By 16 May 2020 0 Comments

சிறுமூளையும்… சிம்பொனி இசையும்…!! (மருத்துவம்)

பெயர் சிறுமூளை என்றாலும் அதன் விஷயம் பெரிது என்பது நாம் நரம்புகள் நலனில் முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டும். சிறுமூளை பாதிக்கப்பட்டால் என்ன ஆகும் என்பதை என்னுடைய மருத்துவ படிப்பு காலத்தில் ஏற்பட்ட ஒரு அனுபவத்திலிருந்து சொல்கிறேன். தஞ்சை மருத்துவக்கல்லூரியில் MD பொது மருத்துவ முதுநிலைப் படிப்பிற்கான தேர்வு நாள். மருத்துவ பட்டப்படிப்பில் மிகவும் கஷ்டமான தேர்வு என்றால் அது எம்.டி பொது மருத்துவத்தின் நடைமுறை தேர்வுதான்.

3 வருடங்கள் படித்ததை, அறிந்து கொண்டதை ஒரே நாளில் பகுப்பாய்வு செய்யும் தேர்வு. சொல்லப் போனால் நெருப்பு குண்டத்தை கடக்கும் நாள்.
தேர்வாளர் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்; எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம்; உண்மையைச் சொல்லப்போனால் அவர் நினைத்தாலொழிய மாணவர்கள் பாஸ் செய்வது மிகவும் கடினம். ஆறு மாணவர்கள் பரீட்சைக்கு தயாராக இருந்தனர். ஆறாவதாக நான். V என்று பெயரில் ஆரம்பிப்பதால் அட்டண்டென்ட்ஸில் எப்பொழுதும் கடைசிதான். முதல் ஐந்து மாணவர்களுக்கு கேஸ்(பேஷன்ட்) கொடுக்கப்படுகிறது. நான் மட்டும்தான் பாக்கி.

ரிஜிஸ்ட்ராராக இருக்கும் மூத்த மருத்துவர் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கிறார். பரீட்சைக்கு வைத்திருந்த பேஷன்ட் திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவசர சிகிச்சை வார்டுக்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும், வேறு கேஸ் வைப்பதற்காகத்தான் ரிஜிஸ்ட்ரார் பரபரப்பாக இருப்பதாகவும் அருகிலிருந்த பியூன் கூறினார். எளிதாக டயாக்னஸிஸ் (ஒருவருக்கு இன்ன நோய் என்று கண்டுபிடிப்பது) பண்ணக்கூடிய பேஷன்ட் எனக்கு வர வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டேன்.

சிறிது நேரத்திற்கு பிறகு ரிஜிஸ்ட்ரார் ஒரு முடிவுக்கு வந்தவராக பியூனிடம், ‘உடனே போய் சக்கரபாணியை கூட்டிட்டு வா… அவனை இன்னைக்கு
எக்ஸாமுக்கு வச்சுக்கலாம்’ என்றார். கம்பின் உதவியுடன் மெதுவாக நடந்தபடி ஒருவர் பரீட்சை ஹாலில் நுழைகிறார். அவர்தான் நான் ஆய்வு செய்ய வேண்டிய நோயாளி. உங்கள் பெயர் என்ன என்றேன்? ‘சக்க்க்..ர்ர..ப்பா…ண்ணி’ என்று இழுத்து அழுத்தமாக கூறினர். வயது என்ன? ‘மூப்பத்…..த்தி….. எட்ட்…டு’ இப்படி ஒவ்வொரு வார்த்தையும் அவர் இழுத்து இழுத்து கஷ்டப்பட்டு பேசியதை கேட்டபோது என் மனதுக்குள் பயம் தொற்றிக் கொண்டது. இவருக்குள்ள நோயைப் பற்றிய வரலாற்றை எப்படி சீக்கிரம் தெரிந்துகொள்வது? எப்படி கண்டுபிடிப்பது? என்ற பயம் எனக்கு வந்தது.

