By 17 May 2020 0 Comments

உலகின் மோசமான சில உணவுமுறைகள்!! (மருத்துவம்)

*ஜன்னல்

டயட் என்பது நல்ல விஷயம்தான். எடையைக் குறைக்க முயல்வதும் நல்ல விஷயம்தான். ஆனால், இந்த முயற்சி ஒரு வரைமுறைகளைக் கடந்து சென்று கொண்டிருப்பதாகவே தெரிகிறது. முக்கியமாக உடல் எடையைக் குறைப்பதற்காக மக்கள் பல விநோதமான, ஆபத்தான உணவுமுறைகளைப் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.பல நூற்றாண்டுகளாகவே எடை இழப்பைப் பின்தொடர்வதில் உணவை விழுங்காமல் மென்று துப்புவது, இரவில் சாப்பிடாமல் தூங்குவது அல்லது காலை உணவை தவிர்ப்பது போன்ற சில விஷயங்களை மக்கள் முயற்சித்திருக்கிறார்கள். இதுபோன்ற தேவையற்ற உணவுமுறைகள் குறித்து மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்று அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாண டயட்டிக் அசோசியேஷனின் செய்தித் தொடர்பாளரும், உணவியல் நிபுணருமான சூசன் பர்க் மார்ச் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.

Making weight control Second Nature: Living Thin Naturally என்ற புத்தகத்தில் ‘எல்லா உணவுத்திட்டங்களும் ஓரளவுக்குத்தான் வேலை செய்யும், நிரந்தரமான பலனைத் தராது’ என்று எச்சரிப்பதோடு சில ஆபத்தான டயட்டுகள் குறித்தும் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்.

எச்.சி.ஜி டயட் (HCG Diet)

1950-களில் பிரிட்டிஷ் மருத்துவர் ஏ.டி.டபிள்யூ சிமியோன்ஸ் ஒரு நாளைக்கு 500 கலோரி உணவை மட்டும் எடுத்துக் கொள்வதும் ஒரு பெண்ணின் கர்ப்பத்தின் ஆரம்ப நிலையில் உற்பத்தியாகக்கூடிய Human choriogonadotropin(HCG) என்ற ஹார்மோன் ஊசியை தினசரி போடுவதும் எடை இழப்புக்கு உதவும் என்று HCG டயட்டை பரிந்துரைத்தார். HCG உணவு எடை இழப்பு விஷயத்தில் வேலை செய்யலாம். ஏனெனில், நீங்கள் மிகக் குறைவாகவே சாப்பிடுகிறீர்கள். ஆனால், ஹார்மோன் ஊசியானது எடை இழப்பை ஊக்குவிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும் சிலருக்கு அவை ரத்தக் கட்டிகளை உருவாக்கும் ஆபத்தும் உண்டு. இது தவிர மனச்சோர்வு மற்றும் தலைவலி போன்ற பக்க விளைவுகளையும் இந்த உணவுமுறை ஏற்படுத்தும் என்பதால் HCG டயட்டை எடை இழப்பிற்கான உணவுத்திட்டமாக அல்லாமல் கருவுறுதல் சிகிச்சையாக மட்டுமே FDA அங்கீகரித்துள்ளது.

பேபி ஃபுட் டயட் (Baby Food Diet)

குழந்தைகளுக்காக டின்களில் விற்கப்படும் உணவை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பிரித்து உண்பதுதான் பேபி ஃபுட் டயட். ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்த உணவுமுறையைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள். குழந்தைகளின் உணவு தூய்மையானதாகவும், வைட்டமின்கள் நிறைந்ததாகவும் இருக்கும்தான். ஆனால், அதன்மூலம் கலோரி அளவைக் குறைக்க முடியுமே தவிர, வயது வந்த ஒரு நபரின் ஊட்டச்சத்து அளவை பூர்த்தி செய்ய முடியாது. திடீரென்று வழக்கமான பெரியவர்கள் உண்ணும் உணவை எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கும்போது உடல் எடை கூடவும் ஆரம்பிக்கும்.

சிகரெட் டயட் (Cigarette diet)

பசி எடுக்கும் நேரங்களில் சிகரெட்டை ஊதித்தள்ளினால் ஒல்லியாக முடியும் என்ற முட்டாள்தனமான நம்பிக்கை கொண்டது இந்த உணவுத்திட்டம். சிகரெட்டுகளுக்கு கலோரிகள் இல்லைதான். ஆனால் அதிலிருக்கும் நிகோடின் இதய நோய், நுரையீரல் நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல ஆபத்தான நோய்களுக்கு வழி வகுக்கும். இருப்பதிலேயே மிக மோசமான, ஆபத்தான உணவுத்திட்டம் இது.

