீட்டில் தயாரித்த உணவையே சாப்பிடுவதும், ஹோட்டல், வண்டிக்கடை, ரோட்டோரக் கடைகளில் சாப்பிடுவதை தவிர்ப்பதும் கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை உருவாக்குவோம்!! (உலக செய்தி)
Next post ரவிவர்மா ஓவியமாக மாறிய நட்சத்திரங்கள்!! (மகளிர் பக்கம்)