ஆனாலும் ஒரு நம்பிக்கை வந்தது. இதுவும் நாம் கற்றுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்புதான் என்று மெதுவாக அவரிடம் பேச்சு கொடுத்தேன்.
உங்களுக்கு இந்த தொந்தரவு எப்படி ஆரம்பித்தது, எவ்வாறு இந்த நிலைக்கு வந்தது என்று கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டே அவரை ஆய்வு செய்ய ஆரம்பித்தேன். அவரது கைகளும் கால்களும் இறுக்கமாக ஒரு கட்டையை போன்று இருந்தது. அவரால் வார்த்தைகளை தெளிவாக பேச முடியவில்லை. கைகளைக் கொண்டு ஒரு பொருளை தொடச் சொல்லும்போது கைகளில் நடுக்கம் தெரிந்தது.

கண்களில் அதே மாதிரியான நடுக்கம் அங்கும் இங்கும் பார்க்கும்போது இருந்தது. நிற்கும்போதும், நடக்கும்போதும் தள்ளாட்டம் இருந்தது. கம்பு இல்லாமல் அவரால் நடக்க முடியவில்லை. நரம்பியல் நிபுணர்கள் கையில் பார்த்தால் அவர்கள் கையில் ஒரு சுத்தியல் போல ஒரு சிறிய கருவி எப்போதும் இருக்கும். அதைக்கொண்டு நோயாளியின் கை கால்களில் தட்டி பார்ப்பார்கள். அதற்கு Tendon Reflex என்று பெயர். அந்த சுத்தியலை (Knee Hammer) கொண்டு தட்டி பார்த்தபோது அவரது கையும் காலும் எகிறித் துள்ளியது. தண்டுவடத்தில் தொந்தரவு இருந்தால் இதுபோல் ஏற்பட வாய்ப்புள்ளது.

சக்கரபாணி, தன் பெற்றோர் சொந்தத்தில் கல்யாணம் செய்து கொண்டதாகவும், தற்போது தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உள்ள மருந்தகத்தில் தற்காலிகமாக ஹெல்ப்பராக பணிபுரிந்து வருவதாகவும் கூறினார். தனக்கு நோய் 20 வயதில் தொடங்கியதாகவும், கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற்றம் ஏற்பட்டு நிற்க நடக்க முடியாமல் போனதாகவும், பேச்சு சிறிது சிறிதாக குளற ஆரம்பித்தது. ‘தான் பேசுவதே தற்பொழுது மற்றவர்களுக்குப் புரிய மாட்டேன்கிறது’ என்றும் கூறினார். அவருக்கு சிறுமூளையிலும், தண்டுவடத்திலும் தீர்க்க முடியாத தொந்தரவு இருப்பதை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

இப்படி ஒருவருக்கு பாதிப்பு உண்டாவதற்குப் பல காரணங்கள் உள்ளன. மரபணு காரணங்கள்; மூளையின் அமைப்பில் மாறுபாடு ஏற்பட்டு சிறுமூளை கீழிறங்கி தண்டுவடத்தை அழுத்துவதால் வருவது; மூளைக்கட்டி(சாதாரண கட்டி அல்லது கேன்சர் கட்டி; மூளைக்காய்ச்சல் என்று காரணங்களை மனதில் அடுக்கிக் கொண்டே இருந்தேன். மரபணு காரணங்களால் வரும் இம்மாதிரி நோய்களில் பல வகைகள் உள்ளனவே, என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே இருந்தபோது சக்கரபாணி சைகையால் என்னை கூப்பிட்டார்.

‘தம்ம்..ப்ப்..பி ரொ…ம்ம்…ப குகு…ழப்ப்…பிக்கா..தீங்ங்க.. எனக்..க்கு. இரூக்க்ற நோ…ய்ய் பேர்ரு.. ஸ்பைனோசெரிபெல்லார் ஏடாக்ஸியா (SCA),என்னோடது SCA டைப் 2 வகையைச் சேர்ந்தது’ என்றார். நான் ஒரு நிமிடம் உறைந்து போனேன்… தெய்வமே! இது போதுமே எனக்கு…
‘தம்பி… என் நோயைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு சிறுமூளையில் தீர்க்க முடியாத தொந்தரவு ஏற்பட்டுள்ளது. அதை குணப்படுத்துவது கடினம் என்பதையும், இவ்வகை நோய்களுக்கு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும் மருத்துவர்கள் மூலம் முன்பே அறிந்துகொண்டேன்.