நாடாப்புழு டயட் (The Tapworm Diet)

நாடாப்புழு என்பது ஒரு ஒட்டுண்ணி. சமைத்த, கழிவுகளிலிருந்து கிடைக்கும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால் நாடாப்புழு தொற்று ஆபத்தானது என்பதால் இது சிகிச்சைக்குட்பட்டதாகவும் இருக்கிறது. இத்தகைய நாடாப்புழுக்களை டயட்டுக்காக அசுத்தமான இறைச்சியிலிருந்து செயற்கையாகத் தயாரிக்கிறார்கள். இந்த டயட்டை அமெரிக்கர்கள் அதிகம் கடைபிடிக்கிறார்கள். இதனால் நாடாப்புழுக்களை இறக்குமதி செய்வது அல்லது விற்பனை செய்வது அமெரிக்காவில் சட்ட விரோதமாக்கப்பட்டுள்ளது. இதுவும் ஆபத்தான டயட் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

அக்யூலி டயட் சோப் (Aoqili Diet Soap)

கடற்பாசி மற்றும் கற்றாழை கொண்டு தயாரிக்கப்படும் Aoqili டயட் சோப்பானது, சருமத்தை மென்மையாக்குவதோடு சருமத்திற்கு அடியில் படிந்திருக்கும் கொழுப்புக்கட்டிகளையும் கரைக்கக்கூடியது என்ற நம்பிக்கையால் உருவான டயட் இது. கடற்பாசியைக் கொண்டு உடல் நச்சுக்களை வெளியேற்றுவதைப் போலவே இந்த சோப்பை நச்சுநீக்கிகளாக ஆசிய நாடுகளில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சோப்புகள் சருமத்தை வேண்டுமானால் மென்மையாக மாற்றுமே தவிர, உடல் எடை இழப்பை உறுதி செய்யாது. இதில் எடையை குறைக்கக்கூடிய எந்தவிதமான மருந்துப் பொருட்களோ, திரவமோ கண்டிப்பாக இல்லை. அவையெல்லாமே வெற்று நம்பிக்கை.

ஸ்லீப்பிங் பியூட்டி டயட் (Sleeping Beauty Diet)

ஸ்லீப்பிங் டயட்டில் உணவு எதுவும் இல்லை. வெறுமனே சாப்பாடு, தண்ணீரில்லாமல் தூங்கிக்கொண்டே இருப்பதுதான் இந்த ஸ்லீப்பிங் பியூட்டி டயட். பட்டினி கிடப்பதால் உடல் மிகச்சோர்வாக மாறும். மீண்டும் மீண்டும் தூங்கச் சொல்லும். இன்று பல பிரபலங்கள் இதைத்தான் கடைபிடிக்கிறார்கள். போதுமான தூக்கம்தான் ஆரோக்கியம். அளவுக்கு மிஞ்சினால் தூக்கமும் ஆரோக்கியக் கேடாக மாறிவிடும்.

மெல்லும் டயட் (Chewing Diet)

இந்தவகை உணவுத்திட்டத்தில் எந்த உணவும் குறிப்பாக இல்லை. நாம் சாப்பிடும் எந்த உணவாக இருந்தாலும் அதை நன்றாக மென்று, சாறினை உள்ளே விழுங்கிவிட்டு, சக்கையை வெளியே துப்பிவிட வேண்டும். இது ஓரளவு அறிவியல்ரீதியாக ஏற்றுக் கொள்ள முடிவதாகத் தோன்றும். ஏனெனில், சாப்பிடும்போது எந்த கவனச்சிதறலும் இல்லாமல் முழு கவனத்தோடு அதிக நேரம் எடுத்துக் கொண்டு உணவை மெல்வதால், சிறிது சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வு கிடைத்துவிடும்தான். இதன்மூலம் அதிக கலோரிகள் உள்ளே செல்வதும் தடுக்கப்படலாம். அதற்காக இதை ஆரோக்கியமான உணவுமுறையாகக் கவனத்தில் கொள்ள முடியாது.

காதில் பின் குத்துதல் (Ear Stapling)

அறுவை சிகிச்சைகளில் உபயோகிக்கும் ஸ்டேப்ளர் பின்களை காதுக்குள் இருக்கும் குருத்தெலும்புகளில் போட்டுக் கொள்கின்றனர். இது அக்குபிரஷர் பாயின்டுகளில் அழுத்தம் கொடுத்து பசியைக் கட்டுப்படுத்தும். ஆனால், சில வாரங்களுக்குப்பின் பழையபடி உங்கள் உடல் அதற்குப் பழகிவிடும். மீண்டும் முன்பு போலவே சாப்பிட ஆரம்பித்துவிடுவீர்கள். இது ஒரு பிரமையே தவிர பலனளிக்காது.

விஷன் டயட் (Vision Diet)

தட்டு நிறைய கலர்ஃபுல்லான உணவு இருந்தால் நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிட்டுவிடுவோம். அதற்குபதிலாக இவர்கள் சொல்லும் யோசனை, மேஜைக்கு சாப்பாடு வரும்போது நீல நிற கூலிங்கிளாஸ் ஒன்றை அணிந்து கொண்டால் பார்க்கும் உணவு எல்லாம் நீல நிறத்தில் அருவெறுப்பாக இருக்கும். அதனால் வெறுத்துப்போய் சாப்பிடாமல் தவிர்த்துவிடுவோம் என்று ஆலோசனை சொல்கிறது இந்த டயட். இந்த யோசனைக்கு பதில் கலர்ஃபுல்லான பச்சையான அல்லது வேகவைத்த காய்கறிகள் மற்றும் விதவிதமான பழங்களை தட்டில் வைத்து அடுக்கியிருந்தால் அது நன்றாகத்தானே இருக்கும். மேலும், காய்கறிகளிலும், பழங்களிலும் நிறைய ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் இருப்பது நல்ல ஆரோக்கியம்தானே! அப்படி நல்ல ஐடியாவை ஏன் இப்படி விநோதமாக மாற்றி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.Post a Comment

Protected by WP Anti Spam