By 20 May 2020 0 Comments

இது சாதாரண பிரச்னை அல்ல!! (மருத்துவம்)

*எச்சரிக்கை

காற்று மாசு என்பது ஏதோ சாதாரண சுற்றுச்சூழல் சீர்கேடு மட்டும் இல்லை. இது நம் ஆரோக்கியத்திலும் கடுமையான பின்விளைவுகளை உண்டாக்கி வருகிறது. எனவே இது குறித்து அதிக விழிப்புணர்வும், தடுப்பதற்கான நடவடிக்கைகளும் அவசியம். சமீபத்தில் இந்தியாவின் காற்று மாசு குறித்த ஸ்பெயின் நாட்டு ஆய்வு இதை தீவிரமாக வலியுறுத்துகிறது.

* இந்தியாவில் காற்று மாசால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஸ்பெயின் நாட்டில் உள்ள உலக சுகாதார பார்சிலோனா அமைப்பு ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதில் முதல்கட்டமாக ஐதராபாத் மற்றும் தெலங்கானாவின் புறநகர் பகுதிகளை ஒட்டிய இடங்களில் மக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் காற்று மாசால் பக்கவாதம் அல்லது இதய பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பது தெரிய வந்திருக்கிறது.

* பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பின்னரும் தற்போது டெல்லியில் காற்று மாசு மிக அபாயகரமான நிலையில் இருக்கிறது. அதாவது மாசு அளவு 500 புள்ளிகளாக இருந்தது. இது வழக்கமான அளவை விட ஐந்து மடங்கு அதிகம்.

* காற்றில் உள்ள நுண்துகள்கள் சுவாசத்தின் வழியே உடலினுள் செல்லும்போது, இதயத்தமனிகள் தடிமன் அடைகின்றன. இதுபோன்ற பாதிப்பு காற்று மாசால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்த மக்களிடம் அதிகம் இருந்தது. இந்த பாதிப்பு 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அதிகம் இருந்தது. குறிப்பாக ஆண்களிடம் அதிகம் இருந்தது.

* பழங்கால முறைப்படி விறகு அடுப்புகளை பயன்படுத்தும் பெண்களிடமும் இதயத்தமனிகள் தடிமன் அடையும் பிரச்னை அதிகம் இருந்தது. இந்த பாதிப்புகள் மட்டுமின்றி நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் போன்ற ஆபத்துகளும் மக்களிடம் இருந்தது தெரிய வந்தது.

* காற்று மாசு குறைவாக உள்ள ஐதராபாத்திலேயே இந்த நிலை என்றால் டெல்லி மற்றும் சென்னையில் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கக்கூடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

* ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதால் இதயம் செயலிழப்பதை மாரடைப்பு என்று சொல்கிறோம். இதைப்போல காற்று மாசால் சுவாசப் பைகள் கடினமாகி, சுவாச செயலிழப்பு ஏற்படுவதை நுரையீரல் அடைப்பு என்று சொல்கிறோம். இருமல், சுவாசிப்பதில் சிரமம், தும்மல், மூச்சிரைப்பு, நெஞ்சுப் பகுதியில் வலி, மூச்சுத் திணறல் போன்றவையே இதன் பொதுவான அறிகுறிகள்.

* நுரையீரலின் சுவாசக் குழாய் மற்றும் அதிலிருந்து பக்கவாட்டில் பிரியும் குழாய்களில் காற்று அடைத்த சிறிய சுவாசப் பைகள் இருக்கும். கார்பன் உட்பட மாசடைந்த காற்றில் உள்ள வாயுக்கள், நுண்ணிய துகள்கள் இந்தப் பைகள் மற்றும் சுவாசப் பாதையில் அடைத்து அந்தப் பாதையை குறுகலாக்கிவிடும். தொடர்ந்து இதுபோல மாசடைந்த காற்றையே சுவாசித்தால் சுவாசக் குழாயின் பாதை சுருங்கி சுவாசக் குழாய், நுரையீரல் மொத்தமும் கடினமாகிவிடும். இதனால் மூச்சு வாங்குவது, மூச்சு விட முடியாமல் தவிப்பதுடன் மூச்சற்ற நிலையும் ஏற்படலாம். இதற்கு முக்கிய காரணம் நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்வது தடைபடுவதோடு கார்பன் கலந்த காற்று அதிகம் செல்வதுதான் இதற்கு முக்கிய காரணம்.

* முதன்முறை மாரடைப்பு ஏற்பட்டால் குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவ உதவி கிடைப்பதன் மூலம் இதயத்தை பழைய ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வர முடியும். ஆனால், நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டால் அதை பழைய நிலைக்கு கொண்டு வருவது சாத்தியம் இல்லை. நுரையீரலில் அடைப்பு இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் பிரச்னை மேலும் மோசமாகாமல் தடுக்கலாம்.

* வாகனங்கள் கக்கும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை, தோல் தொழிற்சாலை கழிவுகள் போன்றவற்றில் இருந்து வரும் கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள், மகரந்தத் துகள்கள், கட்டுமான தளங்களில் இருந்து வரும் துகள்கள் போன்றவை காற்றில் கலந்து அதை மாசடையச் செய்கின்றன.

* பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் பதில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துவது, பொது போக்குவரத்தை அதிகம் உபயோகிப்பது, புகை மற்றும் மாசு இல்லாமல் நம் சுற்றுச்சூழலைப் பராமரிப்பது, முடிந்த அளவு மரங்களை வளர்ப்பது என தனி நபரும் அரசும் விழிப்புடன் செயல்பட்டால் மட்டுமே காற்று மாசிலிருந்து நுரையீரலை காக்க முடியும்.Post a Comment

Protected by WP Anti Spam