உங்களுக்குத் தெரியுமா… 10 வருடங்களுக்கு முன்பு உங்கள் ரிஜிஸ்ட்ராருக்கே நான்தான் எக்ஸாம் கேஸ்’ என்று சொல்லி சிரித்து விட்டு பரீட்சை ஹாலை விட்டுச் சென்றார். தேர்வு சுபமாக முடிந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன? சிறுமூளை மண்டையோட்டின் பின்புறத்தில் பெருமூளையின் கீழே உள்ளது. மூளையின் மொத்த அளவில் சிறுமூளை 10 சதவீதமே இருந்தாலும் இது பலவிதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பெருமூளை போலவே சிறு மூளையும் உட்புறத்தில் வெள்ளை நிறமாகவும் வெளியே சாம்பல் நிறமாகவும் இருக்கும். கிடைவாக்கில் வரிவரியாக பள்ளங்கள் இருப்பதால், சிறுமூளையானது மூளையின் மற்ற பகுதிகளை விட சற்று மாறுபட்டு காணப்படுகிறது.

சிறு மூளையும் இரண்டு அரை கோளங்களிலானது. இவ்விரு அரை கோளங்களையும் வெர்மிஸ்(Vermis) என்று சொல்லக்கூடிய நீண்ட மையப்பகுதி இணைக்கிறது. மத்திய நரம்பு மண்டலத்தின் மற்ற பகுதிகளுடன் ‘பெடுங்கிள்’ (Peduncle) என்று சொல்லக்கூடிய மூன்று நரம்பு பாதைகள் வழியாக சிறு மூளை தொடர்பு கொண்டுள்ளது. முதலாவது ‘ஃபிளாக்குலோநோடுலார்’ பாதை. இது சிறு மூளைக்கும், வெஸ்டிபியூல் என்று சொல்லக்கூடிய உள்காதில் இருக்கும் உடம்பின் சமநிலைக்கு உதவும்(Balance) பகுதியுடனான இணைப்பு. இப்பாதையில் தொந்தரவு ஏற்பட்டால் சமநிலை தவறி தலைசுற்றுவதைப் போன்றும், தலைகீழாக தெரிவது போன்றும் இருக்கும். இவ்வாறு ஏற்படுவதை வெர்டிகோ(Vertigo) என்று கூறுவோம்.

இரண்டாவது பாதை பெருமூளையுடனும், மூன்றாவது பாதை தண்டுவடத்துடனும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டுவடத்துடனான இணைப்பு நாம் நேராக நிற்பதற்கும், தடுமாறாமல் நடப்பதற்கும் உதவுகிறது. சிறுமூளையின் அரை கோளங்கள் நமது கை, கால்களின் அசைவுகளுக்கு ஒருங்கிணைப்பாளராக செயல் புரிகிறது. நாம் ஒரு செயலைச் செய்வதற்கு சிறு மூளையின் ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது. எடுத்துக்காட்டாக நான் கையை நீட்டி ஒரு பேனாவை எனது வலது கையால் எடுக்கிறேன் என்றால் என் இடது மூளையிலிருந்து சமிக்ஞைகள் கீழே இறங்கி, தண்டுவடம் வழியாக கையின் நரம்புகள் மூலம் விரல்களுக்குச் சென்று அந்த பேனாவை எடுக்க வைக்கும்.

ஆனால், இந்த செயலை சீராக செய்வதற்கு சிறுமூளையின் பங்கு முக்கியமானது. சிறுமூளை செயலிழந்தால் என் கைகள் சீராக செல்லாமல் தடுமாற்றத்துடனே சென்று பேனாவை கைப்பற்றும். அதுவும் முக்கியமாக விரல்கள் பேனாவை நெருங்கும் நேரத்தில் கையின் தடுமாற்றம்
அதிகமாக இருக்கும். இதனை ஆங்கிலத்தில் இன்டன்ஷன் ட்ரமர்(Intention tremor) என்று சொல்வோம். அதாவது உடலின் தசைகள் இணைந்து தடுமாற்றமே இல்லாமல் ஒரு வேலையைச் செய்வதற்கு சிறுமூளைதான் காரணகர்த்தா.

அதுமட்டுமில்லாமல் தசைகளின் விறைப்புத்தன்மையையும் இது கட்டுப்படுத்துகிறது. தொடர் மதுப்பழக்கமும் ஒருவரது சிறுமூளையைப் பாதிக்கும் என்பதற்கும் ஒரு உதாரணம் சொல்கிறன். 50 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு அன்று காலை இரண்டு முறை வலிப்பு நோய் வந்ததாக கூறி அழைத்து வருகின்றனர். அவர் மகா குடிகாரர். தினமும் அவரால் குடிக்காமல் இருக்க முடியாது. விசாரிக்கும்போது வலிப்பு வந்ததற்கு முதல் நாள் மட்டும் மது அருந்தாமல் இருந்ததாகக் கூறினர். இவ்வாறு திடீரென்று மது அருந்துவதை நிறுத்தினால் வலிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதனால் படிப்படியாக குடிப்பதை நிறுத்திக் கொள்ளலாமா? என்று எதிர் கேள்வி கேட்கக் கூடாது, ‘படிப்படியாக குடியை நிறுத்துவேன்’ என்று சொன்ன எந்த குடிமகனும் மது அருந்துவதை நிறுத்தியதாக சரித்திரமே கிடையாது. அது முடியாத காரியம். குடியை நிறுத்த வேண்டும் என்று நினைத்தால், அந்த நாளே அந்த நிமிடமே அந்த வினாடியே மதுவை அடியோடு மறந்து விடவேண்டும். தகுந்த சிகிச்சைகளின் மூலம் வலிப்பு வருவதைத் தடுக்க
முடியும். குடியை நிறுத்தும்போது ஏற்படும் படபடப்பு, கோபம், தூக்கமின்மை ஆகியவற்றுக்கும் தகுந்த சிகிச்சைகள் உள்ளன.

அந்நோயாளியுடன் பேசும்போது அவரது குரல் தடுமாறியது. ‘கண்ணைத் திறந்துகொண்டு கால் பாதம் இரண்டையும் சேர்த்து வைத்து நில்லுங்கள்’ என்று சொன்னபோது அவரால் நிற்க முடியவில்லை. அடிப்பிரதட்சணம் போல் ஒரு கால் முன்பு ஒரு கால் வைத்து நடக்கவும் முடியவில்லை. ‘கையை நீட்டி மூக்கை தொடுங்கள்’ என்று கூறினேன். தடுமாற்றத்துடனேயே அதை செய்ய முடிந்தது. சரியாக நிற்க, நடக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணமே மதுவினால் சிறுமூளையின் அனைத்து பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டதுதான். சிறுமூளையின் அரை கோள்களில் பாதிப்பு ஏற்பட்டதால்தான் அவரால் கையை நீட்டி ஒரு பொருளை தொட முடியவில்லை, எடுக்க முடியவில்லை.

சிறுமூளையின் மையப்பகுதியான வெர்மிஸ் பகுதியில் மதுவினால் ஏற்பட்ட பாதிப்பினால்தான் நோயாளியால் நேராக நிற்க, நடக்க முடியவில்லை பேச்சிலும் தடுமாற்றம் ஏற்பட்டது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் அவருக்கு மதுவினால் சிறுமூளை சுருங்கிப் போனது தெரிய வந்தது. என்னதான் மருந்து மாத்திரைகள் கொடுத்தாலும் சுருங்கிய சிறு மூளையை குணப்படுத்துவது மிகவும் கடினம். இசைஞானி இளையராஜா சிம்பொனி வாசிக்கும்போது பார்த்திருப்பீர்கள்.

அவரது இசை குழுவினரோடு ஹங்கேரி, லண்டன் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இசை குழுவினர் கலந்துகொள்வர். ராஜா ஆகாயத்தில் கோலம் போடுவதைப் போன்று தனது கைகளை அசைப்பார். அவரது விரல் அசைவுக்கு ஏற்ப ஆயிரக்கணக்கில் குழுமியிருக்கும் இசைக்கலைஞர்கள் அச்சரம் பிசகாமல் வாசிப்பார்கள். ராஜாவின் விரல்களைப் போன்றதுதான் சிறுமூளையும். நம் உடல் அசைவை கண் அசைவை நாக்கு அசைவை, கை அசைவை கால் அசைவை ஒருங்கிணைக்கும் மிகச் சக்திவாய்ந்த சிம்பொனியாக விளங்குகிறது.Post a Comment

Protected by WP Anti Spam